என் மலர்
புதுச்சேரி
- இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
- போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.
அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.
சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.
- அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
- பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
தமிழகம்-புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.
அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தினமும் 93 முதல் 94 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
நேற்று 94.64 டிகிரி வெயில் பாதிவாகியுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதனால் பொதுமக்களும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு மற்றும் பழச்சாறுகளை வாங்கி பருகி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவதால் காலை 8 மணிக்கே பிரசாரத்தை தொடங்கும் வேட்பாளர்கள் மதியம் 12 மணிக்குள் முடித்துக் கொள்கின்றனர்.
அதன் பிறகு வெயில் தாழ்ந்தவுடன் மாலை 6 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.
- நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார்.
- உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.
புதுச்சேரி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து லாஸ்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதலமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மாணவர்கள் படிப்படியாக உயர்ந்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செயலாற்றி வருகிறது. கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டவர் பிரதமர் மோடி.
கொரோனா காலத்தில் அண்டை நாடுகள் பசி பட்டினியால் தவித்தபோது, இந்தியாவில் பசி பட்டினி கிடையாது. நாட்டின் பொருளாதாரத்தையும் மிக சிறப்பாக கையாண்டார். உள்நாட்டிலே கொரோனா தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.
நமச்சிவாயம் மண்ணின் மைந்தர். காங்கிரசில் பணியாற்றிய அவருக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால், பா.ஜனதா அவரை அடையாளம் கண்டு அமைச்சராக்கியது. தற்போது அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்திய பா.ஜனதாவுடனும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசுடனும் ஒத்தகருத்து இருக்காது.
அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் இதே நிலை தான். அதனால் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதிற்கு சமம்.
உங்கள் ஓட்டுக்கு உரிமை, மரியாதை உள்ளது. அதை நிலைநாட்ட, உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
- வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
- அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரம் வருமாறு:-
பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ.3 கோடியே 7 லட்சத்து 460. மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 22 லட்சம். கடன் ரூ.6.94 கோடி.
மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ.8.99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ.1.58 கோடி.
நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.
அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை. கடன் ரூ.1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230. அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம். வீட்டு கடன் ரூ.28 லட்சம்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு அசையும் சொத்தாக ரூ.2.86 லட்சம், தனி நபர் கடன் ரூ.40 ஆயிரம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்.
புதுச்சேரி:
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிக சிறப்பை பெற்றது. அதன் நினைவை போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திர பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரமானது, தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்ததாக முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக முருங்கப்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவில் பங்குனி உத்திர விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பக்தருக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) 108 சங்காபிஷேகமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சுவாமிக்கு சந்தனக்காப்பு அரங்கமும் நடக்கிறது.
புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் காலை முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணமும், அம்பாள் உள்புறப்பாடும் நடந்தது.
காராமணிக்குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயக சிவசுப்ரமணிய சாமி கோவிலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்சைசாற்றி அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுவை சஞ்சய்காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவிலில் காலை 8 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதேபோல் புதுச்சேரி கதிர்வேல் சுவாமி கோவில், லாஸ்பேட்டை முருகன் கோவில், பெரியகாலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காலாந்தோட்டம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள சிவசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
- சத்து மாத்திரையை சாப்பிட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
- மொத்தம் ரூ.2½ கோடி அளவுக்கு தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மோசடி நடந்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2019-ம் ஆண்டு வழங்கிய சத்து மாத்திரையை சாப்பிட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் உடனடியாக மருந்துகள் திரும்பப் பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் தரமற்ற மருந்து சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.
2023-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, சுகாதாரத்துறையில் பணியாற்றிய நடராஜன், அவரது மனைவி பெயரில் நடத்திய நிறுவனம், அவரது நண்பரின் நிறுவனம் மூலம் மருந்து கொள்முதல் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து நடராஜன் கைது செய்யப்பட்டார். மொத்தம் ரூ.2½ கோடி அளவுக்கு தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மோசடி நடந்தது தெரியவந்தது.
வழக்கு விசாரணைக்காக மருந்துகளை மற்ற மருந்துகளுடன் இருப்பு வைக்காமல் தனியாக வைத்து சீல் வைக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி, சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து தரமற்ற மருந்துகள் திப்புராயப் பேட்டையில் உள்ள குடோவுனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சீல் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.
- கட்சியின் பெரும்பாலானவர்கள் கைகாட்டும் அமைச்சர் நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதியாக மறுத்து வருகிறார்.
- தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் நடைபெறும் இழுபறி, குளறுபடியால் தொண்டர்கள் மிகவும் சோர்ந்துள்ளனர்.
புதுச்சேரி:
வடமாநிலங்களில் செல்வாக்கோடு இருக்கும் பா.ஜனதாவை தென் மாநிலங்களில் கால் பதிக்க வைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.
தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சியையும் பிடித்தனர்.
தொடர்ந்து கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முடிவை ஓராண்டுக்கு முன்பே எடுத்தனர். இதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் மாதம் 2 முறை புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்தார்.
ஓராண்டுக்கு முன்பிருந்தே தேர்தல் பணியை பா.ஜனதாவினர் தொடங்கினர். ஆனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல், பா.ஜனதா தவிக்கிறது.
கட்சியின் பெரும்பாலானவர்கள் கைகாட்டும் அமைச்சர் நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதியாக மறுத்து வருகிறார்.
அதே நேரத்தில் புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்தினால் தான் வெற்றி கிடைக்கும் என கூறி வருகிறார்.
இதற்கிடையே பா.ஜனதாவினர் கிராமங்கள்தோறும் சுவர்களில் தாமரை சின்னத்தை வரைந்து மீண்டும் மோடி, வேண்டும் மோடி, வாக்களிப்பீர் தாமரைக்கு என பிரசாரத்தையும் தொடங்கினர். வேட்பாளர் அறிவிப்பு வந்து விடும் என்ற ஆர்வத்தோடு தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.
ஆனால் தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் நடைபெறும் இழுபறி, குளறுபடியால் தொண்டர்கள் மிகவும் சோர்ந்துள்ளனர். அமைச்சர் நமச்சிவாயத்தை தவிர்த்து வேறு வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி கிடைக்காது என்ற மனநிலைக்கு பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பா.ஜனதா தேர்தல் பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து போயுள்ளது.
- மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
- கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இரட்டை எஞ்சின் ஆட்சி இருக்க வேண்டும்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கி விட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- டாக்டர் தமிழசை தமிழக பா.ஜனதா தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
- தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக பதவி வகித்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் களம் இறக்கப்படலாம் என்று கடந்த சில மாதங்களாக பேசப்பட்டது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோதெல்லாம் 'ஆண்டவரும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்' என்று தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுபற்றி இன்று காலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். ஜனாதிபதி முர்முவும் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.
டாக்டர் தமிழசை தமிழக பா.ஜனதா தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். பின்னர் 2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதன் பிறகு 1.9.2019 அன்று தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி புதுவை மாநில துணைநிலை ஆளுனர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இரு மாநில ஆளுநராகவும் பதவி வகித்த தமிழிசை தொடர்ந்து 3 ஆண்டாக இரு மாநிலங்களிலும் தேசிய கொடி ஏற்றிய பெருமை பெற்றார்.
டாக்டர் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் வருகிற தேர்தலில் அவரை களம் இறக்க டெல்லி மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தென்சென்னை அல்லது தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்பி இருப்பது பா.ஜனதாவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மாநில தலைவராக இருந்தபோதுதான் கடுமையான விமர்சனங்களையும் தாண்டி கட்சியை பற்றி பேச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்தது.
- சிறுமியின் உடலை ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19), விவேகானந்தன்(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கழிவுநீர் வாய்க்காலில் சிறுமி உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்தது.
சிறுமியின் உடலை ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த சிறுமியின் உடலை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் சிறுமியின் பெற்றோரிடம் முத்தியால் பேட்டை போலீசார், கதிர்காமம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் மூலம் ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
இந்த ரத்த மாதிரிகள் கிருமாம்பாக்கத்தில் உள்ள தடவியல் துறைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
- தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும்.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் உட்பட 23 பேர் கட்சித்தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் சமீபத்தில் தொகுதிவாரியாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. புதுவையில் 23 பேரும் நேர்காணலில் பங்கேற்றனர். ஆனால் இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் அன்பானந்தம், அன்பழகன் உடையார், இளைஞர் பாசறை தலைவர் தமிழ்வேந்தன் ஆகியோரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கட்சிகளுக்கு புதுவையில் வாக்கு சதவீதம் கிடையாது.
பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அதுவும் தற்போது கானல்நீராகிவிட்டது. பாராளுமன்ற தேர்தலில் பெரும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் சீட் பெற உதவும்.
இதனால் கணிசமான சதவீத வாக்குகளை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் புதுவை அ.தி.மு.க.வினர் உள்ளனர்.
- 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று திருமுருகன் பதவியேற்றுக்கொண்டார்.
- பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதமாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து திருமுருகன் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. தேசியகீதம், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த ஆணையை தலைமை செயலாளர் சரத்சவுகான் வாசித்தார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






