என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போலீசார் வசந்தகுமாரை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • போராட்டம் நள்ளிரவை கடந்தும் நீடித்ததால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த 4-ம் வகுப்பு மாணவியிடம், பள்ளி பெண் நிர்வாகி ஒருவரின் கணவரான வசந்தகுமார்(வயது 54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் சோர்வடைந்த மாணவி மாலையில் வீட்டிற்கு சென்றதும், நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக பள்ளிக்கு விரைந்து இதுகுறித்து கேட்டறிந்ததுடன் மணப்பாறை போலீசிலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வசந்தகுமாரை மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கினர். மேலும் பள்ளி அலுவலக கண்ணாடிகளையும், அங்கிருந்த பூந்தொட்டிகளையும் நொறுக்கினர். அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். நீண்ட நேரமான நிலையில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நொச்சிமேடு பகுதியில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நள்ளிரவை கடந்தும் நீடித்ததால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் மணப்பாறை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.
    • சோத்துபெரும்பேடு: கிருதலபுரம், புதூர், அருமந்தை, வீச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவாயல்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நொளம்பூர்: எஸ்பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் ஏரியா, குரு சாமி சாலை, நொளம்பூர் கட்டம் 1 முதல் 2, யூனியன் சாலை, விஜிஎன் நகர் கட்டம் 1 முதல் 4 வரை, 1 முதல் 8வது பிளாக், கம்பர் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டி பாளையம் அவென்யூ, எம்சிகே லேஅவுட், எம்ஜிஆர் பல்கலைக்கழகம், பாணன் சோலை தெரு, மாதா கோவில் பகுதி, பெருமாள் கோவில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் ஏரியா, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பட சாலை தெரு.

    அய்யப்பாக்கம்: டிஎன்எச்பி அய்யப்பாக்கம் பிளாட். எண் 1 முதல் 8000 வரை, வி.ஐ.பி பெட்டி, கோட்டைமேடு, கொல்லகலா முகாம், ராஜ அம்மாள் நகர், காமராஜர் நகர், சென் பீட்டர் கல்லூரி சாலை, டிஎன்எச்பி 338 பிளாட்ஸ்.

    காவனூர்: சிறுகளத்தூர், கெளுத்திப்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம் நகர், மலையம்பாக்கம், குன்றத்தூர், பஜார் தெரு, மேத்தா நகர், மணஞ்சேரி ஜி சதுக்கம்.

    மணப்பாக்கம்: ஆர்இ நகர் 5-வது முதல் 9-வது தெரு வரை, கிருஷ்ணா நகர், துரைசாமி நகர் ராமகிருஷ்ணா நகர் அனெக்ஸ், குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, சித்தார்த் அடுக்குமாடி குடியிருப்பு.

    சிறுசேரி: ஹிராநந்தினி அபார்ட்மென்ட், ஒலிம்பியா அபார்ட்மென்ட், நாவலூர், சிறுசேரி சிப்காட் ஐடி பார்க் அனைத்து பகுதி, தாழம்பூர், ஓஎம்ஆர் சாலை, சிப்காட், புதுப்பாக்கம், அரிஹந்த் அபார்ட்மென்ட், வாணியம்சாவடி, கழிப்பத்தூர், ஜேஜே நகர், முத்தம்மா நகர், ஆனந்த் என்ஜினீயரிங் காலேஜ், சீனிவாச நகர், காழிபட்டூர்

    சோத்துபெரும்பேடு: கிருதலபுரம், புதூர், அருமந்தை, வீச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவாயல்.

    திருவேற்காடு: தேவி நகர், பாக்யலட்சுமி நகர், புளியம்பேடு பெரிய தெரு, நூம்பல் மெயின் ரோடு, பிஎச் சாலை, ஐஸ்வர்யா கார்டன் பொன்னியம்மன் நகர் ராஜன் குப்பம், மெட்ரோ சிட்டி கட்டம் 1 , விஜிஎன் மகாலட்சுமி நகர், யாதவால் தெரு, பெருமாள் கோவில் தெரு, பாடசாலை தெரு, சென்னை புதிய நகரம், ராஜீவ் காந்தி நகர், செட்டி மெயின் ரோடு, பெருமாள் கோவில் தெரு, மேலயம்பாக்கம், படவட்டு அம்மன் கோவில் தெரு, ஈடன் அவென்யூ, விஜயா நகர், சரஸ்வதி நகர், சீனிவாச பிள்ளை தெரு, பச்சையப்பன் நகர், கொன்ராஜ் குப்பம், தாமரை அவென்யூ, நோவா, ஆர்டிஎல் நகர், பெருமாள் கோவில் தெரு, கோலடி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
    • செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் பனி மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.

    இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

    அதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பனி அதிகமாக இருக்கும் பகுதிகளில் குறைந்த வேகத்தில் ரெயிலை இயக்குமாறு ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 

    • வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.
    • கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

    கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.

    வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

    கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

    தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநெல்வேலியில் உள்ள பிரபல இருட்டுக் கடைக்கு சென்றார்.
    • அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்வா சாப்பிட்டார்.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.

    அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் வழங்கிய அல்வாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.

    அதன்பின் இருட்டுக் கடை என பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டார்.

    முந்தைய காலத்தில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா விற்பனை நடைபெற்றது என்றும், அப்போது மக்கள் அந்தக் கடையை 'இருட்டாக இருக்கும் கடை' எனக்கூறி அழைத்ததால் 'இருட்டுக் கடை' என பெயர் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து கேட்டு தெரிந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பணம் கொடுத்து அல்வா வாங்கிச் சென்றார்.

    • விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
    • தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர், தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.

    பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

    தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தித்திறன் கொண்ட விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிறுவனத்திலும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.
    • குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில், தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த டீசலைக் குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேரந்த சூர்யா- சினேகா தம்பதியின் 1.5 வயது குழந்தை மைதிலி.

    வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.

    குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    • இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே!
    • எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தியவர்களை மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?

    அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது.

    ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள்.

    இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ?

    இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!

    இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?

    அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா !? ஒரு கண்டனம்... கொஞ்சம் எதிர்ப்பு... அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிப்பவர்களைத் தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்.
    • வெளியூரிலிருந்து அங்கு செல்லும் சமூக விரோத சனாதனக் கும்பல்தான் கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறது.

    திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதஅடிப்படைவாதிகள் தமிழக மக்களுக்கு சவால் விடுத்துள்ளனர் என்று விசக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    அதனால், தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிப்பவர்களைத் தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் நிலவுவதாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாலும் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மனித வளம், தொழில் வளம் என அனைத்துத் தளங்களிலும் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கு இங்கு நிலவும் சமூக நல்லிணக்கமே காரணமாகும். தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை விரும்பாத சனாதன சக்திகள் இங்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.

    இந்துக்களும், முஸ்லிம்களும் சமய நம்பிக்கையோடு மட்டுமின்றி சகோதரத்துவத்தோடும், தமிழர் என்ற உணர்வோடும் பல நூறு ஆண்டுகளாகத் திருப்பரங்குன்றத்தில் தத்தமது வழிபாட்டுத் தலங்களில் அமைதியாக வழிபட்டு வருகின்றனர். எப்படியாவது தமிழ்நாட்டிலும் மதக் கலவரத்தை மூட்டி தமிழர்களின் ஒற்றுமையைக் கெடுக்க எண்ணும் சனாதனக் கும்பல் இப்போது திருப்பரங்குன்றத்தில் இரத்தக் களறியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இத்தகையப் பிரிவினைவாத முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாட்டின் சமய நல்லிணக்கச் சூழலைக் கெடுக்க முயற்சிக்கும் நாசகார சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சமணம், சைவம், வைணவம் என அனைத்து வழிபாடுகளும் நடந்துள்ளன. அங்குள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானது. அந்தக் கோயில் அமைந்துள்ள மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோயிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளன.

    தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செய்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு அப்படி நேர்த்திக் கடன் செய்யச் சென்ற முஸ்லிம் ஒருவரைக் காவல்துறையினர் தடுத்துள்ளனர். அதன்பின் வருவாய் வட்டாட்சியர் தர்காவில் ஆடு, கோழி பலியிடக்கூடாது எனத் தடை விதித்துள்ளார். அதுதான் இந்தப் பிரச்சனைக்கான மூலக் காரணம் எனத் தெரிகிறது.

    காவல் துறையினரும், வருவாய் வட்டாட்சியரும் தம் விருப்பத்தின்பேரில் செயல்பட்டனரா? அல்லது அவர்களுக்கு அப்படி வழிகாட்டுதல் ஏதும் தன்னால் வழங்கப்பட்டதா? என்பதை மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்த வேண்டும்.

    சிக்கந்தர் தர்கா முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்பதை நீதிமன்றம் 100 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1923 ஆம் ஆண்டு மதுரை "அடிஷனல் சப் கோர்ட்" பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்து அந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாண அரசு இங்கிலாந்தில் இருந்த அன்றைய உச்சநீதிமன்றமாகக் கருதப்பட்ட பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்தது. அதன் மீது 1931 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே அது உறுதி செய்தது. சுதந்திரம் அடைந்த பிறகு 1975 இல் மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் மீண்டும் அதே தீர்ப்புதான் கூறப்பட்டது.

    திருப்பரங்குன்றத்தில் வாழும் மக்கள் எவரும் இப்பிரச்சனையை எழுப்பவில்லை. அவர்கள் இணக்கத்தோடு வாழவே விரும்புகின்றனர். வெளியூரிலிருந்து அங்கு செல்லும் சமூக விரோத சனாதனக் கும்பல்தான் கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறது.

    இந்தப் பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் சரியாகக் கையாளவில்லை என்றும்; அவர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் குற்றச் சாட்டு குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விசாரித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றத்தில் சனாதன சக்திகளைச் சரியாகக் கையாளாமல் விட்டால் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் இப்படி கவரங்களை ஏற்படுத்துவார்கள். இதைத் தமிழ்நாடு அரசு உணரவேண்டும்.

    திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மத அடிப்படைவாதிகள் தமிழ்நாட்டு மக்களுக்குச் சவால் விடுத்துள்ளனர். அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, மதச்சார்பற்ற சக்திகள் அனைவருக்கும் உள்ளது.

    தமிழ்நாட்டைக் காக்கும் கடமையை நிறைவேற்ற அனைத்து சனநாயக சக்திகளும் முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
    • ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று யுஜிசி விதிக்கு எதிராக முழங்கிய திமுகவின் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் எங்கள் திமுக மாணவரணி, எம்.பி.க்கள் மற்றும் இந்தியா தொகுதியின் உறுப்பினர்கள், என் அன்பான சகோதரர்கள் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ், தலைநகரில் மாணவர்களின் குரல்களைப் பெருக்கி, கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாத்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    ஆர்எஸ்எஸ்-பிஜேபி-யின் நிகழ்ச்சி நிரல் தெளிவாக உள்ளது: ஒரு தனித்துவமான அடையாளத்தை திணிப்பதற்காக பல்வேறு வரலாறுகள், மரபுகள் மற்றும் மொழிகளை அழிப்பது. எனது சகோதரர் ராகுல் காந்தி சரியாகச் சொன்னது போல், யுஜிசி வரைவு வெறும் கல்வி நடவடிக்கை மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவின் கூட்டாட்சியின் சாராம்சம்.

    நீட் முதல் சி.ஏ.ஏ முதல் என்.ஆர்.சி. வேளாண்மை சட்டங்கள் வரை, நமது அரசியலமைப்பு மற்றும் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான ஒவ்வொரு போராட்டத்திற்கும் திமுக தலைமை தாங்கியுள்ளது. இன்று, புது தில்லியில் எங்கள் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
    • 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து துறை சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பக்தர்களின் நலனுக்காக போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சாலை பாதுகாப்பு குறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் கூறியதாவது:-

    தைப்பூச பக்தர்களின் நலன் மற்றும் உதவிக்காக பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. குற்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு உதவிடவும் 'மே ஐ ஹெல்ப்' என்ற பெயரில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அடிவாரம், பஸ் நிலையம், கிரிவீதிகளில் 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 பேர் கொண்ட 28 குற்ற தடுப்பு போலீஸ் குழு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை இருக்கும். எனவே அதையொட்டிய 4 நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் பஸ்நிலையம், கோவிலுக்கு செல்லும் வழி, வாகன நிறுத்தம் தெரிந்து கொள்வதற்காக 300 வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து 300 கேமராக்கள் பொருத்தும் பணியும் நடக்கிறது. ஓரிரு நாட்களில் அவை செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலைக்கோவிலுக்கு செல்ல ஒரு வழிப்பாதை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மலைக்கோவிலுக்கு செல்போன் கொண்டு சென்று பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல், புளி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி-குளத்தூர் கடற்கரை வழியாக பீடி இலை உள்ளிட்ட சில பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் நேற்று இரவு முதல் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை குளத்தூர் அருகே கல்லூரணி கிராம கடற்கரை பகுதியில் லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டை பீடி இலைகளும் (மொத்தம் 1200 கிலோ), இங்கிலாந்து நாட்டின் சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் லோடு ஏற்றி வந்த வாகனத்தில் இருந்த ஓட்டப்பிடாரம் மேலசுப்பிர மணியபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் (வயது 25), ஒசநூத்து சிவன்கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கைப்பற்றபட்ட சிகரெட் மற்றும் பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.

    மேலும் கடத்தலுக்கு உடந்தையாக அவர்களுடன் வந்து தப்பி ஓடிய தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×