என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
- ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கொட்டாரம், அனவன் குடியிருப்பு, அகஸ்தியர் பட்டி, செட்டிமேடு, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தென்காசி மாவட்டம் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, சேர்வை காரன்பட்டி, பாப்பான் குளம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, கல்யாணிபுரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நண்பகல் 11.55 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
சுமார் 5 வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்தி ரங்கள் உருண்டது. வீடுகளில் இருந்த ஜன்னல், கதவுகள் குலுங்கியது. ஒருசில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
சில இடங்களில் பூமிக்குள் மோட்டார் ஓடுவது போல் ஒரு அதிர்வு தென்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து அவசரம், அவசரமாக வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு ஓடி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு 29-ந்தேதி செங்கோட்டை, புளியரை, வடகரை, அச்சன்புதூர், தென்காசி, சுரண்டை, வி.கே.புரம் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டது என்றனர்.
தற்போது 2 மாவட்டங்க ளிலும் பெரும்பாலான கிராமங்களிலும் மக்கள் லேசான அதிர்வை உணர்ந்துள்ள நிலையில், அதிகாரிகள் அப்படி எதுவும் தேசிய நில நடுக்க மையத்தில் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் ஏற்பட வில்லை. ரிக்டர் அளவு கோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடக்கும். அவை ரிக்டர் அளவுகோலில் பதிவாகாது.
குறிப்பிட்ட ஆழத்தில் குறிப்பிட்ட வினாடிக்கு நில அதிர்வு நீடித்தால் மட்டுமே ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும். எனினும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினர்.
அதேநேரத்தில் 2 மாவட்டங்களிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேராளவுக்கு எடுத்துச்செல்லப்படுவது தான் இந்த அதிர்வுக்க காரணம் என்று இயற்கை பாதுகாப்பு வள சங்கத்தி னரும், சமூக ஆர்வலர்களும் புகார் கூறுகின்றனர்.
நேற்றைய தினம் இயற்கை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கணக்கில்லாத அளவுக்கு ஆழமாக குவாரிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
ஆலங்குளம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போர் எந்திரம் உபயோகித்து துளை இட்டு பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் பாறைகளை எடுத்துவிட்டு, மீண்டும் ஆழம் தெரியாமல் இருக்க மண் நிரப்பி விடுகின்றனர்.
எனவே குவாரிகளை எல்லாம் அரசு உடனடியாக ஆய்வு செய்து அதி திறன் கொண்ட வெடிபொருட்களை உபயோகப்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
- காவிரி டெல்டா பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
- அணைக்கு வினாடிக்கு 1386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட காவிரி டெல்டா பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 20 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 67.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை (வயது 60) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் 43 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லைதாண்டி வந்ததாக கூறி ஒரு விசைப்படகு , பைபர் 4 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த 13 பேர் என 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.
இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை பூம்புகார் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
- பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடந்தது.
- பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.
4-ந்தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும்.
13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் செய்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடந்தது.
அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து பந்தக்கால் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது.
இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி செய்து வருகிறது.
விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரபாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே தனியாருக்கு சொந்தமான கியாஸ் பங்க் உள்ளது. இது அடர்ந்த காட்டுப்பகுதியாகும். அங்கு தாராபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வந்துள்ளார்.
அப்போது காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று வேகமாக பாய்ந்து சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார் உடனே தாராபுரம் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கயம் வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில் வனவர் ஷேக்உமர், வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதாவது உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்தப் பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம் பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள்-பொது மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கிய சிறுத்தை இதுவரை பிடிபடாத நிலையில் அங்குள்ள சிறுத்தை தான் இங்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தாராபுரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
- கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பணிகளை செய்து முடிக்கும் வரை அவர் வெளிநாட்டிலேயே தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் 2-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டத்தில் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்று இரவே கமல் அமெரிக்க புறப்பட்டு சென்றார். கடந்த 2021-ம் ஆண்டு 'ஹவுஸ் ஆப் கதர்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளுக்காகவே கமல் அமெரிக்க சென்றுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள். இந்த பணிகளை செய்து முடிக்கும் வரை அவர் வெளிநாட்டிலேயே தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
- சிறுமுகை வனத்துறையினர் கடந்த 18-ந் தேதி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்த 15 அடி நீள முதலையை பிடித்தனர்.
- வலையின் அருகே ராட்சத முதலை இருப்பதை பார்த்ததும் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் நீர்வழி குட்டை ஒன்று உள்ளது.
வடவள்ளி, தாளத்துறை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடையும் இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கன மழையால் தற்போது வரை தண்ணீர் தேங்கி உள்ளது.
கடந்த 8 மாதங்களாக இந்த குட்டையில் 10 அடி அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமுகை வனத்துறையினர் கடந்த 18-ந் தேதி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி அங்கிருந்த 15 அடி நீள முதலையை பிடித்தனர்.
அதன்பின் குட்டையில் இருந்த முதலையை வனத்துறை பிடித்து சென்ற பின் அங்கிருந்த மீன்களை மக்கள் பிடித்து சென்றனர். குடியிருப்புகளுக்கு நடுவே சூழ்ந்து இருந்த தண்ணீரிலும் மீன்களை பிடித்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், மீன் பிடிப்பதற்காக குட்டை பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு வலை போட்டு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வலையின் அருகே ராட்சத முதலை இருப்பதை பார்த்ததும் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர்.
சில நாட்களுக்கு முன்பு தான் வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தண்ணீரை வெளியேற்றினர். தற்போது ஊற்று நீரால் குட்டை நிரம்பி வருகிறது. இந்த நிலையில் இந்த குட்டையில் மீண்டும் முதலை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே இங்கிருந்த 2 முதலைகளில் ஒன்றை வனத்துறை பிடித்து சென்ற நிலையில் ஒரு வாரத்திற்குள்ளே மீண்டும் ஒரு முதலை வந்திருப்பது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருக்கும்போதே சொன்னார்.
- கூவம் ஆற்றை சீரமைக்க ரூ.500 கோடி செலவு செய்ததற்கான வெள்ளையறிக்கையை மேயர் பிரியா வெளியிட வேண்டும்.
தூத்துக்குடி:
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார்.
ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.
இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.
மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.
- மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களில் கடற்கரை கோவில் முக்கியத்துவம் வாய்ந்த உலக பாரம்பரிய நினைவு சின்னமாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீர் கோவில் வரை உட்புகுந்து அரிக்க தொடங்கியதால், கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட தொல்பொருள்துறை இந்த கோவிலின் தென்புறம் முதல் வடபுறம் வரை கடந்த 1984-ம் ஆண்டு கடற்கரையில் பாறைகளை குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து கடல் நீர் உட்புகாமல் இருக்க பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் கடற்கரை கோவிலின் வடக்கு புறப்பகுதியில் பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவில் துர்கா சிற்பத்துடன் உள்ளது.
மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர். குறிப்பாக மாசிமாதத்தில் இந்த கோவில் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரை கோவிலுக்கு கற்கள் குவித்து பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை சிற்பத்தை சேர்த்து பாதுகாப்பு கற்கள் அமைக்காமல் வெளியே அப்படியே விட்டுவிட்டனர். தற்போது இந்த கோவிலை குறிப்பிட்ட சில மாதங்கள் கடல்நீர் சூழ்வதும், குறிப்பிட்ட சில மாதங்கள் கடல் உள்வாங்குவதும் நடைபெறும். தற்போது கடல் உள்வாங்கியதன் மூலம் மகிஷாசுரமர்த்தினி கோவில் முழுமையாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
பல்லவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு, முற்றுபெறாத துர்கா சிற்பத்துடன் உள்ள புராதன சின்னமான மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய கலாசார துறையின் கீழ் உள்ள இந்திய தொல்பொருள் துறை நிர்வாகம் கடற்கரை கோவிலை பாதுகாப்பு அரணாக கற்கள் கொட்டி பாதுகாக்கப்படுவதுபோல் மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலையும் கற்கள் கொட்டி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தொல்பொருள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பகுதிநேரமாக ரத்து.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று(திங்கட்கிழமை) மற்றும் நாளை(செவ்வாய்க்கிழமை) இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரெயிலும், திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரை வரும் ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 4.05 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இரவு 9.10, 10.10, 11 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பகுதிநேரமாக சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெரினா நீச்சல் குளம் பராமரிப்பின்றி கிடந்தது.
- குளத்தை சுற்றி வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இதில், மெரினா நீச்சல் குளம் 3½ முதல் 5 அடி வரை ஆழம் கொண்டது. மெரினா நீச்சல் குளத்தை முதலில் மாநகராட்சி பராமரித்து வந்தது. பின்னர், ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இங்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நீச்சல் குளத்தை தனியார் முறையாக பராமரிக்காததால் சுகாதாரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதேபோல, கடந்த ஆண்டு பெரியமேட்டில் உள்ள உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். இதன் காரணமாக நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சல் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், மெரினா நீச்சல் குளம் பராமரிப்பின்றி கிடந்தது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மெரினா நீச்சல் குளத்தை பார்வையிட்டார். அப்போது, நீச்சல் குளத்தை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். அதைதொடர்ந்து, நீச்சல் குளம் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. நீச்சல் குளத்தில், சுத்தமான தண்ணீர் தடையின்றி வருவதற்கான ஏற்பாடுகள், நீச்சல் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வசதிகள், கழிவறை, உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
நீச்சல் குளத்தை சுற்றியுள்ள உள்புற பகுதிகளில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெரினா நீச்சல் குளம் ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் திங்கட்கிழமை (அதாவது இன்று) முடிவடைந்துவிடும். குளத்தை சுற்றி வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாளை (24-ந்தேதி) அல்லது நாளை மறுநாள் (25-ந்தேதி) நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நீச்சல் குளத்தை மாநகராட்சியே பராமரிக்க உள்ளது. நீச்சல் போட்டிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
- கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.






