என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • சபாநாயகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்
    • சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார்

    முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் டிசம்பர் இறுதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. சபாநாயகர் தனது உத்தரவை அறிவிக்காததால் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு எதிராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் இதுதொடர்பாக அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கும் முன்னதாக முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசியுள்ளார். நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேசுவது போல இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். சபாநாயகரின் செயல் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த உத்தவ் தாக்கரே, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சார்பற்ற முறையில் தனது கடமையை ஆற்றுவாரா என்ற சந்தேகதம் எழுகிறது எனவும் கூறினார்.

    உத்தவ் தாக்கரேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சபாநாயகர் ராகுல் நர்வேகர், "ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர். சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக நாங்கள் சந்தித்துக்கொள்வது அவசியம். இதில் உள்நோக்கம் இருப்பதாக கூறுவது தவறு. இது தொடர்பாக யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை" என கூறினார். மேலும், பாஜகவைச் சேர்ந்த நான், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்பி அணில் தேசாய் மற்றும் ஷரத் பவார் அணியைச் சேர்ந்த ஜெயந்த் பாடில் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்து பேசியுள்ளேன். அதற்கும் உள்நோக்கம் கற்பிப்பார்களா? என கேள்வி எழுப்பினார். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டும் இந்த விவகாரத்தில் நான் நல்ல முடிவை எடுப்பேன். எனது முடிவு தகுதியின் அடிப்படையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • இந்தியாவில் மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய 5 நகரங்கள் முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
    • லக்னோவில் கபாப்ஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பிரபலமாக உள்ளன.

    சாப்பாடு... எங்கு போனாலும் சாப்பாடுதான் முக்கியம்...

    ஒரு நகரத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக உணவுகள் உள்ளன. ஒவ்வொரு நகரங்களில் செய்யப்படும் தனித்துவமான சுவைகள் கொண்ட உணவு சமையல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

    தெருவோர கடைகள் முதல் சின்ன சின்ன உணவகங்கள் வரை உள்ளூர் உணவுகள் கவர்ந்திழுக்கின்றன.

    வெளியூர்களில் இருந்து ஒவ்வொரு நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அந்த ஊர் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.

    உள்ளூர் உணவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனுபவமிக்க பயண ஆன்லைன் வழிகாட்டி நிறுவனம் ஒன்று சமீபத்தில் உலக அளவில் சிறந்த உணவு நகரங்கள் பட்டியலை வெளியிட்டது.

    இதில் இந்தியாவில் மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய 5 நகரங்கள் முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    அதிலும் 35-வது இடத்தில் மும்பை, 39-வது இடத்தில் ஐதராபாத் இடம் பிடித்துள்ளது. மும்பையில் உள்ள ஆலு டிக்கி கோல் கபே, சாட் பூரி, பேல் பூரி, ரக்தா பாட்டிஸ் வட பாவ் மற்றும் பாவ் பாஜி போன்ற பலவிதமான மும்பை உணவுகள் உலக அளவில் பிரபலமாக உள்ளன.

    ஐதராபாத்தை பொருத்தவரை பிரியாணிக்கு பெயர் பெற்றிருந்தாலும் இங்கு உள்ளூர் உணவுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    ஹலீம், சிக்கன் 65, கபாப், சமோசா, பாயா மற்றும் நிஹாரி ஐதராபாத்தில் ரசிக்கக்கூடிய உணவுகளாக இடம் பெற்றுள்ளது.

    இந்தப் பட்டியலில் சென்னை 65-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் தயாராகும் இட்லி, தோசைக்கு உலக அளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    மேலும் பணியாரம், வடை, பஜ்ஜி பக்கோடா மற்றும் ஊத்தப்பம் போன்றவற்றையும் அதிக அளவில் ருசித்து சாப்பிடுகின்றனர். இதனால் சென்னை உலக அளவில் சிறந்த உணவு நகரங்களுக்கான பட்டியலில் 65-வது இடத்தில் உள்ளது.

    தற்போது சென்னையில் சாப்பிடக்கூடிய தோசை உலக அளவில் காலை உணவாக இடம் பெற்று வருகின்றன.

    லக்னோவில் கபாப்ஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பிரபலமாக உள்ளன.

    இந்த பட்டியலில் இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு சுவையான உணவுகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

     பாஸ்தா, பீட்சா, சீஸ் சார்ந்த உணவுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது.

    உள்ளூர் உணவுகளை பொருத்தவரை பொதுமக்கள் தோசை, வடை, பிரியாணி மற்றும் பலவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் வயிற்றை நிரப்புவது மட்டுமல்லாமல் முழு அனுபவத்தையும் திருப்தியும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    • உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு.
    • 48 இடங்களை பிரித்துக் கொள்வதில் மூன்று கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்திற்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய மாநிலமாக கருதப்படுவது மகாராஷ்டிரா மாநிலம். இந்த மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளது.

    மகாராஷ்டிராவில் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று கட்சிகளுக்கு இடையே இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில் "மகாராஷ்டிரா மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த இன்று முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்று கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்கள் தொடர்பாக வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஆலோசனையில் அது சரி செய்யப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    • இந்தியா கூட்டணியில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவும்.
    • பா.ஜனதா கூட்டணியில் பிரதமர், அமித் ஷா முன் எதுவும் பேச முடியாது.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி.யான பிரியங்கா திரிவேதி, பா.ஜனதாவின் கூட்டணி கட்டாயப் படுத்தப்பட்ட மற்றும் சரணடைந்த கூட்டணி என விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி கூறுகையில் "அவர்களுடைய கூட்டணி (பா.ஜனதா உடைய) கட்டாயப் படுத்தப்பட்ட கூட்டணி. ஏனென்றால் கொடுங்கோன்மையை ஆதரித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என எல்லோருக்கும் தெரியும். அவர்கள் (பா.ஜனதா) நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றை புறந்தள்ளியுள்ளனர்.

    பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா முன்னிலையில், அவர்களால் ஏதும் பேச முடியாது. எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியாது. அவர்களுடைய எந்த திட்டத்தையும் முன்வைக்க முடியாது என்று அவர்களுக்கு தெரியும். இதுதான் சரணடைந்த கூட்டணி.

    இந்தியா கூட்டணி 26 கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி. அங்கே பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், இதுதான் ஜனநாயத்தின் அழகு. பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும். முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு, நாட்டின் அரசியலமைப்புக்காக, மக்களுக்காக மிகவும் வலிமையாக போராடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

    • டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நவிமும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

    இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன், ரிச்சா கோஷ் 23 ரன், வஸ்த்ரகர் 9 ரன், அமன்ஜோத் கவுர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாட தொடங்கியது.

    இதில், ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.

    • சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறையால் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.
    • வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிபதி முன் ஆஜரான அவர், உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பது நல்லது என்றார்.

    மும்பை:

    ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவராக நரேஷ் கோயல் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனம் திடீரென நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால் தனது செயல்பாட்டை நிறுத்தியது. தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் விலகினார்.

    இதற்கிடையே, அவர் கனரா வங்கியில் இருந்து ரூ.538 கோடி வாங்கி அதனை கட்டாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வங்கி சார்பில் நரேஷ் கோயல் மீது புகார் கொடுக்கப்பட்டது. அவர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர் மீதும், மனைவி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக அமலாக்கத் துறை நரேஷ் கோயலை கைதுசெய்தது. அதன்பின் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தற்போது 71 வயதாகும் அவர் கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறார். உடலில் நடுக்கம், முழங்கால்களில் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வழியாக ரத்தம் வெளியேறுதல், 2 கால்களையும் மடக்கமுடியாமல் அவதி உள்பட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் சிறப்பு நீதிபதி மொஜிதேஷ்பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரால் சரிவர நிற்கக்கூட முடியவில்லை. உடல் நடுக்கத்துடன் காணப்பட்டது. நீதிபதி முன் அவர் கை கூப்பியபடி நின்றார்.

    விசாரணையின்போது அவர் தனது உடல்நிலையை எடுத்துச் சொல்லி நான் வாழ்க்கையின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். எனது மனைவி படுத்த படுக்கையாக உள்ளார். அவரைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. இனி நான் உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பதே நல்லது எனக்கூறி கதறி அழுதார்.

    இதைக்கேட்ட நீதிபதி மனம் மற்றும் உடல்நலம் பாதுகாக்கப்படும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவரது வக்கீல்களுக்கு உத்தரவிட்டார்.

    • விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை.
    • காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார், சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவீந்திர தங்கேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கிய போது சுனில் காம்ப்ளே தடுமாறினார். அப்போது கோபமடைந்த அவர் பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார்.


    இதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்.எல்.ஏ. ஒருவர் காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    இதனிடையே காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றச்சாட்டுகளை மறுத்த காம்ப்ளே, "நான் யாரையும் தாக்கவில்லை. நான் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் வழிமறித்து வந்தார். அவரைத் தள்ளிவிட்டு முன்னால் சென்றேன்" என்று கூறியுள்ளார்.

    காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353, அதாவது அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் செயலின் கீழ் காம்ப்ளே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    மும்பை:

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. போப் லிட்ச்பீல்ட் 49 ரன்னும், எல்லீஸ் பெரி 37 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சாது 4 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர்.

    தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஸ்மிருதி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்களை எடுத்து வென்றதுடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஷபாலி வர்மா 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்.
    • விவசாய நிலங்கள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன.

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். இவர் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் மற்றும் இவரது குடும்பத்தாருக்கு சொந்தமான சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில், தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் உள்ள விவசாய நிலத்தை மத்திய அரசு ஏலத்தில் விட முடிவு செய்தது. அதன்படி ஏலம் இன்று நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாகே கிராமத்தில் இருந்த நான்கு விவசாய நிலங்கள் ஏலத்தில் விற்பனைக்கு வந்தன.

    இதில் இரண்டு நிலங்களை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனால், ரூ. 15 ஆயிரம் என்ற மிக குறைந்த விலையில் ஏலத்திற்கு வந்த நிலம் ரூ. 2.01 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் 170.98 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். இதே போன்று 1730 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மற்றொரு நிலம் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

    தாவூத் இப்ராகிம் குடும்பத்தாருக்கு சொந்தமான நிலத்தை யார் வாங்கியது என்ற விவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டு உள்ளன. இன்று நடைபெற்ற ஏலத்திற்கு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • நகர்புறங்களில் கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
    • 2024-25-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.

    நாடாளுமன்ற தேர்தல் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மாகராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான ஷீரடியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

    நாட்டின் தற்போதைய சூழ்நிலை பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

    பா.ஜனதா அதிகாரத்தில் உள்ளது. அவர்கள் தீவிரமான பிரசார அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜெர்மனியில் ஹிட்லருடைய பிரசார அமைப்பை போன்று பா.ஜனதா பணியாற்றி வருகிறது.

    ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் இல்லை.

    2022-ம் ஆண்டு விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், நகர்புறங்களில் கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    2024-25-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். ஆனால் இதில் 50 சதவீதத்தை கூட நாம் எட்டிப்பிடிக்கவில்லை. எனவே இதுவும் ஒரு வெற்று வாக்குறுதிதான்.

    2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு பா.ஜனதா அரசு பல திட்டங்களை அறிவித்தது. பல உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்தாமல் ஏமாற்றியது. மக்கள் இதனை தற்போது உணர ஆரம்பித்துவிட்டனர். பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.

    வேலையில்லா திண்டாட்டம் காரணமாக இளைய தலைமுறையினர் கவலையில் உள்ளனர். இதன் காரணமாகவே கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் சிலர் பாதுகாப்பை மீறி நுழைந்தனர்.

    எரிபொருள் விலை சாதாரண குடிமக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?
    • நான் சொல்வது சரியா அல்லது இல்லை?

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிதேந்திர அவாத் மகாராஸ்டிரா மாநிலம் ஷீரடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    கடவுள் ராமர் சைவம் உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?. நான் சொல்வது சரியா அல்லது தவறா? (மக்களை நோக்கி கேள்வி கேட்டார்.)

    மேலும் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தி ஓபிசி என்பதால் அவர்களால் (ஆர்.எஸ்.எஸ்.) ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தியின் படுகொலைக்கு சாதிவெறிதான் உண்மையான காரணம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில், அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.
    • ஏலம் விடப்பட உள்ள 4 சொத்துகளின் ஆரம்ப விலை ரூ.19 லட்சத்து 20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து உள்ளது.

    இந்தநிலையில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தாவூத் இப்ராகிமின் தாய் அமினா பி பெயரில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள 4 விவசாய நிலத்தை மத்திய அரசு ஏலம் விட உள்ளது.

    ஏலம் விடப்பட உள்ள 4 சொத்துகளின் ஆரம்ப விலை ரூ.19 லட்சத்து 20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலம் விடும் பணி மும்பையில் நடைபெறுகிறது. ரத்னகிரி தாவூத் இப்ராகிமின் சொந்த ஊராகும். சிறுவயதில் அவர் அங்கு சில காலம் வாழ்ந்து உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு மும்பை பென்டி பஜாரில் இருந்த தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துகள் ரூ.11 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×