என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
- தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 2 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அண்ணா கிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 12 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடலூர் கலெக்டரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.
இந்த நிலையில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வேல்முருகன் எம்.எல்.ஏ. எனது தொகுதிக்குட்ட்பட்ட பண்ருட்டி அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பி இருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை 12 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அந்தந்த பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஏராளமானோர் பாலூர் பகுதியில் திரண்டனர்.
பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர்-பாலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
அப்போது கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கலைப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், தாசில்தார் ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது எங்களுக்கு நிவாரணத்தை வழங்கினால்மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். மேலும் தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும் என ஆக்ரோஷமாக தெரிவித்தனர். மேலும் பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் பாலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.
- தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
ராணிப்பேட்டை:
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்கி வருகிறது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியின் காரணமாக தமிழகம் மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவானைச் சேர்ந்த ஹோங்பூ தொழில் குழுமம் தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையுடன் கடந்த ஆண்டு காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள் நாட்டு பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட பணிகள் அங்கு நடைபெற தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் பனப்பாக்கத்தில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண்ராய் மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்பு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
- தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் சரி செய்யும் பணிகள் தீவிரம்.
- தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு கரை புரண்டு ஓடியது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் பலத்த சேதங்க ளும் ஏற்பட்டது. மெயின் அருவி வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக விழ தொடங்கி உள்ளது. மெயின் அருவி பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல் கற்கள், மரக்கிளைகள் நடைபாதை முழுவதும் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் அதனை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அருவி பகுதிகளை சுற்றி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் அதனையும் சரி செய்யும் பணிகள் முழுமையாக நடைபெற்ற உடன் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர் சீற்றம் குறைந்து மிதமாக விழத் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து இன்று 5-வது நாளாக குளிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
- குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும்.
- தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் ரெயில் மறியல் போராட்டம்.
தஞ்சாவூர்:
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு சாகும் வரை பஞ்சாப் கண்ணூரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடிவரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) தலைவர் ஜெக்ஜித் சிங் டல்லேவாலோடு உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது ) சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் உள்பட ஏராளமான விவசாயிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு முதல் நடைமேடைக்கு வந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய அரசு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்பட 55 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பிறகு ரெயில் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்துள்ளார்.
- ஆசைதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வி.கே.புரம்:
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருதம்நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகன் முகமது சமீர் (வயது 28).
இவர் அப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று கடையம் அருகே உள்ள ஆழ்வான் துலுக்கப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த களஞ்சியம் என்ப வரது மகன் ஆசைத்தம்பி (55) வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் 100 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து ¼ கிலோ கத்தரிக்காய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த நோட்டை வாங்கிய முகமது சமீர், நோட்டில் சந்தேகம் ஏற்படவே அருகே காய்கறி வாங்கி கொண்டிருந்த சுடலையாண்டி என்பவரிடம் காட்டியுள்ளார். அப்போது ஆசைத்தம்பி கொடுத்தது கள்ளநோட்டு என தெரியவந்தது.
உடனே ஆசைத்தம்பி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை முகமது சமீரும், சுடலையாண்டியும் சேர்ந்து சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் விசாரணை நடத்தியதில் அவர் தனது வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து கலர் தாளில் கள்ள நோட்டு அச்சடித்து அந்த நோட்டை கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் ஒரு ஜெராக்ஸ் எந்திரம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 25 எண்ணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக முகமது சமீர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து ஆசைதம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
- மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
- விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஅள்ளி, எலங்காலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இங்கு இருந்து வியாபாரிகள் தக்காளியை வாங்கி தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். பாலக்கோடு மார்க்கெட்டில் ரகத்திற்கு ஏற்ப தக்காளியை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.
இந்தநிலையில் பாலக்கோடு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 300 டன் அளவுக்கு தக்காளி விற்பனைக்காக வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.280- க்கும். சில்லரையாக ஒரு கிலோ ரூ.18-க்கும் விற்பனையாகிறது. தருமபுரி உழவர் சந்தையில் இன்று ரூ.18-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனையான தக்காளி தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது, மேலும் பண்டிகை மற்றும் சுபமு கூர்த்த தினங்கள் இல்லாத தாலும் விலை சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில தேர்தல்கள் அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும்.
- நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப வெட்கக்கேடான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கூட்டாட்சிக்கு எதிரான, நடைமுறைக்கு மாறான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கொள்கையை இந்தியா கூட்டணி எதிர்க்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒன்றையாட்சி முறைக்குள் தள்ளவிடும் அபாயமும் நாட்டின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றுவிடும்.
ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில தேர்தல்கள் அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும்.
நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப வெட்கக்கேடான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் திணிக்கப்படும் அருவெறுப்பை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு.
- வீடியோ காலில் பேசும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குளத்தகுறிச்சி பகுதியை சேர்ந்த கவுரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்திஷா (வயது 4) நிதிஷா (வயது 2 ) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டு இருப்பார் என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கவுரி அடிக்கடி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் கவுரி, தனது கணவர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன் தினம் தனது தங்கையிடமும் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனது தந்தையிடமும் வீடியோ காலில் கவுரி பேசியதாக தெரிகிறது. அவர்களிடம் பேசிவிட்டு தனது கணவருடனும் வீடியோ காலில் பேசியுள்ளார்.
கணவரிடம் பேசி முடித்த சில மணி நேரங்களில் வீட்டில் உள்ள ஒரு அறையில் கவுரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த குழந்தைகள் அழுவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கவுரி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கணவர் பன்னீர் செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர் செல்வம், அங்கு ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கவுரியின் உறவினர்கள் கூறுகையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடக்கும். இதனால் கவுரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். நேற்று என்ன நடந்தது என தெரியவில்லை. அவர்களுக்குள் என்ன சண்டை நடந்தது என்றும் தெரியவில்லை.
தற்போது இரு பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். பன்னீர் செல்வத்தின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கவுரியின் தங்கை கார்த்திகா கூறியதாவது:-
எனது அக்காளுக்கும் அவரது கணவருக்கும் கடந்த 4 மாதமாக குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று எனது அக்காள் தனது கணவருடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது அக்காள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளது.
எனது அக்காளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது எதிர் காலத்தை கருதி பன்னீர் செல்வத்தின் சொத்துக்களை சரிபாகமாக பிரித்து கொடுக்க வேண்டும். பன்னீர் செல்வத்தின் உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டு இருவரது உடல்களையும் ஒரே நாளில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
பன்னீர் செல்வம் உடல் வரும் வரை எனது அக்காள் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படி பிரேத பரிசோதனை செய்தால் உடலை நாங்கள் வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுரியின் தந்தை கொளஞ்சி நாதன் கூறும் போது, மருமகனின் தந்தையோ, உடன் பிறந்தவர்களோ கண்டு கொள்ளவே இல்லை. சேர்ந்து வாழலாம் என தனது மகளை அழைத்து வந்த நிலையில் மகள் கவுரி தற்கொலை செய்து கொண்டார் என அழுது துடித்தார்.
- ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து இருந்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்தது. இதனால் ஏரியில் இருந்து கடந்த 13-ந்தேதி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏரியில் இருந்து நேற்று முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.5 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2860 மில்லின் கனஅடியாகவும், நீர்வரத்து 1700 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 3000 கனஅடியாகவும் உள்ளது.
- இந்த ரெயில் முதலில், சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டது.
- 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரெயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரெயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. 497 கி.மீ. தூரத்தை 9 மணி 15 நிமிடங்களில் கடக்கும் இந்த ரெயில் சராசரியாக மணிக்கு 54 கி.மீ. வேகத்தை கொண்டிருக்கிறது.
இந்த ரெயில் முதலில், சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு, 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த அதிவிரைவு ரெயில் ஜனவரி 3-ந்தேதி முதல் சாதாரண விரைவு ரெயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயிலின் குறைந்தபட்ச சராசரி வேகமான 55 கி.மீ. வேகத்தை பராமரிக்கத் தவறியதால், இந்த ரெயில் சாதாரண ரெயிலாக மாற்றப்பட உள்ளது. ரெயில் கட்டணமும் குறைக்கப்பட உள்ளது.
அதன்படி சென்னை-மைசூரு இன்டர்சிட்டி விரைவு ரெயில் கட்டணம் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.15-ம், சேர்கார் வகுப்புக்கு ரூ.45-ம் குறையும். இதுபோல, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விரைவு ரெயிலில் பயணிப்பவர்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.
- வி.சி.க.-வில் இருந்து விலகுவதாக ஆஜவ் அர்ஜூனா அறிவித்தார்.
- த.வெ.க.-வில் இணைவது பற்றிய கேள்விக்கு ஆதவ் அர்ஜூனா பதில் அளித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, "எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன். இணைப்பு என்பதை தாண்டி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசனை செய்து கொண்டு இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, "த.வெ.க.-வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு விரைவில் செய்தியாளர்களை சந்தித்து என்ன முடிவு என்பதை அறிவிக்கிறேன்," என்று தெரிவித்தார்.
முன்னாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக வி.சி.க.-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தினார்கள்.
இடையகோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பலக்கனூத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி அதே ஊரைச் சேர்ந்த 7 வயது முதல் 10 வயது வரை உள்ள 7 சிறுமிகளை தேர்வு செய்து அவர்களை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தினார்கள்.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு சப்தகன்னிகளாக 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை சப்தகன்னிமார் தெய்வங்களாக பாவிக்கப்பட்டு, மஞ்சள் உடை அணிவித்து கையில் காப்பு கட்டி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
பின்னர் சிறுமிகள் கோவிலில் தங்க வைக்கப்பட்டு சுவாமிகளுக்கு பூஜை நடத்துவது போன்று அவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விழாவின் 7ம் நாளான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஊர் எல்லையில் இருந்து சப்த கன்னிகளான 7 சிறுமிகளை நெய் விளக்கு ஏந்தி மேள தாளம் முழுங்க ஊர்வலமாக முக்கிய வீதியின் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டது.
அதை தொடர்ந்து பூக்குழி இறங்குவதற்காக ஆழி வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு சப்த கன்னிமார்கள் 7 சிறுமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு குருசாமிகள் வீரப்பன், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது சுவாமி ஐயப்பன் பஜனை பாடல்களை பாடியபடி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏரளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.






