என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
- கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. கவர்னர் மாளிகையில் உள்ள பாரதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை, கவர்னர் ஆர்.என்.ரவி பொதுமக்கள் பார்வைக்காக நேற்று தொடங்கி வைத்தார். கொலுவை காண கவர்னர் மாளிகை வந்த பொதுமக்களை, கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர்.
கொலுவில் 5 படிகளில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், கிருஷ்ணர், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, துர்கை, விஷ்ணுவின் தசாவதாரங்கள், ராகவேந்திரர், நடராஜர், பாண்டுரங்கர், அய்யப்பன், காளி, சாய்பாபா உள்பட சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.தொடர்ந்து, நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பாரதி மண்டபத்தில், பாரதி திருமகனின் வில்லிசை பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொலு வழிப்பாட்டு நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்த பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
நவம்பர் 9, 10, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளது.
தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது24). இவரை கடந்த மாதம் 28ந் தேதி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதனை தடுக்க வந்த முகமது இர்பானின் நண்பருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படை அமைத்து நகர் வடக்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது தலைமையிலான போலீசார் திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான எடிசன் சக்கரவர்த்தி (25), ரிச்சர்டு சச்சின்(26), பிரவின் லாரன்ஸ் (28), மார்ட்டின் நித்தீஷ் (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பட்டறை சரவணன் படுகொ லைக்கு பழிக்குப்பழியாக முகமதுஇர்பானை வெட்டிக்கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகமது இர்பானின் முகத்தை கொடூரமாக வெட்டி கொன்றது ரிச்சர்டு சச்சின் என தெரிய வரவே அவரை போலீசார் அழைத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே உள்ளது என விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இதனையடுத்து அந்த ஆயுதங்களை திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள மாலப்பட்டி ரோட்டில் மயானத்தில் பதுக்கி வைத்திருப்பதாக ரிச்சர்டு சச்சின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், ஏட்டுகள் அருண்பிரசாத், ஆரோக்கியம் ஆகியோர் ரிச்சர்டு சச்சினை மாலப்பட்டி சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.
திடீரென ஒரு அரிவாளால் அங்கிருந்த ஏட்டு அருண்பிரசாத்தை வெட்டிவிட்டு ரிச்சர்டு சச்சின் தப்பி ஓட முயன்றார். இதனால் அருண்பிரசாத் சத்தம்போடவே இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தனது துப்பாக்கியால் ரிச்சர்டு சச்சினின் வலது காலில் முழங்காலுக்கு கீழே சுட்டார். இதில் வலியால் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ஏட்டு அருண்பிரசாத்துக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி.பிரதீப் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் தப்பி செல்லும்போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடும் சம்பவமும் நடந்து வருகிறது. அதன்வரிசையில் திண்டுக்கல்லில் கைதான ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரிச்சர்டு சச்சின் மீது ஏற்கனவே திண்டுக்கல் நகர், மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோ விலில் கூட்டு கொள்ளை முயற்சி, திண்டுக்கல் முகமது இர்பான் கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.
- வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது.
புழல்:
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3,400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் இந்த கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என 700 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பார்வையாளர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. அத்துடன் கைதிகளை சந்திக்க பார்வையாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.
இவற்றை தவிர்த்திட தற்போது புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சிறை கைதிகளை சந்திப்பதற்காக அரை மணிநேரம் கொண்ட 13 சுற்றுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 56 கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் வகையில் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த அட்டவணைப்படி வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை (அரசு விடுமுறை நீங்கலாக) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஏதேனும் 2 நாட்களில் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
அத்துடன் கைதிகள் சந்திக்க வரும் பார்வையாளர்கள் வசதிக்காக முன்பதிவு முறையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 044-26590000 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கைதிகளை சந்திப்பதற்கு வசதியான நேரத்துக்கு ஒரு நாள் முன்னதாவே முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் பதிவு செய்த நேரத்துக்கு 45 நிமிடங்கள் முன்னதாக வந்தால் போதும்.
இந்த புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.
இதே போல் வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வக்கீல்கள் சந்திப்பு அறையில் புதிய அறைகள் அமைத்து கைதிகள், வக்கீல்களுக்கு புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 50 வக்கீல்கள் கைதிகளை சந்திக்க முடியும். இவர்களுக்கும் முன்பதிவு செய்ய தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய நடைமுறையின்படி வக்கீல்கள் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை கைதிகளை சந்திக்கலாம். இதனால் வக்கீல்கள், கைதிகளை வழக்கு சம்பந்தமாக சந்தித்து பேச போதுமான நேரம் கிடைக்கிறது.
புழல் சிறையில் மேம்படுத்தப்பட்ட பார்வையாளர் சந்திப்பு முறை மற்றும் புனரமைக்கப்பட்ட வக்கீல் நேர்காணல் அறையை நேற்று சிறைத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
இதேபோல் புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பறை இசை, நாடகம், சங்கீத பயிற்சி, காட்சி கலைகள், பாட்டு கச்சேரி, கானா ஆகியவற்றை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி நிறைவு விழாவிலும் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வரர் தயாள், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், சிறைத்துறை தலைவர்(தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் முருசேன், தொண்டு நிறுவன நிறுவனர் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.
- காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
- டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்வது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.250 கோடியை தாண்டி மது விற்பனை நடைபெறும். காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், அதற்கு முந்தைய நாட்களில் விற்பனை களைகட்டும்.
அந்த வகையில் காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் முந்தையநாள் மது விற்பனை அதிகமாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய தினம் ரூ.200 கோடிக்கு மது விற்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே அக்டோபர் 1-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது. எனவே இந்த ஆண்டு ரூ.30 கோடி அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டு முதன்முறையாக மது விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, 'டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்வது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மதுவை விட இப்போது சிலர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு மாறிவிட்டனர். எனவே தான் இந்த சரிவு என்று கூறினர்.
- சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது.
- ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.
பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷண நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது, செப்டம்பர் முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை கடலில் சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் சரக்கு போக்குவரத்து ஒரு மாதம் தாமதமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல் தோணி போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த 1-ந்தேதி மாலத்தீவுக்கு புறப்படும் தோணியில் காய்கறிகள், மண், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், எந்திர தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. அந்த சரக்குகளுடன் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு முதல் தோணி நேற்று புறப்பட்டது. இதனை தொடர்ந்து மற்றொரு தோணியில் சரக்கு ஏற்றும் பணியும் நடந்து வருகிறது. ஒரு தோணியில் சுமார் 250 முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றமுடியும் என்று கூறப்படுகிறது.
இதேபோன்று இலங்கைக்கும் சுமுகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டுமே தோணி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிபத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கைக்கும் விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தோணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- மழையால் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு மாநகராட்சி சார்பில் 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு வடகிழக்கு பருவழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதத்தில் முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையில் டிசம்பர் மாதத்தில் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு முன்னதாகவே மழைக்கு வாய்ப்பு உள்ளதால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மழையால் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதற்கும் தயாராகவே இருக்கிறோம். கொசஸ்தலை ஆறு மற்றும் கோவளம் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கொசஸ்தலை ஆறு தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இந்த ஆண்டு மாநகராட்சி சார்பில் 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 6 படகுகள் வந்துள்ளது. அந்த படகுகளை மண்டலங்கள் 3, 12, 14 ஆகிய 3 மண்டலங்களுக்கு தலா 2 படகுகள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 30 படகுகள் வந்தபின்பு, கடந்த ஆண்டு அதிகமாக பாதிக்கப்பட்ட மண்டலங்களுக்கு தலா 2 படகுகள் வழங்கப்படும். அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 146 முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி மற்றும் அரசு பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு முகாம் மற்றும் சமையல் கூடங்கள் வெவ்வேறு பகுதியில் அமைக்கப்பட்டதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. எனவே, முகாம் அமைக்கப்பட உள்ள பகுதியிலேயே சமையல் கூடங்களும் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சியின் கீழ் உள்ள சில சுரங்கப்பாதைகள் மெட்ரோ ரெயில் பணிகளால் சேதமடைந்துள்ளது. அதை மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் சீர்செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
- தமிழக வெற்றிக் கழக மாநாடு 27-ந்தேதி நடைபெறுகிறது.
- பந்தல் அமைக்கும் பணி இன்று முதல் நடைபெற இருக்கிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
மாநாட்டுக்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்தனர். பின்னர் மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது.
பந்தக்கால் நட்பபட்ட போது தளபதி, தளபதி என கட்சி நிர்வாகிகள் முழக்கமிட்டனர். பந்தக்கால் நடப்பட்ட விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் முக்கிய கோவில்கள், தேவாலயம், மசூதி ஆகிவற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதில் த.வெ.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பூமி பூஜை மற்றும்டி பந்தக்கால் நடும் விழாவிற்கு வந்தவர்களுக்கு இட்லி, பொங்கல், பூரி, வடை ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டது.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு புஸ்சி ஆனந்த் வந்ததும், அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
- மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசிய நிலையில், வலையில் சிறுவர்கள் சடலமாக சிக்கினர்.
- சிறுவர்களின் உடலை மீட்டு அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்ல்லூர் பகுதியில் உள்ள கோட்டமருதூர் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்கள் ஹரிஹரன் (11), ஜீவிதன் (10) மற்றும் தர்ஷன் (8) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசிய நிலையில், வலையில் சிறுவர்கள் சடலமாக சிக்கினர்.
இதைதொடர்ந்து, சிறுவர்களின் உடலை மீட்டு அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார், குமரி மருத்துவக்கல்லூரி டீனாக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீனாக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்.
- ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய முடியும்.
அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர். இது ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது.
சிகிச்சையை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.
இருப்பினும், ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சென்னையில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் அவரது மகள் செளந்தர்யா தனது கணவருடன் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.
- மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்று கேள்வி.
- ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவு.
திருப்பதி திருமனை தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை என்றும் ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டாமா ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலம், மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் எங்கே ? ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவிட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.






