என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சிகிச்சை பலனின்றி மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் உயிரிழந்தான்.
    • சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் காலனி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துசாமியின் மகன் விவேக். இவருக்கும் உமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதனை தொடர்ந்து அவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

    உமா வீட்டை விட்டு விவேக்குடன் சென்றதால் மனவிரக்தியடைந்த அவரது கணவர் அய்யனார் கடந்த சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் கேலி பேச்சுகளுக்கு ஆளானார்.

    இதனால் ஆத்திரமடைந்த அய்யனார், நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி, அவரது மனைவி தவமணி, பேரன் மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அய்யனார் தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் உயிரிழந்தான்.

    இதுகுறித்து சிறுவனின் தாய் அன்பரசி கொடுத்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மகனை கொன்று விட்ட சோகத்தில் இருந்த ராமசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பொம்மைய நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 74). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் 3-வது மகன் சுப்பிரமணிக்கு (34) மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தந்தை ராமசாமியை தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 1-ந்தேதி சுப்பிரமணியன் வழக்கம்போல் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

    ஆனால் ராமசாமி தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுப்பிரமணி தந்தையை தாக்கினார். இதையடுத்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமசாமி மகனை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான ராமசாமிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதற்காக அவர் மருந்துகளை உட்கொண்டு வந்தார். மகனை கொன்று விட்ட சோகத்தில் இருந்த ராமசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

    • தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.
    • கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

    கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; லட்சக்கணக்கான குடும்பங்கள் சொத்துகளை இழந்து தவிக்கின்றன. இதே நிலை தொடருவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதி மன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மொத்தம் 475 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் இணையதளம் அல்லது செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்கோணம் கோட்டம் நிர்வாக இயக்குநா் ரா. பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் நாளை (சனி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்களில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு இன்று, நாளை (வெள்ளி, சனிக்கிழமைகளில்) ஆகிய இரண்டு நாள்களும் சோ்த்து 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக என மொத்தம் 475 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப செல்ல 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை வழித்தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களிலும் 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் இணையதளம் அல்லது செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
    • வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் ஏற்கனவே 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.

    இந்நிலையில் மீண்டும் இ-மெயில் மூலம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபுரத்தான் பாளையத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி இ-மெயில் ஐ.டி.க்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு அவசர அவசரமாக விடுமுறை அறிவித்து இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.


    பெற்றோர்களும் பதறி அடித்துக் கொண்டு பள்ளிகளுக்கு வந்து தங்களது குழந்தைகளை வேக வேகமாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர். பெருந்துறை டி.எஸ்.பி கணேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்தனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் உடனடியாக பள்ளிக்கு வந்து வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர்.

    பள்ளி கேட் மூடப்பட்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் ஈரோடு நாராயண வாசலில் உள்ள ஒரு தனியார் பள்ளி, வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தம்பி விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
    • தி.மு.க. எதை செய்கிறதோ அதே போலத்தான் தம்பி விஜய்யின் கட்சியும் செய்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தம்பி விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன.

    உங்கள் கட்சி புதிய கட்சி உங்கள் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறில்லை அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும். இப்போது ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜயின் கட்சியும் இருக்கிறது.

    பெரியாரையும் கும்பிடுகிறார்கள் கடவுளையும் கும்பிடுகிறார்கள். நேரம் காலம் பார்த்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள் அதாவது தி.மு.க. எதை செய்கிறதோ அதே போலத்தான் தம்பி விஜய்யின் கட்சியும் செய்கிறது. சுருங்கச் சொன்னால் தி.மு.க.வை போல் விஜய் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமாவளவனின் கட்சியில் கூட இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.
    • தேசப்பிதாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொல்.திருமாவளவன் நடத்திய மாநாட்டில் தனக்கு காந்தியின் கொள்கைகள் பிடிக்காது. அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தவர். சாகும்போது கூட ஹரே ராம் என்று கூறியவர் என்பதால் எனக்கு அவரை பிடிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

    திருமாவளவனின் கட்சியில் கூட இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் திருமாவளவன் இந்து மத நம்பிக்கை உள்ளவர்தான். அவர் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் இரண்டாம் தேதி மாநாடு நடத்தவில்லை. அன்று நிறைந்த அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.

    தேசப்பிதாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார். நான் திருமாவளவன் நாகரிகமான தலைவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த மேடையில் அவர் பேசியதை பார்த்ததும் அவர் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது. அவரை வக்கிரதன்மையின் அடையாளமாக பார்க்கிறேன்.

    காந்தியை விமர்சித்த பிறகும் திருமாவளவனை காங்கிரஸ் கூட்டணியில் வைத்திருக்கிறது. காங்கிரசை பொருத்தவரை காந்தியை விமர்சித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். சோனியா காந்தியையோ ராகுல் காந்தியையோ விமர்சித்தால் மட்டுமே துள்ளி குதிப்பார்கள் என்று கூறினார்.

    • 10 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.
    • அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரமைக்கப்பட்ட வாய்க்கால்கள், அணைமறுகட்டுமானப் பணி, புதிய குளம், புதிய அலுவலகக் கட்டிடம் உள்ளிட்ட 19 நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.

    திருப்பூர், தாராபுரம் வட்டம், கவுண்டையன்வலசு கிராமம் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 11 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, மாம்பாடி-புங்கந்துறை கிராமம் அமராவதி ஆற்றில் 11 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, குன்றத்தூர், கொளப்பாக்கம் கிராமத்தில், கொளப்பாக்கம் கால்வாய் 1 முதல் கொளப்பாக்கம் பொழிச்சலூர் சாலையில் இணைப்பு ஓடை வரை 11 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூடிய வடிவிலான கால்வாய், வாலாஜாபாத், உள்ளாவூர் கிராமத்தின் அருகே தொள்ளாழி மடுவின் குறுக்கே 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு,

    உத்திரமேரூர் வட்டம், இருமரம் கிராமத்தின் அருகே புத்தளிமடுவின் குறுக்கே 3 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திசையன்விளை, கஸ்தூரிரெங்கபுரம் கிராமம் பகுதி 2-ல் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள நீர் சூழ்வதை தடுக்கும் வகையில் திருப்பணி கரிசல்குளம் வெள்ள நீரை 3 கோடியே 79 லட்சம் செலவில் முடிவுற்ற நெடுங்குளம், மேகமுடையார் குளம் வழியாக சத்திரம் புதுக்குளம் கண்மாய்க்கு திருப்பும் பணி,


    ஒட்டப்பிடாரம், வடக்கு கல்மேடு கண்மாயில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி, பேரூரணி அணைக்கட்டில் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி, திரு வைகுண்டம், சம்பன்குளம் ஏரியின் வழங்கு வாய்க்காலின் இடது கரையில் 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் பணிகள், திருச்சி மாவட்டத்தில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்ட தலைமையிட உப கோட்டத்துடன் புதிய அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தலைமைச் செயலகத்தில், இந்து சமய அற நிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட கோவில்களில் பணி புரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 500 மாணவர்களுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.

    இதன்மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர். கடந்தாண்டு இத்திட்டத்தின் மூலம் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    2024-ம் ஆண்டுக்கான 'தேசிய நல்லாசிரியர் விருது 'பெற்ற ஆசிரியர்கள் இரா. கோபிநாத் மற்றும் இரா. சே. முரளிதரன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகா னந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உடன, இருந்தனர்.

    • மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பு.
    • பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு.

    சென்னை:

    இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காணும் பொங்கல் தினத்தில் மேற்கொள்வது போன்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க வருகிற 6-ந்தேதி தடை விதிக்கப்பட உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், காலையில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் அவர்களை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் இன்று 72 விமானங்கள் பங்கேற்கும் பிரமாண்ட ஒத்திகை நடைபெற்றது. 6-ந் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும்போது பங்கேற்ற்கும் அத்தனை விமானப் படை விமானங்களும் ஒத்திகையில் பங்கேற்கின்றன.

    இந்த ஒத்திகை 3 மணிநேரம் 7 பிரிவுகளாக நடைபெற்றது. இந்த ஒத்திகையின் போது விமானப்படை வீரர்கள் மெய்சிலிர்க்கும் வகையிலும் மயிர்கூச்செரியும் வகையிலும் சாகச நிகழ்ச்சியை செய்து காட்டினர்.


    இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக்கொண்டு நின்று கண்டுகளித்தனர்.

    • வெளியே வந்த செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி உள்ளார்.

    சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.

    இதையடுத்து வெளியே வந்த செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

    இந்த நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி உள்ளார். 

    • . உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள்.
    • சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்று பவன் கல்யாண் விமர்சித்து இருந்தார்.

    சனாதனம் வைரஸ் போன்றது என்ற உதயநிதியின் பேச்சை கண்டித்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியிருந்தார்.

    சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்று பவன் கல்யாண் விமர்சித்து இருந்தார்.

     இந்நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    பொறுத்திருந்து பாருங்கள். சிரித்த முகத்துடன் LETS WAIT AND SEE என அவர் பதில் அளித்துள்ளார்.

    • அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர்.
    • தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தொழில் திட்டங்களின் எண்ணிக்கை 500 சதவீத உயர்த்திக் கூறுகிறார் அமைச்சர். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழ்நாட்டை வளர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் தி.மு.க. அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×