என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
    • பெயர் மாற்றத்திற்காக போராடிய பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்றுறு, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி' என்ற பெயரை அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்தார்.

    மேலும், பெயர் மாற்றத்திற்காக போராடிய ஊர்ப் பெரியவர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்த அமைச்சர், இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

    இதனிடையே பெயர் மாற்றத்திற்காக போராடிய பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

    இந்த நிலையில், 'அரிசன் காலனி' என்ற பெயரை அழித்து மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றம் செய்த அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். 

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்கன கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இரண்டு நாட்களில் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கள் என வானிலை மையம் தகவல்.

    வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை- தமிழக கடலோர பகுதிகளை இரண்டு நாட்களில் நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் மழை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    • ‘காவல் உதவி’ செயலி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு தடுப்புப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெண்களுக்கான உரிமைகளை காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது.

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 1973-ம் ஆண்டு பெண்களை முதன் முதலாகக் காவல்துறையில் இணைத்தார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக காவல்நிலையங்களைத் திறந்து வருகிறார்.

    மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு தடுப்புப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அப்பிரிவில் ஒரு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது.

    அதேபோல 'புராஜக்ட் பள்ளிக்கூடம்' திட்டம், 'இமைகள் திட்டம்' ஆகியவற்றின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விரைவான நீதி கிடைக்க அரசு செயலாற்றி வருகிறது.

    மேலும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்கள் தங்களது புகார்களை விரைவாகப் பதிவு செய்ய 'காவல் உதவி' செயலி முதலமைச்சரால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022 -ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது.

    பெண்களின் சமூக வாழ்வை உயர்த்துவதற்கான 'விடியல் பயணம்', 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' போன்ற நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுப்பதை அரசின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயலாற்றுகிறது திராவிட மாடல் அரசு.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது.

    அதனால்தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
    • மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

    மரக்காணம்:

    தமிழக பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை பெய்தது. இந்தப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உண்டானது. இது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறுகின்றனர். இதுபோல் ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் மறு உத்தரவு வரும் வரையில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தற்பொழுது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலில் மாறுபட்ட நீரோட்டம் ஏற்பட்டு கடல் அலைகளின் சீற்றமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கடல் அலைகளின் சீற்றம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் வீடுகளுக்கும் சென்றனர்.
    • வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    சென்னை:

    சென்னையில் 3 இடங்களில் சி.பி.ஐ. சோதனை இன்று நடந்தது. தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், மத்திய அரசு முன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

    ராயப்பேட்டையில் தனியார் நிறுவன மேலாளர் சேகர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற துறைமுக இணை இயக்குனர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடந்தது. அயப்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடந்தது.

    போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் வீடுகளுக்கும் சென்றனர். வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. எந்த வழக்கு தொடர்பாக இவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சோதனை நடத்தினார்களா? என்பது போன்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    • பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
    • சென்னையில் நாளை முதல் மழை அதிகரிக்கும் எனவும் டிசம்பர் 1-ந்தேதி வரை மழை நீடிக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன் படி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் பனி படந்து காணப்பட்டு வந்தது. இதையடுத்து நேரம் செல்ல செல்ல பனி விலகி மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவி வந்தது. இதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பிராட்வே, எழும்பூர், சேப்பாக்கம், சாந்தோம், அடையாறு, திருவான்மியூர், பட்டினப்பாக்கம் பகுதிகளில் மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம் போன்ற பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழை மதியம் 1 மணிவரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதே போல் ராமேஸ்வரம், தஞ்சை, மதுரை, செங்கல்பட்டு, திருச்சி, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதனிடையே, சென்னையில் நாளை முதல் மழை அதிகரிக்கும் எனவும் டிசம்பர் 1-ந்தேதி வரை மழை நீடிக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

    • 13 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளன.
    • பொது மக்கள் TN Alert செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று (செவ்வாய்க் கிழமை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை (27-ந்தேதி) கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சில இடங்களிலும் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழைப்பொழிவு ஏற்படக்கூடும்.

    மேலும், கனமழையினை எதிர்கொள்ளும் வகையில் பின்வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன

    22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளு மாறு மாவட்ட கலெக்டர்க ளுக்கு அறிவுரை வழங்கப் பட்டு உள்ளது.

    மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன் வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்களுக்கும் 23-ந்தேதி அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகளில், 1192 படகுகள் கரை திரும்பியுள்ளன.

    மேலும், ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஜானி டாம் வர்கீஸ், (94999 56205, 88006 56753)

    மயிலாடுதுறை மாவட் டத்திற்கு கவிதா ராமு, (90032 97303)

    திருவாரூர் மாவட்டத் திற்கு காயத்ரி கிருஷ்ணன், (73388 50002)

    கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.எ. ராமன் (94458 83226) ஆகிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கவனிக்கின்றனர்.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களி லும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

    இதுதவிர, தேவைக்கேற்பட சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன.

    மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம், கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பின்வரும் எண்களில் தங்களது புகார் களை பதிவு செய்யலாம்.

    மாநில அவசர கால செயல்பாட்டு மையம் கட்ட ணம் இல்லா தொலைபேசி எண்-1070, வாட்ஸ்அப் எண்-94458 69848

    நாகப்பட்டினம்-கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233

    பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்க ளது புகார்களை தெரிவிக்கலாம்.

    மேலும், கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், வெள்ளபாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், விவசாய பெருமக்கள், பயணம் மேற்கொள்ள திட்ட மிட்டிருப்போர் கனமழை எச்சரிக்கைக்கு ஏற்றவாறு தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்து மாறும் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லசுடன் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நெருக்கமாகியுள்ளனர்.
    • சாய் ஜெ.சரவணன்குமார் கவனித்து வந்த குடிமை பொருள் வழங்கல்துறை திருமுருகனுக்கு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு நடக்கிறது.

    அமைச்சரவையில் பா.ஜ.க. சார்பில் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வாரிய தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். டெல்லி சென்றும் புகார் தெரிவித்தனர்.

    தற்போது லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லசுடன் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நெருக்கமாகியுள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமாரும் அதிருப்தியில் உள்ளார். தனக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என்றும், அமைச்சரவை பட்டியலில் கடைசி இடம் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

    என்.ஆர்.காங்கிரஸ் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டதை தொடர்ந்து காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின் அமைச்சர்களின் துறைகளை முதலமைச்சர் ரங்கசாமி மாற்றம் செய்தார்.

    அதில் சாய் ஜெ.சரவணன்குமார் கவனித்து வந்த குடிமை பொருள் வழங்கல்துறை திருமுருகனுக்கு வழங்கப்பட்டது. சாய் ஜெ.சரவணன்குமார் வசம் இருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நகர அடிப்படை சேவை துறைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு மாற்றப்பட்டது. தற்போது அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமாரிடம் ஆதிதிராவிடர் நலத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் ஆகிய 3 துறைகள் மட்டுமே உள்ளது.

    இதனால் சாய் ஜெ.சரவணக்குமார் அதிருப்தியில் உள்ளார்.

    தனக்கு கூடுதல் துறைகளை பெற பல்வேறு வகையிலும் முயற்சித்து வருகிறார். தனது துறை மாற்றம் குறித்து கவர்னர், முதலமைச்சரிடம் கேட்டுள்ளார். அமைச்சரவையில் தன்னை கடைசி இடத்துக்கு தள்ளி விட்டதாகவும் முறையிட்டார். தனது ஆதங்கத்தை கட்சி மேலிடத்திடம் தெரிவிக்க அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் டெல்லி சென்றுள்ளார்.

    அங்கு மேலிட தலைவர்களை சந்தித்து பேச தொடர்ந்து அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

    • தமிழில் உபயோகப்படுத்துற வார்த்தை தானே அது.
    • எங்கள் முதல்வர் கண்ணியத்திற்கு பாதுகாவலராக இருப்பவர்.

    அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறித்தும், தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.

    இதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எல்லாரும் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு...

    எல்லாருமேன்னா நாடு முழுக்க சொல்லிச்சா.. எப்படி.. எதுக்கு மன்னிப்பு கேட்கணும்.. என்ன சொன்னாரு அவரு... தேவை இல்லாத ஏதாவது ஒரு அறிக்கை தினந்தோறும் விடுறாருன்னு சொல்றாரு. அதுல என்ன தப்பு இருக்கு. தமிழில் உபயோகப்படுத்துற வார்த்தை தானே அது. பயன்படுத்தக் கூடாத வார்த்தை கிடையாதே. அது எப்படி தவறுன்னு சொல்ல முடியும். கடந்த காலங்களில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் எடுத்து பாருங்கள். கொச்சையாக ... யாரையும் தரம் தாழ்ந்து பேசுகிற சூழலில் இருப்பவர். எங்கள் முதல்வர் கண்ணியத்திற்கு பாதுகாவலராக இருப்பவர். கண்ணியத்திற்கு குறைவாக எதையும் பேசவில்லை. ஆகவே அப்படி பேசுகிற சூழலும் எங்கள் முதல்வருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால் நிச்சயம் முதல்வர் அதற்கு உண்டான பிராயச்சித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் எள்ளளவும் தவறு இல்லை என்றார். 

    • கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது.
    • நெய் காணிக்கையையும் செலுத்தலாம்.

    வேக்கிங்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் டிசம்பர் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    டிசம்பர் 13-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    மகா தீபம் ஏற்றுவதற்கு 3 ஆயிரத்து 500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

    அதன் தொடர்ச்சியாக மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள யானை வளாகம் முன்பு சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு உள்ளது.

    இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர். பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

    இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ ரூ.150, கால் கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம்.

    அதேபோல் வெளியூர் பக்தர்கள் ஆன்லைனில் நெய் காணிக்கை செலுத்தலாம். பக்தர்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நெய் காணிக்கை என்ற இணையத்தில் சென்று செலுத்தலாம்.

    காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு தீபத் திருவிழாவை தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் முடிந்து 'மை' பிரசாதம் வழங்கப்படும்.

    கவுண்டரில் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைனில் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு தபால் மூலமும் பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு காத்திருந்த பயணிகளை கஞ்சா போதையில் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சிலர் ரெயில் நிலைய நடைமேடையில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை பிடுங்கி கையில் சுத்திக்கொண்டே செல்கின்றனர். அப்போது ரெயிலுக்கு காத்திருக்கும் சில பயணிகளையும் கல்லூரி மாணவர்கள் போதையில் தாக்குகிறார்கள்.

    ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளை வயது வித்தியாசம் பாராமல், கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் பார்ப்போரை அச்சமடையச் செய்துள்ளது.

    கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய போதை இளைஞர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுபாஷ் (20), இப்ராஹிம் (23) மற்றும் 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நாகையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
    • தஞ்சையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையிலிருந்து தென்கிழக்கு திசையில் 630 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 830 கி.மீ. தொலைவிலும் புதுவையில் இருந்து 750 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

    இதன்காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நாகையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்வதோடு கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பருவமழை பாதிப்புகள் குறித்து 93450 88997 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் மழை கால இடர்பாடு குறித்து 1077, 04366-226 623, வாட்ஸ்அப் எண்- 94885 47941 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தை 04365-1077, 1800-233-4233, வாட்ஸ்அப் எண்-84386 69800 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×