என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் கொண்டது.
    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

    ஈரோடு:

    கடந்த 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 46 பேர் போட்டியிட்டுள்ளனர். இருப்பினும் திமுக, நாம் தமிழர் கட்சியிடையே போட்டி நிலவியது.

    இதனை தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் கொண்டது.

    இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். அவர் இதுவரை 27,640 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்றுள்ளார்.

    இவர்களை தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் சொற்ப வாக்குகளே பெற்றுள்ளனர். இதனிடையே, இத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தொடர்ந்து நோட்டா 769 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 

    • கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போலீசார் கைதான 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மரக்கடை சந்திரன் முதல் வீதியை சேர்ந்தவர் ஆய்ஷம்மாள் (வயது75). இவர் மதுக்கரையில் இருந்து பஸ்சில் டவுன்ஹால் வந்தார்.

    டவுன்ஹால் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கிய அவர் தனது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆய்ஷம்மாள் உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    அதேபோல கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வசந்தா(75). இவர் தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாததால் சக்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.

    சம்பவத்தன்று வசந்தா சரவணம்பட்டி பகுதியில் உள்ள கோவிலுக்கு பஸ்சில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது அருகில் இருந்த பெண்கள் அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து வசந்தா சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இந்த 2 புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க, உதவி கமிஷனர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில், உக்கடம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, உமா, மஞ்சு மற்றும் போலீசார் கார்த்தி, பூபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் கடை வீதி பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 பெண்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த நந்தினி(28) மற்றும் காளிஸ்வரி(28) ஆகியோர் என்பதும், மூதாட்டிகளிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவரும் அண்ணன் - தம்பியை திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் பல வருடங்களாகவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    காளிஸ்வரி தனது 12 வயதிலேயே தனது தாயாருடன் சேர்ந்து திருட தொடங்கி உள்ளார். திருமணம் முடிந்த பின்னர், தனது கணவரின் அண்ணன் மனைவியுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இவர்கள் இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    முக்கியமாக இவர்கள் கோவில் திருவிழாக்களை குறி வைத்து, அங்குள்ள கூட்டநெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம் நகைகளை திருடி வந்துள்ளனர்.

    தாங்கள் திருடிய நகைகளை அந்ததந்த பகுதியிலேயே விற்பனை செய்யும் அவர்கள், அந்த பணத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கும் இன்ப சுற்றுலா சென்று சொகுசாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் திருடிய பணம் மூலம் தூத்துக்குடியில், பங்களா கட்டி சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள்.

    கோவையில் தற்போது பேரூர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோனியம்மன் கோவில் திருவிழா நடக்க உள்ளதை அறிந்து 2 பேரும் திருடுவதற்காக கோவைக்கு வந்ததும், திருவிழா தொடங்க சில நாட்கள் இருப்பதால் பஸ்களில் பயணித்து மூதாட்டிகளிடம் நகையை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.

    தற்போதைய நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 27,642 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்தார்.
    • தொடர்ந்து அலுவலர்கள் சமாதானப்படுத்தி சீதாலட்சுமி முகவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கி கொடுத்தனர்.

    ஈரோடு:

    சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணும் கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்கும் எண்ணும் பணி தொடங்கியது.

    அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்தார். அவரது கட்சி முகவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது முகவர் சீதாலட்சுமியிடம் கூறி உள்ளார்.

    இதையடுத்து சீதாலட்சுமி இதுகுறித்து வாக்கு எண்ணும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அலுவலர்கள் சமாதானப்படுத்தி சீதாலட்சுமி முகவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கி கொடுத்தனர்.

    அதன் பின்னர் அவர் உள்ளே சென்றார். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

    • மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டாவும் அந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • காயமடைந்த பவித்திர சந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்கலூரில் உள்ள கோழிப் பண்ணை உள்ளது. இந்த கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உத்தம்கட்டா (வயது22), பவித்தரசந்திரன் (25) ஆகிய 2 பேரும் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் இருவரும், நேற்றிரவு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு, அருகில் உள்ள ரூபி என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக வந்தபோது, வயலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் உத்தம்கட்டா தெரியாமல் சிக்கினார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனை தடுக்க முயன்ற பவித்திரசந்திரன் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

    இதுகுறித்து கோழிப்பண்ணைக்கு சென்று உத்தம்கட்டாவின் தந்தைக்கு அபிரகாம்கட்டா (45) என்பவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    அப்போது மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டாவும் அந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த பவித்திரசந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சார வேலியில் சிக்கி வடமாநிலத்தை சேர்ந்த தந்தை-மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காலை நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.
    • கொடைக்கானலில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி என்பது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. மாலை 4 மணிக்கு மேல் நீர்ப்பனியால் குளிர் தொடங்கி விடுகிறது. இரவு 8 மணிக்கு மேல் கடும் குளிர் நிலவுகிறது. இரவு 7 மணிக்கு மேல் சாலையில் நிற்கும் வாகனங்களில் கனமழை பெய்தது போல் நீர் நிரம்பி காணப்படுகிறது. இரவு 7 மணிக்கு 10 டிகிரி வரை குளிர் அதிகரிக்கிறது. காலை நேரங்களில் புல்வெளிகளில் கடும் உறைபனி நிலவி வருகிறது. பனியின் தாக்கம் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக இரவு 8 மணி முதல் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    காலை நேரங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் இரவில் விரைவாக இருப்பிடங்களுக்கு செல்வதும் காலை நேரங்களில் தாமதமாக வெளியில் வருவதுமாக உள்ளனர். இவ்வாறு கடும் குளிர் நிலவும் நிலையில் ஸ்வெட்டர், குல்லா விற்பனை மட்டுமே அதிகரித்துள்ளது.

    ஏரிச்சாலை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் நடத்துபவர்கள் விரைவாகவே கடைகளை அடைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புல்வெளி மற்றும் நீர்நிலைகளில் உறைபனி படர்ந்திருப்பதால் அதனை சுற்றுலா பயணிகள் படம் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானலில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உறைபனி என்பது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும். இந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் பனியின் தாக்கம் சற்று அதிகரித்து உறைபனி ஓரிரு நாட்கள் தென்பட்டு மறைந்தது.

    அதன் பிறகு மீண்டும் உறைபனி நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளும் முடங்கி வருகிறது.

    • சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரிக்கிறது.
    • குளிர் காலை 9 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்தது. பின்னர் தை மாதம் பிறந்ததும் பனிப்பொழிவு சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடமாடுகின்றனர்.

    மாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடும் குளிர் நிலவுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அதே போல ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் நடுங்கும் நிலையே நீடிக்கிறது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளிலும் கடந்த 4 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் காலை நேரங்களில் செல்பவர்கள் குளிரில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாநகரில் கடந்த வாரம் குளிரின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பனிப்பொழிவு அதிகரிப்பால் கடந்த 4 நாட்களாக குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து வாட்டி வதைக்கிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகளை நிறுத்திவிட்டு போர்வைகளை போர்த்தியபடியே பொதுமக்கள் தூங்கும் நிலையே ஏற்பட்டது. இந்த குளிர் காலை 9 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரிக்கிறது. மேலும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

    மேலும் வானிலை மையமும் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறி உள்ளதால் நேற்று 86 டிகிரி வெயில் பதிவான நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரவில் பனி குளிரும், பகலில் வெப்பத்தின் தாக்கமும் என வித்தியாசமான காலநிலை நிலவுவதால் இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். 

    • கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல் ஒரு வாரம் நீர்ப்பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது.
    • ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக, அந்த மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மற்றும் பனிக்காலமும் சற்று தாமதமாக தொட ங்கியது.

    கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல் ஒரு வாரம் நீர்ப்பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது. தொடர்ந்து நவம்பர் 25-ந்தேதிக்கு பிறகு உறைபனிக்காலம் தொடங்கியது. ஆனால் உறைபனி தொடங்கிய ஒரு வாரத்துக்குள் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. பின்னர் பெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக உறைபனி குறைந்தது.

    இந்த நிலையில் ஊட்டியில் டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் உறைபனியின் தாக்கம் மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனி படர்ந்து காணப்பட்டது. மேலும் உறைபனி காரணமாக வனங்களில் பசுமை குறைந்து தேயிலை செடிகள் கருகின.

    தை மாதம் தொடங்கிய நிலையில் பனியின் தாக்கம் மெல்ல குறைந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் உறைபனி கொட்ட தொடங்கி உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர் அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. தைமாதம் முடிவடைய உள்ள நிலையில் ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உறைபனி யின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • நேற்று தங்கம் விலை மாற்றமின்றி ரூ.63,440-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 1-ந்தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது. 

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,945-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440

    06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440

    05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240

    04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480

    03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-02-2025- ஒரு கிராம் ரூ.107

    06-02-2025- ஒரு கிராம் ரூ.107

    05-02-2025- ஒரு கிராம் ரூ.107

    04-02-2025- ஒரு கிராம் ரூ.106

    03-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
    • பணிகள் முடிந்து வருகிற 13-ந்தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்த பெற்ற யோக நரசிம்மசாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு 1,305 படிகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். கார்த்திகை மாத பெருவிழாவையொட்டி முதியோர் மற்றும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ரோப் கார் சேவை இயங்கி வருகிறது.

    இதனால் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. ரோப் காரில் மலைக்கு செல்ல ரூ.50, மலையிலிருந்து இறங்க ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில், மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை (ஞாயிற்றுகிழமை) முதல் 12-ந்தேதி (புதன்) வரை 4 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    பணிகள் முடிந்து வருகிற 13-ந்தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.

    காலை 9 மணி நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 7837 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    • முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
    • வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

    காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் 'சீல்' உடைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

    வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×