என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார்.
- விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார்.
அதன்படி வருகிற 27-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துகிறார். விரிவான கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளார்.
பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
- சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது.
- மூன்று வாரங்களில் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகம் முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ. 8 கோடியே 55 லட்சம் தொகையை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள சானிடரி நாப்கின் எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசு ரூ. 8 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டிய உருட்ட இருக்கே இந்தியா முழுமைக்கும் பெரிய உருட்டு.
- மாட்டுமூத்திரம் குடிக்கும் நீ மாட்டு கொழுப்பு சாப்பிட மாட்டாயா? இதுதான் அதிகப்படியான கொழுப்பு.
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்து குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* திருப்பதி லட்டு பிரச்சனையில் யாரிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளோம், யார் அதை கலந்து என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துவிட்டு வேறொரு நபரிடம் ஒப்பந்தம் கொடுத்துவிட்டால் பிரச்சனை முடிந்தது.
* லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டிய உருட்ட இருக்கே இந்தியா முழுமைக்கும் பெரிய உருட்டு
* நாட்டிலிருந்து வரும் பால் நெய் சாப்பிடும் நீ மாட்டிலிருந்து வரும் கொழுப்பு சாப்பிட்டால் செத்துவிடுவாயா?
* இவர்கள் ஒரு கோட்பாடு வைத்துள்ளார்கள். மாட்டுக்கறி சாப்பிடும் நான் கீழ்சாதி, மாட்டு பால் குடிக்கிறவன் இடைநிலை சாதி , மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் மேல்சாதி
* உலகத்திலேயே இந்தியாவில் தான் பாலும் நெய்யும் கொட்டப்படுகிறது, மாட்டு மூத்திரம் குடிக்கபடுகிறது.
* மாட்டுமூத்திரம் குடிக்கும் நீ மாட்டு கொழுப்பு சாப்பிட மாட்டாயா? இதுதான் அதிகப்படியான கொழுப்பு
* பெருமாளை நீங்கள் மதிக்கிறீர்களா இல்லை கேவலப்படுத்துகிறீர்களா? சாதாரண லட்டுவுக்கு எல்லாம் பெருமாள் மாசுபடுவாரா? புனிதம் கேட்டு போகுபவரா?
* சாதி, மதம், சாதியை வைத்து அரசியல் செய்கிறபவன் மக்களை பற்றி சிந்திக்கவே மாட்டான். மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனுக்கு சாதி, மதம், சாதியை பற்றி சிந்திக்க நேரமே இருக்காது
* சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தான் திருப்பதி லைட்டில் கொழுப்பு கலந்துவிட்டார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்ட, கிறிஸ்தவர் ஜெகன்மோகன் ஆட்சியில் தான் கொழுப்பு கலந்துவிட்டார்கள் என்று அவர்களும் குற்றம் சாட்டுகின்றனர் என்று தெரிவித்தார்.
- லட்டு விவகாரத்தில் பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார்.
- கார்த்தி பேசியதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை என்று சீமான் தெரிவித்தார்.
திருப்பதி லட்டில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். கோவிலின் படிக்கட்டுகளை பவன் கல்யாண் சுத்தம் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் மெய்யழகன் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கூறினார்.
இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். இதனையடுத்து நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படத்திற்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் கார்த்தி - பவன் கல்யாண் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான் , "கார்த்தியிடம் நெறியாளர் லட்டு பற்றி கேட்டிருக்க கூடாது. ஆனாலும் அந்த கேள்விக்கு கார்த்தி நாகரீகமாக பதில் சொல்கிறார். அவரது பேச்சு யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் இல்லை. இதற்கு பவன் கல்யாண் கோவப்படுவதில் அர்த்தமில்லை.
உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார் என்று அவர் கிண்டலாக தெரிவித்தார்.
- தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
- தொகுதிக்கு 5 பொறுப்பாளர்களை நியமித்து மாநாட்டிற்கு கட்சியினரை அழைத்து வர முடிவு.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான தீவிர பணியில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
அதற்காக, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், அணித்தலைவர்கள் வருகை தந்ததனர்.
தொகுதிக்கு 5 பொறுப்பாளர்களை நியமித்து மாநாட்டிற்கு கட்சியினரை அழைத்து வர ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, ஒவ்வொரு தொகுதிக்குமான 5 பொறுப்பாளர்கள் யார் என தேர்வு செய்வதற்காக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொறுப்பாளர்கள் நியமனம், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன ? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- நாம் தமிழர் கட்சியின் சீமான் பல முறை பதில் அளித்துள்ளார்.
- தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் நடைபெற இருக்கிறது.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளார். இடையில், விஜயுடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் பல முறை பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த சீமான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அப்போது, "விஜயை சமீபத்தில் சந்தித்தேன். அதன் பிறகு மற்றொரு சந்திப்பும் நடைபெற இருந்தது. எனினும், திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் ரிலீஸ் வேலைகள் இருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை. இரண்டு மாதங்கள் முன் நடத்திய சந்திப்பில் அரசியல் பேசினோம்."
"சேர்ந்து போட்டியிடுவது பற்றிதான் பேசினோம். இறுதியில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை. அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் தேசிய கட்சி யாரேனும் கூட்டணியில் இருந்தால் நல்லது என்று நினைக்கலாம். அவரும் என்னிடம், காங்கிரஸ் எப்படி என்று கேட்டார். காங்கிரஸை வைத்துக் கொண்டு நாம் என்ன பேசுவது என்று கூறுமாறு கேட்டேன்," என்றார்.
விஜயுடன் சந்திப்பு பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலுக்கு சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒருசிலர் த.வெ.க. கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது என்றும், சிலர் இறுதி முடிவை தளபதி தான் எடுப்பார் என்றும், மேலும் சிலர் இந்த தகவலில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.
இதுதவிர 2026 சட்டமன்ற தேர்தலில், த.வெ.க., நா.த.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்றும் சிலர் இந்த கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கமென்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் கருத்தியல் ரீதியாக கூட்டணி அமையாது என்றும் கமென்ட் செய்துள்ளனர். சிலர் விஜய் கூட்டணி வைக்கக்கூடாது என்றும் கமென்ட் செய்துள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் உத்தரவிட்டார்.
- சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் உத்தரவிட்டதை தொடர்ந்து, காவல்துறை மரியாதை செலுத்தியது.
கடந்த 22ம் தேதி மறைந்த எஸ்றா சற்குணத்தின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
எஸ்றா சற்குணம் தமிழ் சமூகத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தனது இறுதி நாள் வரை தொடர்ந்து தேவை ஆற்றி வந்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
- வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார். மேலும், செந்தில் பாலாஜி மீதான பிரதான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.
- தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் இருக்கும் காந்தி மார்க்கெட் மாநகர் மற்றும் புறநகர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அண்டை மாவட்ட மக்களின் காய்கறி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இங்கு தினமும் 15 லோடு தக்காளி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள்.
தற்போது வெளி மாநிலத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ள காரணத்தினால் ஆந்திர, கர்நாடக தக்காளி வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெளிமாநில தக்காளி வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் தக்காளியும் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
இது தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரிகள் சங்க தலைவர் கலீலுல் ரகுமான் கூறும்போது, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று 25 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.900 முதல் ரூ.1100 வரை விற்பனை ஆனது. தற்போது திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட உள்ளூர் தக்காளி வரத்தை மட்டுமே உள்ளது. ஆந்திரா தக்காளி ஒரு பெட்டிக்கு அங்கேயே ரூ. 1500 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும்போது ரூ.2000 வரை விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும்.
ஆகவே இங்குள்ள வியாபாரிகள் வெளி மாநில தக்காளி வாங்குவதை நிறுத்திவிட்டனர். இன்று 8 லோடு உள்ளூர் தக்காளி மட்டுமே திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வந்தது. அவ்வளவும் உடனடியாக விற்பனையாகி விட்டது. கடுமையான வெயிலின் காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மேலும் உயரம் வாய்ப்பு உள்ளது என்றார்.
திருச்சி காந்தி மார்க்கெட் சில்லரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று 50 முதல் 60 வரை விற்கப்பட்டது.
இதேபோன்று மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று மேலும் வரத்து குறைந்து நல்ல தேங்காய் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சில்லரை சந்தைகளில் ஒரு தேங்காய் ரூ.30 முதல் 40 வரை விலை நிர்ணயம் செய்திருந்தனர். தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
- சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சார்ந்த பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது கோவில் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு திண்டுக்கல் தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவதாக வலைத்தளங்களில் செல்வகுமார் தவறான தகவல் பரப்பி வந்தார். வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் பி செல்வம் மீது கோவில் நிர்வாகம் புகார் அளித்தது.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வகுமாருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
உண்மை தன்மையை ஆராயாமல் கருத்து பதிவிட்டதாக சமூக ஊடகங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
செல்வகுமார் தனது செல்போனை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்தை நீக்க வேண்டும்.
தொடர்ந்து இதுபோல் நடந்துகொண்டால் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும்.
சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று கடும் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
- தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது கேரள மாநிலம். அங்கு தற்போது நிபா வைரஸ் பரவல் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் கேரளா சுற்றுலா பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவின்பேரில் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீனாட்சி அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நிபா வைரஸ் பரவல் தடுக்கும் பொருட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி நகர பகுதியின் நுழைவு வாசலாக அமைந்துள்ள விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள டோல்கேட் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வாகனங்களில் இருப்பவர்களிடம் காய்ச்சல் கண்டுபிடிக்கும் "தெர்மாமீட்டர்" கருவி மூலம் சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பரிசோதனை நடந்து வருகிறது. தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 850-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு கேரளாவில் இருந்து வருபவர்களிடம் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
30-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு (26.09.2024 மற்றும் 27.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 28-ந்தேதி வரை வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






