என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்து உள்ளார்.
    • சிறுமி கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ். இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர்.

    நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்து உள்ளார்.

    நேற்று முன்தினம் தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை முடிந்து குளிக்கச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, சிறுமியின் உடலில் சிகரெட் காயங்கள் இருந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    இந்நிலையில், சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தம்பதி உள்பட 6 பேருக்கும், வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட 6 பேரையும் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, முகமது நிஷாத், நாசியா, லோகேஷ், ஜெயசக்தி, மகேஸ்வரி மற்றும் சீமா பேகம் ஆகிய 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று.
    • ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    சென்னையில் துறைமுகத்தில், எருமை மாட்டுக் கறி என கூறி, 28 மெட்ரிக் டன் காளை மாட்டுக் கறியை ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததை தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதியை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

    காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று அளித்திருந்தது.

    சந்தேகத்தின்பேரில், இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    இதைதொடர்ந்து, தவறான தகவலை கூறி, ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாக, டெல்லியை சேர்ந்த யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது சுங்கவரி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை அடுத்து, யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாளர் முகமது காலித் ஆலம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

    • சந்தேகத்திற்கு இடமாக திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • வாலிபரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் தசரதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் லால்குடி அருகே தாளக்குடி முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முருகானந்தம் (வயது 24) என்பதும் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர்.
    • இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்றுள்ளனர்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்தார். ஈரோடு பஸ் நிலைய பகுதியில் தங்கி இருந்தார்.

    அப்போது சந்தோஷ்குமார் என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்தார். அப்போது சந்தோஷ்குமார், நித்யாவிடம் நமக்கு குழந்தை பிறந்தால் அதனை விற்று விடலாம் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் பெண் இடைதரகர்களான ஈரோட்டைச் சேர்ந்த செல்வி, ராதாமணி, பானு மற்றும் ரேவதி ஆகியோர் உதவியை நாடியுள்ளார்.

    அவர்களும் நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர். இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்றுள்ளனர். பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையை விற்ற பின்னர் நித்யா குழந்தை நினைவாக இருந்துள்ளார்.

    குழந்தையை விற்பனை செய்த பிறகு மனமில்லாமல் இருந்த நித்யா நடந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் நித்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம் அவர் நடந்தவற்றை கூறினார். இதை அடுத்து சந்தோஷ் குமார், பெண் இடைத்தரகர்களான செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் தம்பதியினரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளது எனவும், வழக்கு குறித்த முழு விவகாரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தை விற்ற இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்பேத்கரின் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து அண்ணலின் வழியை எந்நாளும் பின்பற்றுவோம்.
    • இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமான முறையில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டை நடத்திக் காட்டினார்.

    இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றது தமிழக அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    பாரதிய ஜனதா, தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தனது எதிரி என மாநாட்டு மேடையில் அறிவித்த விஜய் 2026-ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் தங்களோடு கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்றும் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

    இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், விஜய்யின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பதும் அரசியல் களத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது போன்ற ஒரு சூழலில் விஜய் இன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 10.35 மணியளவில் விஜய் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது அலுவலகத்தில் வெளியில் திரண்டிருந்த கட்சி தொண்டர்களை பார்த்து அவர் கை அசைத்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலும், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையிலும் நடந்த செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக எப்போதும் முன்னெடுக்கும்.

    பெருந்தலைவர் காமராஜராலும் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்றுவதோடு, அவரது நேர்மையான நிர்வாகச் செயல்பாட்டையும் 100 சதவீதம் கடைப்பிடிப்போம்.

    அம்பேத்கரின் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து அண்ணலின் வழியை எந்நாளும் பின்பற்றுவோம்.

    வேலு நாச்சியாரின் மண் காக்கும் வீரத்தையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிக் களமாடும்.

    * கொள்கைத் திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

    * மக்கள் மனங்களில் நாம் முன்வைக்கின்ற கொள்கைகள் தங்களுக்கான பாதுகாப்பைத்தான் பேசுகின்றன என்ற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்ததால் தான் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கைகளுக்கு "மதச்சார் பற்ற சமூகநீதிக் கொள்கைகள்" என்று பெயர் சூட்டி உள்ளது என்பதை விளக்க வேண்டியது நம் கடமை ஆகும்.

    தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் என்பதையும் இந்தச் செயற்குழு வாயிலாக மீண்டும் தெளிவுபடுத்துகிறது.

    * ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சித் தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தச் சட்டத்தை, இச்செயற்குழு கண்டிக்கிறது.

    ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து போராடுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை மட்டுமல்ல, உரிமையும் ஆகும். அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வாயிலாகத் அதனை தடுக்க முயல்வதும், அவதூறுப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகு முறை. இத்தகைய அரசியல் அணுகுமுறையை, தமிழகத்தைத் தற்போது ஆளும் தி.மு.க. ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.

    * பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் கடும் தண்டனைகளை பெற்றுத் தரும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

    * சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று தி.மு.க. அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழி போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும்.

    * மாநிலத்திற்கான தன்னாட்சி உரிமை கோரும் எங்கள் கொள்கைப்படி, மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், இந்த விசயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்துத் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது.

    * காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மன நிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெ க்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்ட ரீதியாகப் போராடவும் தயங்காது.

    என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு, இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

    * கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

    * இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

    கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவு படுத்தியுள்ளது.

    தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள், தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக் கொள்ள, ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி, மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். அவர்களைக் கைது செய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப் பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம், இந்தச் சர்வதேசச் சட்டத்தை வலியுறுத்தி, மீனவர்களுடன் இணைந்து போராடும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
    • கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * முதலில் திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர். அடுத்து தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்போர், எங்கள் தாய்மொழித் தமிழ் மட்டுமல்லாமல், தமிழ்மொழி சார்ந்த எந்த ஒன்றிலும் தலையிட ஒன்றிய அரசுக்கு மட்டுமல்ல எங்கள் தாய்மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிச் செயல்படும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக, மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் கனவு, எமது மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உரக்கச் சொல்லிக்கொள்கிறது.

    * அரசின் வருவாயைப் பெருக்க எந்த ஓர் அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமையை மட்டுமே அதிகமாக விதித்து, மக்களின் பொருளாதார நிலையைக் கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசுக்கு இச்செயற்குழு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

    * அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், பட்டப்பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது. மேலும், தொடரும் கள்ளச்சாராய விற்பனை, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாமல், மக்கள் நலனைக் காட்டிலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆளும் திமுக அரசுக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

    * ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதன் வாயிலாக ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றியதுதான் தற்போதைய ஆளும் கட்சியான திமுக. தேர்தல் வாக்குறுதியை வழக்கம் போலக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கை விட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    * மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்து விட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து, அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விடக் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுத் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

    * தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம் வழங்குகின்ற வகையில், உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும். நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் வழக்கு சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகள் தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லும்போது அதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு, இதைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    * தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், பிரமாண்டமான அருங்காட்சியகம் சென்னையில் கட்டப்பட வேண்டும்.

    * தமிழக அரசால் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்படும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள் மற்றும் கலையரங்கங்களுக்கு, தமிழ் மண்ணிலிருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப்போர்த் தியாகிகளின் பெயர்களைச் சூட்டி, அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

    * இஸ்லாமிய சகோதரிகளின் தமிழ்த் தொண்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட வேண்டும்.

    * தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

    * கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும்.

    * கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

    * நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல் இருக்கிறது என்றால், ஓர் இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி, ஒரு சிறப்புப் பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியைச். சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழுச் சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியும். எனவே கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பெருமைப்படுத்திடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர் விருது' வழங்குகிறது. இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருவதற்காகத் தமிழக அரசை இச்செயற்குழு வரவேற்கிறது.

    * இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் சுமார் 2,376 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைக்க உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியதுடன், பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை இச்செயற்குழு வரவேற்கிறது.

    இயக்கத்திற்காகவும் கழகத்திற்காகவும் நீண்ட காலமாகப் பணியாற்றி, உடல்நலக் குறைவால் திடீரெனக் காலமான கழகப் போராளி புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன், மாநாட்டில் பங்கேற்க வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த திருச்சி தெற்கு மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் வி.எல்.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்டக் கழகத் துணைத் தலைவர் ஜே.கே.விஜய்கலை, கழகத் தோழர்கள் வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார் மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கழகத் தோழர்சார்லஸ் ஆகியோர் மறைவுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய களப் பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம்.
    • பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தெரிவிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ கனமழையோ பெய்ய வாய்ப்புண்டு.

    கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம்.

    குறிப்பாக விவசாய நிலங்கள் மழையால், புயல், வெள்ள நீரால் சேதமடைந்து, பயிர்கள் பாழாகி, விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தார்கள். மேலும் மக்களும் மழைக்கால நோயினால் பாதிக்கப்பட்டார்கள்.

    இப்படி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தமிழக அரசு, மழைக்காலத்தில் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகள் என மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்களை, விவசாயத்தை, கால்நடைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3 வருட காலமாக தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இதுவரைக்கும் இப்படி பேசியது இல்லை.
    • பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் உருவாகிறது.

    எடப்பாடி பழனிசாமி வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கே. விஜய் அ.தி.மு.க.வை விமர்சிக்காதது குறித்து?

    ப. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, அம்மாவுக்கு பிறகும் சரி நிறை திட்டங்களை தந்து நிறைவேற்றப்பட்டு மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி அ.தி.மு.க., அதனால் அ.தி.மு.க.வை விஜயால் எப்படி விமர்சிக்க முடியும்.

    கே. தி.மு.க.வில் கூட்டணி பிளவு ஏற்பட்டுள்ளது என எதை வைத்து சொல்கிறீர்கள்?

    ப. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டணியில் பங்கு என அறிவிப்பு வெளிட்டு இருக்கிறார்கள். அதுபோல் விடுதலை சிறுத்தை கட்சி வெளியிட்டு இருக்கிறது. கம்யூனிஸ்ட்டு கட்சி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றபோது கூட்டணியில் பிளவு என்று பார்க்க வேண்டியது தானே.

    3 வருட காலமாக தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இதுவரைக்கும் இப்படி பேசியது இல்லை. மக்கள் பிரச்சனைக்காக எந்த போராட்டமும் செய்யவில்லையே. அண்மை காலமாகதானே இதை எல்லாம் அறிவிக்கிறாங்க. இதனால் தான் அவர்களுடைய நடவடிக்கையை வைத்துதான் கூட்டணியில் பிளவு இருப்பதாக தெரிவிக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆங்காங்கே வன்முறை. நம்முடைய வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாம்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் பிரச்சனை செய்தவர்களிடம் அமைதியாக போங்க என தட்டி கேட்கிறார். அதற்காக அவரது வீட்டின் கூரை மீது ஏறி உடைச்சு உள்ளே இருந்த அவரை பிடித்து இழுத்து வெளியே போட்டு அடித்து உதைக்கிறாங்க. எனவே பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் உருவாகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல.
    • போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை.

    அதுகுறித்து கேட்கும் போதெல்லாம், மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டை கணக்கிட போதிய பணியாளர்கள் இல்லை என்று கூறி வந்தது. ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட பணியாளர்கள் தேவையில்லை. அதனால் மாதந்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதனடிப்படையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்பதால் ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை மிச்சமாகும்.

    எனவே, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ப்ரீபெய்ட் மீட்டரைப் பயன்படுத்தி, மாதாந்திர மின்கணக்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது.
    • தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியில் எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 11 சட்டமன்ற தொகுதியில் 10 இடங்களில் வென்றது அ.தி.மு.க கூட்டணி. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. கட்சியை வளர்த்தவர்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், மூத்த அமைச்சர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதியை இன்றைக்கு துணை முதலமைச்சராக்கி இருக்கின்றீர்கள் என்றால் அங்கு சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கின்றது.

    மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்தது உதயநிதி இளவரசராக இருக்கின்றார். அவர் முதலமைச்சர் என்கிற ஸ்டாலினுடைய கனவு ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது.

    தி.மு.க.வில் கருணாநிதி தலைவராக இருக்கும்போது ஸ்டாலினை வளர்த்துவதற்கு கட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 20 ஆண்டு காலம் ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். இதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேயராக இருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்புறம்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதற்கு 20 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் கட்சிக்காக பாடுபடாமல் தி.மு.க. என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு, கருணாநிதி குடும்பம் என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.

    ஏற்கனவே இந்தியாவிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டாங்க.



    குடும்ப கட்சியாக மாறிவிட்டது தி.மு.க., வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும் ஸ்டாலின் அவர்களே. நீங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணுகிறீங்க. தன்னுடைய மகனை பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வைத்து மக்களிடத்திலே ஈர்ப்பு சக்தி உண்டாக்க வேண்டும் என்பதற்கு முயற்சி செய்கிறீங்க. எந்த ஒரு முயற்சியும் எடுபடாது.

    மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டை பொறுத்தவரையும் விழிப்புணர்வு கொண்ட மக்கள். 2011-க்கு பிறகு 2021 வரை அதி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்தது என சற்று நினைத்து பாருங்கள்.

    எடப்பாடி தொகுதி என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எடப்பாடியிலேயே இருக்கின்றார் என்கிற ஒரு அடையாளத்தை இன்றைக்கு தமிழக மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

    10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டினோம்.

    தி.மு.க. ஆட்சியில் எதிர்கட்சி சொல்வதை காது கொடுத்து கேட்பது கிடையாது. தி.முக. ஸ்டாலின் ஆட்சியில் தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை நிறுத்தப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என எவ்வளவோ சூழ்ச்சி செய்தாங்க. ஆனால் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
    • சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்கள் வெடிகுண்டு புரளிகள் இல்லாத நிலையில் மீண்டும் மிரட்டல் வரத்தொடங்கி உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் உள்ள இணையதளத்திற்கு நேற்று நள்ளிரவு இமெயிலில் தகவல் வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இமெயில் மிரட்டலில் குறிப்பிட்ட விமானத்திற்கோ அல்லது விமான நிலையத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு என்றோ குறிப்பிடாமல் இருந்ததால் விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி, ஓடுபாதை, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், பயணிகள் புறப்பாடு, சரக்கு பார்சல்களை விமானங்களில் ஏற்றும் பகுதி ஆகிய இடங்களில் இன்று காலை வரை விடிய,விடிய சோதனை நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.

    இதுகுறித்து, சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் வந்த இமெயில் முகவரியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்கள் வெடிகுண்டு புரளிகள் இல்லாத நிலையில் மீண்டும் மிரட்டல் வரத்தொடங்கி உள்ளது.

    • சிறப்பு பஸ்கள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்து இருந்தனர்.
    • பல்வேறு நகரங்களில் இருந்து இந்த பஸ்கள் சென்னைக்கு வர உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதற்காக 12,846 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து துறை 28-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கியது. சிறப்பு பஸ்கள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முடித்து விட்டு இன்று முதல் அவரவர் ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புறப்பட்டு சென்னைக்கு திரும்புவார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக பல்வேறு நகரங்களில் இருந்து இந்த பஸ்கள் சென்னைக்கு வர உள்ளன.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இன்று ஒரே நாளில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

    பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு tnstc.in அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த முன்பதிவு இதுவரை இலலாத ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

    ×