என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், மோசமான வானிலையால் சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
- உப்பாற்று ஓடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சகதியாக காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி:
தென் மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டபிடாரத்தில் 20 மில்லி மீட்டரும், சூரன்குடியில் 18 மில்லி மீட்டரும், வைப்பாரில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் தூத்துக்குடி, கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், காடல்குடி, மணியாச்சி, வேடநத்தம், கீழ வைப்பார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தொடர்மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உப்பாற்று ஓடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சகதியாக காட்சியளிக்கிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கொடுமுடியாறு பகுதிகளில் 5 மில்லி மீட்டர் மழை பதிவானது. 55.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் இன்று 40 அடியாக உள்ளது. இதேபோல் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 88.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 88.35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியாகவும் உயர்ந்துள்ளது.
நெல்லை, பாளை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்தது.
கனமழை, புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மீனவர்கள் 29-ந் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3 வது நாளாக விசைபடகு, நாட்டு படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதேபோல நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூந்தங்குடி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட மீனவ பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
- மழை காரணமாக கான்கிரீட் கட்டுமானம் தொடர்ந்து ஈரப்பதத்தோடு இருந்தது.
- கான்கிரீட் தளம் திடீரென சரிந்து விழுந்தது.
மதுரை:
மதுரை மாநகரின் கோரிப்பாளையம் பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.190 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
இந்த மேம்பாலம் தமுக்கம் மைதானம் முன்பு இருந்து தொடங்கி கோரிப்பாளையம் வழியாக ஏ.வி. மேம்பாலத்துக்கு இணையாக மீனாட்சி கல்லூரி வழியாக சிம்மக்கல் வரை 2 கி.மீ. தொலைவுக்கு செல்கிறது. இந்த பாலத்தில் செல்லூரை நோக்கி செல்லும் பாலம் ஸ்டேஷன் சாலையில் மட்டும் ஒரு இணைப்பு பாலம் கட்டப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்த நிலையில் பாலம் கட்டுமான வேலைகள் பாதித்தன. இருப்பினும் தொழிலாளர் பாலத்திற்கான கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மழை காரணமாக கான்கிரீட் கட்டுமானம் தொடர்ந்து ஈரப்பதத்தோடு இருந்தது. இந்த நிலையில் அந்த கான்கிரீட் தளம் திடீரென சரிந்து விழுந்தது.
கான்கீரிட் கட்டுமானத் தோடு இரும்பு சாரங்களும் சாய்ந்து கீழே விழுந்தது. இதில் தொழிலாளர்கள் திருச்சி துறையூரை சேர்ந்த பழனி, அய்யங்காளை, காளி, ஜெய்சன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிய அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேம்பால கட்டுமானத்தின்போது கான்கிரீட் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் பறக்கும் பாலம் கட்டுமான பணியின்போது நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
- அணைக்கு நேற்று வினாடிக்கு 4,427 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 5110 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
- தற்போது அணையில் 78.50 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இதே போல் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,427 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 5110 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 110.07 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 78.50 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் 110 அடிக்கு தண்ணீர் உயர்ந்து காணப்படுவதால் அணை கடல் போல் காட்சியளிக்கிறது.
- வீண் செலவுகளை மட்டுமே தி.மு.க. அரசு செய்து வருகிறது.
- ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் பருவ மழைக் காலத்தில், டெல்டா பகுதியில், சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகியிருக்கிறது.
பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், தி.மு.க. அரசு அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவு, இந்த ஆண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, டெல்டா பகுதியில் நடைபெறும் விவசாயம்தான்.
ஆனால் அதனைக் குறித்துச் சிறிதும் கவலை இல்லாமல், சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே தி.மு.க. அரசு செய்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டை, தாங்கள் கொடுப்பது போல விளம்பரம் செய்வதோடு தங்கள் பணி முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவது குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை.
உடனடியாக, வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள பாசனக் கால்வாய்களை, முழுமையாகத் தூர்வாரும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக இன்றும் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.
இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ரூ.58 ஆயிரத்து 400-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த செவ்வாய்கிழமை ரூ.800-ம் நேற்று முன்தினம் ரூ.960-ம் என சவரனுக்கு ரூ.1,760 குறைந்தது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,840-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,090-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,840
26-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640
25-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
23-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-11-2024- ஒரு கிராம் ரூ. 98
26-11-2024- ஒரு கிராம் ரூ. 98
25-11-2024- ஒரு கிராம் ரூ. 101
24-11-2024- ஒரு கிராம் ரூ. 101
23-11-2024- ஒரு கிராம் ரூ. 101
22-11-2024- ஒரு கிராம் ரூ. 101
- தற்போது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
- மேலும் 12 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே திசையில் 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று ஓரளவிற்கு 66- 75 கி.மீ. வேக காற்றுடன் சுறாவளி புயலாக மாறி நாளை காலைக்குள் வலுப்பெற்ற வாய்ப்புள்ளது.
நேற்று மாலையே ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுப்பெறுவதில் மேலும் 12 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்.
- நாங்கள் ஒரே ஒரு முறை தான் சந்தித்தோம்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று மாவீரர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
நானும் ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் சந்தித்து பேசியது எங்க இரண்டு பேருக்கு தான் தெரியும். இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். புத்தக வெளியிடணுமா... பாட்டு வெளியிடணுமா... எல்லாத்துக்கும் அவரை கூப்பிட்டு கூடவெச்சிக்கணும். ஆனால் நாங்கள் ஒரே ஒரு முறை தான் சந்தித்தோம். அதற்குள் அய்யோ... அய்யோ.. என கூச்சல்.
ஏன் தெரியுமா? அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார்... நாம அரசியல் சூப்பர் ஸ்டார்... இரண்டு ஸ்டாரும் சந்தித்ததில் பயம் வந்துடுச்சு என்றார்.
முன்னதாக கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை சீமான் சந்தித்து பேசியது தொடர்பாக பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை வெளிவந்த நிலையில், அதற்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு மற்றும் டிஎச் சாலை எஸ்எஸ் பகுதி.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆர்.ஏ.புரம்: எம்.ஆர்.சி நகர் பகுதி, பட்டினம்பாக்கம், ஃபோர்ஷோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பி.ஆர்ஓ. குவார்ட்டர்ஸ், ஆர்.கே.மடம், ஆர்.கே.நகர், ராணி மெய்யம்மை கோபுரம், சத்தியதேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ். எச்.டி சர்வீஸ், ராஜா தெரு ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கே.வி. கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, T.P ஸ்கீம் சாலை, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜர் சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் ஹை ரோடு, சத்திய நகர், அறிஞர் அண்ணா நகர், அன்னை தெரிசா நகர், பெருமாள் கோவில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை,
ஆர்.கே.நகர்: விஓசி நகர், ஆர்.கே.நகர், திலகர் நகர் எல்லையா முதலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, டி.எச்.ரோடு பகுதி, டோல்கேட் பகுதி, ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை கன்னிகோவில், கல்மண்டபம் ஏரியா, கும்மாளம்மன் கோவில் தெரு, ஜிஏ சாலை, தாண்டவல்லிய கிராமிய கிராமம் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோவில் தெரு பகுதி, கப்பல்போலு தெரு, பாலு முதலி தெரு, ஜே.வி. கோவில் தெரு, ராமானுஜ அப்பர் தெரு, பால அருணாசல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I, II தெரு பகுதி, நமச்சிவாய செட்டி தெரு பகுதி, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு மற்றும் டிஎச் சாலை எஸ்எஸ் பகுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலில் மிதவை வழிகாட்டும் கருவிகளை துறைமுகம் சார்பில் மிதக்கவிடப்பட்டுள்ளன.
- கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியது.
சென்னை:
சென்னை துறைமுகத்திற்கு கப்பல்கள் பாதுகாப்பாக உள்ளே வரவும், வெளியே செல்லவும் கடலில் மிதவை வழிகாட்டும் கருவிகளை துறைமுகம் சார்பில் மிதக்கவிடப்பட்டுள்ளன. இதில் இருந்து ஒளிரும் வெளிச்சத்தை பார்த்து கப்பல் கேப்டன்கள் பாதுகாப்பாக கப்பல்களை துறைமுகத்திற்கு உள்ளே கொண்டு வருவார்கள்.
இவ்வாறு சென்னை துறைமுகம் அருகில் மிதக்கவிடப்பட்டிருந்த கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை ஒன்று மெரினா கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கியது. இதனை பார்வையிட பொதுமக்கள் அதிகம் கூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மெரினா கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, இதுகுறித்து துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதேபோல், நேற்று பகல் 12.45 மணி அளவில் புதுவண்ணாரப்பேட்டை அருகில் உள்ள கடல் முத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள கடற்கரையில் 'போயா' என்னும் மிதவை கருவி கரை ஒதுங்கி உள்ளது.
கடல் சீற்றத்தால் இந்த கருவி தற்போது கரை ஒதுங்கி உள்ளது. இது தொடர்பாக துறைமுகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
- அடுத்த வாரம் கேபினட் விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக அவர் மட்டுமே பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்பது தொடர்பாக என்ற பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சிக்கும் ஹேமந்த் சோரன் கட்சிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதனால், அடுத்த வாரம் கேபினட் விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.
- முகப்பில் அரசின் முன்னோடி திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
- முதலாவதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளது.
சென்னை:
தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.tn.gov. in/ பொதுமக்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது. அதில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துறைரீதியான அதிகாரிகள் யார், யார் என விவரங்கள் இருக்கும்.
இதுதவிர அரசின் செய்திகள், அரசாணைகள் போன்றவற்றையும் பொதுமக்கள் அதில் பார்த்து கொள்ளலாம். அதேபோல் ஒவ்வொரு துறையின் அலுவலகங்கள் மற்றும் தொடர்பு எண்களும் அதில் இடம்பெற்று இருக்கும்.
இந்த நிலையில், இந்த இணையதளத்தை தமிழக அரசு முழுவதுமாக புத்தம் புது வடிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைத்துள்ளது.
இந்த இணையதளத்தின் முகப்பு பக்க மெனுவில் அரசாங்கம், துறைகள், மாவட்டங்கள், ஆவணங்கள், சேவைகள், திட்டங்கள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள், அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுதல் ஆகிய விவரங்கள் உள்ளன.
முகப்பில் அரசின் முன்னோடி திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் முதலாவதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளது. அதன்பின் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணத்திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நாம் அதில் எந்த திட்டத்தை தேர்வு செய்தாலும், அந்த திட்டம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதன்கீழ் பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பான விவரங்கள், தொடர்பு விவரங்கள், முதலமைச்சரின் எக்ஸ் வலையதள பதிவு விவரங்கள், சட்டங்கள், விண்ணப்பங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
முன்பு இருந்த வடிவமைப்பைவிட, இப்போது அதில் பல்வேறு கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அரசின் திட்டங்களை அந்ததந்த துறையின் இணையதளத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும்.
ஆனால் முக்கிய திட்டங்களையும் அதில் நேரடியாக காணலாம். மிகவும் வண்ணமயமாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் பல்வேறு தகவல்களுடன் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இது மிகுந்த பயன் அளிக்கும்.






