என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தொழில் அதிபரை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.
இதில் பயணிப்பதற்காக பயணிகளும் விமான நிலையத்திற்கு வந்தனர். பயணிகள் அனைவரையும் மற்றும் அவர்களது உடைமைகளையும் விமான நிலைய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதன்பின்னர் பயணிகள் விமானத்தில் ஏறினர். அப்போது இந்த விமானத்தில் பயணிப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு ஒருவர் வந்தார். அவர் கையில் கைப்பை வைத்திருந்தார்.
விமான நிலைய பாதுகாப்பு படை போலீசார் அவரை சோதித்து, விட்டு அவர் கையில் வைத்திருந்த கைப்பையும் சோதனை செய்தனர்.
அதில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அந்த துப்பாக்கியில் 2 குண்டுகள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான பாதுகாப்பு படை போலீசார், உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்களும் விரைந்து வந்து, அந்த நபரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அவரிடம் துப்பாக்கியை எதற்காக எடுத்து வந்தீர்கள். எந்த ஊர், எதற்காக கோவைக்கு வந்தீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் என்பது தெரிய வந்தது. இவர் சொந்தமாக கேரவன் வாகனம் வைத்துள்ளார்.
அந்த வாகனத்தை சர்வீஸ் விடுவதற்காக கோவைக்கு வந்துள்ளார். வாகனத்தை சர்வீஸ் விட்டு விட்டு, மீண்டும் சென்னை செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது, தான் எப்போதும் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கைத்துப்பாக்கியையும் தவறுதலாக எடுத்து வந்தது தெரியவந்தது. துப்பாக்கிக்கான லைசென்சும் அவரிடம் இருந்தது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை போலீசார், தொழில் அதிபரை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜேம்ஸ், அவரது நண்பர் சுரேந்தர்நாத் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- காவலர் ஜேம்சும், அவரது நண்பரும் மெத்தபெட்டமையின் விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெத்தபெட்டமையின் போதை பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜேம்ஸ், அவரது நண்பர் சுரேந்தர்நாத் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவலர் ஜேம்சும், அவரது நண்பரும் மெத்தபெட்டமையின் விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவலரும், நண்பரும் வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இருவரிடமும் 10 கிராம் மெத்தபட்டமையின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
- சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், "இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?" என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.
தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வணிக கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமல்.
- வணிகர்களுக்கு மேலும் பெரிய சுமை ஏற்படும்.
சேலம்:
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று வணிகர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் இந்த வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வில்லை.
மேலும் மாநில அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின் கட்டண உயர்வால் கடும் அவதிப்படுவதாகவும், அதனை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் அறிவித்து இருந்தனர்.

அதன் படி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாத்திர கடைகள், இரும்பு கடைகள், பெயிண்ட் கடைகள், மளிகை கடைகள், மரக்கடைகள், அரிசி கடைகள் உள்பட பல்வேறு கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன.
சேலம் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள ஜவ்வரிசி ஆலைகள், அரிசி ஆலைகள், பருப்பு மில்கள் மூடப்பட்டிருந்தன. சேலம் லீ பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் சேலம் கடை வீதி, லீ பஜார் மற்றும் செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல பகுதிகளிலும் உள்ள நகை கடைகள், ஜவுளி கடைகள், இரும்பு கடைகள், சிமெண்ட் கடைகள், பெயிண்ட் கடைகள், மரக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு கடைகள், அரிசி, பருப்பு, ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டன. வணிகர்களின் இந்த போராட்டத்தால் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு மேலும் பெரிய சுமை ஏற்படும். இதனால் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு உடனே திரும்பி பெற வேண்டும், மேலும் மாநகராட்சி பல மடங்கு உயர்த்தியுள்ள சொத்து வரி, குப்பை வரி மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

போடி
போடி வர்த்தக சங்கம் சார்பாக முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வணிக வளாக பயன்பாட்டு கட்டிடத்திற்கான வாடகையில் 18 சதவீதம் உயர்த்தி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும், வணிகர்களை நேரடியாகவும் பொதுமக்களை மறைமுகமாகவும் பாதிக்கும் இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வு உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
போடி வர்த்தக சங்கத்தில் சார்புடைய தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள், உணவு விடுதிகள், ஜவுளிக் கடைகள், பலசரக்கு கடைகள், தேநீர் விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.

விருதுநகர்
தமிழகத்தின் வணிக நகரமான விருதுநகரில் இன்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து வணிக பயன்பாட்டிற்குள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் வாடகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.
விருதுநகரில் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை, மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம், விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம் உள்ளிட்ட 32 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.
நகரின் மெயின் பஜார், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், மதுரை ரோடு, தெப்பம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பஜார் பகுதி கடைகள், முனி சிபல் ஆபீஸ் ரோடு, நகைக் கடை பஜார் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலைய பகுதி, பென்னிங்டன் காய்கறி மார்க்கெட், சின்னக்கடை வீதி, நேதாஜி ரோடு, நகைக்கடைகள் அதிகம் நிறைந்துள்ள சின்னக்கடை பஜார், 4 ரதவீதிகள், ராமகிருஷ்ணாபு ரம், தேர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1,200-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராள மான கிராமங்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் மூடப் பட்டதால் சிறிய கடை வியா பாரிகள் மற்றும் பொதுமக் கள் பெரிதும் அவதிப்பட்ட னர்.
சிவகாசியில் இன்று வர்த்தக சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள 4 ரதவீதிகளில் பெரிய நகைக்கடைகள், ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து கடை களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பெரிதும் சிரமப்பட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க மாநில அரசை வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டார வர்த்தகர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், பேரையூர் ரோடு, மதுரை ரோடு, தேனி ரோடு, வத்தலக்குண்டு ரோடு ஆகிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தினரும் கடை களை அடைத்து போராட்டம் நடத்தினர்.
சோழவந்தானில் உள்ள 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
மதுரை மாவட்டம் திரு மங்கலம் நகர் பகுதியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரி சங்க கடைய டைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.
நகரில் முக்கிய வியாபார தளங்களான சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, திருமங்கலம் பேருந்து நிலையம் வணிக வளாகம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலும் சிறு கடைகள், வணிக நிறுவனங்கள், உணவுகள் என அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் அடைக்கப்பட்டு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
- இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
- ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் குப்பன் வலசை பகுதியை சேர்ந்த பாலு (வயது 58) என்பவர் போலியான பாஸ்போர்ட் வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோன்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் குத்புதீன் (49) என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புயலாகவே நாளை கரையை கடக்கும்.
- புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே புதுச்சேரிக்கு அருகே நாளை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். புயலாகவே நாளை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலாக உருவாக வாய்ப்பில்லை என நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தற்போது புயல் உருவாக உள்ளது.
- இந்து சமய முறைப்படி திருமணம் நடை பெற்றது.
- மணப்பெண்ணின் தாய் வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்தினார்.
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ரசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதிவதணன் (வயது31). டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கப்பூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் வேலை செய்யும் மியான்மர் நாட்டை சேர்ந்த ஏய் ஏய் மோ(33) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மதிவதணனுக்கு பெண் பார்ப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்ட மதிவதணன், தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி மதிவதணன் தனது காதலியுடன் அரியலூருக்கு வருகை தந்தார். பின்னர் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து சமய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
அப்போது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏய்ஏய்மோ கழுத்தில் மதிவதணன் தாலி கட்டினார். மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு விமான டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மணப்பெண்ணின் தாய் வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்தினார்.
- ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இன்று மதியம் மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ஹெல்மெட், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்டு வீடியோ வெளியிடும் நபர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் நம்பர் பிளேட் பொருத்தாமல் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் மிக அதிகமான ஒலி எழுப்பும் சைலன்ஸருடன் மோட்டார் சைக்கிளை இயக்கியதுடன் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஓட்டியது தெரியவந்தது.
இருசக்கர வாகனத்தின் நிறத்தை மாற்றியும் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன் மோட்டார் வாகன சட்ட பிரிவின்படி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதேபோல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், சப்-இன்ஸ்பெக்டர் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் ஆகியோர் நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் ஓட்டி வந்தது தெரியவந்தது.
காரை பறிமுதல் செய்ததுடன் அந்த நபருக்கு அபராதம் விதித்தனர். இதேபோல் ஆட்டோ டிரைவர் ஒருவரும் குடிபோதையில் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட காரையும், ஆட்டோவையும் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் காரை ஓட்டி வந்தவர் மற்றும் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் லைசென்ஸை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன் (வயது32). இவர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 12 பேர் கடந்த ஆண்டு அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்பு குழு மாவட்ட பொருளாளரான மாதவத்துரை (39) மற்றும் கோவையை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமான் ஆகியோரை அனுகினர். அவர்கள் பழனி கோவிலில் வேலை வாங்கி தருவதாகவும், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் ரூ.34 லட்சம் பெற்றனர்.
ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
மாதவத்துரை தலைமறைவான நிலையில் கலில்ரகுமான் இதேபோன்று பல்வேறு நபரிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
- மழை, கன மழை, அதி கனமழை, புயல் ஆகியவற்றிற்கு ஏற்ப விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படலாம்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 3 நாட்களாக மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டப் பகுதிகளில் அதி கனமழையும் பெய்து வருகிறது. பெய்த கனமழையால் விளை நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
தஞ்சையில் 947 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், கடலூரில் 500 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், மயிலாடுதுறையில் 3300 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், நாகையில் 7600 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், ராமநாதபுரத்தில் 800 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம், திருவாரூரில் 958 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் போதிய வடிகால் வசதி இல்லாததும், முறையாக தூர் வாராததும் தான். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கனமழையால் நாகை மாவட்டப் பகுதிகளில் 9 ஆயிரம் உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் இன்று (29-ந்தேதி) முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மழை, கன மழை, அதி கனமழை, புயல் ஆகியவற்றிற்கு ஏற்ப விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படலாம்.
எனவே தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மழை வெள்ள புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கவும், சேதமடைந்துள்ள பயிர்களுக்கும், உப்பளங்களுக்கும் முழு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும்.
- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிமாவட்டம், வெளிமாநில, மாவட்ட மக்களும் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கும் தினசரி 3 முறையும் மலை ரெயில் இயக்க சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து வரும் டிசம்பர் மாதம் 25, 27, 29, 31 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு செல்லும்.
இதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 26, 28, 30 மற்றும் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு ரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். இதனிடையே மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் டிசம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும்.
குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 9.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வரும் டிசம்பர் 28-ந் தேதியில் இருந்து ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






