என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விபத்து நடந்த அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தனது மருமகள் மோனிசா, 2 வயதான பேத்தி மோனிகா ஆகியோருடன் கல்பாக்கம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்., அப்போது வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை வலைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஒடியது, அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தார். மருமகளும், பேத்தியும் படுகாயம் அடைந்தனர். தகவலரிந்த சதுரங்கபட்டினம் போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்து உயிர் தப்பிய பெண், குழந்தை இருவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதிரே வந்த காரில் வந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 110 நபர்களுக்கு பணி நியமன ஆணை.
- கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 48 நபர்களில், 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கருமத்தம்பட்டியில் பொது விநியோகத்திட்ட பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்திட 4 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப் பொருள் சோதனைக் கூடம், திண்டுக்கல், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ரூ.17 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள், தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மொத்தம் ரூ. 36 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்கள் என மொத்தம் ரூ. 57 கோடியே 95 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை, சாலி கிராமத்தில் 29,195 சதுரஅடி பரப்பளவில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இணையத்திற்கான புதிய அலுவலகக் கட்டிடம், சென்னை அண்ணா நகரில், பூங்கா நகர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடை மற்றும் மருந்தகம் ஆகியவற்றுடன் கூடிய வணிக வளாகம்,

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான மயிலாப்பூரில் உள்ள இடத்தில் தரை தளத்தில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கிளைக்கான கட்டிடம், திருமண மண்டபம், கூட்ட அரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி - மாதவபுரத்தில், சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தரைதளத்தில் சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கான கட்டிடம் திருமண மண்டபம் , கூட்ட அரங்கம் என மொத்தம் ரூ.15 கோடியே 22 லட்சம் செலவில் கூட்டுறவுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 நபர்களுக்கு பணி நியமனம் மற்றும் பணி நிரந்தர ஆணைகளையும் அவர் வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், மத்தியமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதனால் இன்று மற்றும் நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 27-ந்தேதி வரை:மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- அருவங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சட்டன் எஸ்டேட் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 54) நேற்று இரவு குன்னூரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த சின்ன கரும்பாலம் சதீஷ் (19), கவுதம் (19) ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அருவங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு நேற்று மாலை ஆபிரகாம் (வயது 70) என்பவர் மனைவியுடன் காரை ஓட்டிவந்தார்.
அப்போது பாய்ஸ் கம்பெனி அருகே வாகனம் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் காரில் இருந்த ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி நஜானா (66) ஆகியோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து கணவன்-மனைவிக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
- கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.
காடையாம்பட்டி:
ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மலை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் இருசா கவுண்டர். இவரது மனைவி குமாரி (50). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். இந்த நிலையில் மகனும், கணவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் குமாரி மட்டும் கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்தார்.
குமாரி அருகில் வசித்து வரும் நீலா என்பவரது வீட்டிற்கு தினமும் டி.வி. பார்க்க சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமாரி நீலா வீட்டிற்கு டி.வி. பார்க்க செல்லவில்லை.
மேலும் குமாரியும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. இதனால சந்தேகமடைந்த உறவினர்கள் இன்று காலை குமாரி வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், ஓமலூர் டி.எஸ்.பி. சஞ்சய் குமார், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி குமாரி சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டாரா? மேலும் வேறு என்ன காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனமுடைந்த ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- போலீசார் பொன்னையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி சேர்ந்தவர் ஷாலினி (வயது 27). எம்ஏ பட்டதாரி. ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பால்பண்ணை விஸ்வாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் தனிமையில் சந்தித்தனர். அப்போது திருமண ஆசை காட்டி பொன்னையன் ஷாலினியுடன் உல்லாசமாக இருந்தார். இதில் அவர் கர்ப்பம் ஆனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முறையிட்டார்.
அப்போது பொன்னையன் கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டால் அக்கம் பக்கத்தினர் அசிங்கமாக பேசுவார்கள். கர்ப்பத்தை கலைத்து விடு. நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என உறுதி அளித்தார். இதை நம்பிய ஷாலினி தனது கர்ப்பத்தை கலைத்தார். அதன் பின்னர் திருமணத்தை தள்ளிப் போட்டார்.
இதனால் மனமுடைந்த ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே தகவல் அறிந்த பொன்னையன் காதலியை பார்க்க ஓடி சென்று மருத்துவமனையில் அவரை கவனித்துக் கொண்டார். அப்போது மீண்டும் திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்ததால் உறவினர்கள் பிரச்சனையை காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டனர்.
பின்னர் மருத்துவ மனையில் இருந்து ஷாலினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன் பின்னர் பொன்னையன் அவருடன் ஆன உறவை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாலினி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் கமிஷனர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பொன்னையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
சென்னை:
குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகை குமார் (வயது 42) என்பவர் தி.நகர், கிரியப்பா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிறுவனம் தனது ஊழியர்கள் மூலம் சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, மேற்கண்ட நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேற்படி தனியார் நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகை குமார் சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இது தொடர்பாக ஆர்.ஏ. புரத்தைசேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.63 லட்சத்து 69 ஆயிரம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
- பஸ் திரும்பிய போது மொபட்டில் சென்று கொண்டிருந்த சண்முகம் மீது பஸ்சில் படிகட்டில் பயணம் செய்த நவீன்குமார் மோதினார்.
- பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 20). இவர் கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக நவீன்குமார் தினமும் சத்தியமங்கலத்தில் இருந்து பஸ் மூலம் கோபி செட்டிபாளையத்துக்கு செல்வது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் நவீன்குமார் சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் கோபி செட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். நவீன்குமார் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்து வந்துள்ளார். பஸ் புதுவள்ளிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (55) என்பவர் தனது மொபட்டில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுவள்ளிபாளையம் பிரிவு சின்ன வளைவில் பஸ் திரும்பிய போது மொபட்டில் சென்று கொண்டிருந்த சண்முகம் மீது பஸ்சில் படிகட்டில் பயணம் செய்த நவீன்குமார் மோதினார்.
இதில் நவீன் குமாருக்கும், சண்முகத்திற்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் வாலிபர் உட்பட 2 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இனி உங்களுக்கான வீட்டில் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
- பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம், கண்ணப்பர் திடலில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்ணப்பர் திடலில் உள்ள வீடற்றோர் குடியிருப்பில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு இன்று புதிய வீடுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த தேர்தலின் போது உங்களுக்கெல்லாம் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அடுத்த ஆண்டுக்குள் வீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல இந்த ஆண்டு வீடுகள் கட்டப்பட்டு உங்களிடம் தரப்பட்டுள்ளது.
இனி உங்களுக்கான வீட்டில் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். இவ்வளவு நாட்கள் வீடு இல்லாதவர்களுக்கு அரசில் பலன்கள் உங்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இனி எளிமையாக கிடைக்கும்.
உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய திராவிட மாடல் அரசு தயாராக உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல நீங்கள் பங்கேற்பாளர்கள். எனவே அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், தாயகம் கவி, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோவை:
சென்னையில் இருந்து கோவைக்கு சம்பவத்தன்று இரவு கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ஊழியர்கள் ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.
இதை பார்த்ததும் ரெயில் பணியாளர்கள் அதிர்ச்சியாகினர். உடனடியாக இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் கஜேந்திரன், ரம்யா ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு குழந்தை தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.
அந்த குழந்தையை ரெயிலில் அழைத்து வந்தது யார்? அதனுடைய தாய் யார்? என்பது தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் குழந்தையை குழந்தைகள் நல அலுவலர் மூலம் கிணத்துக்கடவு பகுதியில் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அந்த குழந்தையை ரெயிலில் பயணித்த பயணி மறந்து போய் விட்டு சென்றாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளில் கணவாய் பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த லாரி மீது அவர் பயங்கரமாக மோதினார்.
- விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி, செப்.23-
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் அல்லாபக்ஸ் (வயது 41). இவர் அதே பகுதியில் பீரோ, கட்டில் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரூபியாபானு (33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ரூபியாபானு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் கம்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். மீண்டும் அவரை அழைத்துச் செல்வதற்காக அல்லாபக்ஸ் மோட்டார் சைக்கிளில் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
மோட்டார் சைக்கிளில் கணவாய் பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த லாரி மீது அவர் பயங்கரமாக மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.***அல்லாபக்ஸ்.
- ஆஸ்கர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து 29 படங்களை இந்திய திரைப் பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது.
- இதில் 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன .
ஆஸ்கர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து 29 படங்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது.
இதில் 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, விக்ரம் நடித்த தங்கலான், சூரி நடித்த கொட்டுக்காளி, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, ஜமா ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியில் 12 படங்களும், தெலுங்கில் 6 படங்களும், மலையாளத்தில் 4 படங்களும், மராத்தியில் 3 படங்களும், ஒடியாவில் 1 படமும் உள்பட 29 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட உள்ளன.
இவற்றில் லாபட்டா லேடிஸ், கல்கி 2898 ஏ.டி., ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டிகிள் 370, அனிமல் ஆகிய படங்களும் அடங்கும்.
இதில் ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்ப லாபட்டா லேடீஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






