என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலை கைது, தி.மு.க. அரசின் ஜனநாயக படுகொலை: பா.ஜ.க. கண்டனம்
- அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததை கண்டித்து கருப்பு தின பேரணி நடந்தது.
- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தொண்டர்களை கைதுசெய்ததை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவையில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மதவாத பிரிவினைவாத மக்கள் விரோத தி.மு.க. அரசைக் கண்டித்து, அமைதியான முறையில் கருப்பு தின பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும், பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்களை கைதுசெய்ததன் மூலம் பயங்கரவாதிகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் ரவுடிகளுக்கும் புகலிடம் கொடுக்கும் ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து இந்த கருப்பு தின பேரணி நடைபெற்றது.
ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்தக் கருப்பு தின பேரணிக்கு காவல்துறை வேண்டுமென்று அனுமதி மறுத்து, அராஜகத்துடன் பேரணியில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை,பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் தொண்டர்களையும் கைதுசெய்து ஒரு ஜனநாயக படுகொலையை நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான அல்-உம்மா இயக்க நிறுவனரும், 60-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிற பாஷா உயிரிழந்த நிலையில், மக்கள் விரோத தி.மு.க. அரசின் காவல்துறை, பாஷாவை கதாநாயகன் போல், போராளி போலவும் தியாகியாகவும் பெருமைப்படுத்தும் வகையில், ஜனநாயகத்தை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி பெரும் ஊர்வலம் போல பேரணியாக இறுதி ஊர்வலம் செல்ல அனுமதித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கொலை குற்றவாளிகளை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை 'ஹீரோக்களாக' சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படுபாதக செயல் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.
தமிழக அரசு செய்ததை தவறு என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்தும் வகையில் நல்லெண்ணத்துடன், தேசிய உணர்வுடன், நாட்டுப்பற்றுடன் தேசபக்தியை வளர்க்கும் வகையில் அமைதியான முறையில் கருப்பு தின பேரணி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.
பயங்கரவாதத்தை உற்சாகப்படுத்தும் வகையில் படுபாதக செயலை செய்தவருக்கு பேரணியாக இறுதி ஊர்வலம் அனுமதித்த தமிழக அரசின் தவறான அணுகுமுறையை, அடையாளப்படுத்தும் விதத்தில் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக நடைபெற்ற இந்த ஊர்வலத்தை காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக தடுத்து அவர்களை கைதுசெய்தது அராஜகம்.
தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சி நடைபெற்று வரும் இதுபோன்ற அவலங்களை, படுபாதக செயல்களை பா.ஜ.க. மக்கள் துணையுடன் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.
நல்லெண்ணத்திற்காக பேரணி நடத்திய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும், பாஜக தொண்டர்களையும் கைது செய்ததை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.






