என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார்.
- 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாட்டிலுள்ள சிறு நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் செலவிலும் மற்றும் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆனைக்கவுண்டன் பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார்.
மினி டைடல் பூங்கா கட்டிடங்களில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டதன் மூலமாக தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதுடன் அம்மா வட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
- கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
- கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21-ந்தேதி அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451 IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21-ந்தேதி அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஆழ்ந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கவலைபடத் தெரிவித்துள்ள முதலமைச்சர், கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்
கொண்டுள்ளார்.
எனவே, கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
- கீழ்பவானி வாய்க்காலை பொருத்தவரை கசிவு நீர் பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுத்து அவர்களும் பயனடைவதற்காக தண்ணீர் வழங்குகிறோம்.
- தற்போது தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை முற்றிலுமாக அகற்றி விட்டோம்.
பெருந்துறை:
கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஆயக்கட்டு பாசனத்தில் இல்லாத விவசாயிகள் இரவு நேரங்களில் பெரிய ஓஸ் பைப்புகளை பயன்படுத்தி தண்ணீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக பொதுப்பணித்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டது.
ஏற்கனவே வாய்க்கால் நீர்க்கசிவு காரணமாக போதுமான அளவிற்கு தண்ணீரை கடைமடைக்கு சப்ளை செய்ய முடியாமல் உள்ள நிலையில் இரவு நேரங்களில் வாய்க்காலில் இருந்து ஓஸ் பைப்புகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி திருடுவதால் இதனைத் தடுக்க வேண்டும் என ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நீர்வளத்துறையின் கவுந்தப்பாடி உதவி பொறியாளர் செந்தில்குமார், கோபி மேற்கு உதவி பொறியாளர் தினேஷ் மற்றும் லஷ்கர்கள் உள்ளிட்ட நீர்வளத்துறை ஊழியர்கள் இரவு கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ரோந்து சென்றனர்.
பெத்தாம்பாளையத்தில் இருந்து கோபி வரையிலும் உள்ள கீழ்பவானி மெயின் வாய்க்கால் கரையில் சென்றபோது கோபி அருகே வெள்ளாங்கோவில் பகுதியில் 39-வது மைல் பகுதியிலும், 39/5-வது மைல் பகுதியிலும் பெரிய ஓஸ் பைப்புகளை பயன்படுத்தி விவசாய நிலத்துக்கு தண்ணீரை திருட்டுத்தனமாக கொண்டு செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை அங்கிருந்து அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு டிசம்பர் இறுதி வரையிலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதுபோன்ற தண்ணீர் திருட்டு நடைபெற்றால் ஆயக்கட்டு பாசன விவசாயிகளை பாதிக்கும் என்பதால் இரவு நேரத்தில் ரோந்து சென்று தண்ணீர் திருட்டை கண்டுபிடித்தோம்.
கீழ்பவானி வாய்க்காலை பொருத்தவரை கசிவு நீர் பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுத்து அவர்களும் பயனடைவதற்காக தண்ணீர் வழங்குகிறோம். ஆனால், ஒரு சில இடங்களில் ஆயக்கட்டு அல்லாத பாசனதாரர்கள் இதுபோன்ற தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர்.
இது பாசன விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. தற்போது தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை முற்றிலுமாக அகற்றி விட்டோம். மீண்டும் இதுபோன்ற தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் அந்த விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
- இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக் கூடும்.
- கடலில் காற்று பலமாக வீசும்.
சென்னை:
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிக மாக பெய்துள்ளது. பருவ மழை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மேற்கு ராஜஸ்தான் மற்றும் கச்சாவின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை திரும்ப பெறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி வருகின்றன.
இந்த நிலையில் ஆந்திரா கடற்கரையில் இருந்து தென் கடலோர மியான்மர் வரை கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டுள்ளது.
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவிலும் மற்றொன்று தென்கடலோர மியான்மர் பகுதியிலும் வெப்ப மண்டல நிலைகள் நீண்டுள்ளது.
மேலும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டது. அது தாமதமாகும் சூழல் நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் நாளை காலை தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 28-ந் தேதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், கடலில் காற்று பலமாக வீசும் என்றும் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
அங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டில் பொது மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
செஸ் உலகின் தலைசிறந்த போட்டியில், மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி, நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5 க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது.
- வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோன்று மற்றொரு இந்திய வீரரான விதித் போட்டியில் டிரா செய்தார். இதன் மூலம் 11-வது பிரிவில் 3.5-05 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதே போன்று, மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5 க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது. இதன் மூலம் மகளிர் பிரிவில் 19/ 22 போட்டி புள்ளிகளை கைப்பற்றி இந்திய மகளிர் அணியும் தங்க பதக்கத்தை வென்றது. இதே போன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர். வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- திம்பம் மலைப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்க வெகுநேரம் ஆகிவிடும் என்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடந்த 2 வாரமாக திம்பம் மலைப்பாதையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து செல்கின்றது.
புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.
இதனால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில் இருந்து திருப்பூர் நோக்கி சாக்கு மூட்டைகளை ஏற்றி க்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.
திம்பம் 15-வது கொண்டை ஊசி வளைவில் அந்த லாரி திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் திம்பம் மலைப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்துநின்றன. இதனால் தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து முடங்கியது. அதேசமயம் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் போன்ற சிறிய வாகனங்கள் சென்றன. ஆனால் லாரி, பஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக கவிழ்ந்த லாரி ரோட்டில் அப்படியே உள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திம்பம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜேசிபி எந்திரம் சம்பவ இடத்திற்கு வந்து கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்க வெகுநேரம் ஆகிவிடும் என்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
- குமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லும்போதுதான் இந்த கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே கடந்த மாதம் 6-ந் தேதி மூன்றடைப்பு போலீசார் வாகன சோதனையில் ஒரு காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரித்த போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை அந்த கும்பல் விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. இதில் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பலரும் ஏமாந்துள்ளது தெரியவந்தது. இதனிடையே இந்த கள்ளநோட்டு கடத்தலில் மூளையாக செயல்பட்ட விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்து வந்ததும், தற்போது கள்ள நோட்டு சிக்கிய சம்பவத்திற்கும் அவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ராஜேந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகளான விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நேற்று போலீசார் மடக்கி கண்டுபிடித்தனர். அவர்களை நேற்று இரவு வரையிலும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.
அதில் பிடிபட்ட 2 பேரும் சிவகாசியில் உள்ள ஒரு குடோனில் கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடித்து கொடுப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 2 பேரையும் அழைத்துக்கொண்டு போலீசார் சிவகாசிக்கு விரைந்துள்ளனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய கலர் பேப்பர்கள், அச்சடிப்பு எந்திரங்கள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து வேறு எங்கும் குடோன்கள் வைத்துள்ளனரா? இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் தொடர்புடைய கும்பல் முழுக்க முழுக்க விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தான். இவர்களுடன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
குமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லும்போதுதான் இந்த கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது. எனவே அங்கு வேண்டுமானால் இந்த கும்பலின் தரகர்கள் செயல்பட வாய்ப்பு இருக்கிறது என்றனர்.
- 39 டாஸ்மாக் கடைகளை ரெயில்வே பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.
- குற்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை புறநகர் மின் சார ரெயில் மீது கல்வீச்சு, சிக்னல் சேதம், திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களே இதற்கு முக்கிய காரணம் என்று ரெயில்வே பாதுகாப்பு படையின் ஆய்வில் தெரிய வந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வே சார்பில் டாஸ்மாக் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 39 டாஸ்மாக் கடைகளை ரெயில்வே பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.
இந்த கடைகள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பார்களில் மது அருந்திவிட்டு ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடக்கின்றனர்.
பெரம்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி, பெருங்குடி, திருவள்ளூர், ஊரப்பாக்கம், பழவந்தாங்கல், குரோம்பேட்டை, அரக்கோணம், இந்து கல்லூரி, ஆவடி உள்ளிட்ட இடங்களில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமைந்துள்ளன.
லெவல் கிராசிங் கேட்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெற்கு ரெயில்வே வலியுறுத்தி உள்ளது.
தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் மதுக்கடைகள் செயல்பட தடை உள்ளது.
ஆனால் ரெயில் நிலையங்களுக்கு அருகில் மதுக்கடைகள், பார்கள் செயல்படுவதால் ரெயில்வே குற்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
- நேற்று தங்கம் விலை ரூ.55 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டதால் பவுன் ரூ.2 ஆயிரத்து 200 வரை குறைந்தது. இது இல்லத்தரசிகள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
நேற்று தங்கம் விலை ரூ.55 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.55,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- காஞ்சனா தனது மகள் வரலட்சுமியுடன் ஒன்றாக வசித்து வந்தார்.
- குமரேசன் வரலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்தார்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அருகே உள்ள பட்டாளம்மன் கோவில் வட்டத்தை சேர்ந்தவர் முனிசாமி மனைவி காஞ்சனா (வயது 57).
இவரது மகள் வரலட்சுமிக்கும் (29), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் குமரேசன் (32) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
காஞ்சனா தனது மகள் வரலட்சுமியுடன் ஒன்றாக வசித்து வந்தார்.
குமரேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு குமரேசன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குமரேசன் வரலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த காஞ்சனா, மருமகன் குமரேசனை தடுக்க முயற்சித்தார். அப்போது குமரேசன் வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து, காஞ்சனாவின் தலையில் ஓங்கி அடித்தார்.
வலி தாங்க முடியாமல் கதறியபடி ரத்த வெள்ளத்தில் காஞ்சனா சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள், காஞ்சனாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வெளிநாட்டு பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 41 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது.
- தன்னுடைய வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என்ற கற்பனையில் ஸ்டாலின் மிதக்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக்குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, தெலுங்கானா முதல் மந்திரி (ரேவந்த் ரெட்டி) ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சென்று சுமார் ரூ.31,500 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளதாகவும், கர்நாடக தொழில் துறை மந்திரி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி இருவரும் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா சென்று சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனால், 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி, சைக்கிள் ஓட்டி, சினிமா பார்த்து ஸ்டாலின் ஈர்த்த முதலீடு வெறும் ரூ. 7,618 கோடிதான்.
முதலமைச்சர் ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்பச் சுற்றுலா மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.6,100 கோடி. மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.3,233 கோடி.
ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெயின் சுற்றுப்பயணத்தில் ஈர்த்த முதலீடு ரூ. 3,440 கோடி. தற்போது, அமெரிக்கா சென்று ஈர்த்த முதலீடு ரூ. 7,618 கோடி ஆக, 4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.
இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே. இந்த முதலீடுகளை, தி.மு.க. அரசு ஜனவரி, 2024-ல் நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டிருக்கலாம்.
2019-ம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 8,835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன் மூலம், 35,520 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலைவாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அம்மாவின் அரசு '2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், மாநாட்டிற்கு வந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து ஜிம் 2019 நடத்தியதாக' கேலி பேசினார். நாங்கள் தொழில் முனைவோர்களையும், 'கோட்' போட்ட ஸ்டாலினையும் அதுபோன்று கொச்சைப்படுத்த மாட்டோம். ஒரு மாநிலத்தின் தொழில் முதலீடுகள் மற்றும்
தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கைகள் ஆகும். ஸ்டாலின் அமெரிக்காவில இருந்து திரும்பியவுடன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எனது ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்று நச்சுக்கருத்தைக் கூறியுள்ளார்.
2020-ம் ஆண்டு இறுதியில் ஜிம்-1ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 72 சதவீத திட்டங்களும், ஜிம்-2ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 27 சதவீத திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தன. எனது வெளிநாட்டுப் பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 41 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது.
கொரோனா காலத்தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020-ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில், 7 மாதத்திற்குள் ரூ. 24,458 கோடி முதலீட்டில், 24 திட்டங்களை, சென்னை, ஓட்டல் லீலா பேலசில் நடைபெற்ற விழாவில் நானே தொடங்கி வைத்தேன்.
இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார்.
'சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்ற கிராம பழமொழிதான் பொம்மை முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. தன்னுடைய வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என்ற கற்பனையில் ஸ்டாலின் மிதக்கிறார்.
சிலரை சிலநாள் ஏமாற்றலாம்-பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






