என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து அமைச்சர்கள் மு.பெரிய சாமிநாதன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மயிலை த.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விழாவில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அப்படத்தின் பேனரை ஒருவர் பிடித்திருந்தார். அப்போது முன்னால் வர முண்டியடித்த ஒருவரை சிவாஜியின் மகன் ராம்குமார் சரமாரியாக தாக்கி உள்ளே தள்ளினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை சிவாஜியின் மகன் ராம் குமார் கோபத்துடன் தள்ளிவிட்டு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தப் பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 26 பேரையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
- தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்த வாகனத்தின் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
தமிழகத்தில் இருந்து குஜராத் மாநிலம் பாவ் நகருக்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது 26 தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கினர்.
குஜராத் அருகே மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் சென்ற பஸ் சிக்கிக்கொண்டது. அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை குஜராத் அரசுடன் பேசி மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாக ரெயில் மூலம் சென்னை அனுப்பி வைத்தனர். அதிகாலை 5.30 மணிக்கு சென்ட்ரல் நிலையத்திற்கு ரெயில் வந்தது.
அதில் வந்த 26 பேரையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்பு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்த வாகனத்தின் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மீட்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை வந்த மக்கள் கூறியதாவது:-
குஜராத்தில் பெய்த தொடர் மழையில் நாங்கள் சென்ற வாகனம் தரை பாலத்தில் சிக்கி கொண்டது. வெள்ள நீர் மெல்ல மெல்ல உயர்ந்த போது என்ன செய்வது என்று தவித்த நிலையில் அங்கிருந்த அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் குஜராத் அரசிடம் பேசி எங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தனர். பாதுகாப்பாக சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பெரும்பாலானோருக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது.
- வெளியில் பிராண்டட் மொபைல் போன் போல இருந்தாலும் உள்ளே விலை குறைவான அல்லது போலியான உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் 20க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த மாநிலங்களை காட்டிலும் அதிக சம்பளம், எப்போதும் வேலை என்ற காரணத்தால் குடும்பத்துடன் குடிபெயர்ந்து திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை திருப்பூரின் புது மார்க்கெட், அனுப்பர்பாளையம், காதர்பேட்டை, பழைய மார்க்கெட் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக சந்தைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர்.
வடமாநில தொழிலாளர்களின் வருகையை குறிவைத்து ஏராளமான வணிகர்கள் சாலையோர கடைகளையும் அமைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.
இதுபோன்று வரும் வடமாநில தொழிலாளர்களிடம் ஒரு சிலர் தங்களிடம் விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பதாகவும், அவசர தேவை காரணமாக குறைந்த விலைக்கு விற்பதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை 5 முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாக கூறி விற்பனை செய்து வருகின்றனர்.
வெளியில் பிராண்டட் மொபைல் போன் போல இருந்தாலும் உள்ளே விலை குறைவான அல்லது போலியான உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கேமராக்கள் இருக்க வேண்டிய இடத்தில் கண்ணாடிகளை வைத்தும், விலை குறைந்த கேமரா லென்ஸ்களை வைத்தும் போலியாக தயாரித்து பிராண்டட் மொபைல் என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பர்பாளையம் அருகே தற்காலிக சந்தையில் இது போன்ற செல்போன் வாங்கிய வடமாநில வாலிபர் அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய செல்போன் கடையில் கொடுத்த போது போலியான உதிரி பாகங்களுடன் செல்போன் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. நாடோடி நபர்கள் போல ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதியில் செல்போன் விற்பனை செய்யும் இவர்களிடம் மீண்டும் இதுகுறித்து கேட்க முடியாததால் ஏமாற்றமடைந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது புகார் கொடுக்க முடியாமலும், ஏமாந்த பணத்தை திரும்ப பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.
- டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்,
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ரமேஷ் (வயது 35). தொழிலாளி.
இவருக்கு வசந்தி என்ற மனைவியும், மணிகண்டன் (17), ரகு (15) என்ற 2 மகன்களும் உள்ளனர். ரமேஷ் வழக்கம் போல் நேற்று காலை விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரமேஷ் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் மாலை 6 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரமேசுக்கு ஆஸ்பத்திரியில் நர்சுகள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம், எனவே, ரமேசின் மரணத்துக்கு அங்கிருந்த டாக்டர் சிகிச்சை அளிக்காததே காரணம் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு ஆஸ்பத்திரியை பா.ம.க. மற்றும் ரமேசின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டாக்டர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ரமேஷின் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று விருத்தாசலம் நகர பா.ம.க. சார்பில் விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள தென்கோட்டை வீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இ.கே.சுரேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரமேசுக்கு உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்களை கண்டித்தும், டாக்டர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக விருத்தாசலம்-சேலம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 4-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 5-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.
- சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தனக்கு வாக்களித்த பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
கடவுள், மதம் தனிப்பட்ட நம்பிக்கை. அதை அரசியலோடு சேர்க்க கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதை வரவேற்கிறேன். காவிரி பிரச்சனையை தமிழகம், கர்நாடகம் மாநிலங்கள் சேர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகலாம். காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் பாரதிய ஜனதா கூட்டணி அரசின் எண்ணம் நிறைவேறாது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற வாய்ப்பில்லை. சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு பதில் வரவில்லை. தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க.வில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராக களமாட நினைத்தார்கள்.
- பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தைலாபுரம் அரசியல் பயிலரங்கத்தில் பாட்டாளிகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ராமதாஸ், அரசியல் அறியாமல் அரைவேக்காடாய் அறிக்கை விட்டிருக்கிறார். செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு விவரத்தை அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
செந்தில் பாலாஜி மீது 2015, 2017 மற்றும் 2018-ல் மூன்று வழக்குகள் பதியப்பட்டன. 2015-ல் பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி குறித்துப் பேசினார்.
ஆனால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த போது, தான் குற்றமற்றவன். தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னார். இந்த உண்மைகள் ராமதாஸ் அவர்களுக்குத் தெரியும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர இசை ஆணைக் கேட்டு வந்த கோப்பில், எந்த தாமதமும் இல்லாமல் முதல்வர், ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற நிலையில் கோப்புகளில் உள்ள அம்சங்களை மட்டுமே கவனித்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து கடமையாற்றியது எல்லாம் ராமதாசுக்குப் புரியவில்லையா? இல்லை புரியாமல் நடிக்கிறாரா?
செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டு சிறை செல்லவில்லைதான். ஆனால், பொய் வழக்குகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கில், ஒன்றிய அரசின் எதேச்சாதிகார போக்கால் அவரை கைது செய்து, அழுத்தம் தந்து துன்புறுத்தி வாக்குமூலம் பெற்று, திமுகவின் மீது மேலும் பொய் வழக்குகள் போடலாம் என்ற கனவை அவர் பொய்யாக்கினார். அதற்காக 471 நாட்கள் சிறையில் இருந்தார்.
பா.ஜ.க.வில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராகக் களமாட நினைத்தார்கள். அதற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது நல்லெண்ணம் கொண்டோருக்கு மட்டுமே புரியும்.
1989 ஜூலை 16-ந்தேதி நினைவிருக்கிறதா? அன்று தான் டாக்டர் ராமதாஸ் 5 சத்தியங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான், 'என் வாரிசுகள் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார்கள்' என்றார்.
இப்போது அன்புமணி கட்சியின் கடைக்கோடி உறுப்பினரா? 'சத்தியம் தவறாத உத்தமர் போல' நடிக்கும் ராமதாஸ் எதற்கெடுத்தாலும் அறிக்கைவிடுவார். ஏன் அமலாக்கத்துறையின் அடாவடிகளைக் கண்டித்து அறிக்கை விடத் தயங்குகிறார்?
மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய அன்புமணி ராமதாசுக்கு ஏன் தொடர்ச்சியாக ராஜ்ய சபா சீட் தரப்படுகிறது? பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?
"ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது, அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது'' என முன்பு ராமதாஸ் சொன்னார். அந்த பினாமிகளோடுதான் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ராமதாஸ் கூட்டணி வைத்தார். பா.ம.க-வின் பாவங்களை கழுவிவிட்டு, வந்து ராமதாஸ் திமுகவை விமர்சிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில் இளைஞர்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்றவாறு கருத்துக்களை பதிவிட வேண்டும்.
- நமது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் பதிவிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த காலங்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தக்க வைத்திருந்த 40 சதவீத வாக்கு வங்கியை சுட்டிக்காட்டினார்.
ஆனால் தற்போது 10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்து இருக்கிறது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப பணியாற்றுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக இளைஞர்கள் வாக்குகள் அதிகம் உள்ளன. அவர்கள் மத்தியிலும், முதல் தலைமுறை வாக்காளர்களிடமும் கட்சியின் செயல்பாடுகளை எடுத்து சொல்லுங்கள்.
முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில் இளைஞர்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்றவாறு கருத்துக்களை பதிவிட வேண்டும்.
நமது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் பதிவிட வேண்டும்.
சமூக வலைத்தள பதிவுகளை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கிறார்கள். அதை வைத்து நாம் ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும். எவ்வளவு வேகமாக செயல்படுகிறீர்களோ அதற்கான பலன் கிடைக்கும் என்றார்.
- சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
- கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 2,202 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆஜரானார்.
2011-15-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 2,202 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் வீதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படும் எனவும் நகல்கள் வழங்கி முடித்த பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்த நீதிபதி ஜெயவேல், வழக்கின் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.
- எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பாதயாத்திரை.
சென்னை:
தமிழகம் முழுவதும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வெறுப்பு, அரசியலுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த பாத யாத்திரை சென்னையில் நாளை (2-ந் தேதி) காலை 7 மணியளவில் அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.
மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மேதின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடா ஓட்டல் சந்திப்பு, லாங்ஸ் கார்டன், புதுப்பேட்டை, பாந்தியன் ரோடு வழியாக அருங்காட்சியகத்தை அடைகிறது. அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரகாரத்தை நிறைவு செய்கிறார்கள்.
இதேபோல் நாளை மாநிலம் முழுவதும் 77 இடங்களில் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சியில் திருநாவுக்கரசர் தலைமையிலும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலும் சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையிலும் இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலும் பாத யாத்திரை நடக்கிறது.
- முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
விருதுநகர்:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகளிர் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்.
இதையடுத்து மதுரை, விருதுநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் இரவு தங்கினார்.
இன்று காலை அவர் விருதுநகர் புறப்பட்டார். மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2,111 நபர்களுக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம் என 2,846 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியினை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணம் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:-
தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் இந்த முறை பரிசு தொகையை மட்டும் ரூ.37 கோடியாக உயர்த்தி உள்ளார். இந்தாண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளிவில் வெற்றி பெற்றவர்களுக்கு இங்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் அதிகளவில் விளையாட்டு வீரர் சாதனையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் உலகளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றது. தெற்காசியாவிலேயே சென்னையில் எப்-4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். குஜராத், பஞ்சாப், கோவா, அசாம் மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
கடந்த 3 வருடங்களில் 7 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கம், 2 வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிதந்துள்ளார். இன்றைக்கு இந்திய ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியை அவர் செய்து வருகிறார்.
விளையாட்டு துறையில் சாதிக்கத்துடிக்கும் மகளிருக்கு ஊக்கமளிக்கின்ற வகையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பதக்கங்களை வென்று வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மற்றும் விருதுநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






