என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.
- மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் புகார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.
இவர் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக பள்ளி முதல்வரை சந்தித்து அனுமதி கோரினார்.
பின்னர் பள்ளி நிர்வா கத்தின் ஒப்புதல் உடன் மாணவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளித்து வந்ததாக தெரிகிறது. இதில் சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
மேலும், சிவராமனை விசாரிப்பதற்காக தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்தில் சிவராமனின் உறவினார்கள் 5 பேர் அவருக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிவராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடு வதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பவுர்ணமி வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.02 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.
பவுர்ணமி கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும்.
- 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
அவினாசி:
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நீரேற்றத்துக்கான மோட்டார் இயக்கப்பட்டு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் குழாய்கள் மூலம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ள ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்ல ப்படுகிறது. இதனால் 3 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள், அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தநிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் ஏரிக்கு வந்த தண்ணீரை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மலா்தூவி வரவேற்றாா்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஈரோடு பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை விநாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாள்களுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.
அந்த தண்ணீர் 1065 கிமீ., நீளத்துக்கு நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதன் மூலம் நீா்வளத் துறை சாா்பில் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும். 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
குறிப்பாக திருப்பூா் மாவட்டத்தில் 32 நீா்வளத் துறை ஏரிகள், 22 ஒன்றிய ஏரிகள், 385 குட்டைகள் என மொத்தமாக 429 நீா்நிலைகளில் நீா்நிரப்பப்படுகிறது. இதன்மூலம் 8151 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் சாா்பாக வும், திருப்பூா் மாவட்ட மக்களின் சாா்பாகவும் நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன் என்றாா்.
அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட மருத்துவ அலுவலா் முரளி சங்கா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
ஏற்காடு:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஏற்காடும் ஒன்றாகும். இங்கு வார இறுதி நாட்களிலும் அரசு விடுமுறை தினங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். ஏற்காட்டில் தொடர் மழை பெய்து குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் இதை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், ஐந்திணை பூங்கா போன்ற இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயணச் சீட்டு பெற்று இயற்கை அழகை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர்.
தொடர் மழை காரணமாக ஏற்காடு மலையின் பல்வேறு பகுதிகளில் அருவிகள் உருவாகி உள்ளது. அதில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்காடு மலை பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட நேரம் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. பலத்த மழை பெய்து கொண்டே இருந்ததால் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வரவில்லை.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏற்காடு வாழ் இளைஞர்கள் தாங்களாகவே மரங்களையும் மரக்கிளைகளையும் அகற்றினர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.
- முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
- இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. இந்த விழா தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதன் காரணமாக விழா நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து மாற்றம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, "18.08.2024 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை. நேப்பியர் பாலம், வாலாஜா சாலை. அண்ணா சாலை மற்றும் கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.
3. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்துசெல்லுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4. பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை, தீவுதிடல் மைதானம், PWD மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.
5. பெரியார் சிலை. சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.
6. வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 1000 மணி முதல் 1600 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.
7. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாகவும் மற்றும் VVIP-கள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
8. தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
9. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர்சாலை மற்றும் வாலாஜாசாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது," என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- பி.சுசீலா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- வயது மூப்பு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
சென்னை:
சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் திருப்பதியில் பிரபல பின்னணி பாடகி சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.
- ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
- இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார்.
காஞ்சிபுரம்:
பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.
தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தியும், தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசின் நிதி ஆயோக் குறியீட்டில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
பெண்களுக்கான புதுமையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தெற்கு ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
- விழாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
- இதில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.
இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் மின்சாரத்துறைக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது.
மாவட்டம் வாரியமாக ஆராய்ந்து நீண்ட காலமாக பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு செல்லும் சாலை பாதையை ஆக்கிரமிப்பு செய்தும் 10 சென்ட் வீட்டு மனை பட்டா இடத்தை கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அபகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர், சங்கராபுரம் தாசில்தார் ஆகியோரிடம் முறையிட்டும் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த திருநங்கை ரேணுகா மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால் காவல்துறையின் தடையை மீறி சாலையில் அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- மருத்துவம் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
- மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இச்சம்பவம் மருத்துவம் படிக்கும் மாணவிகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இது போன்ற ஒரு சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இன்று 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






