என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
- மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதல்வர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர்.
சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
* தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை.
* திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
* திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா?
* மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதல்வர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர்.
* திமுகவில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க முயற்சி நடப்பது ஏன்?
* துணை முதல்வராக உதயநிதியை தவிர திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? என்று அவர் கூறினார்.
- மகனுக்கு இலவசமாக குத்துச்சண்டை பழகி கொடுத்ததால் பயிற்சியாளர்களுடன் அறிமுகம்.
- ஆபாச படம் எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததால் போலீசார் புகார்.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பல லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த எனது கணவர் லட்சுமணன். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், இளைய மகன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கணவரை பிரிந்து தனியாக தையல் கடை வைத்து தொழில் செய்து வருகிறேன். இளைய மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்துள்ளது. மகனின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இலவசமாக குத்துச்சண்டை பழகுவதற்காக மகனை அனுப்பி வைத்தேன்.
அங்கே பயிற்றுநர்களாக இருந்த அனுப்பானடி வடக்கு தெருவை சேர்ந்த தேவராஜ், மேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மகனுக்கு பாக்சிங் சொல்லிக் கொடுத்தனர். மேலும் பல்வேறு போட்டிகளுக்கும் அழைத்து சென்றுள்ள நம்பிக்கையில் பயிற்சி முடித்து எனது மகனை வீட்டில் இறக்கி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதனால் நன்கு அறிமுகமான அவர்களிடம் எனது செல்போன் எண்ணை பகிர்ந்தேன். மகன் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருவதால் பொதுத் தேர்வை மனதில் வைத்து அவனை குத்துச்சண்டை பயிற்சிக்கு அனுப்பாமல் இருந்தேன். சம்பவத்தன்று பயிற்றுநர்கள் தேவராஜ், ராஜ்குமார் ஆகியோர் எனது செல்போன் எண்ணிற்கு போன் செய்து கேட்டதற்கு, அண்ணாநகரில் உள்ள எனது தோழி வீட்டில் இருப்பதாக கூறினேன். அதனை தொடர்ந்து அங்கு வந்த பயிற்றுநர்கள் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டனர்.
நானும் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தபோது, சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கத்தியை காட்டி சேலையை அவிழ்க்குமாறு மிரட்டினர். தாமதிப்பதற்குள் என்னை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
அந்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்கள் மற்றும் எனது உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டியதால் பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளேன். தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே அவர்களுடைய செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டேன். மற்றொரு வாட்ஸ்அப் நம்பரில் இருந்து எனது எண்ணிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பினர். நான் அதை பாதுகாப்பதற்குள் அதை அழித்து விட்டனர்.
மேலும் அவர்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினர்.
ஒரு கட்டத்தில் தன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என கூறிய நிலையில், நேற்று முன்தினம் இரவு என்னை செல்போனில் அழைத்த அவர்கள் எனது அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை என்னிடம் கொடுத்து விடுவதாக ஆசைவார்த்தை கூறி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு பின்புறம் வருமாறு கூறினர். அதனை நம்பி நான் அங்கு சென்றபோது நான் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கழட்டித் தரச் சொல்லி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மேலும் இதை யாரிடமாவது வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்றும், போலீசில் புகார் அளித்தால் என்னோடு பல ஆண்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும்தான் கொடுத்த 4 லட்சம் பணத்தை திருப்பி வாங்கித்தர வேண்டும். என்னை ஆபாச படம் எடுத்து பணம் பறித்த பயிற்சியாளர்கள் ராஜ்குமார், தேவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
- தண்ணீருக்குள் படுத்து ஆனந்த குளியல் போட்டு, நீந்தி மகிழ்ந்தது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற தேயிலை தோட்டங்களும், இயற்கை காடுகளும் நிறைந்து காணப்படுகிறது.
இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு என்று நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் வால்பாறை இருந்து வருகிறது. அவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்து, கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
வால்பாறையில் உள்ள வனப்பகுதிகளில், காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்குள்ள தண்ணீர் தேங்கும் பகுதியில் தண்ணீர் குடிப்பதுடன், குளித்து நீந்தி மகிழ்ந்தும் வருகிறது.

சம்பவத்தன்று 8 காட்டு யானைகள் கூட்டம் குட்டியுடன் வனத்தை விட்டு வெளியேறி, தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு வந்தன. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டம் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.
பின்னர் யானைகள் தேயிலை தோட்டங்களையொட்டி உள்ள தண்ணீர் தேக்கும் பகுதி வழியாக காட்டு யானைகள் கூட்டம் நடந்து சென்றன.
அங்கு தண்ணீரை பார்த்ததும் யானைகள் கூட்டத்தில் இருந்த யானை ஒன்று மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தது.
தண்ணீரை கண்ட யானை துள்ளிகுதித்த படி தண்ணீருக்குள் இறங்கி, தண்ணீரை பருகியது. மேலும் தண்ணீருக்குள் படுத்து ஆனந்த குளியல் போட்டு, நீந்தி மகிழ்ந்தது. அத்துடன் துதிக்கையால் தண்ணீரை ஊறிஞ்சி அதனை தனது உடல் முழுவதும் பீய்ச்சி கொண்டு மகிழ்ச்சியடைந்தது.
சில மணி நேரம் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்ட யானை, அதன்பிறகு யானை கூட்டத்துடன் சேர்ந்து, வனத்தை நோக்கி சென்றது.
அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் சிலர் வெகுதூரத்தில் இருந்து இந்த காட்சியை கண்டு ரசித்தனர். அதனை தங்கள் செல்போனில் வீடியோ, புகைப்படமும் எடுத்து கொண்டனர். இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிரவே தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
- வகுப்பறை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தன.
- காலணிகள் அணிந்து கொண்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி பள்ளியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே காலணிகளை கழட்டி விட்டு சென்றதை கண்டார்.
இதை பார்த்த மேயர் சுந்தரி ராஜா, மாணவர்களுக்கு ஏன் பாகுபாடு என்ற கேள்வி எழுப்பி அனைவரும் காலணிகள் அணிந்து கொண்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி மேயர் அனைத்து வகுப்பறைகளுக்கும் மிதியடி வழங்கினார்.
பின்னர் வகுப்பறையை ஆய்வு செய்யும்போது, வகுப்பறை முழுவதும் குப்பைகளாக காட்சியளித்தன. இதனை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது சுத்தம் செய்ய ஊழியர்கள் வருவதற்கு காலதாமதமானதால் உடனடியாக தானே துடைப்பத்தை கையில் எடுத்துக்கொண்டு வகுப்பறையை நானே சுத்தம் செய்து விட்டு செல்கிறேன் என்று வகுப்பறை முழுவதும் பெருக்கி தூய்மை படுத்தினார்.
மேலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் அறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதனைப் பார்த்த மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் செய்வதறியாமல் திகைத்து அதிர்ச்சியடைந்து நின்றனர் .
இனி வருங்காலங்களில் மாநகராட்சி பள்ளியை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது மாநகர நல அலுவலர் எழில் மதனா, சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, கவுன்சிலர்கள் சுபாஷிணி ராஜா, சுதா அரங்கநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- யார் ஏமாறப்போகிறார்கள் என்பது அமைச்சரவையின் மாற்றத்தின்போது தெரியும்.
- அமைச்சரவை மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும் உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும்.
சென்னை:
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* யார் ஏமாறப்போகிறார்கள் என்பது அமைச்சரவையின் மாற்றத்தின்போது தெரியும்.
* முதலமைச்சர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும் உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும்.
* திமுகவில் பல மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- செஸ் ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம்.
சென்னை:
அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஜராத்தி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2022) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, விளையாடாத கேப்டன் ஸ்ரீநாத் ஆகியோர் சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி மற்றும் ஸ்ரீநாத் ஆகிய 3 பேரும் அங்கேரியில் இருந்து ஜெர் மனி வழியாக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை வந்தனர்.
டி.குகேஷ் இன்று காலை 8.25 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்கப்பட்டனர். செஸ் ஆர்வலர்கள் திரண்டு வந்து ஆரவாரம் செய்து அவர்களை ஊக்குவித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர் சுஜாதா, தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி, பொருளாளர் ஆர்.சீனிவாசன், வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்க பொதுச் செயலாளர் ஐ.ஐயப்பன் உள்பட பலர் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
வைஷாலி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், வெண்கல பதக்கம் வென்று இருந்தோம், அப்போது தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது தங்கப்பதக்கம் வென்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஓபன் பிரிவில் அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெண்கள் அணி, ஒரு சுற்றில் தோல்வியடைந்து, மற்ற 2 ரவுண்டுகளை வென்று ஆக வேண்டிய நேரத்தில், இரண்டு சுற்றும் வெற்றி பெற்று, பதக்கத்தை வென்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரக்ஞானந்தா கூறியதாவது:-
கடந்த முறை மிகவும் நெருக்கத்தில் வந்து தங்கப் பதக்கத்தை தவறவிட்டோம், இந்த முறை அதிக புள்ளிகள் உடன் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விளையாடிய அனைத்து சுற்றுகளும் கடுமையாகவே இருந்தது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தோற்கடித்ததும் தங்கப் பதக்கம் உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
- ஏற்கனவே அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை:
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வந்தனர். ஆனாலும் இதுவரை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவரிடம் அமைச்சரவை மாற்றம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
கே: ரொம்ப நாளாக அமைச்சரவை மாற்றம்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி என நீங்களும் சொன்னதை செய்வோம் என கூறி இருக்கிறீர்களே?
ப: அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.
கே: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறதா?
ப: எல்லாம் தயாராகவே உள்ளது. தலைமைச் செயலாளர் அனைத்து கலெக்டர்களிடமும் பேசி உள்ளார். நானும் 2 நாளில் அழைத்து பேச உள்ளேன்.
கே: கொளத்தூர் தொகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டது பற்றி?
ப: இது எப்போதும் என்னுடைய சொந்த தொகுதி. எங்க வீட்டு பிள்ளை மாதிரி பார்க்கிற தொகுதி இது. அதனால் எப்போதும் வந்துகிட்டு இருப்பேன். நினைத்த நேரத்தில் வருவேன்.
கே: வெளிநாடு சுற்றுப்பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்களே?
ப: அவர்களுடைய வெள்ளை அறிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்று உங்களுக்கு தெரியும். இது ஏமாத்துகிற திட்டம் இல்லை. ஏமாத்துகிற நிதி ஒதுக்கீடு இல்லை. அதனால் ஏற்கனவே அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுவே வெள்ளை அறிக்கைதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அவர் கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு ஜி.கே.எம்.காலனி 12-வது தெருவில் உள்ள சென்னை துவக்கப் பள்ளியை திறந்து வைத்து அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடம், நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16-ம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பேப்பர் மில் சாலையில் புதியதாக அமைய உள்ள தாசில்தார் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட உள்ள இடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் பிரியா எம்.பி.க்கள் வில்சன், கலாநிதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கட்டுமான பணியின் நிலை குறித்து பொறியாளரிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை:
சென்னை கொளத்தூரில் ஜிகேஎம் காலனியில் நடைபெற்று வரும் சமுதாய நலக்கூட கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணியின் நிலை குறித்து பொறியாளரிடம் அவர் கேட்டறிந்தார்.
கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறையின் இடத்தில் புதிதாக அமையும் வட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.
- பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
- டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை:
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 89-வது பிறந்தநாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன்,

விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வட்ட செயலாளர் பூக்கடை பழனிசாமி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஸ்டெர்லிங் சுரேஷ், ஆர்.கே.ஆனந்த், அனல் அய்யப்பன், மணிகண்டன், எஸ்.கோபி, டி.கோபி, ஆர்.கே.சுந்தர், பாண்டி, ராஜேஷ் குமார், ஓட்டல் முருகன், மணி, மணிமாறன், கார்த்திக், திருப்பதி, தளபதி பேரவை தலை வர் அருள்காந்த், மகளிர் அணி செயலாளர் ஷகீலா,

அ.தி.மு.க. இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், சிம்லா முத்து சோழன்,
காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா, அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாவட்ட தலைவர் சிவராஜசேகர், கொட்டிவாக்கம் முருகன், தி.நகர் ஸ்ரீராம், ஜி.கே.தாஸ், கவுன்சிலர்கள் சுகன்யா செல்வம், அமிர்தவர்ஷினி மற்றும் ஆர்.எஸ்.முத்து, திருவான்மியூர் மனோகரன்,
பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் காளிதாஸ், ரங்கநாயகலு,
பா.ம.க. மாநில பொருளாளர் திலக பாமா, மாவட்ட செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் துரை கோவிந்தராஜ், ராம் கிஷோர்,
சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் கண்ணன், மாநில துணை செயலாளர் விநாயகமூர்த்தி, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், வடசென்னை மாவட்ட நாடார் பேரவை தலைவர் சீனிவாசன், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், நாடார் பேரவை வடசென்னை மாவட்ட துணை செயலாளர்கள் தாஸ், சதீஷ், ராயபுரம் பகுதி அவை தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் பாக்யராஜ், 19-வது வட்ட துணை தலைவர் ஜெகா, 38-வது வட்ட செயலாளர் சண்முகசுந்தரம், நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சாமுவேல், பொருளாளர் சுடலைமணி, வில்லிவாக்கம் பகுதி செயலாளர் பாலமுருகன்,
அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன் சிங்க பெருமாள் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
- வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.
- இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு இடையேயுள்ள வங்கக்கடலில் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. இது மத்திய ஆந்திராவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் ஒடிசாவில் ஒருசில இடங்களில் இனிவரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் வரை அதிகரித்து கொண்டே வந்தது. ஆனால், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் நிலை அதிரடியாக ரூ.2 ஆயிரத்து 200 வரை குறைந்தது. ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலை மாறி ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால், தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த 19-ந்தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6 ஆயிரத்து 825-க்கும், ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது, அடுத்த நாளே அதாவது 20-ந் தேதி ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த சூழலில், கடந்த 21-ந்தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6 ஆயிரத்து 960-க்கும், ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை அடைந்தது.
நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி அரங்கேறி வருகிறது.
- பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
இன்றைய நவீல உலகில் இணையதள பயன்பாடு அதிகமாக உள்ளது. சமூகவலைத்தளங்களை பார்வையிடுதல், அதில் பதிவேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பலரும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடியும் அரங்கேறி வருகிறது.
இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு.அருணா பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அந்த முகநூல் பக்கத்தில் இருந்த தகவல்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டது. இதனால் பலரும் சந்தேகமடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அறிந்த கலெக்டர் மு.அருணா இதுபற்றி சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கலெக்டர் அருணாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த போலி முகநூல் கணக்கை போலீசார் முடக்கினர்.
சமூக வலைதளங்களில் உலாவரும் இதுபோன்ற மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் சிலரது பெயரில் போலி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் தற்போது பண மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் போலி கணக்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை தொடங்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். இதனால் பொதுமக்கள் உஷாராக இருந்து செயல்பட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் 1930 என்ற உதவிமைய தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் https://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம் என போலீசார் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.






