என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலுார் தேவர்சோலையை அடுத்து நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் யானை கூட்டங்கள், குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்றும், இதற்கு நிரந்தர தீர்வு காண கோரியும் அஞ்சுகுன்னு பகுதியில் கிராம மக்கள் கடந்த 11-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றுடன் 16-வது நாளை எட்டியுள்ளது.

    இதற்கிடையே குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து, சீனிவாசன், வசீம் உள்பட 4 கும்கி யானைகள் இங்கு அழைத்து வரப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இருப்பினும் மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று, தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டாய்மட்டம், காரக்குன்னு பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. அந்த யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடலூா் வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனத் துறையினா், யானை விரட்டும் காவலா்கள், சிறப்புக் குழு வனக் காவலா்கள், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி கோட்ட யானை விரட்டும் பணியாளா்கள் ஆகியோா் 4 கும்கி யானைகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஊருக்குள் புகுந்த யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    • ஆயிரம் விலக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் ஹசன் முகமது ஜின்னா.
    • 'புதிய குற்றவியல் தொடர்பான நிலைப்பாட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது'

    தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக கடந்த 2021 முதல் பணியாற்றி வந்த ஹசன் முகமது ஜின்னா தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

    இந்த நிலையில், தமிழக குற்றவியல் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு தலைமை வழக்கறிஞராக இருப்பவருக்கு குற்றவியல் துறை துணை தலைவராக பதவி உயர்வு கொடுத்து, அதன் பிறகு அவர் தலைவராக பொறுப்பேற்பது தான் மரபு.

    மேலும் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்ப்பதாக கூறிவிட்டு அதன் அடிப்படையில் தற்போது இந்த நியமனம் நடந்துள்ளது. புதிய குற்றவியல் தொடர்பான நிலைப்பாட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

    • 442-வது ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி தேரோட்டம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், நடை பெற்றது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 8.30 மணிக்கு பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

    அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பாட்டிருந்த படகில் இருந்து சைரன் ஒலி இசைக்கப்பட்டது. சமாதானபுறாக்கள் பறக்கவிடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட ஆயிரகாக்கானோர் கலந்து கொண்டனர்.

    பகல் 12 மணிக்கு முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய மாதா அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை, ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது,

    திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். வருகிற 5-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.

    இந்த தேவாலயமானது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த தேவாலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி தூத்துக்குடி மக்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். இந்த ஆண்டு 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ-மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்.

    இந்த கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆங்காங்கே சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 

    • கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன.
    • நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வோம்

    சென்னை:

    கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,

    கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.

    நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    • மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.

    தஞ்சாவூா்:

    ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு 2 மாநிலங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த பட்ஜெட் நகலை நாடு முழுவதும் எரிக்கும் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.

    இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தை வருகிற 31-ந்தேதி நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு நாளை கடைப்பிடிக்கும் விதமாக காா்பரேட்டுகளே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்ட தலைமையிடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இயற்கையை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 17-ந்தேதி தூத்துக்குடி, சேலம், திருவாரூா், செங்கல்பட்டு ஆகிய 4 இடங்களில் கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இந்த போராட்டங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சியினா் ஆதரவு அளிக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாற்றம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இதில் கடந்த 9-ந் தேதி மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டுவது, காலிங் பெல்லை அழுத்தும் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதேபோல் அந்த நபர் அந்த பகுதியில் உள்ள பல்வேறு வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டுவதும் பதிவாகி உள்ளது.

    இதனால் அந்த பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகி ன்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சமீபகாலமாக நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த நபர் கத்தியுடன் சுற்றி வருவதால் நாங்கள் பீதி அடைந்துள்ளோம். இது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வீடுகளின் கதவை தட்டுவது, காலிங் பெல் அடிப்பது இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். அந்த நபரால் பெரிய பிரச்சனை ஏற்படும் முன் அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மக்கள் கூறினர்.

    • கர்நாடகாவில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு.
    • ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    தருமபுரி:

    கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி கிருஷ்ணராஜ் சார் ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று 1 லட்சம் கனஅடிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வரை 56 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 62 ஆயிரம் கன அடியாகவும் தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளதாலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடகா அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்டு 22-ந்தேதி மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார்.
    • பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த மாதம் 4-வது வாரம் அவர் அமெரிக்கா செல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.

    இப்போது வருகிற சுதந்திர தினத்தன்று 15-ந்தேதி கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது என்று முடிவாகி உள்ளது. அதன்படி ஆகஸ்டு 22-ந்தேதி அவர் அமெரிக்கா புறப்படுகிறார்.

    மாநில முதல்-அமைச்சர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசி டம் அனுமதி கோரப்பட்டது. அதன்படி 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அவருக்காக அமெரிக்க தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் தூதரகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் என ஒரு குழு அமெரிக்கா பயணத்துக்கு தயாராகி வருகிறது.

    அமெரிக்கா செல்லும்போது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என்று மீண்டும் தகவல்கள் வரத் தொடங்கி உள்ளது.

    சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாடு செல்லும்போது அங்கிருந்தபடி அவரே தமிழக நிர்வாகங்களை கவனிப்பார் என்றும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரியவந்து உள்ளது.

    • மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.
    • கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீலகிரியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குந்தா, குன்னூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டுகிறது.

    மழையால் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது. மண்சரிவுகளும் ஏற்பட்டு வந்தன. கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

    நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.

    பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு ஊட்டி அருகே உள்ள கேத்தி பகுதியில் போலீஸ் நிலையம் அருகே நின்றிருந்த மரம் முறிந்து போலீஸ் நிலையத்தின் மீது விழுந்தது.

    இதில் போலீஸ் நிலையம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர்.

    சாலையிலும் இந்த மரம் விழுந்ததால் அப்பகுதியில் உள்ள கிராம பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி பிங்கர் போஸ்ட், குளிசோலை பகுதிகளிலும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலை முள்ளிகொரையில் மரம் ஒன்று விழுந்தது. இதனால் இந்த வழித்தடத்திலும் போக்குவரத்து தடைபட்டது. மரம் வெட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

    குன்னூர்-ஊட்டி சாலையில் எம்.ஜி. காலனி பகுதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில், கார் சுக்குநூறாகிறயது.

    கோடேரி, பெங்கால் மட்டம், கைகாட்டி , குன்னக்கம்பை, அதிகரட்டி, குந்தா பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளில் 7 இடங்களில் மின்கம்பம் மீதும் சாலைகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.

    ஊட்டி அருகே முத்தோரை பாலடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக காலநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை, காற்றுடன், குளிரும் சேர்ந்து கொண்டுள்ளது.

    மாவட்டம் முழுவதுமே கடும் குளிரும் நிலவுகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகள், சுவர்ட்டர் அணிந்து கொண்டே வெளியில் வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

    மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    தொடர் மழை மற்றும் குளிரால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் அதிக காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஊட்டி, குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சேரங்கோடு-98, பந்தலூர்-70, கூடலூர்-61, அப்பர் கூடலூர்-60, தேவாலா-57, கிளைன்மார்கன்-44, ஓவேலி-42, செருமுள்ளி-38, பாடந்தொரை-36.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயக்குமார் சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

    ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது.

    இந்நிலையில் நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப், சபாநாயகர் அப்பாவு-வுக்கு நெருக்கமானவராக வலம் வருவபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜோசப் பெல்சியோடு, ஜெயக்குமாரின் ஓட்டுநர் உட்பட 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலவச சைக்கிள் வழங்கும் பணியும் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது.
    • சீருடை தயாரிப்பு பணிகள் முடிவடைந்து மாணவர்களுக்கு வருகிற 29-ம் தேதி முதல் பள்ளிகளிலேயே வினியோகம் செய்யப்பட உள்ளன.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் (2024-25) பள்ளிகள் திறக்கப்பட்டு 1½ மாதம் ஆகிவிட்ட நிலையில், இலவச சீருடைகள், காலணி போன்ற பொருட்கள் சில அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    பள்ளிகள் திறக்கப்பட்டதும் பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள், புவியியல் வரைபடம், கிரையான்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச சைக்கிள் வழங்கும் பணியும் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது. சீருடைகள், காலணிகள் வழங்கும் விவகாரத்தில் மாணவர்களின் சரியான அளவுகளை கணக்கெடுத்து அதற்கேற்ப கொள்முதல் செய்யும் பணிகள் நடப்பாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் சீருடை தயாரிப்பு பணிகள் முடிவடைந்து மாணவர்களுக்கு வருகிற 29-ம் தேதி முதல் பள்ளிகளிலேயே வினியோகம் செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மூலமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    இடையில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் இருந்ததாலும் தாமதம் ஏற்பட்டது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதிக்குள் மாணவர்களுக்கு புத்தகப்பை, காலணி, வண்ண பென்சில்கள் உளபட இதர இலவச பொருட்களும் படிபடியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி.நகரைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார். இதனால் வேனில் இருந்த குழந்தைகள் பத்திரமாக இருந்தனர்.

    இறந்து போன மலையப்பனுக்கு மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இச்சம்பவம் பற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    இறக்கும் தருவாயிலும், இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×