என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோத்தகிரி-கட்டப்பெட்டு சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணம், குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பறக்கும்படை அதிகாரி பூபாலன் தலைமையிலான குழுவினர், கோழிக்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரமேஷா என்பவரை சோதனை செய்து, அவரிடம் ரூ.1 லட்சமும், கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ரகுமானிடம் ரூ. 1.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் தொரப்பள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி லதா மற்றும் எஸ்.எஸ்.ஐ., திருக்கேஸ்வரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகஷீர் என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.2.29 லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்ததாக சத்தியம் என்பவரிடமிருந்து, ரூ.99 ஆயிரமும், அஷ்ரப் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    முதுமலை கார்குடி பகுதியில் நடந்த சோதனையில், எர்ணாகுளத்தை சேர்ந்த தாமஸ் என்பவரிடமிருந்து ரூ.94 ஆயிரமும், மாக்கமூலா பகுதியில் நடந்த சோதனையில், மலப்புரம் ஷாஜி என்பவரிடமிருந்து, 3.95 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.11.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தொகை அனைத்தும், கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கூடலுார் பகுதியில் இதுவரை மொத்தம் ரூ.30.91 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி-கட்டப்பெட்டு சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கூடலூரைசேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை சோதனை மேற்கொண்டனர். அவரிடம் ரூ.52 ஆயிரத்து 250 பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம், குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • பா.ஜ.க. ஏற்பாடு செய்த போராட்டத்தில் மத்திய மந்திரி ஷோபா தமிழர்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
    • அவரது இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசினார். பா.ஜ.க. சார்பில் பெங்களூரில் நடந்த போராட்டத்தின் போது அவர் இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

    அவரது இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது.

    இதற்கிடையே, கிருஷ்ணகிரியில் பயிற்சி பெற்ற பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் வருத்தம் அடைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்தை வாபஸ் பெறுகிறேன் என மத்திய மந்திரி ஷோபா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

     இந்நிலையில், கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் கூறியதாவது:

    அமைதியாக வளர்ச்சியை நோக்கிச் செல்லும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பற்றி மத்திய மந்திரி ஷோபா கரந்தலஜே கூறியது கடும் கண்டனத்திற்கு உரியது.

    அமைதியை விரும்பும் கிருஷ்ணகிரி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வேலையாகவே பா.ஜ.க. மந்திரியின் இந்த செயலை நான் பார்க்கிறேன்.

    அன்று கோட்சே எப்படி தேசத்தந்தை காந்தியை கொலை செய்து நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தானோ, அதே திட்டத்தை தான் இன்று பா.ஜ.க. எனது கிருஷ்ணகிரி தொகுதியில் திட்டமிட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து திராட்சை பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகின்றன.
    • திராட்சை பழங்களே சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.

    மருத்துவ குணம் கொண்ட இப்பகுதியைச் சேர்ந்த பன்னீர் மற்றும் விதை இல்லா திராட்சை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பகுதி திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்குவதற்கான பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.

    கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் அதிக அளவு திராட்சை பல்வேறு பகுதிகளுக்கு தொழிலாளர்களால் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஆனால் வரத்து குறைந்துள்ளதால் பல ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. குறிப்பாக விதை இல்லா திராட்சைகள் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும். இந்த வகை திராட்சை பழங்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தற்போது ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து திராட்சை பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை பழங்களை சுத்தம் செய்ய ரசாயனங்களில் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    ரசாயனம் கலந்த திராட்சை பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் ½ மணி நேரம் ஊற வைத்து கழுவிய பின்னர் சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் திராட்சை பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் போது இது போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை.

    இதனால் திராட்சையை வாங்கியவுடன் சாப்பிடும் பொதுமக்களுக்கு தொண்டை வலி, வயிறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் திராட்சை பழங்களே சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. எனவே அதிகாரிகள் இது போன்ற திராட்சை பழங்களை எவ்வாறு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது? என்றும், அதில் ரசாயன கலப்பு உள்ளதா? என்பது குறித்தும் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும்.
    • வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தட்டம்மை, சின்னம்மை போன்ற வெப்பம் தொடர்பான நோய்கள் அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. தட்டம்மை நோய்க்கு காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவி காணப்படும். கண்கள் சிவந்து வீக்கம் ஏற்படும்.

    சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்து காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.

    எனவே பொதுமக்கள் வெயில் காலத்தில் இந்த நோய்களில் இருந்து தங்களை காக்க மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பொதுமக்கள் தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர், மோர் மற்றும் இயற்கை பழச்சாறுகளை குடிக்கலாம். திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி பழங்கள் போன்ற நீர் சத்து உள்ள பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

    வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீர் குடித்தால் ரத்தக் குழாய்கள் சுருங்கி, உடலின் வெப்பம் அதிகரிக்கும்.

    எனவே கோடை காலத்தில் ஐஸ் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார்.
    • இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கு பா.ஜ.க. வாடகை செலுத்துகிறதா? என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்காக பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளரான நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் பி.வி. செந்தில், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவிக்கு இ-மெயிலில் புகார் அனுப்பி உள்ளார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது-

    கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டன.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975-ல் தேர்தல் பிரசாரத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியபோது தேர்தல் கமிஷனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . அதன்படி எந்தவொரு தலைவரும், பிரதமர் அல்லது முதல்வர் கூட, பிரசார நோக்கங்களுக்காக அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது.

    இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கு பா.ஜ.க. வாடகை செலுத்துகிறதா? என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். அப்படியானால், மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படலாம். இந்திய விமானப்படைக்கும் இதன் மூலம் வாடகை வருவாய் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    • மனுவை பரிசீலித்து, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.

    சென்னை:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சி தலைவர் ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பா.ஜ.க.வுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. வக்கீல்கள் வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27ந்தேதி ஆகும்.
    • 28ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.

    திருச்சி:

    தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.

    திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் திருச்சி உதவி கலெக்டர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களிடம் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முதல் நபராக ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ஒருவர் இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பொழுது தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து வந்தார்.

    அதன் பின்னர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண் மனு தாக்கல் செய்தார். இதையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27ந்தேதி ஆகும். 28ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 30 ந்தேதி மாலை 3 மணிக்குள் வேட்பாளர் மனுவை திரும்ப பெறலாம்.

    • பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்தனுக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத்தலம் கட்ட கடந்த 4 வருடங்களாக அனுமதி கேட்டு கிடைக்கவில்லை என்றும் அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. அதனால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரியவந்தது.

    அரசுக்கு சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுதலம் கட்ட அனுமதி கேட்டு அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து பேனர் வைத்ததாக சேனாதிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (27), சிலம்பரசன் (35), சைமன் (35), பிரவீன் (31), மேத்யூ (29) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
    • ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 12,760 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட 30,822 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

    ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று, தபால் ஓட்டு பதிவு செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவம் 12டி வழங்குகின்றனர்.

    இதுதொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்காளருக்கு விருப்ப படிவம் வழங்குவது குறித்த கூட்டம், சப்- கலெக்டர் சவுமியா தலைமையில் நடைபெற்றது. இதில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டது.

    • தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு இவையெல்லாம் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கான வாகன அனுமதியை பல்வேறு கட்சிகளும் அணுகக்கூடும். இது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு மற்றும் வாகனத்தின் தற்காலிக புகை அளவு சான்றிதழ்கள் இவையெல்லாம் இருக்க வேண்டும். இவை இல்லாதபோது, அந்த வாகனங்கள் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்படாது.

    பொதுவாகவே அனைவரும் பதிவுசான்றிதழ் வைத்திருப்பார்கள். ஆனால் காப்பீடு, தற்காலிக புகை அளவு சான்றிதழ் உள்ளிட்டவை இருக்காது. ஆகவே அப்படிப்பட்ட வாகனங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் அனுமதி கிடையாது. கடைசி நேரத்தில் பலரும் எங்கள் வாகனங்களுக்கு, பிரசாரத்தில் அனுமதி தரப்படவில்லை என்பதற்கான காரணங்களில் மேற்கண்ட ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மேல் மட்டத்தில் தலைவர்கள் தங்கள் உறவை புதுப்பித்து திருப்தி அடைந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுவது தெரியவந்துள்ளது.
    • பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுடன் பா.ம.க. தொடர்ந்து பேசி வந்தது. திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு நலன் மற்றும் கட்சி நலன் கருதி பா.ஜனதா கூட்டணியில் இணையும் முடிவை எடுத்திருப்பதாக பாம.க. அறிவித்தது.

    நேற்று சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்திலும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்ற பிரதமர் மோடியும் பா.ம.க. இணைந்ததன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக மாறி இருப்பதாக குறிப்பிட்டார்.

    மேல் மட்டத்தில் தலைவர்கள் தங்கள் உறவை புதுப்பித்து திருப்தி அடைந்தாலும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுவது தெரியவந்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக பா.ம.க.வில் இருந்து வரும் தொண்டர்கள் சிலர் கூறும்போது, "டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். ஆனால் அ.தி.மு.க.வுடன்தான் சென்றிருக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைத்து இருந்தாலும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கலாம். பா.ஜனதாவுடன் கை கோர்த்ததால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை.

    இதற்கு முக்கிய காரணம் எங்கள் கிராமங்களில் பா.ஜனதாவுக்கு பூத் கமிட்டிகள் கூட இல்லை. அதே நேரம் அ.தி.மு.க.வுக்கு பூத் கமிட்டி இல்லாத கிராமங்களையே பார்க்க முடியாது. கூட்டணி அமைத்தாலும் வேலை செய்ய தொண்டர்கள் வேண்டுமல்லவா" என்றார்கள்.

    அரியலூரை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தும் பா.ம.க. வலுவாக இருக்கும் ஜெயங்கொண்டம், விருத்தாசலம் தொகுதிகளில் தோற்றோம். அதற்கு காரணம் தி.மு.க.வின் வலிமையான அடித்தளம்தான். இந்த நிலையில் இப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது" என்றார்கள்.

    ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    ஆனால் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் இடஒதுக்கீட்டை எதிர்த்தன. அப்படியிருக்கும் போது மக்கள் ஆதரவை எப்படி பெற முடியும்?

    பெயர் வெளியிட விரும்பாத பா.ம.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எங்கள் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகிறது. அதை காங்கிரஸ் ஒத்துக்கொண்டது. ஆனால் பா.ஜனதா மவுனம் காத்து வருகிறது. இப்படி பல பிரச்சனைகள் இருக்கும் போது தொண்டர்கள் எப்படி திருப்தியாக வேலை செய்வார்கள்?" என்றனர்.

    மேலும் சில முக்கிய விஷயங்களை அவர்கள் விவரித்தனர். "வட மாவட்டங்களில் பா.ஜனதாவில் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ம.க.வில் இருந்து சென்றவர்கள்தான். இப்போது கூட்டணியை தலைமை அறிவித்து விட்டாலும் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவது கேள்விக்குறியே" என்றனர்.

    • பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுவார்.
    • ஜனநாயம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக சவப்பெட்டியுடன் வந்ததாக தெரிவித்தார்.

    கோவை:

    கோவையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நூர்முகமது. இவர் கோவையின் தேர்தல் மன்னனாக அறியப்படுகிறார். பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுவார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதை அடுத்து இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அவர் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சவப்பெட்டியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நூர்முகமது மனுத்தாக்கல் செய்தார். இவர் 42-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது 42-வது முறையாக, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன். ஜனநாயம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக சவப்பெட்டியுடன் வந்ததாக தெரிவித்தார். 

    ×