என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • சுனிலின் சகோதரர் வேணுகோபால் குப்தாவுக்குக் கடத்தல்காரர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது.
    • வீட்டிற்கு செல்ல அவருக்கு கைச்செலவுக்கு ரூ.300 கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

    கர்நாடகாவில் மருத்துவரைக் கடத்தி ரூ. 6 கோடி பணம் கேட்ட மர்ம நபர்கள் பிறகு அவரிடம் ரூ.300 கொடுக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்த்த மருத்துவர் சுனில்[45 வயது], சூர்யநாராயணப்பேட்டையில் உள்ள சனீஸ்வர கோவில் அருகே கடந்த சனிக்கிழமை காலை 6 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கடத்தப்பட்டார்.

    டாடா இண்டிகோ காரில் வந்த கடத்தல்காரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கடத்தல் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.  

     

    அதே நாளில் மது வியாபாரியான, சுனிலின் சகோதரர் வேணுகோபால் குப்தாவுக்குக் கடத்தல்காரர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. அண்ணன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமானால், ரூ.6 கோடி செலுத்த வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர். இதுதவிர ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர்.

    வேணுகோபால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் மாவட்ட எல்லையைக் கடக்காமல் இருக்க மாவட்டத்தை விட்டு வெளியேறும் இடங்களைத் தடுத்ததோடு, வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    இதனால் கலக்கமடைந்த கடத்தல்காரர்கள், இரவு 8 மணியளவில் மருத்துவரைத் தொலைதூர இடத்தில் விட்டுவிட்டு, வீட்டிற்கு செல்ல அவருக்கு கைச்செலவுக்கு ரூ.300 கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்த சுனில் மீட்கப்பட்டார். கடத்தல்காரர்களைத் தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தி உள்ளது.

    மருத்துவர் சுனிலின் சகோதரர் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஏதேனும் தொழில் போட்டி காரணமாக கடத்தல் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தம்பி வேணுகோபால் மாவட்ட மது வியாபாரிகள் சங்க தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 3000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சுமார் 2000 லாரிகள் ஓடாது.

    ஓசூர்:

    தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து சங்க பொது செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா நேற்று ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதி கிரஷர் உரிமையாளர்கள் ஜனவரி 1- ந் தேதி முதல் 1 டன்னுக்கு 100 ரூபாய் அதிகமாக கொடுத்தால்தான் ஜல்லி கற்கள் மற்றும் எம். சாண்ட் கொடுப்போம் என்று அறிவித்துள்ளனர். ஒரே தடவையில், ஒரு டன்னுக்கு 100 ரூபாய் உயர்த்தியது லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு நாளைக்கு லாரி உரிமையாளர்கள் 30 டன் ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்றால், 3 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இருந்தபோதிலும் கிரஷர் உரிமையாளர்களிடம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு டன் ஜல்லிக்கு 80 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம்.

    ஆனால் கிரஷர் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் இருந்து தவறி விட்டார்கள். எங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கை யை அவர்கள் மீறிவிட்டார்கள், இந்த விலை உயர்வு காரணமாக ஓசூர் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள், 3000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே கிரஷர் உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு வரும் வரை ஓசூர் மற்றும் ஆனேக்கல் பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் நாளை (திங்கட்கிழமை, முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    எந்த ஜல்லி பாரமும் ஏற்றக் கூடாது. லாரிகளை வீட்டின் முன்புறமோ அல்லது செட்டுகளில் நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை நிறுத்த அறிவிப்பின்படி, சுமார் 2000 லாரிகள் ஓடாது, ஒரு நாளைக்கு 40,000 டன் அளவில் வர்த்தகம் இருக்காது.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • அவர் பணிபுரிந்த குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.
    • கல்லை சரியாக குற்றவாளியால் தூக்க முடியாததால் முகம் முழுவதுமாக சிதைக்கப்படவில்லை

    கர்நாடகாவில் வீட்டு வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்கெரே ஏரிக்கு அருகே 28 வயது பெண்ணின் சடலம் நேற்று [வெள்ளிக்கிழமை] காலை கண்டெடுக்கப்பட்டது. அவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.

    முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக பெங்களூரில் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவர் வசித்து வந்தார். ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்த பெண் வீட்டு வேலை செய்து வந்தார்.

    வியாழன் மதியம் முதல் பெண் காணவில்லை என்றும், மாலை வரை காத்திருந்த கணவன் பின்னர் அவரை தேடிச் சென்றுள்ளார்.

    அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று காலை ஏரிக்கு அருகில் உள்ள மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்புக்கு ஒத்திகை பார்த்த சிலர் பெண்ணின் உடலை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்றும் துப்பட்டாவால் அவரது கழுத்து நெறிக்கப்பட்டு பாரங்களால் உடல் சிதைப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவிதனர்.

    மேலும் கல்லை சரியாக குற்றவாளியால் தூக்க முடியாததால் முகம் முழுவதுமாக சிதைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

    பெண்ணுக்குத் தெரிந்த யாரோ ஒருவர்தான் குற்றவாளி என்று என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்ணின் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு குற்றவாளி தப்பியதாகக் கூறப்படுகிறது.

    பெண்ணின் கணவனுக்கு பாஸ்போர்ட் இருப்பதாகவும், அனால் அந்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் இல்லை என்றும் அவர் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
    • தற்போது சித்தராமையாவின் 30 மாத பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.

    கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்றனர்.

    சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தொடக்கத்திலுருந்தே வலியறுத்தி வருகின்றனர். 2023 தேர்தலில் வென்ற சமயத்தில் டிகே சிவகுமார் மற்றும் ஆதரவாளர்களின் பிடிவாதம் காங்கிரஸ் மேலிடத்தால் சரிகட்டப்பட்டது.

    தேர்தலுக்குப் பிறகு, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் மீதி இரண்டரை ஆண்டுகள் டிகே சிவகுமாரும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என்று என்று முடிவெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

    தற்போது சித்தராமையாவின் 30 மாத பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் பொறுப்பு சிவகுமாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர் என்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் தங்கள் தலைவரே பதவியில் இருக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "இறுதியில் உயர்நிலைக் குழு [காங்கிரஸ்] முடிவெடுக்கும்" என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மறுபுறம், டி.கே.சிவகுமாரும் கட்சியின் முடிவுகளுக்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பதாக சமீபத்தில் பேசியிருந்தார்.

    சிவக்குமார் மற்றும் சித்தராமையா இருவரின் ஆதரவாளர்களும் தத்தமது தலைவர்களுக்கு ஆதரவாக விடாபிடியாக உள்ளதால் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முடா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
    • வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    கர்நாடகா மாநிலத்தில் பெண் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி, விவாகரத்து வழக்கை மாற்றக் கோரிய மனைவியின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் (HC) நிராகரித்துள்ளது.

    ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

    நீதிபதி சிலாகூர் சுமலதாவின் ஒற்றை நீதிபதி அமர்வு இதுகுறித்து கூறுகையில், " உண்மையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. எனவே, சமூகத்தில் பாலின-நடுநிலை அவசியம் உள்ளது."

    விவாகரத்து மனுவை, சிக்கமகளூரு மாவட்டம், நரசிம்மராஜபுராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திலிருந்து, சிவமோகா மாவட்டம், ஹோசனகராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுதாரர் மனைவி கோரினார்.

    அந்த மனுவில், "நீதிமன்ற விசாரணைகளில் தவறாமல் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்கு 130 கிலோமீட்டர் தூரம் வருவதற்கு பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை எதிர்த்த கணவர்," தான் ஒன்பது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மைனர் குழந்தைகளையும் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறேன்.

    வழக்கை மாற்றுவது தனக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் என்றும், இது குழந்தைகளின் வழக்கத்தை சீர்குலைக்கும் என்றும், அன்றாடப் பொறுப்புகளை நிர்வகிப்பதில் தனது சிரமங்கள் அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தைகளின் நலன் உட்பட ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் நீதிமன்றம் மதிப்பிட்ட நிலையில், "மாற்று மனுவை ஒரு பெண் தாக்கல் செய்வதால் மட்டுமே, கோரப்பட்டபடி வழக்கை மாற்ற முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

    "பிரதிவாதி- கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாலும், குழந்தைகள் அவரது பாதுகாப்பு இருப்பதாலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் கணவர் எதிர்கொள்ளும் சிரமம் மனுதாரர் மனைவியை விட அதிகமாக இருக்கும்" என்று கூறி கணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

    மேலும், "சமத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்கக்கூடாது. பெண்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகள் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நமது சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டதது.

    இதன் விளைவாக, வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    • விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் குமுதா என்ற பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக தார்வார் பகுதியில் இருந்து ஒரு லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 25 வியாபாரிகள் அதில் பயணித்தனர். இந்த லாரி இன்று அதிகாலை யல்லாப்பூர் தாலுகா பகுதியில் உள்ள அர்பைல் காட் என்ற பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.

    இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 9 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற வியாபாரிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். லாரியின் அடியில் சிக்கி கொண்டதால் அவர்கள் உயிர் பிழைக்க அலறினர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து யல்லாபூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் விபத்தில் பலியான 9 பேரின் உடல்களையும் போலீசார் போராடி மீட்டனர். பின்னர் படுகாயத்துடன் போராடிய 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியான 9 வியாபாரிகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் சக காய்கறி வியாபாரிகள் ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இறந்த 9 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    அதிகாலை நேரம் என்பதால் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்தில் சிக்கியதா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் விபத்து நடந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாலையில் நடந்த விபத்தில் 9 வியாபாரிகள் பலியான சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    • கேஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள குடோன் தெருவுக்கு அருகில் நடந்தது.
    • அவரிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.

    கர்நாடக தலைநகர்பெங்களூரில் பேருந்திற்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள குடோன் தெருவுக்கு அருகில் நடந்தது.

    பாதிக்கப்பட்ட பெண் யெலஹங்கா பகுதிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அந்த பெண், இருவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து வருமா என்று கேட்டுள்ளார்.

    பெண்ணின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த இரு ஆண்களும் உதவி செய்பவர்களைப் போல் கட்டிக்கொண்டு பேருந்து எங்கு நிற்கும் என்று தங்களுக்குத் தெரியும் என்று கூறி பெண்ணை குடோன் தெருவுக்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.

    காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருவதாக இன்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரை ஓரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்களுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறை வதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடி தண்ணீர் வந்தது. இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • குடகு மாவட்டத்தில் உள்ள தித்திமதி அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
    • யானைகள், மான், புலி, கரடி உள்ளிட்டவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

    பெங்களூரு:

    'ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்' என்று சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் 5 அறிவு ஜீவனான யானை நிகழ்த்தியுள்ளது. ஆபத்தில் சிக்கிய யானையை உடன் வந்த நண்பனான மற்றொரு யானை காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தித்திமதி அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு யானைகள், மான், புலி, கரடி உள்ளிட்டவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

    இந்த நிலையில் 2 காட்டு யானைகள் உணவு தேடி தித்திமதி பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான மர சேகரிப்பு கிடங்கிற்குள் நுழைந்தன. அப்போது அந்த யானைகளில் ஒன்றின் தலை அங்கு பொருத்தப்பட்டிருந்த இரும்பு கேட்டின் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது.


    தலை சிக்கிக்கொண்ட காட்டு யானையால், தலையை வெளியே எடுக்க முடியாமல் கேட்டை முன்னும் பின்னுமாக தள்ளி முயற்சித்தது. இருப்பினும் அந்த யானையால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.

    இதனால் வேதனையுடன் யானை பிளிறியது. இதை பார்த்த அதனுடன் வந்த மற்றொரு யானை, கேட்டில் சிக்கிய யானைக்கு உதவி செய்து மாட்டிய தலையை வெளியே எடுக்க உதவியது. தலை சிக்கிய யானைக்கு ஏதோ சைகை செய்த மற்றொரு யானை கேட்டை தன் பலம் கொண்டு தள்ளியது.


    அப்போது தலை சிக்கிய யானை லேசாக தலையை சாய்த்து வெளியே எடுத்தது. பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதி 2 யானைகளும் புறப்பட்டு சென்றது.

    2 யானைகளின் இந்த பரஸ்பர உதவி தித்திமதி பகுதியில் உள்ள பொதுமக்களை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
    • சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002ன் விதிகளின் கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பிலான 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று [வெள்ளிக்கிழமை] முடக்கியுள்ளது.

    முடக்கப்பட்ட சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன என அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    சொத்துக்கள் முடக்கப்பட்டதைக் காரணம் காட்டி சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று பாஜக வற்புறுத்தத் தொடங்கியுள்ளது.

    "சித்தராமையா தனது முதலவர் பதவியின் மாண்புக்கு மதிப்பளித்தால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். கர்நாடக மக்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கிறார்கள்" என்று பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

    • பெங்களூருவில் கடந்த ஓராண்டில் 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன.
    • வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விட்டல் மல்லையா சாலையில் உள்ள ஜெ.டபிள்யு. மேரியாட் ஹோட்டலில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் ஐந்தாவது அமெரிக்க தூதரகமாகும். நிரந்தர கட்டடம் கட்டும் வரையில் தற்காலிகமாக தூதரகம் இங்கு இயங்கும்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி துணை தூதரகத்தைத் திறந்துவைத்தனர். அப்போது கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவகுமார், தொழில்துறை மந்திரி எம்.பி.பாட்டீல், பெங்களூரு தெற்கு பா.ஜக. எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் உடனிருந்தனர்.

    இதில் பங்கேற்ற வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டுள்ளது ஒரு மைல் கல்லாகும்.

    நகர மக்களின் நீண்டகால வேண்டுகோளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நகர மக்களுக்கு இது மிகவும் அனுகூலமாக இருக்கும்.

    ஏற்கனவே, 12 நாடுகளின் துணை தூதரகங்கள் பெங்களூரில் உள்ளன. பல நாடுகளின் துாதரகங்களை அமைக்கும் திட்டம் உள்ளது.

    இந்தியா-அமெரிக்கா உறவை பலப்படுத்த முயற்சி நடக்கிறது. பெங்களூருவில் ஏராளமான வளங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்த வேண்டும்.

    பெங்களூருவில் கடந்த ஓராண்டில் 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.

    • பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
    • கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசினர்.

    கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியில் இன்று காலையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், கோட்டேகர் கூட்டுறவு வங்கிக்குள் நுழைந்தனர். பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கொள்ளையர்கள், வங்கிக்குள் நுழைந்து, ஊழியர்களை மிரட்டி, பணம் மற்றும் தங்க நகைகள் அடங்கிய அலமாரியை திறந்து கொள்ளையடித்துள்ளனர்.

    திருடப்பட்ட தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசியதாக மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். வங்கியின் சிசிடிவி அமைப்பில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநரின் மோதிரத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று அகர்வால் கூறினார்.

    நாய்கள், கைரேகை நிபுணர்கள் கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னதாக கர்நாடக மாநிலம் பிதர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப நேற்று வேனில் வந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.இதில் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.

    பைக்கில் வந்த கொள்ளையவர்கள் பணப்பெட்டியை கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில் நேரடியாக வங்கியிலேயே நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×