என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தை பா.ஜ.க தவறான முறையில் பயன்படுத்துகிறது.
இந்த தேசம் அதானி, அம்பானிக்காக இருக்கிறதா? பா.ஜ.க அரசு பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை.
நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஓட்டுப் பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. இனிவரும் காலங்களில் பா.ஜ.க. அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ் மொழி, திருக்குறள் பற்றி பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடஓலை முறையை நடைமுறைபடுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இசைவாணி 5 ஆண்டுகள் முன்பு ஐயப்பன் பாடல் ஒன்றை பாடி உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.
இசைவாணி தவறாக பாடி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் அவர் ஒரு மொழியையும், இனத்தையும் இழிவு படுத்தி பேசியிருந்தார். இசைவாணி பாடிய பாடல் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இல்லை. நானும் இந்து தான். நானும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். வேண்டுமென்றே பெரிதுபடுத்தி வருகிறது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
- பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது,.
சென்னை:
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பத்திரிகையாளர்களின் நலனைக் காப்பதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 'பத்திரிகையாளர் நலவாரியம்' உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் 3300 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர் நலவாரியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் பற்றி உறுதி எடுக்கிறார்கள்
- கூட்டத்தில் 5 செயல்கள் பற்றி பேசுகிறார்கள்.
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்புகளாக சேவாபாரதி, ஏ.பி.வி.பி, தர்மரக்ஷண சமிதி, விசுவ இந்துபரிசத் என 200 அமைப்புகள் உள்ளன.
இந்த அமைப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடுவது மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை கூட்டி வரும் நிகழ்ச்சி 'கூடுவோம், கூட்டுவோம்' என்ற தலைப்பில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் நிகழ்ச்சி நாளை மறுநாள் (1-ந்தேதி) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடக்கிறது.
தமிழ்நாட்டிலும் வார்டுகள் அளவில் நடத்துகிறார்கள். அந்த வார்டுகளில் இருக்கும் எந்தெந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் 5 செயல்கள் பற்றி பேசுகிறார்கள். போதை ஒழிப்பு- ஒரு தனி மனிதனாக என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தை கைவிட்டு தானும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
குடும்பங்களில் ஒற்றுமையை உருவாக்குதல்-குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, பேசுவது போன்ற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
சமூக நல்லிணக்கம்- நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாதி, மொழி, அந்தஸ்து என்ற பேதமில்லாமல் அனைவருடனும் பழகும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
சுற்றுசூழல் பாதுகாப்பு- வீடுகளில் தண்ணீரின் சிக்கனம், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரித்தல், பிளாஸ்டிக் கை தவிர்த்து துணி பை களை பயன்படுத்த பழகி கொள்தல்.
சுதேசி வாழ்வியல்-வீட்டிலும், முடிந்த இடங்களிலும் தாய்மொழியில் பேசும் பழக்கத்தை வளர்த்தல், பாரம்பரிய உடைகள் அணிவது, உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
குடிமகனின் கடமைகளாக சட்டத்தை மதித்து நடப்பது. உதாரணமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அரசின் சட்டம். அதை கடைபிடிக்க வேண்டும்.
இப்படி எல்லாவிதமான மாற்றங்களையும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள்.
காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடை பெறும் இந்த நிகழ்ச்சிகளில் தலைவர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை அனைவரும் தங்கள் பகுதியில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
- பல்வேறு கட்டண உயர்வுகளை கண்டித்து அ.தி.மு.க.வின் சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
- உண்ணாவிரதப் போராட்டத்தை, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைப்பார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டணம் உயர்வு, குப்பை வரி விதித்தல் என்று பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியதைக் கண்டித்து, அ.தி.மு.க.வின் சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
திருப்பூர் மாநகராட்சியின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை, திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கழக குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி அவர்கள் தலைமையில், கழகத்தைச் சேர்ந்த 17 மாமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைப்பார்.
கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி பழச்சாறு வழங்கி முடித்து வைப்பார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
- தமிழக அரசு தான் இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அதிகாரிகளுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ''மனுக்கள் பெறப்பட்ட உடனோ, அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளோ ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும்; மனுதாரரின் கோரிக்கையானது அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும்; கோரிக்கை தீர்க்கப்பட்டிருந்தால் என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம், நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் ஆகியவை மனுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறார்.
மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பரிந்துரைக்கும் ஒற்றைச் சட்டம் என்பது பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தான். தமிழகத்தில் பொதுச் சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.
இந்த அணுகுமுறையை விடுத்து சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் இச்சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஆனால், தமிழக அரசு தான் இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது.
இன்னும் கேட்டால் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின் சட்டப்பேரவையில் கவர்னர் ஆற்றிய உரையின்போதும், விரைவில் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.
எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால் 9-ந்தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வருகிறதா? என்று கேட்டார்.
- சிறுவனின் தாயாரிடம் சிறுவனை கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பில் இடைநிற்றலான 5 மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் அம்மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் மேற்கொண்ட கள ஆய்வில் இடைநிற்றலுக்கான காரணங்களை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கேட்டு அறிந்தார்.
ஒரு மாணவனின் வீட்டிற்கு சென்ற கலெக்டர் மாணவனிடம் உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்.
நீயும் லோடுமேன் வேலைக்கு தான் போகணும். லோடுமேன் வேலை எவ்வளவு கஷ்டம். இதெல்லாம் நீ தூக்கக்கூடாது. புக் மட்டும் தான் தூக்கணும். உதவி வேண்டுமானால் கேட்க வேண்டும் என தெரிவித்தார்
அங்கிருந்த சிறுமியிடமும் தினமும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார் . சிறுமிக்கு உதவித்தொகை வருகிறதா என்றும் தாயாரிடம் கேட்டறிந்தார்.
கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வருகிறதா? என்று கேட்டார்.
ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எதுவும் இல்லாததால் விட்டு விட்டதாக என்று சிறுவனின் தாய் கூறினார்.
என்னம்மா நீங்கள்... கொரோனாவில் இறந்தவர்களின் குழந்தைக்கு உதவித்தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளாரே என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயாரிடம் சிறுவனை கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும், சிறுவனிடம் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
- 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விளையாட்டு மைதானத்திற்கு சுற்றித் திரிந்து வருகிறது.
- நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் தருமபுரி பிடமனேரி சாலையில் அமைந்துள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தில் கபடி, கைப்பந்து, கால்பந்து, தடகள விளையாட்டுகள், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி செய்வதற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வந்து செல்கின்றனர். சிறுமியை நாய் கடித்தது
இந்த நிலையில் நேற்று சோலைக்கோட்டை சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவி ஒருவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்காக மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு சென்ற போது அங்கு சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று அந்த சிறுமியை கடித்தது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பொது மக்கள் கூறிகையில், காலை முதல் மாலை வரை நுழைவாயில் திறந்து இருப்பதால், நகர பகுதியில் உள்ள தெரு நாய்கள் விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து விடுகிறது. மேலும் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விளையாட்டு மைதானத்திற்கு சுற்றித் திரிந்து வருகிறது.
இதனால் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி செய்வதற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை நாய்கள் கடித்து விடுமோ என்று அச்சம் நிலவி வருகிறது என்றனர்.
மேலும் இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது.
- அடிப்படை கட்டணம் 10 கி.மீட்டருக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை நகரில் ஏ.சி. வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஏ.சி. வசதி கொண்ட மெமு ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில், அதாவது டிசம்பர் இறுதிக்குள் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து முதல் ஏ.சி. மெமு ரெயில் தயாராக உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
முதல் ஏ.சி. மெமு ரெயிலை இயக்குவதற்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தை இறுதி செய்துள்ளோம். ஆனால் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது.
சாதாரண ஏ.சி. மெமு ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் 10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 491 முதல் 500 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.423 ஆகும்.
11 முதல் 15 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு கட்டணம் ரூ.37 ஆகவும், 16 முதல் 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.56 ஆகவும் கட்டணம் இருக்கும்.
10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.590 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.445 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.295 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - தாம்பரம் இடையே 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.1,200 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.900 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.605 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சென்னை - திருவள்ளூர் இடையே டிக்கெட் கட்டணம் ரூ.85 ஆகவும், சென்னை-செங்கல்பட்டு இடையே ரூ.99 ஆகவும், சென்னை - திருத்தணி இடையே ரூ. 123 ஆகவும், சென்னை - திருப்பதி இடையே ரூ.170 ஆகவும், சென்னை - புதுச்சேரி இடையே ரூ.204 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது.
- பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த குடிநீர் குழாயில் ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்டநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்தபோது அவரது கைப்பையில் கம்பி வடிவில் மறைத்து எடுத்து வந்த அரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர்.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது, அவர் தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த குடிநீர் குழாயில் ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சசூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
- கிராமங்கள் தோறும் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டது. அழகர் மலைக்கும், பெருமாள் மலைக்கும் அரிட்டாபட்டி பல்வேறு சிறப்புகளை கொண்டது.
அரிட்டாப்பட்டி மலையில் சமணர் படுகைகள், மகாவீரர் சிற்பம், கிமு 2-ம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், பாண்டியர் காலத்து வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளது.
பல்லுயிர் பெருக்கம் நிறைந்துள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவமும் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் உள்ள மலைக்குன்றுகள் 250 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள், மற்றும் மூன்று தடுப்பணைகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது.
இதுபோன்று பல்வேறு சிறப்புகளை கொண்ட அரிட்டாபட்டி மற்றும் அருகில் உள்ள மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப் பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழு மத்தின் ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதி கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கண்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சசூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே இதற்கான முடிவை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிமும் மனு அளிக்கப்பட்டது.
அரிட்டாபட்டியில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என உறுதியுடன் தெரிவித்தார்.

இருப்பினும் அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக கிராமங்கள் தோறும் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக இன்று கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அதன்படி இன்று மேலூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலூர் பஸ் நிலையம், செக்கடி பஜார், பெரிய கடை வீதி, பேங்க் ரோடு, அழகர் கோவில் ரோடு, சந்தை பேட்டை, திருவாதவூர் ரோடு, சிவகங்கை ரோடு மற்றும் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டு இருந்தன. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல் அரிட்டா பட்டி, அ.வல்லாளப்பட்டி, மீனாட்சிபுரம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
மேலூரில் பல்வேறு சங்கத்தினர் சார்பில் பென்னி குவிக் பஸ் நிலையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடையடைப்பு, ஆர்ப்பாட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
- அதிமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி-நாயக்கர்பட்டியில் வேதாந்தா குழுமத்தின் Hindustan Zinc நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீதோ, அவர்கள் சார்பில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கை என்பது கிடையாது.
மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டங்களுக்கு அதிமுக என்றும் துணைநிற்கும்.
அஇஅதிமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்.
பொதுமக்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தளமான அரிட்டாபட்டி பாதிக்கப்படுவதையும் கருத்திற்கொண்டு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தனியார் தேயிலை மற்றும் காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் காபி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு காட்டுயானை ஒன்று வந்தது. பின்னர் திடீரென தொழிலாளர்களை துரத்த தொடங்கியது. இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர்.
காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில தொழிலாளர்கள் அங்குள்ள மரங்களில் ஏறினர். இதை கண்ட காட்டுயானை அந்த மரங்களின் அடியிலேயே முகாமிட்டு நின்றது. ஆனால் தொழிலாளர்களோ, மரங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை.
பின்னர் அங்கிருந்து யானை சென்று விட்டது. அதன் பிறகு தொழிலாளர்கள் கீழே இறங்கி தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.






