search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy airport Gold smuggling"

    திருச்சி விமான நிலையத்தில் மலேசிய பெண் பயணியிடம் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருச்சி:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது மலேசியாவை சேர்ந்த பெலிசியா தாஸ் விக்டர் என்ற பெண் பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1040 கிராம் தங்கத்தை தனது உடைமைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது ஏன்? என்று பெலிசியா தாஸ் விக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்ததாக 5 பெண்கள் சிக்கினர். இன்று மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கியுள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கடத்தலில் சிக்கும் பெண்கள் குருவிகளாக செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருகிறார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.2½ கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த விமான பெண் பணியாளர்கள் அதிகாரிகளின் சோதனையில் சிக்கினர். #Goldsmuggling

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, கொச்சி, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், அங்கிருந்து திருச்சிக்கும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக திருச்சி விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களாக தினமும் பயணிகள் சிலரிடம் பல கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


    மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியும் கூட பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. போதை பொருட்கள், நட்சத்திர ஆமைகள் போன்றவற்றை கடத்தி வந்த பயணிகளும் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியான கடத்தல் சம்பவங்கள் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தநிலையில் நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் தனியார் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து வந்தனர். நேற்றிரவு அந்த விமானம் வந்ததும் , அதில் வந்த பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் கொண்டு வந்த பொருட்கள், உடைமைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கடத்தல் தங்கம் எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து விமானத்தில் ஏறி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்த விமான பணிப்பெண்கள் 3 பேரிடம் விசாரணை மேற் கொண்டனர். அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விமானத்தின் ஒரு பகுதியில் 6½ கிலோ தங்க நகைகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    அதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததுடன், கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2½ கோடி இருக்கும்.

    அந்த நகைகளை விமான பெண் பணியாளர்களே கடத்தி வந்திருப்பதும் அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும், அதிகாரிகள் சென்னைக்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த நகைகளை எங்கிருந்து கடத்தி வந்தார்கள், கொடுத்து அனுப்பிய நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நகைகளை கடத்தி வந்த விமான பெண் பணியாளர்கள், திருச்சி வந்ததும் பயணிகள் யாரிடமாவது நகைகளை கொடுத்து அனுப்புவதற்கு முயற்சிகள் செய்து வந்ததும் தெரி வந்துள்ளது.

    இதனால் அந்த நகைகள் திருச்சியில் யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வரப்பட்டது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்-யார்? என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு நடந்த கடத்தல் சம்பவங்களில் விமான பெண் பணியாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இந்த சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    தங்கம் கடத்தல் சம்பவத்தில் விமான பெண் பணியாளர்களே ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Goldsmuggling

    ×