என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 880-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து காணப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 880-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880

    02-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    01-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,400

    30-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640

    29-10-2024 ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-10-2024- ஒரு கிராம் ரூ. 101

    02-10-2024- ஒரு பவுன் ரூ. 101

    01-10-2024- ஒரு பவுன் ரூ. 101

    30-10-2024- ஒரு பவுன் ரூ. 101

    29-10-2024 ஒரு பவுன் ரூ. 101

    • மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.
    • மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் வேட்டுனூர் சாலையானது நாகுடியிலிருந்து மாணவநல்லூர், வேட்டனூர் வழியாக நிலையூர், செல்லப்பன் கோட்டை, பானாவயல், தண்டலை உள்ளிட்ட கிராமங்களை கடந்து மணமேல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையை சென்றடைகிறது.

    சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலையில் தினம்தோறும் அறந்தாங்கி, நாகுடி மற்றும் மணமேல்குடி வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிக்கும், பொதுமக்கள் வேலைக்கும் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் வேட்டனூர் கிராமத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.

    ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்ட அவர்கள் பேருந்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இருந்ததால் அவர்களின் பணிகள் மற்றும் நலன் கருதி பொதுமக்கள் தாங்களாகவே சாலை மறியலை கைவிட்டனர்.

    மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.

    • கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினம் வந்து மாலை அணிந்தனர்.

    தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், செக்காரக்குடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தசரா பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் வரும்போது முன்னால் சென்ற வாகனங்களை டிரைவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே ஆலங்குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவரான செக்காரக்குடியை சேர்ந்த சுடலைவீரன், பெருமாள் மகன் பெரும்படையான், ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல், சுப்பிரமணி, மாயாண்டி, மற்றொரு சுப்பிரமணி, சுடலைமணி, கிருஷ்ண பெருமாள், மற்றொரு சுடலைமணி, அய்யம்பெருமாள், அருணாச்சலம் ஆகிய 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் திருச்செந்தூர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பெரும்படையான், கிருஷ்ண பெருமாள், வடிவேல் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பெரும்படையான் (20), கிருஷ்ண பெருமாள் (25) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த ஆதிமூலப்பெருமாள் மகன் வடிவேல் (வயது17) சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த டிரைவரான ஆலங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 38) என்பவரை பிடித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது.

    வடவள்ளி:

    வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை இன்னும் சில நாட்களில் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் தமிழகத்தில வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவு பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு முன்னறிவிப்பு பெறப்பட்டது.

    இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக பெய்யும் சராசரி மழை அளவு, எதிர்பார்க்கப்படும் மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    சென்னை 810-850, கோவை 338-360, மதுரை 370-390, நெல்லை 515-540, திருச்சி 379-410, சேலம் 331-360, நீலகிரி 501-510, திருப்பூர் 306-330, கரூர் 313-330, கன்னியாகுமரி 533-540, நாமக்கல் 270-270, மயிலாடுதுறை 888-900, நாகப்பட்டினம் 935-950, தஞ்சை 579-610, திருவாரூர் 725-760, திருவண்ணாமலை 450-490, தூத்துக்குடி 442-450, ராணிப்பேட்டை 406-420, கிருஷ்ணகிரி 278-290, தர்மபுரி 314-340, கடலூர் 702-720.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் - வரும் அக்டோபர் 7 - 11 வரையிலான காலகட்டத்தில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

     

    மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும். இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

    இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும், ஆசிரியர், மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதாக பொன்னேரி மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
    • வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கோளூர் காலனியில் வசிப்பவர் தென்றல் சாந்தி (வயது 32). இவர் சமூக வலைதளங்களில் "டிக் டாக்" பிரபலமாக இருந்த காலத்தில் அதிகமாக வீடியோக்களை வெளியிட்டு நடிகையாகவே வலம் வந்தார்.

    நேற்றுமுன்தினம் காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருட்டுதனமாக கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தென்றல் சந்தி மதுபாட்டிகளை வாங்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதாக பொன்னேரி மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு சென்ற மதுவிலக்கு போலீசார் தென்றல் சாந்தி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் அவர் மது விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் கோளூர் பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
    • இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், உரிய நிபந்தனைகளின்படி https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

    தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை போலீஸ் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட விண்ணப்பங்களை வருகிற 19-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நவீன உத்திகளைப் பயன்படுத்தி புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.
    • பொதுமக்கள் தேநீர் அருந்துவதற்கான கடைகள் எல்லாம் உருவாக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    சென்னை, நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவருக்காக ஏறத்தாழ 1,600 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் எழுப்பப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவு அரங்கம்தான் வள்ளுவர் கோட்டம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 1976-ம் ஆண்டு வள்ளுவர் கோட்டம், சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. கம்பீரமாகவும், சென்னையின் அடையாளமாக வள்ளுவர் கோட்டம் திகழ்கிறது. தற்போது வள்ளுவர் கோட்டம் கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. இதனை, புனரமைப்பதற்காக கடந்த நிதியாண்டில் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதற்கிணங்க பராமரிப்புப் பணிகள் ரூ.80 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.

    நவீன உத்திகளைப் பயன்படுத்தி புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, இங்குள்ள கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாகச்சுற்றுச் சுவர் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

    இதுவரை வாகனங்கள் தரைதளத்தில் மட்டும் நிறுத்தப்பட்டது. மீதியிருக்கக்கூடிய வாகனங்கள் நிகழ்ச்சி நடைபெறும் போது சாலைப்பகுதியில் நிறுத்தப்படும் சூழ்நிலை இருந்தது. இப்போது ஏறத்தாழ சுமார் 180 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நிறுத்துவதற்காக தனியாக அரங்கம் அமைக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கிறது. வள்ளுவர் கோட்டம் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தான் இருக்கிறது. எனவே, இருக்கின்ற இடத்தை வைத்து அதிக மக்கள் வந்து செல்லும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், புதுப்பொலிவோடு, கலை நயத்தோடு அமைக்கப்பட்டு வருகின்றது.

    அதேபோல, பொதுமக்கள் தேநீர் அருந்துவதற்கான கடைகள் எல்லாம் உருவாக்கப்பட இருக்கிறது. இன்னும் கிடைக்கக்கூடிய ஆலோசனைகளை பெற்று பொதுமக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மையமாக அமையக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக லேசர் ஷோ நடத்தப்பட இருக்கிறது. பழைய வள்ளுவர் கோட்டத்தை விட மாறுபட்ட அளவில் திருக்குறளைப் பற்றிய ஆய்வு மையம் அமைக்கப்பட இருக்கிறது. அதேநேரத்தில், இன்னும் பணிகள் நடைபெறும்போது கிடைக்கக்கூடிய நவீன கட்டமைப்புகளுடன் பொதுமக்களை கவரும் வகையில் வள்ளுவர் கோட்டம் அமையும்.

    வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கல்தேர் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவுறுகிற போது, ஒரு புதிய பொலிவோடு வள்ளுவர் கோட்டம் மக்களின் விருப்பமான இடமாக நிச்சயம் காட்சியளிக்கும். காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதங்களில் இது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

    இந்தப் பணிகள் திட்டமிட்டபடி, வருகிற டிசம்பர் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

    • சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
    • கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. கவர்னர் மாளிகையில் உள்ள பாரதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை, கவர்னர் ஆர்.என்.ரவி பொதுமக்கள் பார்வைக்காக நேற்று தொடங்கி வைத்தார். கொலுவை காண கவர்னர் மாளிகை வந்த பொதுமக்களை, கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர்.

    கொலுவில் 5 படிகளில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், கிருஷ்ணர், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, துர்கை, விஷ்ணுவின் தசாவதாரங்கள், ராகவேந்திரர், நடராஜர், பாண்டுரங்கர், அய்யப்பன், காளி, சாய்பாபா உள்பட சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.

    சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.தொடர்ந்து, நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பாரதி மண்டபத்தில், பாரதி திருமகனின் வில்லிசை பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொலு வழிப்பாட்டு நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்த பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

    நவம்பர் 9, 10, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளது.

    தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது24). இவரை கடந்த மாதம் 28ந் தேதி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

    இதனை தடுக்க வந்த முகமது இர்பானின் நண்பருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படை அமைத்து நகர் வடக்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது தலைமையிலான போலீசார் திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான எடிசன் சக்கரவர்த்தி (25), ரிச்சர்டு சச்சின்(26), பிரவின் லாரன்ஸ் (28), மார்ட்டின் நித்தீஷ் (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.

    திண்டுக்கல்லை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பட்டறை சரவணன் படுகொ லைக்கு பழிக்குப்பழியாக முகமதுஇர்பானை வெட்டிக்கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகமது இர்பானின் முகத்தை கொடூரமாக வெட்டி கொன்றது ரிச்சர்டு சச்சின் என தெரிய வரவே அவரை போலீசார் அழைத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே உள்ளது என விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதனையடுத்து அந்த ஆயுதங்களை திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள மாலப்பட்டி ரோட்டில் மயானத்தில் பதுக்கி வைத்திருப்பதாக ரிச்சர்டு சச்சின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், ஏட்டுகள் அருண்பிரசாத், ஆரோக்கியம் ஆகியோர் ரிச்சர்டு சச்சினை மாலப்பட்டி சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.

    திடீரென ஒரு அரிவாளால் அங்கிருந்த ஏட்டு அருண்பிரசாத்தை வெட்டிவிட்டு ரிச்சர்டு சச்சின் தப்பி ஓட முயன்றார். இதனால் அருண்பிரசாத் சத்தம்போடவே இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தனது துப்பாக்கியால் ரிச்சர்டு சச்சினின் வலது காலில் முழங்காலுக்கு கீழே சுட்டார். இதில் வலியால் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ஏட்டு அருண்பிரசாத்துக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி.பிரதீப் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் தப்பி செல்லும்போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடும் சம்பவமும் நடந்து வருகிறது. அதன்வரிசையில் திண்டுக்கல்லில் கைதான ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரிச்சர்டு சச்சின் மீது ஏற்கனவே திண்டுக்கல் நகர், மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோ விலில் கூட்டு கொள்ளை முயற்சி, திண்டுக்கல் முகமது இர்பான் கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.
    • வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது.

    புழல்:

    சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3,400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் இந்த கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என 700 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பார்வையாளர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. அத்துடன் கைதிகளை சந்திக்க பார்வையாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

    இவற்றை தவிர்த்திட தற்போது புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சிறை கைதிகளை சந்திப்பதற்காக அரை மணிநேரம் கொண்ட 13 சுற்றுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 56 கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் வகையில் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த அட்டவணைப்படி வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை (அரசு விடுமுறை நீங்கலாக) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஏதேனும் 2 நாட்களில் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

    அத்துடன் கைதிகள் சந்திக்க வரும் பார்வையாளர்கள் வசதிக்காக முன்பதிவு முறையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 044-26590000 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கைதிகளை சந்திப்பதற்கு வசதியான நேரத்துக்கு ஒரு நாள் முன்னதாவே முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் பதிவு செய்த நேரத்துக்கு 45 நிமிடங்கள் முன்னதாக வந்தால் போதும்.

    இந்த புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.

    இதே போல் வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வக்கீல்கள் சந்திப்பு அறையில் புதிய அறைகள் அமைத்து கைதிகள், வக்கீல்களுக்கு புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 50 வக்கீல்கள் கைதிகளை சந்திக்க முடியும். இவர்களுக்கும் முன்பதிவு செய்ய தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய நடைமுறையின்படி வக்கீல்கள் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை கைதிகளை சந்திக்கலாம். இதனால் வக்கீல்கள், கைதிகளை வழக்கு சம்பந்தமாக சந்தித்து பேச போதுமான நேரம் கிடைக்கிறது.

    புழல் சிறையில் மேம்படுத்தப்பட்ட பார்வையாளர் சந்திப்பு முறை மற்றும் புனரமைக்கப்பட்ட வக்கீல் நேர்காணல் அறையை நேற்று சிறைத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

    இதேபோல் புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பறை இசை, நாடகம், சங்கீத பயிற்சி, காட்சி கலைகள், பாட்டு கச்சேரி, கானா ஆகியவற்றை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி நிறைவு விழாவிலும் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வரர் தயாள், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், சிறைத்துறை தலைவர்(தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் முருசேன், தொண்டு நிறுவன நிறுவனர் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

    ×