என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது.
    • வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.

    முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2-ம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் சுவாமி தரினம் செய்தனர்.

    இந்த விழாவில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜா, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது ஏராளமானோர் நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவருடனுமே நடிகை ரோஜா செல்பி எடுத்தார்.

    இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சிலர் செல்பி எடுக்க விரும்பினார்கள். ஆர்வமுடன் அவர்கள் ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றனர். அப்போது ரோஜா திடீரென கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கைகாட்டினாராம். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மை பணியாளர்கள் நடிகை ரோஜா உடன் செல்பி எடுத்தனர்.

    இந்நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ரோஜா, தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படி செய்கிறார் ரோஜா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.

    • இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.
    • போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் எடுத்து வைத்தார்.

    நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை என்று அதனால் விசாரணை அதிகாரியை மாற்றுங்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி காட்டமாக கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

    இந்த வழக்கின் பின்னணியானது கடந்த 2019ஆம் நடைபெற்ற நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் பலர் சேந்திருக்கிறார்கள். தேனி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த சென்னை மாணவர் உதிப் சூர்யா என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்த போது பெரும் அதிர்ச்சி வெளியானது. 2019 ஆண்டு தேர்வில் உத்தர பிரதேசம், டெல்லி, கல்கத்தா, ராஜஸ்தான் போன்ற இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுந்திய சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் செய்தி ஊடகங்கள், பத்திரிக்கைகள் கண்ணபிண்ண என செய்திகளை வெளியிடுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அதற்கான ஆதாரங்களை காண்பித்தார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி செய்தி ஊடகங்கள் சரியாகத்தான் செய்திகளை வெளியிடுகிறது என்று கூறினார். மாணவர்களின் அனைத்து அணிகலன்களையும் கழற்றி சோதனை செய்யும் நீங்கள், போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் எடுத்து வைத்தார்.

    அதுபோக நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்றுங்கள் என நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.

    மேலும் சிபிசிஐடி கேட்கும் வழக்கு குறித்த ஆவணங்களை தேசிய தேர்வு முகமை 19ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையானது உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • டெல்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
    • சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை ஜூன் 26-ம் தேதி கைது செய்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அனுமதி அளித்துள்ளார். அத்துடன் 18-ந்தேதி உறவினர்களை சந்திக்கவும் அனுமதி அளித்துள்ளார்.

    போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. அப்போது சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    ஆனால் ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மும்பை உள்ளிட்ட இடங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது பதில் அளித்துள்ளார். இதனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். இதனால் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, மூன்று நாள் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதித்தார். 19-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    டில்லி திஹார் சிறையில் இருந்து, சிறை மாற்ற வாரண்ட் மூலம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்-கை நீதிமன்ற காவலில் வைக்கவும், 14 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியும் அமலாக்க துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    ஜூலை 29ம் தேதி வரை, ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைத்தார். இந்த மனு மீதான விசாரணையின்போதுதான் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    • ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், தம்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
    • டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தஞ்சாவூா்:

    காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் மற்றும் காவிரி ஒழுங்காற்றுகுழு உத்தரவுபடி தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இரு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து அறிவித்தன.

    அதன்படி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரெயில் நிலையத்திற்கு வந்த மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், தம்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் சி.பி.ஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆர்.வீரமணி, துரை அருள்ராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.சதாசிவம், வி.எம்.கலியபெருமாள், ஏ.ராஜேந்திரன், எம்.ஆர்.முருகேசன், பி.பரந்தாமன் உட்பட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் கர்டாக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டனர். இதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதே போல் திருவாரூரில் இருந்து பட்டுகோட்டை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலை திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் விவசாயிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பயணிகள் ரெயில் ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதைப்போல் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் துணைச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் தலைமையில் காரைக்கால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், வலங்கைமான் (சிபிஎம்) ஒன்றிய செயலாளர் ராதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத் தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைப்போல் திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் விவசாய சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    • செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
    • ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக வங்கியின் கணக்கு தொடர்பாக ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை வங்கிக்கு அனுப்பிய கடிதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி அந்த ஆவணங்களை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இந்த ஆவணங்களை பெறுவதற்காக செந்தில் பாலாஜியை இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தும்படி சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிடிருந்தார்.

    இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

    அவருக்கு அந்த வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையானது ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றைக்கு முடிவடைந்ததையடுத்து, அவரது நீதிமன்ற காவலையும் ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதன்மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது.

    சேலம்:

    மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறையின் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500 மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி துறை மூலமாக வழங்கக்கூடிய உதவிக்காக ரூ.2000 கேட்டு விண்ணப்பித்து பயனாளிகளை தேர்வு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் ஆயிரக்கணக்கான பேருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    மாவட்டம் முழுவதும் மாற்றித்திறனாளிகள் உதவி தொகை கேட்டு விண்ணப்பம் செய்ய செல்லும்போது சர்வர் வேலை செய்யவில்லை என காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

    இதனை கண்டித்தும், உதவித்தொகை வழங்க கோரியும் மாற்றுத்திறனாளிகள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அவருடைய உடல் ஊன தன்மைகேற்ப வேலை வழங்க வேண்டும் எனவும் அதுவும் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் முறையான ஊதிய வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க மறுத்து வருகின்றனர் . இதுகுறித்து அதிகாரிகளும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க கேட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் கொடுத்தனர். ஆனால் அதில் சிலருக்கு மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி விண்ணப்பித்தால் உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த யூ.டி.ஐ.டி. கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே கார்டு வந்துள்ளது. இதனால் பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது. எனவே கலெக்டர் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அவர்களிடம் தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • சட்டசபை கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தர தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து விவாதிக்க அனைத்து தமிழக சட்டசபை கட்சித்தலைவர்கள் கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருத்தகை, பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு நீரை திறந்து விடாத கர்நாடக அரசின் முடிவை ஏற்க முடியாது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இதையடுத்து, கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தருவதற்கு தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுப்படி தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    காவிரி நடுவர்மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்கு இணங்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என மற்றொரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

    • 234 சட்டமன்றத் தொகுதிகளில், அரசு ஏற்கனவே 61 தொகுதிகளில் பல்வகையான விளையாட்டரங்கங்களை அமைத்துள்ளது.
    • சிறு விளையாட்டரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதன் மூலம் சென்னையை உலக அளவிலான விளையாட்டு நகரமாக நிறுவி, உலகளாவிய போட்டிகளுக்கு சிறந்த இடமாகவும் விளையாட்டு வீரர்களுக்கு உயர் செயல்திறன் பயிற்சி மையமாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டது. அந்த கையில் கோபாலபுரத்தில் ரூ. 7.79 கோடி மதிப்பீட்டில் குத்துச்சண்டை பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது.

    இப்பயிற்சி மையத்தின் கட்டிட பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில், அரசு ஏற்கனவே 61 தொகுதிகளில் பல்வகையான விளையாட்டரங்கங்களை அமைத்துள்ளது. அவ்விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான விளையாட்டுகள் உட்பட குறைந்த பட்சம் ஐந்து முக்கிய விளையாட்டுக்களுக்கான மைதான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றப் தொகுதிகளில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மீதமுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அளவில் சிறு விளையாட்டரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ந. எழிலன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
    • எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள்!

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

    அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா! இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல.

    சமத்துவத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ. இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறைசாற்றுவோம். சாதி. மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் செயற்பாடுகளை நினைவிலேந்தி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம்.

    வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம்.

    அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள். சமூகச் செயற்பாட்டாளர்கள். பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள்!

    • மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.
    • GR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது,

    மத்திய அரசின் Revamped Distribution Sector Scheme (RDSS) திட்டத்தில் நிதி பெறவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே பொய்யை மீண்டும் சொல்கிறது திமுக அரசு.

    இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுகவின் திசைதிருப்பும் முயற்சியைத் தமிழக மக்களிடம் எடுத்துரைத்தோம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

    * பொருத்தப்படவேண்டிய ஸ்மார்ட் மீட்டர், DT மீட்டர், Feeder மீட்டர்களின் எண்ணிக்கை: 3,06,82,343 (மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை)

    * பொருத்தப்பட்ட மீட்டர்களின் எண்ணிக்கை: 1,30,861 (4%)

    * தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தனியாரிடம் செய்த மின் கொள்முதல் மதிப்பு.

    2021-22: 39,365 கோடி ரூபாய்

    2022-23: 50,990 கோடி ரூபாய்

    2023-24: 65,000 கோடி ரூபாய்

    * கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த தனியார் மின் கொள்முதல் மதிப்பு: 1,55,355 கோடி ரூபாய்.

    * RDSS திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய எந்த பணிகளையும் திமுக செய்யவில்லை, மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.

    * கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரே மாற்றம், நலிவடைந்த BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

    • 8 விருதாளர்களுக்கு முதலமைச்சர் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
    • 10 விருதாளர்களுக்கு முதலமைச்சர் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி கவுரவித்தார்.

    '2022-23ஆம் ஆண்டிற்கான "வாழும் கைவினைப் பொக்கிஷம்'' விருதுகளை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ந. பாலகிருஷ்ணன் மற்றும் கே.பி. உமாபதி (பித்தளை கலைப்பொருட் கள்), சா. ராஜகோபால் (சுடு களிமண்), ந.மணி ஆச்சாரி (கற்சிற்பம்), சி. முத்துசுவாமி ஆச்சாரி (கோவில் நகைகள்), சு. கோவிந்தராஜ் (இசைக்கருவி), ப. சுலைகாள் பீவி (கோரைப் பாய் நெசவு) செ. தங்கஜோதி (இயற்கை நார்பொருட்கள்) ஆகிய 8 விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    "2022-23ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை - சி. ரவி ச. நாகலெட்சுமி, மா. ராஜப்பா (தஞ்சாவூர் ஓவியம்), ம. முருகேசன் (இசைக்கருவி), ரா. லோகநாதன் (தஞ்சாவூர் கலைத்தட்டு), ந. பூவம்மாள் (சித்திரத் தையல்), திரு. ப. வரதன் (கற்சிற்பம்), மு. ராஜரத்தினம் மற்றும் ரா. சக்திவேல் (மரச்சிற்பம்), செ. லில்லி மேரி (மூங்கில் பாய் ஓவியம்) ஆகிய 10 விருதாளர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 19-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×