என் மலர்
புதுச்சேரி
- தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு CBI விசாரணை வேண்டும் என அதிமுக வலியுறுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு CBI விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் புதுச்சேரியில் நடந்த போராட்டத்தில், 'CPI விசாரணை வேண்டும்' என சிலர் பதாகை ஏந்தி நின்றிருந்தனர்.
இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
- புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
- தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அதிக போதைக்காக சாராயத்தில் கலக்க புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக தமிழக போலீசார் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக மெத்தனால் சப்ளை செய்யப்பட்டாக கூறபடும் புதுச்சேரி மாநில எல்லை யான மடுகரை உள்ளிட்ட இடங்களில் தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் புதுச்சேரியில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழக போலீசார் சோதனை குறித்து தகவல் அறிந்து புதுச்சேரி போலீசார் மடுகரைக்கு விரைந்தனர். இந்த சோதனைக்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் ஏற்கனவே சோதனை நடத்திவிட்டோம். மெத்தனால் எங்கும் பதுங்கி வைக்கப்படவில்லை எனக்கூறி தமிழக போலீ சாரை திருப்பி அனுப்பினர்.
இது தொடர்பாக புதுச் சேரி போலீசார் தரப்பில் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் வீடு புதுச்சேரி மாநில எல்லையான மடுகரை பகுதியில் உள்ளது. அங்கு சோதனை செய்யவும், விசாரணைக்காகவும் தமிழக போலீசார் வந்தனர்.
அப்போது அவர்கள் வந்த வாகனத்தில் சாராயத்தில் போதைக்காக பயன்படுத்தும் மெத்தனால் கேன் இருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
இதற்கிடையே புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதேசின் உறவினர் வீட்டை கண்காணிக்கவும் போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயம் அருந்தியதில் 160க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். அதில் 20 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்ற வந்த பெரியசாமி (40) என்பவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெரியசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
- கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் தேவ.பொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விலைவாசி குறைப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நீட் தேர்வு ரத்து, புதுச்சேரிக்கு மாநில தகுதி கிடைக்க உறுதி அளித்த இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்து பா.ஜனதாவிற்கு தோல்வியை அளித்தனர்.
புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு துன்பம் அளித்த என். ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு எதிராக இந்திய கூட்டணி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றதனால் புதுச்சேரி மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கத்தை வெற்றியடைய செய்தனர். வெற்றியை அளித்த புதுச்சேரி மாநில மக்களுக்கு இந்தியா கூட்டணி நன்றியை தெரிவிக்கிறது.
தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் நம்பிக்கையை இழந்த என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அகற்றி, எதிர்காலத்தில் மக்கள் நலம் காக்கும் அரசை அமைக்க இந்திய கூட்டணி பணியாற்றும். புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
- 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது.
- கடலில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கடலில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது.
புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடி படகில் தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
புதுச்சேரி மீனவ கிராமங்களான காலாப்பட்டு, புதுக்குப்பம் வீராம்பட்டினம் உள்ளிட்ட 16 கிராமங்களில் சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்தும் சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.
- ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்து பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதனால், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அமைந்தது முதலே நிர்வாக பதவியில் இல்லாத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், 3 ஆண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையிலும் இதுவரை வாரியத் தலைவர் பதவி வழங்கப்படவில்லை.
அதோடு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட தங்கள் தொகுதி களுக்கு தரப்படவில்லை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குமுறலில் உள்ளனர்.
இத்தகைய சூழலில் ஆளுங்கட்சியாக இருந்தும் தேர்தலில் தோல்வி அடைந்தது கூட்டணிக்குள் மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.
அதையடுத்து மாநிலத்தலைவர் செல்வகணபதி யிடம், தங்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தரவேண்டும்-வாரியத்தலைவர் பதவிகளை உடன் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, "முதல் அமைச்சர் ரங்கசாமி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் உணவு விருந்துக்கு அழைத்துள்ளார்" என்று அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு முதல்-அமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்தது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், தேர்தல் தோல்வியை பற்றி ஆராய்வும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசவும் முதல்- அமைச்சர் அழைத்து இருக்கலாம் என எண்ணினர்.
இதனால், அங்கு கூட்டத்தில் பேச முன்கூட்டியே தயார் செய்து தீர்மானத்துடன் பல எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். ஆனால், தனியார் ஓட்டலுக்கு வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் ஒட்டலில் ஏற்கெனவே தலைமைச் செயலர், கலெக்டர், அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசியல் பேச வாய்ப்பும் இல்லை என்ற சூழலில் முதல்- அமைச்சர் ஏன் அழைத்தார் என குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் அமைதியாக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்கு பிறகு வந்தார்.
அவர் அனை வரையும் நேரடியாக உணவு சாப்பிட அழைத்து சாப்பிட தொடங்கி னார். விருந்து முடிந்து அதிகாரிகளை அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர் பேசுவார் என ஆளுங்கட்சியினர் நினைத்தனர். ஆனால், முதல்-அமைச்சர் ரங்கசாமி சாப்பிட்ட பிறகும் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனால் எதற்காக நம்மை விருந்து சாப்பிட அழைத்தார் என்று தெரியாமலேயே குழப்பத்தில் ஆளுங்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர். இதன் பிறகுதான் காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆனால் காங்கிரஸ்- தி.மு.க., சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் விருந்தில் பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக விசாரித்த போது, தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக முதல்-அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
- அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
- புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அமைச்சரவை யில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா, கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பிறகு புதிய அமைச்சராக காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன், கடந்த மார்ச் 14-ந்தேதி அமைச்சராக பொறுப்பேற்றார். வழக்க மாக அமைச்சர் பதவியேற்பு முடிந்ததும், அவருக்கான இலாகா ஒதுக்கப்பட்டு விடும்.
ஆனால், திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனிடையே மார்ச் 16-ந்தேதி பாராளு மன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. இதனால் அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக திருமுருகன் கடந்த 3 மாதங்களாக வலம் வருகிறார்.
தேர்தல் முடிவு கடந்த ஜூன் 4-ந்தேதி வெளி யானது. இதைத்தொடர்ந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. தனி தொகுதி எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
பொதுவாக ஆதிதிராவி டர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்தவருக்கே ஒதுக்கப்படும். ஆனால், புதிய அமைச்சர் திருமுருகன் அந்த சமூகத்தை சேர்ந்தவரில்லை. எனவே, அந்த இலாகா முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அந்த சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமாரிடம் வழங்க வேண்டும்.
இதனால், அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனாலேயே புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
- இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம், நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.
பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி, அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.
- அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளு மன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.
அதனை தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு, பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி உயர்த்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று முன்தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை சந்தித்தனர்.
மதியம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அங்காளன் எம்.எல்.ஏ. தனித்தனியாக கவர்னரை சந்தித்துபேசினர்.
இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கேட்ட போது தொகுதியில் நிறை வேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.
- கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் இன்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது திருநள்ளாறு நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
ஆய்வின் முடிவில் யாசகர்களுக்கு வழங்குவதற்காக விற்பனை செய்த கெட்டுப்போன பரிகார உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயருகிறது.
- மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25ல் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.






