என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உண்மையில் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.
    • தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்து விட்டு சாம்சங் நிறுவனத்தின் நலன்களை பாதுகாத்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுகளில் சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் இன்னொரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

    உண்மையில் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. மாறாக தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, சாம்சங் நிறுவன நிர்வாகம் தப்ப வைக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்து விட்டு சாம்சங் நிறுவனத்தின் நலன்களை பாதுகாத்திருக்கிறது. இதன் மூலம் , தொழிலாளர்களுக்கு பெருந்துரோகம் செய்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

    வேலை நிறுத்தத்தைத் தொடரும் சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு அரசு துணை நிற்க வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார்.
    • மயங்கியவரின் இடத்தில் உடனடியாக வந்து நின்ற மற்றொரு வீரர்.

    இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

    இந்நிலையில், இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அப்போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்த சக வீரர்கள் மயங்கி விழுந்த விமானப்படை வீரரை தூக்கி சென்ற முதலுதவி அளித்தனர்.

    மயங்கி விழுந்தவரின் இடத்தில உடனடியாக மற்றொரு வீரர் வந்து நின்றதால் அணிவகுப்பு தடைபடாமல் நடைபெற்றது. 

    • தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    11-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    12-ந்தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    13-ந்தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    14-ந்தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 12-ந்தேதி வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர்.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு பகுதியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து தொடர்ந்து மக்களின் மீது வரிச் சுமைகளை ஏற்றி வருகிறது. தற்போது ஆண்டு தோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வினை மக்கள் மத்தியில் திணித்துள்ளது. இது மட்டுமல்ல மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் அதிகரித்துவிட்டன. ஆனால் முதலமைச்சர் இதுபற்றி எதுவும் கவலைப்படாமல் தனது தந்தை பெயரில் பூங்கா திறப்பதை சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி அழகு பார்க்கிறார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வர வாக்களித்த மக்கள் மீது வரிக்கு மேல் வரியை போட்டு வருகிறார். வரிக் குதிரையின் உடம்பில் உள்ள வரியை விட தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியே அதிகமாக உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டன. இதனை தான் கவர்னர் ஆர்.என்.ரவி தெளிவாக கூறியிருக்கிறார். முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பு இனிப்பு மிட்டாய்கள் தான் விற்கப்படும். ஆனால் தற்போது, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பிள்ளைகளை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க கூட பெற்றோர்கள் அஞ்சுகிற சூழ்நிலையை தி.மு.க. அரசு உருவாக்கி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர். அவரைப் பற்றி இப்போது பேசுவது பொருத்தம் அல்ல. நடிகர் விஜய் இப்போதுதான் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மாநாட்டின் போது தான் அவரது கொள்கை கோட்பாடு பற்றி தெரியும். அப்போது தான் அவரது கட்சியை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விஜய்யின் புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதை மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஒவ்வொரு இடங்களிலும் உரிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு எத்தனை பேர் அங்கே அனுமதிக்கப்பட வேண்டுமோ அத்தனை பேரை மட்டுமே அனுமதித்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. ஆனால் இதுபோன்று கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகித்து வந்தார்.
    • தளவாய் சுந்தரத்தை நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய

    கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை தொழிலாளர் காலனியில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டம் 1 கோடி பேரை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் 2 கோடி பேர் வரையில் பயனடைந்துள்ளனர். இதுவரை 1 கோடியே 96 லட்சத்து 77,577 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஐ.நா.சபையின் பாராட்டையும் பெற்றுள்ளோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    2012-ம் ஆண்டு 66 பேரும், 2013-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரையில் 7 பேர் மட்டுமே பலியாகி இருக்கிறார்கள்.

    தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு விடும். எனவே பொதுமக்கள் இதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலியான பெயர்களில் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் செயல்படுகின்றன.
    • பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    அனைத்து பொருட்களுமே தற்போது ஆன்லைனில் கிடைக்கும் நிலையில் பட்டாசுகளையும் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே வாங்குவதற்கு முனைப்பு காட்டி வருகிறார்கள்.

    அதற்கேற்ப பல்வேறு பட்டாசு விற்பனை நிறுவனங்களும் ஆன்லைனில் ஆர்டர்களை பெற்று விற்பனையில் ஈடுபடத் தொடங்கி உள்ளன.

    அதில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறைந்த வகையில் பட்டாசுகளை வாங்குவதற்கு போட்டி போட்டு ஆன்லைனில் பணத்தை செலுத்தி விட்டு பட்டாசு பார்சல்களுக்காக காத்திருக்கிறார்கள்.

    இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் ஆன்லைனில் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் வலை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    போலியான பெயர்களில் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையதள முகவரிகளை தொடங்கி ஆன்லைனில் பணத்தை வாங்கிவிட்டு பட்டாசுகளை அனுப்பாமல் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

    இதனால் ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆன்லைனில் சில்லரை விலையில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் அதையெல்லாம் மீறியே ஆன்லைனில் பட்டாசு விற்பனை அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.


    இதனை பயன்படுத்தித் தான் ஆன்லைனில் மோசடி கும்பல் ஏமாற்றுவதற்கு திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறது.

    எனவே பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பணத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும் என்றும் பட்டாசு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு.
    • பணியில் இருந்த நர்சுகள் அலறியடித்து ஓட்டம்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள முத்துப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு சிவபாண்டியன் மற் றும் பிரகதீஸ்வரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சிவபாண்டியனுக்கும் பிரகதீஸ்வரனுக்கும் இடையே பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகதீஸ்வரன், அண்ணன் சிவபாண்டியனை தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    பலத்த காயம் அடைந்த சிவபாண்டியன், அந்த சூழ்நிலையிலும் தம்பியின் கையில் இருந்த பட்டாக்கத்தியை பறித்தார். பின்னர் பிரகதீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து பலத்த காயங்களுடன் சிவபாண்டியன் நேராக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட பட்டாக்கத்தி, தலை, கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வந்தவரை பார்த்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த செவிலியர்கள், காவலாளி ஆகியோர் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.

    பின்னர் இதுபற்றி தனி அறையில் இருந்த டாக்டர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர் கள் சிவபாண்டியனிடம் விசாரித்தபோது சொத்து பிரச்சினை காரணமாக தனது தம்பி தன்னை வெட் டியதாகவும் அவரிடம் இருந்து பட்டாக்கத்திய பறித்து கொண்டு சிகிச் சைக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்

    • நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நியமனம்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நியமனம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேருவையும்; தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமியையும்;

    திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவையும்; தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும்; தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும்;

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும்;

    நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனையும்;

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியையும்;

    கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியையும்; காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தியையும்; பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும்;

    நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும்; மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனையும் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாகனங்கள் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது.
    • அரசு மருத்துவமனை கேண்டீனுக்குள் மழைநீர் புகுந்தது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்தது.

    நேற்று 2-வது நாளாக கோவை மாநகர் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழையானது இரவு வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    அதிகளவிலான தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல அடி தூரத்திற்கு காத்து நின்று ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

    இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து விடும்.

    மழைநீர் புகாமல் இருக்க அந்த பகுதி உயர்த்தி தளம் அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று பெய்த மழைக்கு அரசு மருத்துவமனை கேண்டீனுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கிருந்து மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து எம்.எம். 4 கட்டிடத்தின் வார்டுகளுக்குள் புகுந்தது.

    இதனால் அங்கு கடும் தூர்நாற்றம் வீசியது. நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர். உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் வார்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியைக் கொடுக்க மறுத்து வரும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
    • பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற உணவகத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் தலைவர் கி.வீரமணி தலைமையில் பெரியார் திடலில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழின சமுதாயத்தில் மிகப்பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும், வெற்றியையும் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 26-ந்தேதி அன்று ஈரோட்டில் சிறப்புடன் நடத்துவது. தமிழின மீனவர்களின் மீதான துயரம் தொடராமல் இருக்க, உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

    இப்பிரச்சனைக்குச் சட்ட ரீதியான முடிவினை ஏற்படுத்திட, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி, உரிய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒருமனதாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

    'புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்' எனத் தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியைக் கொடுக்க மறுத்து வரும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.

    'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஒன்றிய அரசு திணிக்கும் குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை கைவிடவேண்டும் என்று ஒன்றிய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    ஒன்றியத்தில் ஆளும் மைனாரிட்டி பா.ஜ.க. அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர் 7 முதல் 11 வரை பல்வேறு போட்டிகளை நடத்த ஒன்றிய அரசு சுற்றறிக்கை விடுத்து உள்ளது.

    அதில், விவாதப் போட்டிக்கு அளிக்கப்பட்டு உள்ள "ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத்" ஆகிய தலைப்புகள் சர்ச்சைக்குரியவை.

    மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மக்கள் செலுத்தும் வரிப் பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மாணவர் விரோதப் போக்காகும், வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை திராவிடர் கழக தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.

    'நவராத்திரி விழா' என்கிற பெயரில் ஒன்பது நாட்களுக்கு உச்சநீதிமன்ற உணவகத்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும், அது மட்டுமின்றி பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற உணவகத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இது தவறான முன்னுதாரணமாகி விடும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்குரைஞர்களின் கருத்துக்கு உரிய மதிப்பு அளித்து, உணவு கட்டுப்பாடு விதிக்கும் செயலை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கடுங்குளிரால் மக்கள் அவதி.
    • மலைப்பாதையில் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெப்பமும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே போல் நேற்று மதியமும் திடீரென அடர்த்தியான மேகமூட்டம் நிலவியது.

    பின்னர் மதியம் 2 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 2 மணிநேரம் கனமழையாக கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் குட்டைபோல் தேங்கியது.

    தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் இரவு 9 மணியளவில் மீண்டும் கனமழையாக பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக கடுங்குளிரும் நிலவியது. தொடர்ந்து விடிய, விடிய, மழை தூறிக்கொண்டே இருந்தது.

    இன்று காலையும் ஏற்காட்டில் சாரல்மழை பெய்தது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குடை பிடித்தப்படி சென்றனர்.

    ஏற்காட்டில் கொட்டிய மழையின் காரணமாக மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டி வருகிறது. சேலம் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஏற்காட்டில் 44.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    ×