என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சேர்ந்து கும்மி அடித்தனர்.
    • ஆடல் பாடல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் நாகம்மாள் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பரமத்தேவர். இவருடைய மனைவி நாகம்மாள் (வயது 96). இவர்களுக்கு 2 மகன்கள், 4 மகள்கள். பேரன், பேத்திகள் மட்டும் 78 பேர் உள்ளனர்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு பரமத்தேவர் இறந்துவிட்டார். நாகம்மாள் தன் பிள்ளைகள், பேரன், பேத்திகள் மீது அளவு கடந்த பாசம் காட்டினார். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவர் குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

    தனக்கு முதுமையாகிவிட்டதால், தான் இறக்கும்போது யாரும் வருத்தப்படக்கூடாது. எப்படி குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அதே போல் நான் இறந்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். ஆடல், பாடல், மேளம் என்று ஒரு விழா போன்று எனது இறுதிச்சடங்கை நடத்த வேண்டும். துக்கவீடு போன்று அன்றைய தினம் இருக்கக்கூடாது.

    இதுதான் என் கடைசி ஆசை என குடும்பத்தினரிடம் கூறி வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நாகம்மாள் நேற்று முன்தினம் இறந்தார்.

    அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் இணைந்து முடிவு செய்தனர். ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்து கலைஞர்களை வரவழைத்தனர். ஒரு திருவிழா போன்று ஏற்பாடுகளை செய்தனர். மைக்செட் அமைக்கப்பட்டது.

    நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சேர்ந்து கும்மி அடித்தனர். ஆடல் பாடல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் நாகம்மாள் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்னொருபுறம் சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாட்டங்கள் நடைபெற்று, நாகம்மாளின் இறுதி ஆசையை நிறைவேற்றினர்.

    இதுதொடர்பாக சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் எப்போதும் முக்கியம் என மூதாட்டி நாகம்மாள் தன் குடும்பத்தினர் மட்டுமல்ல, கிராம மக்களிடமும் கூறி இருக்கிறார். அவரும் அவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்து 96 வயதில் இறந்துள்ளார். அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் இவ்வாறு செய்திருப்பது நினைக்கையில் ஆச்சரியமாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது" என்றனர்.

    • பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு, சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
    • வாக்காளர் பட்டியலும் வெளியிட்டு இருக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றம், சட்டமன்றம் போன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும்.

    உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் தான் மத்திய அரசும், அதற்கான மானியங்களை விடுவிக்கும். அதேபோல் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

    தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தான் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிணைந்து முழுமையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் பதவி காலம் 2016-ம் ஆண்டு முடிந்தது. அதன்பின் தேர்தல் நடத்தப்படவில்லை. தனி அலுவலர்கள் மூலம் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டன.

    2019-ம் ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ந்தேதி என 2 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் மூலம் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம்91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்தன.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பொறுப்பேற்றனர். இவர்களது பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    பதவி காலம் முடிவடையும் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், மாநில தேர்தல் ஆணையத்தால் 45 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். அதற்கான வாக்காளர் பட்டியலும் வெளியிட்டு இருக்க வேண்டும்.

    ஆனால் அதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. அதற்கு போதிய காலமும் இப்போது இல்லை. எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

    எனவே பதவி காலம் முடியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு, சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் தமிழக சட்டசபை 6-ந்தேதி தொடங்குகிறது. எனவே அதற்கு முன் தினமான 5-ந் தேதி, பதவி முடிவடையும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. தற்போது நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டுள்ளதால் 28 மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

    எனவே தனி அலுவலர்களை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை 4-ந்தேதி அல்லது 5-ந்தேதி கொண்டு வரவேண்டும். எனவே இது குறித்து எப்போது வேண்டுமானாலும், அறிவிப்பு வெளியிடப்படலாம்.

    இந்த சட்டத்தின்படி, கிராம பஞ்சாயத்துக்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (கிராம ஊராட்சி) மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நிர்வாகம் செய்வார்கள்.

    அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை 2 பகுதியாக பிரித்து, ஒரு பகுதியை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), மற்றொரு பகுதியை உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோரும் நிர்வாகம் செய்வார்கள்.

    மாவட்ட ஊராட்சியை அந்த மாவட்டத்தில் உள்ள திட்ட அலுவலர் அல்லது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) நிர்வாகம் செய்வார்கள்.

    உள்ளாட்சிகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு மட்டுமே காசோலை அதிகாரம் உள்ளது. எனவே அவர்கள் செய்யும் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்போதே கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 5-ந் தேதிக்கு பிறகு எந்த பரிமாற்றமும் செய்ய முடியாது.

    அவசர சட்டம் கொண்டு வரப்பட்டாலும், இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் இதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.

    • சேரன்மகாதேவியில் சட்டக்கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (22). சென்னையிலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாளுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில், இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக மணிகண்டனை சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.

    நெல்லைப் பகுதியில் ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததை கண்டித்து கருப்பு தின பேரணி நடந்தது.
    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தொண்டர்களை கைதுசெய்ததை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கோவையில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மதவாத பிரிவினைவாத மக்கள் விரோத தி.மு.க. அரசைக் கண்டித்து, அமைதியான முறையில் கருப்பு தின பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும், பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்களை கைதுசெய்ததன் மூலம் பயங்கரவாதிகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் ரவுடிகளுக்கும் புகலிடம் கொடுக்கும் ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து இந்த கருப்பு தின பேரணி நடைபெற்றது.

    ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்தக் கருப்பு தின பேரணிக்கு காவல்துறை வேண்டுமென்று அனுமதி மறுத்து, அராஜகத்துடன் பேரணியில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை,பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் தொண்டர்களையும் கைதுசெய்து ஒரு ஜனநாயக படுகொலையை நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

    தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான அல்-உம்மா இயக்க நிறுவனரும், 60-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிற பாஷா உயிரிழந்த நிலையில், மக்கள் விரோத தி.மு.க. அரசின் காவல்துறை, பாஷாவை கதாநாயகன் போல், போராளி போலவும் தியாகியாகவும் பெருமைப்படுத்தும் வகையில், ஜனநாயகத்தை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி பெரும் ஊர்வலம் போல பேரணியாக இறுதி ஊர்வலம் செல்ல அனுமதித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    கொலை குற்றவாளிகளை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை 'ஹீரோக்களாக' சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படுபாதக செயல் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.

    தமிழக அரசு செய்ததை தவறு என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்தும் வகையில் நல்லெண்ணத்துடன், தேசிய உணர்வுடன், நாட்டுப்பற்றுடன் தேசபக்தியை வளர்க்கும் வகையில் அமைதியான முறையில் கருப்பு தின பேரணி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

    பயங்கரவாதத்தை உற்சாகப்படுத்தும் வகையில் படுபாதக செயலை செய்தவருக்கு பேரணியாக இறுதி ஊர்வலம் அனுமதித்த தமிழக அரசின் தவறான அணுகுமுறையை, அடையாளப்படுத்தும் விதத்தில் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக நடைபெற்ற இந்த ஊர்வலத்தை காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக தடுத்து அவர்களை கைதுசெய்தது அராஜகம்.

    தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சி நடைபெற்று வரும் இதுபோன்ற அவலங்களை, படுபாதக செயல்களை பா.ஜ.க. மக்கள் துணையுடன் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.

    நல்லெண்ணத்திற்காக பேரணி நடத்திய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும், பாஜக தொண்டர்களையும் கைது செய்ததை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    • வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
    • அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

    இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 370 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பம், தூத்துக்குடியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.

    நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

    நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக பூபாலன் கூறியிருந்தார்

    இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    இதுதொடர்பாக, கிருஷ்ணகிரியில் நாதக நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை எச்சில் என்கிறார் அண்ணன் சீமான். புதிதாக வருபவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
    • அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    அதன்பின்னர், 23-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்டா- வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாள் (24-ந்தேதி) பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.

    இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

    இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 370 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அறிக்கை.
    • தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.

    பொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு நடைபெறுவதற்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

    தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒன்றிய பாஜக அரசின் கீழ் இயக்கும் தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ள 'யுஜிசி நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கானத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.

    மத்திய பாஜக அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) தேர்வு கூட பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டது. பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.

    தமிழர்களின் ஒற்றுமைக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாக விளங்கும் பெருவிழா பொங்கள். "நாம் காணும் பொங்கள் விழா, உலகெங்கிலும் பிறந்து மொழி பயின்று வாழும் மனித குலத்துக்கே பொதுவான விழா! ஆம்! பசிக்கின்ற நம் வயிறு படைத்துள்ள மனித இனம் முழுவதுக்கும் சொந்தமான உலகப்பெருவிழா!" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்படும் உலகப் பெருவிழாவினை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக அவமரியாதை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மேலும், அறிவிக்கப்பட்ட 'யுஜிசி- நெட்' தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் திராவிட மாடல் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்தினர்.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    கோயம்பத்தூரில் தமிழக அரசை கண்டித்து தடையை மீறி கருப்பு தின பேரணியை பாஜகவினர் இன்று நடத்தினர்

    கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்தினர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    இந்நிலையில், தடையை மீறி பேரணி சென்றதாக அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
    • சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    அப்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும், அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது, இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 3 பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
    • யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும்.

    துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

    அதில், " உயர்கல்வி அமைச்சருக்கு தவறாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு குழுவில் வேண்டுமென்றே பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் தவிர்க்கப்பட்டிருக்கிறார்.

    3 பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

    யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும்.

    மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும்" என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    • 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயம்.
    • 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று கொட்டப்பட்டு கழிவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

    கேரளா மாநில மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.

    இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று கழிவுகளை அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு ஒரு குழுவை அமைத்து கழிவுகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது.

    அதனைத்தொடர்ந்து 8 பேர் கொண்ட கேரள மாநில அதிகாரிகள் குழு இன்று கழிவுகள் கொட்டப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. எந்த வகையான கழிவுகள் கொட்டப்பட்டன. அவைகள் அபாயகரமானதா? என்பது குறித்த தரவுகளை இந்த குழுவினர் சேகரித்தனர். இது தொடர்பாக அவர்கள் கேரள மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழு "மருத்துவக் கழிவுகளில் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன. கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது இல்லை. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கழிவுகளை அகற்றுவது பற்றி கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.

    ×