என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
- முதன்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் கவர்ன, துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா இன்று தொடங்கியது. இதில் 3638 பேர் பட்டம் பெறுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவியும் . பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுள்ளனர். இருவரும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
முதன்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் கவர்ன, துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 முக்கியமான முன் விரோதங்களே காரணம்.
- 63 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5- ந்தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் வடசென்னை தாதா நாகேந்திரன் உள்பட 28 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் சுமார் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த குற்றப்பத்திரி கையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய 6 மாதமாக தீட்டப்பட்ட சதி திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு வரை கொலை செய்வதற்கு தொடர்ச்சியாக கண் காணித்து திட்டமிட்டு 'ரெக்கி' ஆபரேஷன் என்று அழைக்கிறார்கள். இது தொடர்பான தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
இது தவிர குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள புதிய தகவல்கள் பற்றியும் பரபரப்பான விவரங்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை 4 ஆயிரத்து 892 பக்கங்களை கொண்டதாக உள்ளது. 300 சாட்சியங்களை சேர்த்துள்ளனர்.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும், ஆட்கள் பலத்தோடு வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியை தடுக்கவே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு 4 முக்கியமான முன் விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் நில விவகாரம் தொடர்பாகவும், ரவுடி சம்பவ செந்திலுடன் ஏற்பட்ட விரோதம் தொடர்பாகவும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு சுரேஷ் கொலை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை ஆகியவையும் இதனுடன் சேர்ந்துள்ளன.
இதன் பின்னணியிலேயே கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
முதல் குற்றவாளியான நாகேந்திரன் கொலையாளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளார். இரண்டாவது குற்றவாளியான சம்பவ செந்தில் பண உதவியில் முக்கிய உதவி பங்காற்றியுள்ளார்.
3-வது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தியுள்ளார். வேலூர் சிறையில் இருந்து நாகேந்திரன் சிகிச்சைக்கு வரும்போது ஒன்று கூடி கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளாது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ. 10 லட்சத்தை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷ் மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு விரைந்து செயல்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணை நடத்தப்பட்டு கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம்.
இதுபோன்ற தொடர் விசாரணை காரணாமாகவே நாகேந்திரன், அஸ்வத்தாமன் ஆகியோர் சிக்கியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் 63 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1½ கோடி பணமும் ரொக்கமாக ரூ. 80 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
- பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பில் பொருள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
- காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆதரவற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 87 பேர் இருக்கிறார்கள்.
இந்த காப்பகத்திற்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பில் பொருள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இது தொடர்பாக நாம்தமிழர் கட்சி நிர்வாகி செல்வம் என்பவர், தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள முதியவர்களை தாக்கி அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என்பன உளளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கலெக்டரிம் அவர் கோரிக்கை மனு கொடுத்தார்.
இதையடுத்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இதுகுறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ. மகராஜ் தலைமையில் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, தனி தாசில்தார் சங்கீதா ராணி ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவை அமைத்தார்.
இந்த குழுவினர் கடந்த 10 நாட்களாக அந்த காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டு, அங்குள்ள பல்வேறு ஆவணங்களையும் சோதனை செய்தனர். காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.
விசாரணை அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், காப்பகத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது. காப்பகத்தில் உள்ள முதியவர்களின் மருத்துவ தேவை மற்றும் பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. காப்பகத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையை ஆய்வு செய்த கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீர் உடனடியாக காப்பகத்தை விட்டு வெளியேறவும், நிதி சம்பந்தமான அனைத்து ஆவணங்கள், பதிவேடுகளை ஊட்டி நகராட்சி கமிஷனர் வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து ஆர்.டி.ஒ. மகராஜ், நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, சமூகநலத்துறை அலுவலர் பிரவீனா, தாசில்தார் சரவணன் ஆகியோர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து காப்பகத்தை கையகப்படுத்தினர். காப்பகத்தின் முழு பொறுப்பையும் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. காப்பக நிர்வாகியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.
- கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5,000-த்தைக் கடந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. குறிப்பாக, இன்றைய நாளிதழ்களில் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும், அதில் குழந்தைகள், முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
மழைக் காலங்களில் பரவக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் விஷக் காய்ச்சல் போன்ற நோய்கள் தற்போதே மக்களை தாக்கத் துவங்கி உள்ளதாகவும்; பல்வேறு மாவட்டங்களில் டெங்கு போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாகவும், இதனால் பல அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும்; போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்றும்; ஒருசில அரசு மருத்துவமனைகளில் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்குப் போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றைய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் இந்த அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை நான் பலமுறை அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டி இருந்தேன்.
எனவே, உடனடியாக தமிழ் நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் தேவையான மருத்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன். மேலும் பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகள் கழிவுநீரால் நிரம்பி வழிவதாகவும் அவை முழுமையாக அகற்றப்படாத நிலையில், அரசு மருத்துவமனைகளே நோய்களை உருவாக்கும் கூடாரங்களாக மாறி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய, நடுத்தர மக்கள் இதனால் மிகவும் பாதிப்படைகின்றனர்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கும் நிலையில், காய்ச்சல் முகாம் நடத்துதல், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுப்பது, பழைய டயர், பாத்திரங்களில் மழைநீர் தேங்காமல் தடுப்பது, இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்வது, குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருத்து தெளித்தல், கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற எந்தவித முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைத்து மேற்கொள்ளாமல், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாமல, தன் உடல் நலனை தினமும் பேணிக் காக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் இக்குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யாமல் சப்பைக் கட்டு கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது வேதனையளிக்கிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்துப் பொருட்களை மொத்தமாக வாங்கித் தராததால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நோயாளிகளுக்குத் தேவையான ஆன்டிபயாட்டிக் மருந்து மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அனைத்து மருந்துப் பொருட்களும் முழுமையாக இருப்பதை சுகாதாத்துறை அமைச்சர் உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.
நோய் நாடி நோய் முதல் நாடி...
என்ற வள்ளுவர் அறிவுரைக்கேற்ப மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற விஷக்காய்ச்சல்கள் அதிகமாக பரவி உள்ளதால் தமிழ் நாடு முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இணைந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தொடர்ந்து கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்திருப்பது பெரும் பயனுள்ளது. பாராட்டுக்குரியது.
- இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அமைச்சரவை சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ. 63,246 கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளித்து, இதில் மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்திருப்பது பெரும் பயனுள்ளது. பாராட்டுக்குரியது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பு சென்னையில் போக்குவரத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பேரூதவியாக அமைகிறது.
பிரதமர் தமிழக மக்களின் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தக்க நேரத்திலே மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகை பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநிலம் முழுவதில் இருந்தும் 11½ லட்சம் பேர் பங்கேற்றனர். மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 24-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஆக்கி, குத்துச்சண்டை, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இந்த முறை காட்சி போட்டியாக இ-ஸ்போர்ட்ஸ் இடம் பெறுகிறது.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து கவனித்துக் கொள்ளப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் தொடக்க விழாவில் ஜோதியை ஏந்தி செல்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
- தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும்.
- பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,
வணக்கம்.
உங்களை நானும். என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம்.
தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை. அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல்.
இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?
நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா, அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா, இப்படிச் சொல்லும்போதே. ஓர் எழுச்சி உணர்வு. நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான்.
இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.
நம் கழகம். மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை இளஞ்சிங்கப் படை, சிங்கப் பெண்கள் படை குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை.
ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர்.
மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ. அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.
இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்.
இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோசத் தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது.
வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்.
வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.
- மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள், கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.
இன்றுகாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.40 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 6 ஆயிரத்து 416 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையில் இருந்து டெல்டாவுக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 56.62 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
- போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. வருகிற 7-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
திருச்சி பாரதிதாசன் சாலை, மேலப்புதூர், மன்னார்புரம், சிங்காரத்தோப்பு, கருமண்டபம், கே.கே. நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளுக்கும், சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 2 கல்லூரிகளுக்கும் அலுவலக மெயிலுக்கு நேற்று காலை 7.30 மணியளவில் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதனகோபால் என்ற ஐ.டி.யில் இருந்து இந்த மெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. காட்டூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விடுமுறை விடப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பள்ளி மற்றும் ஆச்சாரியா, காட்டூர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகியவை தவிர்த்து மிரட்டல் விடுக்கப்பட்ட 6 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கு இ.மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பள்ளி கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மர்ம நபரை அடையாளம் காண தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் ஓட்டுநரின் சாதுரியமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு விரைவு ரெயில் புறப்பட்டது சென்றது.
புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த ராமேஸ்வரம் விரைவு ரெயில் புகை போக்கியில் தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால் பற்றி எரிந்த நெருப்பால் பயணிகள் பீதியில் உறைந்தனர்.
உடனடியாக விரைவு ரெயிலை நிறுத்தி சாதுரியமாக செயல்பட்ட ரெயில் ஓட்டுநரின் செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு விரைவு ரெயில் புறப்பட்டது சென்றது.
- 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 880-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து காணப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 880-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

03-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880
02-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
01-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,400
30-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640
29-10-2024 ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

03-10-2024- ஒரு கிராம் ரூ. 101
02-10-2024- ஒரு பவுன் ரூ. 101
01-10-2024- ஒரு பவுன் ரூ. 101
30-10-2024- ஒரு பவுன் ரூ. 101
29-10-2024 ஒரு பவுன் ரூ. 101
- மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.
- மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் வேட்டுனூர் சாலையானது நாகுடியிலிருந்து மாணவநல்லூர், வேட்டனூர் வழியாக நிலையூர், செல்லப்பன் கோட்டை, பானாவயல், தண்டலை உள்ளிட்ட கிராமங்களை கடந்து மணமேல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையை சென்றடைகிறது.
சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலையில் தினம்தோறும் அறந்தாங்கி, நாகுடி மற்றும் மணமேல்குடி வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிக்கும், பொதுமக்கள் வேலைக்கும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வேட்டனூர் கிராமத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்ட அவர்கள் பேருந்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இருந்ததால் அவர்களின் பணிகள் மற்றும் நலன் கருதி பொதுமக்கள் தாங்களாகவே சாலை மறியலை கைவிட்டனர்.
மறியலால் வேட்டனூர் பகுதியில் சென்ற வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.






