என் மலர்
கேரளா
- பேராவூர் எம்எல்ஏவ சன்னி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஒரு அச்சமற்ற போர்வீரன் கே.சுதாகரன்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம் குறித்த பல வாரங்களாக நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று கட்சி, மாநிலத் தலைமையில் பெரிய மாற்றங்களைச் செய்தது.
அதன்படி கே. சுதாகரனுக்குப் பதிலாக கண்ணூரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், பேராவூர் எம்எல்ஏவுமான சன்னி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த மாற்றம் வந்துள்ளது.
அவருக்கு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் நிர்வாகிகள் கேரளத்தின் நீதி மற்றும் மாநில முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கும் கேரள மக்களுக்கும் பலத்தின் தூண்களாகவும் சேவை மனப்பான்மையும் கொண்ட ஒரு அச்சமற்ற போர்வீரன் கே.சுதாகரன்" என்று தெரிவித்துள்ளார்.
- யானைகளில் ஒன்று திடீரென ஆக்கிரோஷமடைந்து ஓட்டமெடுத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- யானைப் பாகன்கள் உடனடியாக, யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகளில் ஒன்று திடீரென ஆக்கிரோஷமடைந்து ஓட்டமெடுத்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் படுகாயம் அடைந்தனர்.
யானைப் பாகன்கள் உடனடியாக, யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் ஏற்பட்ட இச்சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது
கூட்ட நெரிசலில் சிக்கி காயசமடைந்தவர்கள் மருத்துவமனையில் தெப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
- நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முத்தத்தரா ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நீது (வயது31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர் தனது வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கஜக்கூட்டம் பகுதியில் உள்ள தனியார் அழகுசாதன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக அந்த மருத்துவமனையில் நீதுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்தது. இதையடுத்து நீதுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையை, அவரது கணவர் பத்மஜித் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் இல்லை. ஆகவே மறுநாள் வருமாறு மருத்துவமனை தரப்பில் கூறியிருக்கின்றனர். ஆனால் நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமாகியபடியே இருந்தது. இதனால் நீதுவை அவரது கணவர் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
அவற்றை அகற்றாவிடில் நீதுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவரது கையில் 3 விரல்களும், காலில் 5 விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன. கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை தவறாக செய்ததன் காரணமாகவே தனது மனைவி 9 விரல்களை இழந்துவிட்டதாக நீதுவின் கணவர் பத்மஜித் குற்றம்சாட்டினார்.
மேலும் அதுகுறித்து நீதுவுக்கு கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்த தனியார் அழகுசாதன மருத்துவமனையின் மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பிபிலாஷ் மீது வழக்கு பதிந்தனர். மேலும் அவரது மருத்துமனை உடனடியாக மூடப்பட்டது.
கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் 9 விரல்களை இழந்த சம்பவம் திருவனந்தபரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுமி நியா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
- சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது சோதனையில் தெரியவந்தது.
கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. மேலும் தெருநாய் கடித்து ஏராளமாமனோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
தெருநாய் கடித்ததன் காரணமாக ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளான 2 குழந்தைகள் ஏற்கனவே இருந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுமி பலியாகியிருக்கிறாள்.
கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியை சேர்ந்த நியா பைசல் (வயது7) என்ற சிறுமி கடந்தமாதம் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது, அவரை ஒரு தெருநாய் கடித்தது. இதையடுத்து சிறுமி நியா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. 3 டோஸ் தடுப்பூசிகளும் சிறுமிக்கு போடப்பட்டு இருக்கிறது.
இறுதி டோஸ் நாளை (6-ந்தேதி) போட திட்டமிடப் பட்டிருந்த நிலையில், சிறுமிக்கு திடீரென காய்ச்சல் அடிக்க தொடங்கியது. மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நியா பரிதாபமாக இறந்தாள்.
சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது சோதனையில் தெரியவந்தது. தடுப்பூசிகள் போடப்பட்டும் சிறுமி இறந்திருப்பது, அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- பிரியங்கா காந்தி அவருடைய தொகுதியான வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- கோழிக்கோடு மாவட்டத்தில் பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
பிரியங்கா காந்தி கேரள மாநிலத்தில் உள்ள அவருடைய தொகுதியான வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று மாலை கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஈங்காப்புலா சாலையில் பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் 2 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குடும்பத்தினர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டதும் பிரியங்கா காந்தி தனது வாகனத்தை நிறுத்தினார்.
அவர் காரை விட்டு இறங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு தன்னுடைய பாதுகாவலர்களிடம் தெரிவித்தார். மேலும் டாக்டர்களை வரவழைத்து முதல் உதவி அளிக்க ஏற்பாடு செய்தார்.
அவருடைய பாதுகாப்பு குழுவுடன் வந்த ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.பின்னர் விபத்து குறித்து அவர் விசாரித்து விட்டு சென்றார்.
பிரியங்கா காந்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- 200-க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 3,025 படுக்கைகளுடன் இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழ்கிறது.
இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல நவீன கருவிகள் இருக்கின்றன. இதனால் இந்த மருத்துவமனைக்கு கோழிக்கோடு மாவட்டம் மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகிறார்கள்.
இந்தநிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவுக்கு அருகில் இருந்த யு.பி.எஸ். அமைப்பில் தீப்பிடித்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவை முழுவதுமாக புகை மூட்டம் சூழ்ந்தது. ஆஸ்பத்திரியில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலமாக தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
ஆகவே தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடற்கரை மற்றும் வெள்ளிமடுக்குன்னு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்குள் அதிரடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்பு புகைமூட்டம் இருந்த மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகளும் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.
பல்வேறு வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை வேறு மருத்துவமனைகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆம்புலன்சு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
முதலில் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்த 30 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தேவைப்பட்டதால், அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். மற்ற நோயாளிகள் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மின் கசிவு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி 5 நோயாளிகள் இறந்து விட்டதாக தகவல் பரவியது.
கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த இளம்பெண் கங்கா (வயது34), கங்காதரன்(70), கோபாலன்(55), சுரேந்திரன்(59), நஜிரா(44) ஆகிய 5 நோயாளிகள் நேற்று இரவு இறந்தனர். அவர்கள் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.
புகை மூட்டத்தில் சிக்கிய நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றியபோது 5 பேர் இறந்திருப்பதாக சித்திக் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். ஆனால் அவர்கள் 5 பேரும் புகை மூட்டத்தில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகவில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண் நோயாளி ஏறகனவே வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தவர் என்றும், 2 நோயாளிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், ஒரு நோயாளி கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஒரு நோயாளி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெற்றவர் எனவும், அவரவர் உடல்நல பிரச்சனை காரணமாகவே அவர்கள் இறந்திருப்பதாக கோழிக்கோடு மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த தீவிபத்துக்காக விரிவான விசாரணை நடத்துமாறு மருத்துவக்கல்வி இயக்குனருக்கு கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. மேலும் பொறியாளர் குழுவும் ஆய்வை தொடங்கியுள்ளது.
5 நோயாளிகள் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த மருத்துவ வாரியம் இன்று கூடுகிறது. மருத்துவ கல்வி இயக்குனர் விசாரணை மற்றும் மருத்துவ வாரிய ஆலோசனை உள்ளிட்டவைகள் முடிந்த பிறகே 5 நோயாளிகளின் இறப்புக்காக காரணம் வெளியிடப்படும் என தெரிகிறது.
- கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
- இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பிரதமர் மோடி துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது:
* கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
* கேரளாவில் ஒருபுறம் வாய்ப்புகளை அள்ளித்தரும் பெரிய கடலும் மறுபுறம் இயற்கை அழகும் உள்ளது.
* புதிய யுகத்தின் வளர்ச்சியாக கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் அமையும்.
* விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.
* பெரிய சரக்கு கப்பல் களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.
* விழா மேடையில் பினராயி விஜயன், காங்கிரசின் சசிதரூர் உள்ளதால் இன்று பலரின் தூக்கம் பறிபோகும்.
* இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தன்னுடன் மேடையை பகிர்வதால் பலரின் தூக்கம் பறிபோகும்.
* கேரளா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கு விழிஞ்சம் துறைமுகம் ஒரு உதாரணம். தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டிகியு கொள் கலன்களை கையாளும் திறன் கொண்டது.
* விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது.
- விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது.
முதற்கட்ட பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு முடிவுக்கு வந்தநிலையில், சோதனை ஓட்டங்கள் கடந்தஆண்டு (2024) ஜூலை மாதத்தில் நடைபெற்றது. மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கப்பட்டு சோதனைஓட்டம் நடத்தப்பட்டது. முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு கட்ட பணிகள் 2018-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது. மேலும் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதியாகும். இதனால் பல்வேறு நாடுகளுக்கான பயண தூரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து பெரிதளவில் குறைவாகவே இருக்கும்.
விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் ஆண்டுக்கு 10லட்சம் கொள்கலன்கள் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. மூன்று கட்ட பணிகளும் முடிவடையும் பட்சத்தில் 45லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து பிரதமர் மோடி ராஜ்பவனுக்கு சென்று இரவில் தங்கினார்.
இந்தநிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு சென்றார். பின்பு துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்பு விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.
இந்த விழாவில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய மந்திரிகள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், கேரள துறைமுக மந்திரி வி.என். வாசவன், மாநில மந்திரிகள் சிவன்குட்டி, அனில், சாஜி செரியன், முன்னாள் மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், சசிதரூர் எம்.பி., அதானி குழும தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், துறைமுக நிர்வாக இயக்குனர் கரண் அதானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கருப்பு நிறம் குறித்த அணுகுமுறையின் பிரச்சினை இது என்று தெரிவித்தார்.
- ஆனால் அந்த நபர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை.
கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் கடந்த மாதம் ஒரு பேஸ்புக் பதிவில் தான் எதிர்கொண்ட நிறம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து பதிவிட்டிருந்தார். தனது தோல் நிறம் குறித்து விமர்சிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் சாரதா முரளீதரன் ஓய்வு பெற உள்ள நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் தோல் நிறம் குறித்த விமர்சனம் பற்றி பேசிய அவர், கருப்பு நிறம் குறித்த அணுகுமுறையின் பிரச்சினை இது என்று தெரிவித்தார்.
அத்தகைய கருத்தை தெரிவித்தது ஒரு உயர் பதவியில் உள்ள நபரா என்று அவரிடம் கேட்டபோது, ஆம் என ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த குறிப்பிட்ட நபர் ஒரு அரசியல்வாதியா அல்லது உயர் பதவியில் உள்ள அதிகாரியா என்பதை வெளிப்படுத்தத் தயங்கினார்.
"அதற்குப் பிறகும் (சர்ச்சை) நாங்கள் இருவரும் மிகவும் நட்பான முறையில் பேசினோம், ஆனால் அந்த நபர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை" என்று சாரதா மேலும் தெரிவித்தார்.
தோல் நிறம் குறித்த பாகுபாடு குறித்துத் தான் பேசியபோது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் தன்னை அழைத்து தனக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதே அவமானத்தை அனுபவித்ததாகத் தெரிவித்ததாகவும் சாரதா கூறினார்.
சாரதா முரளீதரன் ஏப்ரல் 30 ஆம் தேதி ஓய்வு பெறுவதால், கேரளாவின் புதிய தலைமைச் செயலாளராக ஏ. ஜெயதிலக் நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- விழாவிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது விழிஞ்சம் துறைமுகம். இந்த துறைமுக பணிகள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன.
விழிஞ்சம் துறைமுக பகுதி பன்னாட்டு கடற்பாதையில் இருந்து 10 கடல்மைல் தொலைவில் இருக்கிறது. மேலும் இந்த துறைமுகத்தில் இயற்கையாகவே 24 மீட்டர் ஆழம் கிடைக்கிறது. இதனால் இங்கு மிகப்பெரிய சரக்கு கப்பல்களையும் எளிதாக நிறுத்த முடியும்.
இந்த துறைமுகத்தின் தற்போதைய கொள்ளளவு 10 லட்சம் கொள்கலன்களாக இருக்கிறது. 2028-ம் ஆண்டு துறைமுக பணி முழுவதுமாக முடிந்தபிறகு விழிஞ்சம் துறைமுகத்தின் திறன் ஆண்டுக்கு 45 லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விழிஞ்சம் துறைமுகம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. கேரள மாநிலத்தின் அடையாளமாக மாற இருக்கும் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி கேரளா வருகிறார். அன்று இரவு ராஜ்பவனில் தங்கும் அவர், மறுநாள் காலை 11 மணிக்கு விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு செல்கிறார்.
துறைமுகத்தை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி, துறைமுகத்தின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் உரையாற்றுகிறார். இந்த விழாவிற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துறைமுக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று கேரளா வந்தது. அவர்கள் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
மர்மநபரின் வெடிகுண்டு மிரட்டலால் கடந்த சில நாட்களாகவே கேரள மாநிலத்தில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி வருவதால் மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
- திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது
கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று காலை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் அது வெறும் புரளி என்று போலீசார் தெரிவித்தனர்.
- குடும்பத்துடன் வசிக்கும் இவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோழிக்கோடு போலீசார் தெரிவித்தனர்.
- 2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கேரளா திரும்பிய அவர், அதன்பிறகு இங்கேயே வசித்து வந்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்கானில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
கேரள மாநிலத்தில் 104 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த ஹம்சா (வயது 79) என்பவரும் ஒருவர். குடும்பத்துடன் வசிக்கும் இவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோழிக்கோடு போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த ஹம்சா, நான் பிறந்த இடம் இது தான். இங்கேயே என் இறுதி மூச்சை விட விரும்புகிறேன் என்றார். கேரளாவில் பிறந்த ஹம்சா, கடந்த 1965-ம் ஆண்டு வேலை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். கராச்சியில் தனது சகோதரருடன் கடை நடத்திய அவர், 1972-ம் ஆண்டு வங்கதேச விடுதலை போருக்கு பிறகு இந்தியா திரும்ப, பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றாராம்.
2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கேரளா திரும்பிய அவர், அதன்பிறகு இங்கேயே வசித்து வந்துள்ளார். இவர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அது வழங்கப்படவில்லை. அவரது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின் படி ஹம்சா கேரளாவில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






