என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்:

    ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணமின்றி ரூ.10 லட்சம் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (35) என்பவர், பேரண்ட பள்ளி பகுதியில் கிரஷர் கம்பெனி நடத்தி வருவதாகவும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பெங்களூரிலிருந்து பணம் வாங்கி வந்ததாகவும் தெரிய வந்தது. உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட அந்த பணத்தை, அதிகாரிகள் ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், உதவி கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர்.

    இதே போல், ஓசூர் அம்பாள் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த தினேஷ்குமார் (45) என்பவர் வங்கியில் செலுத்த, உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.60,000/- பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓசூர் அருகே உள்ள கக்கனூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பெங்களூரை சேர்ந்த காய்கறி வியாபாரி அன்னையப்பா (65) என்பவர் காரில் எடுத்து வந்த 2 லட்சத்தி 76 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் ஓசூர் கொத்தூரில் காய்கறி வாங்கியதற்காக செலுத்த வேண்டிய பணம் என்பது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல், ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளி கிராம பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் (23) என்பவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் பெட்ரோல் பங்கில் வசூலான பணம் என தெரிய வந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும், ஓசூர் இஎஸ்ஐ ரிங் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் சென்ற ஓசூர் கீழ் கொல்லர் தெருவை சேர்ந்த சின்னராஜ் (40) என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கட்டுமான தொழிலுக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் பணம் முழுவதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. ஓசூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.
    • கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரெயில் ஒன்றும், சென்னை வழியாக மற்றொரு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் வருகிற 31-ந்தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

    அதேபோல் ரெயில் 06049 ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்தவகையில் கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ரெயில் எண் 06043 தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    06044 கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார்.
    • குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    ஸ்ரீவைகுண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் அம்மாள்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து வருவதாக ஏரல் தாசில்தாருக்கு புகார் சென்றது.

    அதன் அடிப்படையில் ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று பார்த்தபோது அம்மாள் தோப்பு பகுதியில் உள்ள ஒரு குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தியபோது வெள்ள நிவாரண பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறினர். எனினும் இதுதொடர்பாக இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    தொடர்ந்து அந்த குடோனுக்கு பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சீல் வைத்து ஆவணங்களை ஏரல் தாசில்தார் கோபாலிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
    • நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம்-நகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் உரிய ஆவணங்கள் இருந்தால் விடுவித்து விடுவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை வாகன சோதனையில் இதுவரை ரூ.80 கோடி அளவுக்கு நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அங்கு ஒப்படைத்து விடுகின்றனர்.

    இதனால் பணம் நகை பொருட்களை வியாபாரிகள் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்போது தேர்தல் நெருங்க நெருங்க சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்கு வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறியும் விடவில்லை. பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

    அடுத்தடுத்து சோதனை நடைபெறும் நிலையில் வியாபாரிகளும், நகை கடைக்காரர்களும் பணம் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி தேர்தல் கமிஷனில் முறையிட்டும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கடைக்கு கொண்டு வர முடியாததால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாகவும் வியாாரிகள் கூறி வருகின்றனர்.

    பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தவைர் ஜெயந்தி லால் சலானியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதிப்பதால் பொதுமக்கள் நகை வாங்க வருவதற்கு பயந்து கடைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு சிறிய நகரங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்த மாதம் தொடர்ந்து நகை விலை உயர்ந்து கொண்டு வருவதால் எப்படியாவது கையில் உள்ள பணத்தை கொண்டு நகை வாங்கி விடலாம் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் நகை கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.


    இப்போது உள்ள விலைவாசியில் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்த்து ரூ.55 ஆயிரம் ஆகிவிடும். எனவே தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள ரூ.50 ஆயிரம் என்ற அளவை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம்.

    மே 10-ந்தேதி அட்சய திருதியை நாள் நெருங்கி வருவதால் நகைக் கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் நகை பட்டறையில் இருந்து நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    அட்சய திருதியை ஆர்டர், திருமண நகை ஆர்டர் உள்ள நிலையில் நிறைய நகைகளை கொண்டு செல்லும் போது பறக்கும் படையினர் பிடித்து விட்டால் உடனே அதை வாங்க முடியாது.

    2 மாதம் கழித்துதான் பெற முடியும். தங்கம் விலை தினமும் ஏறி வரும் நலையில் 2 மாதம் போலீசாரிடம் நகை இருந்தால் விலை ஏற்றத்தால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்.

    எனவே நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நகைக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதால் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று 1000 கிலோ அளவுக்கு நகை வியாபாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

    சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.

    வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-49

    3. தென்சென்னை-53

    4. மத்தியசென்னை-32

    5. ஸ்ரீபெரும்புதூர்-32

    6. காஞ்சிபுரம் (தனி)-13

    7. அரக்கோணம்-29

    8. வேலூர்-37

    9. கிருஷ்ணகிரி-34

    10. தர்மபுரி-25

    11. திருவண்ணாமலை-37

    12. ஆரணி-32

    13. விழுப்புரம் (தனி)-18

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-27

    16. நாமக்கல்-48

    17. ஈரோடு-47

    18. திருப்பூர்-16

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-41

    21. பொள்ளாச்சி-18

    22. திண்டுக்கல்-18

    23. கரூர்-56

    24. திருச்சி-38

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-18

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-13

    31. சிவகங்கை-21

    32. மதுரை-21

    33. தேனி-29

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-27

    36. தூத்துக்குடி-31

    37. தென்காசி (தனி)-26

    38. திருநெல்வேலி-26

    39. கன்னியாகுமரி-27.

    • தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
    • அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.

    இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்ற போது அங்கு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இந்த வேளையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.

    அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

    அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் சிவசங்கரை அந்த பகுதியினர் பாராட்டினார்கள்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும்.
    • திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பங்குனி மாதம் என்பதால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நடக்கும் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட எந்த வகையான நிகழ்ச்சிகள் நடத்தினாலும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கோவில், சர்ச், மசூதிகளில் விழாக்கள் நடத்திட அனுமதி பெற அதன் நிர்வாகிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து அனுமதி பெற்று செல்கின்றனர்.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும். கோவில் நிர்வாகிகள் அனுமதிகேட்டு விண்ணப்பிக்கும்போது, அதன் உண்மை தன்மை ஆராய்ந்து உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்று கோவில் விழாக்கள் நடத்தும்போது, அவர்கள் எப்போது போல ஒலி பெருக்கிகள் வைத்து நிகழ்ச்சி நடத்தலாம்.

    ஆனால் அங்கு எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்தோ அல்லது வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல் திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இதுவரை சர்ச், ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதியில் சிறப்பு தொழுகை நடத்துவது, ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜ் சாலை கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில், 'நான் வாக்களிப்பேன் , நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற வார்த்தைகள் பொறி க்கப்பட்ட ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கிருத்திகா விஜயன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
    • 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் சினிமா கோட்டை வீதியில் ஒரு வீட்டில் அரசின் மதுபானங்களை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வீட்டில் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தானம் (48) என தெரிய வந்தது. சந்தானம் பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி அதை வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிகின்றது.

    இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தனத்தை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்த 100 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    • நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை.
    • நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் யார் பெரிய கட்சி என்பது ஜூன் 4-ந்தேதி தெரிய வரும். நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை. பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ந் தேதி தெரிய வரும். அன்று எந்த கட்சி காணாமல் போகிறது என்பதும் தெரியவரும்.

    நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. களத்தில் இல்லை. பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு போலி சமூக நீதி பேசுபவர் தான் மு.க. ஸ்டாலின். பா.ஜ.க. சார்பில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் துணை முதல்-மந்திரிகளாவும், முதல்-மந்திரிகளாகவும் உள்ளனர். சமூக நீதியை பிரதமர் மோடி நிலைநாட்டி வருகிறார். தி.மு.க.வில் அமைச்சர்களாக உள்ள பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 3 பேர். கடைசி இடங்களில் உள்ளனர். பெட்ரோல், விவசாய கடன் தள்ளுபடி என எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. பிரதமர் தர்மத்தின் பக்கமும், ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும் இருக்கிறார்கள். நீலகிரியில் இந்த தேர்தலை 2 ஜியா, மோடி ஜியா என்று என்ற கேள்வியுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார்.
    • கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை காண்பித்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குமரி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் குமரி மாவட்டத்தில் அருமனை, திங்கள்சந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மைக் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

    கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார். அப்போது பேசத்தொடங்கியதில் இருந்தே, அவர் பேசிய கார்டுலெஸ் மைக்கில் கோளாறு ஏற்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோது அடிக்கடி கோளாறு ஏற்பட்டபடி இருந்ததால் சீமானால் தொடர்ந்து பேச முடியவில்லை.

    அவர் வேனில் நின்றபடி சவுண்ட் ஆபரேட் செய்தவரை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தார். ஆனால் அவர் பேசிய மைக் 3 முறைக்கு மேல் கோளாறு ஆனது. இதையடுத்து வயர் இணைப்புடன் பயன்படுத்தும் மைக் சீமானிடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சீமான் தொடர்ந்து பேசினார்.

    கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது சீமானின் பிரசாரத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    கோவை:

    கோவையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து இன்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரம் செய்தார். துடியலூர் சந்தைக்கடை பகுதியில் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க.வினர் பொய் செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு குழு வைத்துள்ளனர். அந்த குழுவினர் மூலம் பொய் செய்திகளை பரப்பி மக்களிடத்தில் மத ரீதியிலான பிரச்சனைகளை பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில், மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தாலே போதும் என்று தான் நினைக்கின்றனர். அந்தளவுக்கு பா.ஜ.க. ஆட்சி உள்ளது. கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் இதுவரை செல்லவில்லை?.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி.க்களில் 44 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ.க. தேர்தல் பத்திரம் ஒன்றை கண்டுபிடித்து, அதனை கொண்டு வந்தது. அந்த தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    விசாரணை அமைப்புகளை அனுப்பி, ரெய்டு நடத்தி அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரத்தை பயன்படுத்தி நிதி பெற்றுள்ளனர். தேர்தல் பத்திரத்தில் பா.ஜ.க. ஊழல் செய்துள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நடைபெறுகிற கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாமல் போகலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×