விவசாய நிலத்தில் அனுமதியின்றி வைத்திருந்த மின்சார வேலியில் சிக்கி தந்தை-மகன் பலி

மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டாவும் அந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காயமடைந்த பவித்திர சந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விவசாய நிலத்தில் அனுமதியின்றி வைத்திருந்த மின்சார வேலியில் சிக்கி தந்தை-மகன் பலி
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்கலூரில் உள்ள கோழிப் பண்ணை உள்ளது. இந்த கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உத்தம்கட்டா (வயது22), பவித்தரசந்திரன் (25) ஆகிய 2 பேரும் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும், நேற்றிரவு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு, அருகில் உள்ள ரூபி என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக வந்தபோது, வயலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் உத்தம்கட்டா தெரியாமல் சிக்கினார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தடுக்க முயன்ற பவித்திரசந்திரன் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

இதுகுறித்து கோழிப்பண்ணைக்கு சென்று உத்தம்கட்டாவின் தந்தைக்கு அபிரகாம்கட்டா (45) என்பவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அப்போது மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டாவும் அந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த பவித்திரசந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சார வேலியில் சிக்கி வடமாநிலத்தை சேர்ந்த தந்தை-மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com