என் மலர்
புதுச்சேரி
- சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
- சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மைதிலி.
தம்பதியின் 2-வது மகள் ஆர்த்தி (வயது 9) கடந்த 2-ந் தேதி வீட்டுக்கு வெளியே ஆர்த்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு சி.சி.டி.வி.யில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் எங்கே சென்றார்? என்ற எந்த பதிவும் கிடைக்கவில்லை.
போலீசார் அந்த பகுதியில் வீடு வீடாக தேடியும் சிறுமி பற்றி தகவல் தெரியவில்லை. 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவும் வலியுறுத்தினர்.

4 நாட்களாகியும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் 40 போலீசார் நேற்று முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது ஒரு கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. சோலை நகரை ஒட்டிய அம்பேத்கார் நகர் பகுதி மாட்டு கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வாய்க்காலில் வேட்டியால் கட்டி மூட்டை ஒன்று கிடைப்பதை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அதில் மாயமான சிறுமியின் உடல் இருந்தது. அவரை கொலை செய்து கை, கால், வாயை கட்டி மூட்டையாக வீசியது தெரியவந்தது.
இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலியல் துன்புறுத்தல் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய கோரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ள 5 நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினர்.
முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்குள் மறியல் செய்த பொதுமக்கள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைத்தனர்.
இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கொலையாளிகளை பிடிக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்தார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டிற்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினார்.
இதுதொடர்பாக 2 பேரிடமும் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 2 அமைச்சர்களும் பதவி வகித்து வந்தனர்.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் காரைக்கால் நெடுங்காடு (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் துறைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் சந்திரபிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். புதிய அமைச்சராக திருமுருகன் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்ற பின், அவருக்கான துறை ஒதுக்கப்படும்.
- பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், ஆலோசனைக்கூட்டம் கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது.
- தேசிய கூட்டணி கட்சி தலைவர் ரங்கசாமி பா.ஜனதா போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், ஆலோசனைக்கூட்டம் கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது. நாட்டின் அனைத்து தொகுதிக்கும் மத்திய மந்திரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை நடந்துள்ள தேர்தல் ஏற்பாடுகள்? மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மத்திய மந்திரி புதுவைக்கு வந்துள்ளார்.
தேசிய கூட்டணி கட்சி தலைவர் ரங்கசாமி பா.ஜனதா போட்டியிடும் என அறிவித்துள்ளார். தாமரை சின்னத்தில்தான் நிற்கப்போவதையும் உறுதிபடுத்தியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவரிடம், வெளியூரை சேர்ந்தவரா? மண்ணின் மைந்தரா? யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்? என நிருபர்கள் கேட்டபோது, முதல்கட்ட கூட்டம்தான் நடந்துள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை முன்னிறுத்தும் திட்டம் இப்போது வரை இல்லை என தெரிவித்தார்.
- பா.ஜனதா நாடு முழுவதும் முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
- பா.ஜனதா வேட்பாளர் வலுவானவராக இருக்க வேண்டும் என கட்சித்தலைமை விரும்புகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா நாடு முழுவதும் முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளரும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுவை பா.ஜனதா வேட்பாளர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.
யூனியன் பிரதேசமான புதுவை 4 பிராந்தியமாக உள்ளது. இதனால் 4 பிராந்தியத்திலும் அறிமுகமான வேட்பாளரை அறிவித்தால்தான் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும்.
இந்த நிலையில் புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, புதுவை மாநில தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுவைக்கு வந்தனர்.
இவர்களை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ராமலிங்கம், அசோக்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.
அப்போது புதுவை தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 3 பேர் பட்டியலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என ஆலோசிக்கப்பட்டது. இதில் முடிவு எட்டப்படவில்லை. இதன்பின் ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பா.ஜனதா வேட்பாளர் வலுவானவராக இருக்க வேண்டும் என கட்சித்தலைமை விரும்புகிறது. இதற்கெல்லாம் தகுதி உடையவரான தற்போதைய அமைச்சர் நமச்சிவாயத்தை புதுவை தொகுதியில் களம் இறக்கலாம் என கட்சியின் நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர்.
ஆனால், அமைச்சர் நமச்சிவாயம், தொடர்ந்து புதுவை அரசியலில் இருப்பதையே விரும்பி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுத்து வருகிறார்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். இதை முன்வைத்து எதிர்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். இதனால் அவர்களை போட்டி களத்தில் இறக்கவும் பா.ஜனதா தலைமை தயங்குகிறது.
அதேநேரத்தில் புதுவையை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நியமன எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி கேட்கின்றனர். ஆனால் இவர்களால் பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் பா.ஜனதா தலைமைக்கு தொடர்கிறது. இதுவரை புதுவை தொகுதிக்கு சரியான வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயத்தைத்தான் கருதுகின்றனர். அவர் தொடர்ந்து மறுத்து வருவதால் பா.ஜனதா வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் புதுவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் தற்போதைய சிட்டிங் எம்.பி. வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுவார்.
வைத்திலிங்கம் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அமைச்சர், முதலமைச்சர், சபாநாயகர், எம்.பி. என பல பதவிகளை வகித்தவர். இவையெல்லாம் அவருக்கு சாதகமாக இருக்கும்.
ஒருவேளை தி.மு.க.வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், புதுவையில் பலமான கட்சி தி.மு.க. என்பதை நிரூபிக்க கடுமையான தேர்தல் பணிகளை தி.மு.க.வினர் செய்வார்கள்.
- நிர்வாகிகளை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
- எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்திய 3 பாஜக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகளை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
- காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.
புதுச்சேரி:
பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்பாராத வகையில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை தலையீட்டின் மூலம் அவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது.
ஆனால் காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் காரைக்கால் மீனவர்களது 11 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.
மோட்டார் பொருத்தப்பட்ட இந்த படகுகள் தலா ரூ. 1 கோடிக்கு மதிப்புள்ளவை. இதனால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.
- பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
- ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திருபுவனை (தனி) தொகுதி அங்காளன், உழவர்கரை சிவசங்கர், ஏனாம் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோசியேட் எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் பங்கேற்று வருகின்றனர்.
அரசு பதவிகளில் இல்லாத ஆளுங்கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைந்தது முதலே வாரிய பதவி கேட்டு வருகின்றனர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், ஆட்சி அமைந்து 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பா.ஜனதாவை ஆதரிப்பதால் தங்கள் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக சட்டமன்றத்தில் அவர்கள் குற்றம்சாட்டினர். சட்டமன்றத்தின் முன்பு படிக்கட்டில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்றத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். தனக்கு அரசு பழைய காரை கொடுத்ததால் கார் அடிக்கடி பழுதாவதாகவும், பெட்ரோல் அலவன்ஸ் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஆனாலும் அங்காளனுக்கு அரசு இதுவரை புதிய கார் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனது பழைய காரின் சாவியை சபாநாயகரை சந்தித்து ஒப்படைத்தார்.
ஓடாமல் இருந்த காரை பட்டி பார்த்து தனக்கு வழங்கியுள்ளதால் செல்லுமிடமெல்லாம் அது மக்கர் செய்து நிற்பதாகவும் மற்ற எம்.எல்.ஏ.க்களின் காருக்கு ரூ.30 ஆயிரம் டீசல் அலவன்ஸ் வழங்கும் நிலையில் தனது காருக்கு வழங்கவில்லை என்பதால் காரை திரும்ப ஒப்படைத்துள்ளதாக அங்காளன் தெரிவித்தார்.
ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார். இவர் ஏற்கனவே உழவர் கரை சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதாவில் வாய்ப்பு கேட்டு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இதனால் புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பளிக்காத பட்சத்தில் சிவசங்கர் எம்.எல்.ஏ. என்ன நிலைப்பாடு எடுப்பார் என தெரியவில்லை.
மற்றொரு பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஏனாம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்து வருகிறார்.
இதோடு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் புகார் தெரிவித்து வருகிறார். இதனால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி புதுவை பாராளுமன்ற தொகுதியில் களம் இறங்கும் பா.ஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
- ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது.
- அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று புதுவை வந்தார். பின்னர் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார்.
4 வருடத்திற்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதியான இன்று அன்னையின் கோல்டன் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
பொன்னொளி பூமிக்கு வந்த நாள் கடைபிடிக்கப்படுவதால் அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் தங்க வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி ஆசிரமத்தில் காலை கூட்டு தியான நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னை, அரவிந்தர் அறை பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது.
இதற்காக ஏராளமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். இந்த நிலையில் அரவிந்தர் நினைவிடத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகையொட்டி ஆசிரமத்திற்கு வருகை தந்த பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த பக்தர்களுக்கும், வெளிநாட்டவர், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதிகளவில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.
மேலும் தமிழக கவர்னர் வருகையையொட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தமிழக கவர்னர் ரவி திடீர் வருகையால் அரவிந்தர் ஆசிரம வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
சுமார் அரைமணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த கவர்னர் ரவி புறப்பட்டு சென்ற பிறகே பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
- ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது மகான் அரவிந்தரின் கனவு.
புதுச்சேரி:
புதுவை அடுத்த விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. உலக மக்கள் அனைவரும் எல்லைகளை கடந்து, சாதி, மதம், இன என பாகு பாடுகளின்றி ஓரிடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது மகான் அரவிந்தரின் கனவு.
ஆரோவில் சர்வதேச நகரத்தின் மூலம் செயல் வடிவமாக்கியவர் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என அழைக்கப்படும் மிர்ரா அல்பாசா தலைமையில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் ஆரோவில் சர்வதேச நகரம் கட்டுமான பணிகள் தொடங்கியது. அதனை யொட்டி, ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ந்தேதி ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரோவில் 57-ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டர் வளாகத்தில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தீபிழம்பின் ஒளியில் மாத்ரி மந்திர் (அன்னையின் வீடு) தங்க நிறத்தில் ஜொலித்ததை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
- சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பொதுக்கூட்டம் காலாப்பட்டு தொகுதி கருவடிகுப்பத்தில் நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
அமைச்சர் உதயநிதி சனாதத்தை பேசியதில் தவறில்லை. சனாதானத்தை பற்றி நாங்கள் கூறியதை திரும்ப பெற மாட்டோம். அது பற்றி பேச வேண்டாம் என காங்கிரசார் கூறுகின்றனர். கூட்டணியில் தான் இருக்கிறோம்.
காங்கிரசை காப்பாற்றப்போவது நாம்தான். சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர்கள் சொத்து மதிப்பை பார்க்கிறார்கள். சொத்து மதிப்பு கூடுதலாக இருந்தால் வழக்கும் தொடர்வார்கள்.
ரவுடி, கொலை செய்தவர்களை எங்கும் தேட வேண்டாம், எல்லோரும் பா.ஜனதா அலுவலகத்தில் உள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார்.
ஆனால் சிலர் நம்மோடு அவரை வர விடவில்லை. ஓட்டு பிரிந்தது, அதன் விளைவு தி.மு.க. தோற்றது.
பிரதமர் மோடி அரசில் ரூ.7.5லட்சம் கோடி கையாடல் செய்ததாக மத்திய தணிக்கை குழு குற்றம் சாட்டியுள்ளது.
தி.மு.க. ரூ.1 லட்சம் கோடி ஊழல் செய்ததாக கூறியதற்காக 1¾ வருடம் சிறையில் இருந்தோம். தோலை தின்றவனுக்கு 1¾ வருடம் சிறை என்றால், 2024-க்கு பிறகு ஆயுள் கைதியாகத்தான் பிரதமர் மோடி இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை.
- நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனை பரிசோதித்தபோது பஞ்சுமிட்டாயில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்பது தெரியவந்தது.
தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு நேற்று தடை விதித்தது. உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரையின் பேரில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
தடையை மீறி பஞ்சுமிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் நிறமி கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை என தெரிவித்தார்.
நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நிறம் கலக்கப்படாத வெண்மை நிற பஞ்சுமிட்டாய் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கடற்கரை சாலையில் சாட்டை அடித்துக்கொண்டு குழந்தைகளுடன் பிச்சை எடுத்த கும்பலை குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி தலைமையிலான குழுவினர் பிடித்தனர்.
- குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி சிக்னல்களில் நிற்கும் வாகனங்களில் இருப்பவர்களிடமும், டிரைவர்களிடமும் குழந்தையுடன் வந்து பிச்சை எடுப்பதும், வாகனங்களை தட்டி பொருட்களை விற்க முயல்வதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு, சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி இணைந்து குழந்தைகளுடன் யாசகம் எடுப்போரை 3 வாகனங்களில் சென்று மீட்கும் பணியை கலெக்டர் குலோத்துங்கன், துணை கலெக்டர் வினயராஜ், புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை, புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஜிப்மர் உள்பட 10 இடங்களில் குழந்தை நலக்குழு தன்னார்வலர்கள் பிரிந்து குழந்தைகளுடன் பிச்சை எடுத்தவர்களை மடக்கி விசாரித்தனர். இதில் 1½ மாத குழந்தை முதல் 17 வயது வரை உள்ள 15 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
கடற்கரை சாலையில் சாட்டை அடித்துக்கொண்டு குழந்தைகளுடன் பிச்சை எடுத்த கும்பலை குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி தலைமையிலான குழுவினர் பிடித்தனர். இதில் நகர்ப்புற வீடு அற்றவர்களுக்கான காப்பகத்தில் 3 பேர் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் வந்திருந்ததால் அவர்கள் பற்றிய விபரங்களை அந்தந்த மாநில குழந்தை நல குழுவிடம் தெரிவித்தனர்.
குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தை நலக்குழு தலைவர் சிவசாமி கூறும்போது, குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பது சட்டப்படி தவறு. எனவே பிச்சையெடுக்கப்படும் குழந்தைகளை மீட்டு, அவர்களின் மறு வாழ்விற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.






