என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
    • வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

    காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் 'சீல்' உடைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

    வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
    • பல்வேறு பகுதிகள் பனி மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    கடந்த 3 நாட்களாக நிலவும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பனி மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.

    மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில்  கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. 

    • பாலியல் தொல்லை அளித்த புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • முதல் குற்றவாளியான அவருக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் சரணடைந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட வசந்தகுமார், மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 5 பேரும் திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாராட்சி, சுதா, செழியன் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய 4 பேருக்கு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமின் வழங்கினார்.

    இந்த வழக்கின் முதல் குற்றவாளியான வசந்தகுமாருக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும்.

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை நகரின் முகப்பேறு பகுதியில் அம்பேத்கர் நகர், 9வது பிரதான சாலை, மொகப்பேர் இஆர்ஐ திட்டம், 8வது தெரு, கோல்டன் பிளாட்ஸ், கோல்டன் காலனி, லாவண்யம் அபார்ட்மென்ட், தீயணைப்பு சேவை குடியிருப்புகள், முகப்பேர் சாலை, சத்யா நகர், மதியழகன் நகர், சர்ச் சாலை, பள்ளித் தெரு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

    • தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார்.
    • ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், ஹேமராஜூ என்பவர் கைது.

    கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.

    வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

    கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

    தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், ஹேமராஜூ என்பவரை கைது செய்தனர்.

    இந்நிலையில், கோவை- திருப்பதி விரைவு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணியளவில் தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து.
    • தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணியளவில் கொச்சுவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    *நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணியளவில் தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 06012) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

    *தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணியளவில் நாகர்கோவில் செல்லும் (வண்டி எண்: 06011) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14, 21, 28, மே 05, 12, 19, 26, ஜூன் 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    *தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணியளவில் கொச்சுவேலி செல்லும் (வண்டி எண்: 06035) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 11, 18, 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

    *கொச்சுவேலியில் இருந்து இரவு 3.25 மணியளவில் தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 06036) எக்ஸ்பிரஸ்ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

    இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் மே 4ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

    www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் நுழைவுத் தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகிறது.

    • தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.
    • திமுக அரசின் நிர்வாகத்திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழகத்தில் பள்ளிகள், ரெயில் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் நடந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்!

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.

    நாள்தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத்தவறி, சட்டம் ஒழுங்கை முற்றுமுழுதாக சீரழித்துள்ள திமுக அரசின் நிர்வாகத்திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

    திமுக ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல.

    அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.

    கடந்த 23.12.24 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை, 01.02.25 அன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பாலியல் தொல்லை,

    14.01.25 அன்று மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 18.01.25 அன்று கரூரில் பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை, 21.01.25 அன்று திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 24.01.25 அன்று திண்டுக்கல் நத்தம் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.

    18.01.25 அன்று தென்காசி வீராணத்தில் காவலர்களால் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல், 25.01.25 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் மகிழுந்தில் பயணித்த பெண்களை வீடுவரை விரட்டி சென்ற கொடுமை, 03.02.25 சேலம் தலைவாசலில் பள்ளி மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை.

    05.02.25 கிருஷ்ணகிரி பர்கூர் அருகே பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 05.02.25 அன்று கள்ளக்குறிச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலில் பெண் கிராம நிர்வாக அலுவலர் முகத்தில் மீது சாணியை வீசி கீழே தள்ளி கொடுந்தாக்குதல், 05.02.25 அன்று கலைஞர் பேருந்து நிலையத்தில் நின்ற 19 வயது பெண் பாலியல் துன்புறுத்தல், 05.02.25 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.

    06.02.25 அன்று மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை, 06.02.25 அன்று சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை.

    18.11.24 அன்று திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3 ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, 21.11.24 அன்று நாகர்கோயிலில் பள்ளி மாணவிக்கு அரசு பேருந்தில் நடத்துநர் பாலியல் தொல்லை.

    07.12.24 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை, 21.12.24 அன்று சங்கரன்கோயிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 26.12.24 அன்று ராஜபாளையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெருங்கொடுமையாகும்.

    கடந்த 31.12.22 அன்று சென்னை, விருகம்பாக்கத்தில் அம்மையார் கனிமொழி பங்கேற்ற திமுக நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருந்த பெண் காவலர் ஒருவருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்தது முதல் நேற்று முன்தினம் (05.02.25) தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கல்பனா நாயக் அவர்களே தம்மை கொல்ல சதி நடப்பதாக புகார் கூறியது வரை பெண் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற மிக மோசமான சூழல் தமிழ்நாட்டில் உள்ள நிலையில் திமுக ஆட்சியில் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?

    வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா? என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலைக்கு தமிழ்நாட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ளது திமுக அரசு. பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என்றெல்லாம் பேசுவதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம். இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் திமுக ஆட்சி அழிவது உறுதி!

    ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
    • வந்திதா பாண்டேவை உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    வந்திதா பாண்டேவை உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், பதவி ஏற்கும் நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை மத்திய பணியில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய பணிக்கு செல்ல வந்திதா பாண்டே விண்ணப்பித்திருந்த நிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எஸ். அதிகாரி வந்திதா பாண்டேவின் கணவர் வருண்குமார் ஐ.பி.எஸ். திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல அரசு அலுவலகங்களில் 40 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம்.
    • ஏரி உள்வாய் அரசு புறம்போக்கு நிலம் என்று புறக்கணிக்கிறார்கள்.

    வில்லிவாக்கம்:

    கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த மாஸ்டர் வசந்தகுமார்ஜி தலைமையில் பொதுமக்கள் சென்னை மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தார்கள். அந்த மனுவில், "நாங்கள் 200 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறோம்.

    எங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு நாங்கள் மனு அளித்த போது இந்த பகுதி ஏரி உள்வாயில் அரசு புறம்போக்கு நிலம் என்று தவிர்த்தார்கள். இதனால் நாங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில் அரசாங்க ஏரி உள்வாயில் புறம்போக்கு என்று எங்களுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

    இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் தளம் போட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இதே முகவரியில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 1994 -ம் ஆண்டு சென்னை கொளத்தூர் சர்வே எண் 13,14, பாரத் ராஜீவ் காந்தி நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி சிறப்பு தாசில்தார் விஜயகுமார் என்பவரின் தலைமையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அந்த நகலை வைத்து நாங்கள் பல அரசு அலுவலகங்களில் 40 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் ஏரி உள்வாய் அரசு புறம்போக்கு நிலம் என்று புறக்கணிக்கிறார்கள். எனவே தாங்கள் எங்களுக்கு பட்டா வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    • அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
    • வருகிற நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரசு போகுவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி அதிகபட்சமாக 27 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல என்பது மட்டுமின்றி, இந்த உயர்வையும் தமிழக அரசு தானாக வழங்கவில்லை. 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு ரூ.4,000 மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

    அதுமட்டுமின்றி, அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு அகவிலைப்படி உயர்வு வழங்கும் வகையில், வருகிற நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அல்வாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    பிறகு, திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.

    அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். அவர்கள் வழங்கிய அல்வாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.

    இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே?

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பதிவுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் அல்வா வகைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    *கல்விக்கடன் தள்ளுபடி

    *பயிர்க்கடன் தள்ளுபடி

    *5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி

    *சிலிண்டர் ரூ.100 மானியம்

    *டீசல் விலை ரூ.4 குறைப்பு

    *மாதம் ஒருமுறை மின்கட்டணம்

    *100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம்

    *நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2500

    *கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ. 4000

    *இந்து கோவில்களை புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு

    *அரசு துறைகளில் புதிதாக 2,00,000 பணியிடங்கள்

    *காலியாக உள்ள 3.50.000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

    *பழைய ஓய்வூதிய திட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×