கோபி அருகே சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி

பஸ் திரும்பிய போது மொபட்டில் சென்று கொண்டிருந்த சண்முகம் மீது பஸ்சில் படிகட்டில் பயணம் செய்த நவீன்குமார் மோதினார்.பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி அருகே சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 20). இவர் கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக நவீன்குமார் தினமும் சத்தியமங்கலத்தில் இருந்து பஸ் மூலம் கோபி செட்டிபாளையத்துக்கு செல்வது வழக்கம்.

இன்று காலை வழக்கம் போல் நவீன்குமார் சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் கோபி செட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். நவீன்குமார் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்து வந்துள்ளார். பஸ் புதுவள்ளிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (55) என்பவர் தனது மொபட்டில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுவள்ளிபாளையம் பிரிவு சின்ன வளைவில் பஸ் திரும்பிய போது மொபட்டில் சென்று கொண்டிருந்த சண்முகம் மீது பஸ்சில் படிகட்டில் பயணம் செய்த நவீன்குமார் மோதினார்.

இதில் நவீன் குமாருக்கும், சண்முகத்திற்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் வாலிபர் உட்பட 2 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com