என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர்.
    • தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தொழில் திட்டங்களின் எண்ணிக்கை 500 சதவீத உயர்த்திக் கூறுகிறார் அமைச்சர். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழ்நாட்டை வளர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் தி.மு.க. அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.
    • வணிகர்களையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்வோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம்.

    தருமபுரி:

    காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் இன்று காலை 9 முதல் மதியம் 12 மணிவரை அரைநாள் கடையடைப்பு போராட்டம் அழைப்பு விடுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் தருமபுரி இருந்து வருகிறது. இதனால் தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பா.ம.க. சார்பில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

    தருமபுரி காவிரி குடிநீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு 3 டிஎம்சி மட்டுமே நீர் தேவைப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பலநூறு டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும். ரூ.650 கோடி மட்டுமே செலவாகும்.


    இந்தத் திட்டத்தால், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்டம் வளம் பெறும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.

    ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க மறுக்கிறது என்று குற்றம்சாட்டிய அன்புமணி, "திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 4-ந் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க சார்பில் அழைப்பு விடுத்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், தள்ளுவண்டி கடைகள் என அனைத்து வியாபாரிகள், வணிக நிறுவனத்தினரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்று வலியுறுத்தி நடத்தப்படும் அரை நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

    இதற்கிடையே எந்த வணிகர்களையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்வோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம். எனவே அவ்வாறு செயல்படுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.


    இயல்பாக வழக்கம் போல் கடை செயல்படவும், வணிகம் மேற்கொள்ளவும் யாதொருவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. போலீசார் போதுமான பாதுகாப்பு வணிகர்களுக்கும், கடை மற்றும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவித்து இருந்தார்.

    தருமபுரி நகரின் முக்கிய பகுதியான பஸ் நிலையம், நேதாஜி பைபாஸ், திருப்பத்தூர் சாலை, பென்னாகரம் சாலை, கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை, ஆறுமுகஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, அப்துல்முஜீப் தெரு, சித்தவீரப்பசெட்டி தெரு, எஸ்.வி.சாலை மற்றும் பிடமனேரி, இலக்கியம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள் காலை 8 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.

    இந்த கடையடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தருமபுரி நகர் பகுதி முழுவதும் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சிவராமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோன்று கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான டீ கடை, உணவகங்கள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் திறக்கப்படவில்லை.

    இதுபோன்று பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி. ரோடு, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் மெயின் ரோடு, ஸ்துபி மைதானம் ஆகிய பகுதிகளில் வணிகர்கள் அனைத்து கடைகளும் கடை அடைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர் ஆகிய பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • தி.மு.க.விற்கு மது விலக்கை கொண்டு வர மனமில்லை, வருமானத்தையும் இழக்க விரும்பவில்லை.
    • தி.மு.க.பிறர் மீது பழிபோடும் போக்குக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டாஸ்மாக் மூலம் வருகின்ற வருமானம் தமிழ்நாடு அரசுக்கு செல்கின்ற நிலையில், இதற்கு ஏன் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை. இந்தியாவில் குஜராத், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மது விலக்கு நடைமுறையில் இருக்கிறது. அதேபோன்ற நடவடிக்கையை எடுக்க தி.மு.க. அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை.

    தி.மு.க.விற்கு மது விலக்கை கொண்டு வர மனமில்லை, வருமானத்தையும் இழக்க விரும்பவில்லை. மது விலக்கு குறித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும் கூறுவது போகாத ஊருக்கு வழி தேடும் செயலாகும். தி.மு.க.பிறர் மீது பழிபோடும் போக்குக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து 45 முதல் 50 லாரிகளாக குறைந்துவிட்டது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக பீன்ஸ், தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன்விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது வரத்து குறைவால் அதன் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரையிலும் வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் மொத்த விற்பனையில் கடந்த வாரம் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் விலை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து 45 முதல் 50 லாரிகளாக குறைந்துவிட்டது. இதேபோல் பீன்ஸ் வரத்தும் பாதியாக குறைந்து போனது. இதனால் தக்காளி, பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் இதே நிலைதான் இருக்கும் என்றார்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க ஏற்பாடு.
    • பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுவதற்கும் தி.மு.க. வியூகம்.

    சென்னை:

    2026 சட்டமன்ற தேர்லுக்கு தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அந்த தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று மெஜாரிட்டி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் ஓட்டு அதிகமாக உள்ளதால் பெண்களின் ஓட்டுகள் சிதறாமல் கிடைக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அதை அனைத்தையும் தி.மு.க. கையாண்டு வருகிறது.

    அந்த வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை என பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் சுழல் நிதி வழங்கவும் இப்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுத்தேர்தலுக்கு இன்னும் 18 மாத காலமே உள்ளதால் ஆட்சி காலம் முடிவடைவதற்குள் சுமார் ரூ.90 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக மாவட்ட வாரியாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்மைச்சர் உதயநிதி பங்கேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க உள்ளார்.

    2009-ம் ஆண்டு துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மாவட்டம் வாரியாக சென்று பலமணி நேரம் ஒவ்வொரு சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியது போல், இப்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க உள்ளார்.

    இதற்காக மாவட்ட வாரியாக உதயநிதியின் சுற்றுப்பயணம் தயாராகி வருகிறது. ஆயுத பூஜைக்கு பிறகு அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் விஜய் புதுக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் தி.மு.க.வின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ளவும், பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுவதற்கும் இந்த வியூகம் 'கை கொடுக்கும்' என தி.மு.க. தலைமை கணக்கு போட்டுள்ளது.

    • ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அறிவாலயத்துக்கு அழைத்து அவர்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.
    • தி.மு.க. ஐ.டி. பிரிவு, சுற்றுச்சூழல், விளையாட்டு மேம்பாடு ஆகிய 3 அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டு தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அறிவாலயத்துக்கு அழைத்து அவர்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.

    இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தி வருகின்றனர்.

    நேற்று தி.மு.க. ஐ.டி. பிரிவு, சுற்றுச்சூழல், விளையாட்டு மேம்பாடு ஆகிய 3 அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து நாளை காலையிலும் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூடுகிறது. இதில் மருத்துவர் அணி, மீனவர் அணி, சிறுபான்மையினர் அணியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    • கவிஞர் மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
    • பாடகி சுசிலாவுக்கு விருதை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை:

    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

     

    இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை கவிஞர் முகமது மேத்தா, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பாடகி சுசிலாவுக்கு விருதை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகையை முதலமைச்சர் வழங்கினார். 500 மாணவர்களுக்கு மொத்தமாக ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

    • அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர்.
    • பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    துவாக்குடி:

    திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி குருவான மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.

    இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

    இங்கு இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா தொடங்கியது. முதல் நாள் ஜெய் அகோர காளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர்.

    நள்ளிரவில் நடைபெற்ற மகாருத்ர யாகத்தின் போது அகோரி குருவான மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து, நவதானியங்கள் பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாகபூஜை செய்தார்.

    இந்த யாகபூஜையின் போது சக அகோரிகள் யாவரும் டம்ராமேளம் அடித்தும், சங்கு நாதங்கள் முழங்கியும், மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்ட காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.

    இதில் பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல், இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகா ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.


    இதைப்போல் இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு பெங்களூரில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் ஒரு மணிக்கு, அந்தமானில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில், போதிய பயணிகள் இல்லாமலும், நிர்வாக காரணங்களாலும், வருகை விமானங்கள்5, புறப்பாடு விமானங்கள் 5, மொத்தம் 10 விமானங்கள், ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரி கள் கூறும்போது, போதிய பயணிகள் இல்லாமலும் விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும், இன்று 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டு உள்ளதால், விமானங்கள் ரத்து காரணமாக, பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றனர்.

    • 3 மற்றும் 4-ம் அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
    • கூடங்குளம் அனுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகள் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3 மற்றும் 4-ம் அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பழுது இன்று அதிகாலையில் சரி செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை முதல் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தொடக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று மாலைக்குள் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கூடங்குளம் அனுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம்.
    • வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம். வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப் படும் தசரா பண்டிகை நேற்று தொடங்கியது.

    இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் இடங்கள் நிரம்பின.

    தமிழகத்தில் ஆயுதபூஜை, வருகிற 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை), 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.


    இதனை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 10-ந் தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கான இடங்கள் நிரம்பின.

    குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் நெல்லை, முத்து நகர், அனந்தபுரி, திருச்செந்தூர், பொதிகை, பாண்டியன், கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன.

    இதேபோல கோவை செல்லக் கூடிய ரெயில்களில் இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடிக்கிறது. பெங்களூர் பயணத்திற்கும் இடமில்லை. சிறப்பு ரெயில்களும் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன. தீபாவளி, பொங்கல், வரை அதில் இடமில்லை.

    ஆயுதபூஜை விடுமுறை பயணத்திற்கு இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் முன்பதிவு விறு விறுப்பாக இருக்கும் என்று அரசு விரைவு போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரி வித்தார்.


    ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி வருகிற 9, 10-ந் தேதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றிய அறிவிப்பு 7-ந் தேதி வெளியிடப்படும்.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணத்தை தொடர முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் 14 அல்லது 15-ந் தேதி நடைபெறும்.

    அதில் தமிழகம் முழுவ தும் சிறப்பு பஸ்கள் இயக்கு வது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பஸ்கள் வந்துள்ளன. பழைய பஸ்களுக்கு பதிலாக இவை இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
    • முதன்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் கவர்ன, துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா இன்று தொடங்கியது. இதில் 3638 பேர் பட்டம் பெறுகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவியும் . பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுள்ளனர். இருவரும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    முதன்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் கவர்ன, துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×