என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிலை வைக்க காட்டும் அக்கறையை கால்வாய் தூர்வார காட்டவில்லை- அண்ணாமலை
- வீண் செலவுகளை மட்டுமே தி.மு.க. அரசு செய்து வருகிறது.
- ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் பருவ மழைக் காலத்தில், டெல்டா பகுதியில், சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகியிருக்கிறது.
பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், தி.மு.க. அரசு அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவு, இந்த ஆண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, டெல்டா பகுதியில் நடைபெறும் விவசாயம்தான்.
ஆனால் அதனைக் குறித்துச் சிறிதும் கவலை இல்லாமல், சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே தி.மு.க. அரசு செய்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டை, தாங்கள் கொடுப்பது போல விளம்பரம் செய்வதோடு தங்கள் பணி முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவது குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை.
உடனடியாக, வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள பாசனக் கால்வாய்களை, முழுமையாகத் தூர்வாரும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.