என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

    கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முக்கானி, ஏரல் பகுதிகளில் உள்ள பாலங்களில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மற்றும் நாளையும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்.
    • திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு மக்களிடையே உள்ள ஆதரவையும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டுவார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன்.

    தந்தை பெரியார், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத் அவர்கள் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் இளங்கோவன் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், ஒன்றிய அமைச்சர் என்று பல்வேறு நிலைகளில் பொதுவாழ்க்கைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்.

    அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா அவர்களை இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் அவர்கள் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார்.

    என்னை எப்போது சந்திக்க வந்தாலும், "உடம்ப பாத்துக்கோங்க" என்று அவர் அக்கறையுடன் சொல்லத் தவறியதே இல்லை. அவ்வாறு அவர் அன்பொழுகச் சொல்லும்போதெல்லாம் "நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க" என நானும் அவரிடம் சொல்வேன். அதற்கு அவர், "நீங்கள் என்னிடம் ஒப்படைத்த மக்கள் பணியை ஏற்ற பிறகு இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். நலமாக இருக்கிறேன்" என்று உற்சாகம் ததும்பக் கூறி என்னைச் சமாதானப்படுத்துவார்.

    சட்டமன்றத்தில் சந்திக்கும்போதும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கு மக்களிடையே உள்ள ஆதரவையும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டுவார்.

    அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்குப் போகும் நிலையிலும் தனது துணைவியாரிடம், என்னைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதை அறிந்து அவரை நான் சந்தித்தபோது, அவர் பேசும் நிலையில் இல்லை. இருந்தபோதும் அவர் என்னிடம் என்ன சொல்ல நினைத்தார் என்பதை உணர்ந்தவனாகவே நான் இருந்தேன்.

    அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரது மகனையும், மருத்துவர்களையும் தொடர்புகொண்டு, அவரது உடல்நலன் குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து வந்தேன்.

    இந்நிலையில், இன்று காலை அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்ட செய்தியும் அதனைத் தொடர்ந்து அவர் மறைவுற்றார் என்ற செய்தியும் வந்தடைந்தது. அவரது மறைவு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.

    பல ஆண்டுகள் தமிழ்நாடு அரசியலில் முன்னணித் தலைவராக விளங்கி, நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
    • அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இன்று சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் குவிய தொடங்கினர்.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் ஆற்றிய சேவைகள் என்றும் மனதில் தங்கி நிற்கும். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

    • மகா தீபம் ஏற்றப்பட்ட போது நகரின் பல்வேறு இடங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
    • இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் மகா தீப திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.

    2,688 அடி உயரமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் தீப தரிசனம் செய்தனர்.

    தலைக்கு மேல் கைகளை தூக்கி மலையை பார்த்து வணங்கினர். வீடுகள் முன்பும், கடைகள் முன்பும் பலர் அகல் விளக்குகளை ஏற்றினர். மலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட போது நகரின் பல்வேறு இடங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. இதனால் திருவண்ணாமலை நகரமே ஜொலித்தது.

    மேலும் தீபத் தரிசனம் செய்துவிட்டு நள்ளிரவில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். குறிப்பாக சின்ன கடைவீதி, தேரடி வீதி, திருவூடல் தெரு ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மிகுந்த நெரிசலுடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


    திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மாலை தொடங்கி நாளை மாலை நிறைவடைகிறது.

    எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர்.

    பகலில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளேயும், வெளியேயும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


    தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது. பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்பதால் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவின் தொடர்ச்சியாக இன்று இரவு அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது.

    • ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
    • பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உயிரிழந்தார்.

    ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பயணம்

    ஈவிகேஎஸ் இளங்கோவன் 1948-ம் ஆண்டு டிசம்பர் 21-ல் ஈரோட்டில் பிறந்தார். அவர் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.

    பெரியாரின் பேரன், EVK சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். மேலும், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 1984-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, திமுக வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

    முந்தைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் சீதாராம் கேசரி இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமித்தனர். இப்பதவியில் (1996-2001) ஆண்டு வரை மிகவும் திறம்பட செயல்பட்டார்.  

    2004 பாராளுமன்ற தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.

    பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக (2014-2017) இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    2023-ம் ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததையடுத்து பின் அவர் விட்டு சென்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டசபை வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.

    • கவியரசன், சுனிலை பார்த்து ‘உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக் கொள்’ என கண்டித்துள்ளார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான சுனிலை தேடி வந்தனர்.

    கண்டமங்கலம்:

    புதுச்சேரி ஆட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுனில். ரவுடியான இவர் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டு காலனியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை சுனில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவி சினேகாவை பார்க்க, சுனில் கடந்த 8-ந் தேதி சித்தலம் பட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு, அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் யாசிக், கவியரசன் உள்ளிட்டோருடன் திருக்கனூரில் உள்ள மதுக் கடையில் மது அருந்தியுள்ளார்.

    போதை தலைக்கேறிய நிலையில் சுனில், யாசிக் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சுனில், மறைத்து வைத்திருந்தபேனா கத்தியால் யாசிக்கின் தொடையில் கிழித்துள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. கவியரசன், சுனிலை பார்த்து 'உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக் கொள்' என கண்டித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு, கவியரசன் வீட்டின் முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. குண்டு வெடித்த இடத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஒரு கறவை மாடு காயம்அடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர்சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோ தம் காரணமாக ரவுடி சுனில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான சுனிலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே பதுங்கி சுனில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சுனில் விக்ரவாண்டி அருகே மதுரப்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்ற கணேஷ்ராஜ் (25) ஆகிய இருவரையும் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் 2 முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
    • பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டிருந்த நிலையில் அது கை கூடாமல் போய்விட்டது.

    இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

    அதே நேரத்தில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.

    இது போன்ற பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (15-ந் தேதி) நடைபெறுகிறது.

    அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர், சிறப்பு அழைப்பாளர்களான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2 ஆயிரம் பேர் என 5 ஆயிரம் பேர் நாளை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். வழி நெடுக தோரணங்களும், அ.தி.மு.க. கட்சி கொடிகளும் கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கு கட்சியினர் தயாராகி வருகிறார்கள். பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    • குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மினி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மழையுடன் குளிரும் நிலவுகிறது. நேற்றும் குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது.

    தொடர் மழை எதிரொலியாக குன்னூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மினி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாதலங்கள் வெறிச்சோடியது.

    கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், வாகனங்கள் கூட தெரிவதில்லை. அந்தளவுக்கு மேகமூட்டம் உள்ளது.

    சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை கவனமாக இயக்க போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று நிலவிய மேகமூட்டத்தால் குன்னூர் மலைப்பாதையில் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.


    இதேபோல் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத மரம் விழுந்ததில், டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவி பொறியாளர் ஜான்சன் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடும் மேகமூட்டத்தால், குன்னூரில் இருந்து காட்டேரி கிராமத்திற்கு சென்ற பஸ், ஓட்டுனர் பிரேக் போட்டதால் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.

    மேலும் கொலக்கம்பையில் இருந்து மானார், சுல்தானா, பால்மரா, மூப்பர் காடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பழங்குடியின மக்கள் வாகனங்கள் எதுவும் வராததால், தங்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.

    இன்று அதிகாலை மலைப்பாதையில் கடும் மேகமூட்டம்நிலவியது. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    கடந்த 3 நாட்களாக மழையுடன் கடும் குளிரும் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    • மகாதீபத்தை வருகின்ற 23-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
    • ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 23-ந் தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன. 

    • பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 822.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்தது. 3-வது நாளாக இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் ராமநாதபுரம் நகர், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. விடுமுறை எதுவும் அறிவிக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

    குறிப்பாக முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதியில் விவசாய நிலங்களில் மழை புகுந்தது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ராமநாதபுரம்-15.20, திருவாடானை-9, பரமக்குடி-30, கமுதி-19, கடலாடி-41.80, வாலிநோக்கம்-18.80, தொண்டி-3.40, முதுகுளத்தூர்-6.60. மாவட்டத்தின் மொத்த மழையின் அளவு 175.10 மி.மீட்டர் ஆகும்.


    விருதுநகர் மாவட்டத்திலும் இடைவிடாது அடை மழை பெய்து வருகிறது.

    விருதுநகரில் பழைய பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி ரோடு பாவாலி ரோடு பாத்திமா நகர் மற்றும் எம்ஜிஆர் சிலை எதிரில் அருப்புக்கோட்டை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 822.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது சராசரியாக 68.53 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 114 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.


    விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ம.ரெட்டியபட்டி அருகேயுள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் கண்மாய் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கரைபுரண்டு ஓடிய மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளமாக சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகள் சூழ்ந்த வெள்ள நீரால் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

    மேலும் திருச்சுழி அருகே கொப்புசித்தம்பட்டி அருந்ததியர் தெருவில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் பெரிய கண்மாய் நிறைந்து மறுகாலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாகி குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பொதுமக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மறவர் பெருங்குடி உப்பு ஓடை, திருச்சுழி குண்டாறு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் மறவர் பெருங்குடி பகுதியில் உள்ள அரசுபள்ளியின் சுற்று சுவரை உடைத்துக்கொண்டு மழை வெள்ளம் உள்ளே புகுந்ததால் பள்ளி வளாகமே வெள்ள காடாக காட்சியளித்தது.

    மேலும் அப்பகுதியில் விவசாயம் செய்துள்ள நெல், கடலை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 3-வது நாளாக இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

    தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சிவகங்கை அருகே பெரியகோட்டை கிராமத் தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து வெள்ளக்காடாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் 300 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.

    • 1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
    • 1984-ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை மரணமடைந்தார்.
    • இளங்கோவன் மரணம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக அமைந்திருப்பதாகவே கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். 75 வயதான இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக பொறுப்பு வகித்தவர். எம்.பி., எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். மத்திய மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.

    இதற்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரிக்கு அவர் அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்று ஏற்பட்டு கடுமையான மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இளங்கோவன் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அவரது உடல்நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து மியாட் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மியாட் ஆஸ்பத்திரி டாக்டர்கள் செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இளங்கோவன் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்ததுடன் உயரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை மரணமடைந்தார். ஆஸ்பத்திரியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மியாட் ஆஸ்பத்திரி முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்ததை கேட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகவும் துணிச்சலாக கருத்துக்களை தெரிவிப்பவராக இருந்து வந்தார். அவரது பேச்சுக்கள் பலமுறை சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. இருப்பினும் தனது கருத்துக்களை எந்த நேரத்திலும் யாருக்கும் பயப்படாமல் எடுத்து வைப்பவராகவே அவர் விளங்கி வந்தார்.

    இதனால் அவரது மரணம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக அமைந்திருப்பதாகவே கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இளங்கோவன் போட்டியிடாமல் விலகியே இருந்தார்.

    இதைத் தொடர்ந்து அவரது மகன் திருமகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். கடந்த ஆண்டு அவர் திடீரென மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சட்டமன்ற கூட்டங்களிலும் அவரது தொகுதி பிரச்சனைகள் பற்றி பேசி வந்தார். இது போன்ற சூழலில்தான் இளங்கோவன் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×