என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளுக்கு நேரில் சென்று அங்கு தங்கியுள்ள பக்தர்களிடம் குடிதண்ணீர், சுகாதார வளாக வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கோவில் வளாகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு சென்று அதில் தங்கியுள்ள பக்தர்களிடம் வாடகை குறித்தும், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அந்த விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி செல்வபாண்டி, நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • அணையில் தற்போது 74.54 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 9,917 கன அடியில் இருந்து 11,526 கன அடியாக அதிகரித்துள்ளது.

    மொத்தம் 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.24 அடியாக உள்ளது.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 12,000 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் தற்போது 74.54 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.
    • ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது.

    பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. மண் சரிந்து தண்டவாளத்தை மூடியது. மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று ரத்து செய்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலைரெயில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதற்கிடையே ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் பணியை உடனடியாக முடிக்க முடியவில்லை. இதனால் இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு மலைரெயில் இயங்காது என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    சீரமைப்பு பணி முடிவடைந்த பிறகு மீண்டும் மலைரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
    • வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கினாலும், பருவமழைக்கான முழுவதுமான கிழக்கு காற்று தற்போதுதான் தென் இந்திய பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது.

    அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதிலும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் மழை தீவிரம் அடைய இருக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) அல்லது அதற்கு அடுத்த நாள் (வியாழக்கிழமை) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

    • சாதாரண படிக்கட்டில் ஏற முடியாதவர்கள் தான் பெரும்பாலும் இந்த நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்துவார்கள்.
    • ரெயில்வே ஊழியர்கள் நகரும் படிக்கட்டுகளின் இயக்கத்தை அவ்வப்போது நிறுத்தாமல் இருக்க வேண்டும்.

    தென் மாவட்ட ரெயில்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய ரெயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரெயில் முனையம் திகழ்கிறது. இங்கு 11 நடைமேடைகள் உள்ளன. இதில் 1 முதல் 3 நடைமேடைகள் எழும்பூர் ரெயில் நிலையத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்துள்ளன. 4-வது நடைமேடையே எழும்பூர் ரெயில் நிலையத்தின் பிரதான நடைமேடையாக உள்ளது.

    எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடைகளில் இருந்து ரெயில் நிலையத்தின் முன்பகுதி மற்றும் பின் பகுதி செல்வதற்கு என 2 பிரதான நடைமேம்பாலங்கள் உள்ளன. இந்த 2 நடைமேம்பாலங்களையும் சென்றடையும் வகையில் ஒவ்வொரு நடைமேடையில் இருந்தும் படிக்கட்டுகள் உள்ளன. நடைமேடைகளில் உள்ள இந்த படிக்கட்டுகளின் ஒரு பகுதி, நகரும் படிக்கட்டுகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில், பெரும்பாலான பயணிகள் நடைமேடை 4-ல் உள்ள நகரும் படிக்கட்டின் வழியாக நடைமேம்பாலத்தில் ஏறியே 5 முதல் 11 வரையிலான நடைமேடைகளுக்கு செல்வது வழக்கம். நடைமேடை 4-ன் அருகில் லிப்ட் வசதி இருந்தாலும் அதில் குறைந்த அளவிலான பயணிகளே ஏறிச் செல்லமுடியும். நகரும் படிக்கட்டு அளவிற்கு லிப்ட்டில் பயணிகள் ஏறி செல்ல முடியாது. அதே நேரத்தில் ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், வெளியில் இருந்து நேரடியாக பயணிகள் நடைமேம்பாலத்தில் ஏறும் வகையிலும், இறங்கும் வகையிலும் 2 நகரும் படிக்கட்டுகள் உள்ளன.

    இந்த நகரும் படிக்கட்டுகளை பயணிகள் நேரடியாக பயன்படுத்த முடியாத வகையில் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்ட உள்ளதால் பயணிகள் சற்று சுற்றி வந்தே அதனை பயன்படுத்தும் நிலை உள்ளது. இருப்பினும் அதிக அளவிலான மக்கள் இந்த நகரும் படிக்கட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பிரதான நகரும் படிக்கட்டுகள் பெரும்பாலான நேரங்களில் நகராமல் நிற்கும் நிலையே காணப்படுகிறது.

    இதனால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தாங்கள் பயணிக்க இருக்கும் ரெயில்களின் புறப்பாடு நேரத்தின் மிக குறுகிய கால அளவில் வேக வேகமாக வரும் பயணிகள் நகரும் படிக்கட்டுகள் வழியாக விரைந்து சென்று தங்கள் ரெயில்களை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் அங்கு வரும் போது, நகரும் படிக்கட்டுகள் நகராமல் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதன்பிறகு, வேறு வழியின்றி தாங்கள் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளுடன் நகராமல் நிற்கும் அந்த நகரும் படிக்கட்டுகள் வழியாக மூச்சிறைக்க ஏறி தங்கள் நடைமேடைகளுக்கு ஓடுகின்றனர். இதனால், சில நேரங்களில் ரெயில்களை தவற விடும் நிகழ்வுகளும் நடக்கிறது.

    இதுகுறித்து தாம்பரத்தை சேர்ந்த சுனிதா என்ற பெண் பயணி கூறியதாவது:-

    சாதாரண படிக்கட்டில் ஏற முடியாதவர்கள் தான் பெரும்பாலும் இந்த நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்துவார்கள். மக்களின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் இத்தகைய நகரும் படிக்கட்டுகளை அமைத்து கொடுத்த பிறகும், அதனை இயக்கும் ஊழியர்களின் மெத்தனத்தால், நகராமல் நிற்கும் இந்த படிக்கட்டுகள் வழியாக நடந்தே ஏற வேண்டி உள்ளது. இது என் போன்றவர்களுக்கே கால்கள் கடுக்கிறது. மூச்சு இறைக்கிறது. அப்படியானால், இன்னும் வயதானவர்கள் என்ன பாடுபடுவார்கள்.

    இது தவிர, வெளியூர் செல்லும் பயணிகள் தங்களுடன் மூட்டை முடிச்சுகளையும் அதிக அளவில் கொண்டு வருவார்கள். அவர்கள் தங்களின் உடைமைகளுடன் இந்த படிக்கட்டுகளில் ஏறுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. எனவே, ரெயில்வே ஊழியர்கள் நகரும் படிக்கட்டுகளின் இயக்கத்தை அவ்வப்போது நிறுத்தாமல் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போன்று, 5 முதல் 9-வது வரையிலான நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் பல நேரங்களில் நகராமல்தான் நிற்கின்றன. இது சில சமயங்களில், பயணிகள் தங்கள் ரெயில்கள் வழக்கமாக நிற்கும் நடைமேடையில் வந்து ரெயில்களுக்காக காத்து இருப்பார்கள். ஆனால், அன்று பார்த்து ஏதோ தொழில்நுட்ப காரணங்களால் அந்த ரெயிலானது புறப்பாடு நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் ரெயில் நிலையத்திற்குள் கொண்டு வரப்பட்டு வழக்கமான நடைமேடையில் இல்லாமல் 2, 3, நடைமேடைகள் தாண்டி நிறுத்தப்படும்.

    அதுபோன்ற சமயங்களில் வழக்கமான நடைமேடையில் காத்திருக்கும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நகரும் படிக்கட்டுகளானது நகராமல் இருப்பது கடும் அவஸ்தையை அளிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

    இது ஒருபுறம் இருக்க 10-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டும், ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கெட்டும் நீண்ட நாட்களாக இயங்காமல் பராமரிப்பு இன்றி கிடப்பதாலும் பயணிகள் கடும் அவதியை அடைகின்றனர். எனவே, இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகமானது இதில் தனிக்கவனம் செலுத்தி நகரும் படிக்கட்டுகளை முழுமையாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான ரெயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
    • கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர்தில் குன்னூரில் 10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நீலகிரி கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    • வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) அல்லது அதற்கு அடுத்த நாள் (வியாழக்கிழமை) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மறுதினம் முதல் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய வானிலை நிலவரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அரசியல் கட்சிகள் ஒரே தேர்தலின் போதும் தங்களது கருத்துகளை செயல்படுத்த முடியும்.

    மதுரை:

    மதுரையில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    ஒரு தேர்தலையும் சந்திக்காத நடிகர் விஜய், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக பேசியிருப்பது வியப்பாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு எவ்வளவு செலவாகிறது. இதை குறைப்பது தேசிய கடமை. இதற்காகவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஒரே தேர்தலின் போதும் தங்களது கருத்துகளை செயல்படுத்த முடியும்.


    தவெக ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு அளிப்பதாக விஜய் பேசியுள்ளார். இதை கட்சிகள் வரவேற்கலாம். மக்கள் மத்தியில் உடனடி வரவேற்பு கிடைக்காது. கூட்டணியில் இருந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்; அந்த மனநிலையில் திமுக இல்லை. பிற கட்சிகள் அந்த மனநிலையில் இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் பாஜக இதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

    குடும்ப அரசியல் ஒரு கேவலமான நிலையாகும். ஒரு குடும்பத்தை விட்டால் கதியில்லை என்ற நிலைக்கு காங்கிரஸ், திமுக தள்ளப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் குடும்ப அரசியல் செய்கின்றன. திமுகவின் குடும்ப அரசியல் குறித்து பேசும் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?. பாஜக ஒருபோதும் குடும்ப அரசியல் செய்யாது. குடும்ப அரசியலுக்கு வரும் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் நிலையம் ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
    • பஸ் நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் 3-ந் தேதி (நேற்று) பிற்பகல் முதல் 4-ந் தேதி (இன்று) பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 478 பஸ்களின் 3 ஆயிரத்து 529 பயண நடைகளுடன் கூடுதலாக 250 பஸ்களின் மூலம் ஆயிரத்து 113 பயண நடைகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேலும், தாம்பரம் ரெயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், மேற்குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பஸ் நிலையங்கலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் மக்கள் அதிக அளவில் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பஸ் நிலையங்கலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மாலையில் இருந்தே பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் மேலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் எனத்தெரிகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, பிராட்வே, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மாநகர பஸ்களுக்காக, பயணிகள் அதிக அளவில் காத்திருப்பதை காண முடிந்தது.

    நாளை காலை பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் கூடுதல் பஸ்களை இயக்க தமிழக அரசுபோக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
    • நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி.

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    இந்நிலையில், சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக அணை அருகே உள்ள அகமலை, கண்ணக்கரை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, அணை நீர் செந்திறமாக மாறியுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்தாலும் அணை நீர் செந்நிறமாகவே இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொது மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்துள்ளார்.
    • டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.

    சென்னை திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    எண்ணூர் விரைவு சாலை உள்பட அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் 4 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர்.

    மணலி எம்எஃப்எல் அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்துள்ளார்.

    இதேபோல், இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.

    ×