என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
    • அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு.

    பசு கடத்தலில் ஈடுபடுபவர்களை பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ள போலீஸுக்கு உத்தரவிட உள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்தில் கால்நடை கடத்தல் மற்றும் பசு வதை அதிகரித்து வருவதைத் தடுக்க, கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கண்டதும் சுடும் உத்தரவை பிறப்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என மீன்வளத்  துறை அமைச்சர் மங்கலா சுப்ப வைத்யா தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஹொன்னாவர் அருகே கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வைத்யா நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசியதாவது, பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. பசு கடத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்வாகம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பசுக்களைப் பாதுகாக்க தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    நாம் தினமும் பசுவின் பால் குடிக்கிறோம். அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு. பசு கடத்தல் மற்றும் வதை தொடர்ந்தால் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை பார்த்த இடத்தில் சுட்டுக் தள்ள உத்தரவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கோலார் மாவட்டம் தியாகர் ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • விபத்து ஏற்படுத்திய ராகேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    கர்நாடக மாநிலம் கோலாரில் ஓட்டுநர் ஒருவர் மதுபோதையில் காரை ரெயில் தண்டவாளத்தில் பார்க் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோலார் மாவட்டம் தியாகர் ரெயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராகேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே கிரேன் மூலம் காரை வெளியே எடுத்து ரெயில் போக்குவரத்தை அதிகாரிகள் சரி செய்தனர்.

    • ஒரு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபரின் வெவ்வேறு புகைப்படங்களை இணைத்திருந்தார்.
    • மற்றொருவர், அபராத தொகை அவரது ஸ்கூட்டரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.

    ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னல்களை மீறி செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் அபராதம் விதிப்பார்கள். ரூ.100, ரூ.200, ரூ.1,000 முதல் விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஒரு வாகன ஓட்டிக்கு ரூ.1.61 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஷிபாம் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்.

    அதில், ஒரு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபரின் வெவ்வேறு புகைப்படங்களை இணைத்திருந்தார். அதனுடன் அவரது பதிவில், இந்த நபருக்கு கடந்த ஆண்டு வரை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு அபராதமாக ரூ.1.05 லட்சம் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் கூடுதலாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை போக்குவரத்து விதிமீறலுக்காக அவருக்கு ரூ.1.61 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு அவரது இருசக்கர வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்பட்டவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இவரது பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், அவர் போலீஸ் அதிகாரியின் உறவினராக இருக்கலாம் என பதிவிட்டார். மற்றொருவர், அபராத தொகை அவரது ஸ்கூட்டரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.

    • காதுகளில் துளையிட வேண்டி டாக்டர்கள், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் - சுபமானசா தம்பதியின் 6 மாத குழந்தை பிரக்யாத். தங்களது குழந்தைக்கு காது குத்துவதற்காக பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

    இதையடுத்து காதுகளில் துளையிட வேண்டி டாக்டர்கள், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்தனர். மயக்க மருந்து கொடுத்த சிறிது நேரத்திலே குழந்தைக்கு வலிப்பு வர தொடங்கியது. இதனால் டாக்டரின் ஆலோசனையின் பேரில் உடனடியாக குழந்தையை குண்டலுபேட்டை தாலுகா அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றடைவதற்குள் குழந்தை சுய நினைவை இழந்து இறந்துவிட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண உதவி செய்வதாக ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • ஆபாச வீடியோக்கள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கர்நாடகாவில் பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    தாவாங்கரே மாவட்டத்தில் சன்னகிரி நகரில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் அம்ஜத். இவர் தனது கடைக்கு வந்த பெண்களுக்கு பண உதவி செய்வதாக ஏமாற்றி தனக்கு சொந்தமான வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குடும்பத்துடன் வசித்து வரும் அம்ஜத், இதற்கென்றே தனியாக ஒரு வீட்டை வைத்திருந்துள்ளார்.

    மேலும் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அந்த பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் சென்னகிரி போலீசிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடமும் புகார் செய்தனர். அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.

    வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் 30 பெண்களை அம்ஜத் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதில் ஒரு சிறுமியும் அடங்குவார்.

    அவரது செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர். தனது கடைக்கு வரும் பெண்கள், சாலையில், பஸ்ஸில் என பொது இடங்களில் நடமாடும் பெண்களையும் அஜ்மத் படம்பிடித்து வைத்திருக்கிறார்.

    ஆபாச வீடியோக்கள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்களை யாரும் பகிர கூடாது என்றும் மீறி பகிர்ந்தால் கடுமையான நடவைடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் எச்சரித்துள்ளார். 

    • விண்ணப்பத்தாரர்கள் 3 டேட்டிங் செயலிகளை பயன்படுத்த வேண்டும், காதல், டேட்டிங்-ல் தற்போதைய ட்ரெண்டில் இருக்க வேண்டும்.
    • புதியவற்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் குறைந்தது 2-3 டேட்டிங் பயன்பாடுகளில் முதல் அனுபவம் இருக்க வேண்டும்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனம் டாப்மேட். இந்த நிறுவனம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. நீங்க எதிர்பார்க்கிறது போல், பி.இ., எம்பிஏ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு இல்லங்க. இது வேற ரகம்.

    ஆமாங்க.. டாப் மேட் நிறுவனம் காதலில் கைத்தேர்ந்தவரைதான் தேடி வருகிறது. பக்கா காதல் மன்னனை தலைமை டேட்டிங் அதிகாரி பதவியில் அமர்த்த இந்நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்த வேலைக்கு தேவையான தகுதி குறித்தும் டாப்மேட் நிறுவனம் அறித்துள்ளனர்.

    அதன்படி, தலைமை டேட்டிங் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாகவும், குறைந்தது ஒரு காதல் தோல்வியையாவது கடந்து வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது

    மேலும், விண்ணப்பத்தாரர்கள் 3 டேட்டிங் செயலிகளை பயன்படுத்த வேண்டும், காதல், டேட்டிங்-ல் தற்போதைய ட்ரெண்டில் இருக்க வேண்டும் எனவும் தகுதிகளை அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

    டேட்டிங் போக்குகள் பற்றிய ஆழமான அறிவு, மேலும் புதியவற்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல்

    குறைந்தது 2-3 டேட்டிங் பயன்பாடுகளில் முதல் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், டாப்மேட்டின் விருப்பமான விண்ணப்பதாரர்கள் 'டேட்களை' பெறுவார்கள் - காதல் வகை டேட்டிங் அல்ல, ஆனால் அதுஉண்மையான சாப்பிடும் வகை டேட்ஸ் (பேரிச்சைப்பழம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வேலை வாய்ப்பு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

     

    • அஷ்மிதா செய்த ஒரு தயாரிப்பின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் அவரது கணவர் பகிர்ந்துள்ளார்.
    • இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்த வேலை என சிலவற்றை நினைப்பார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக வேறு வேலைகளில் பணியாற்றி கொண்டிருப்பார்கள்.

    அந்த வகையில், பெங்களூருவை சேர்ந்த அஷ்மிதா பால் என்ற இளம்பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் வாங்கி கொண்டிருந்த அவருக்கு கேக், கிரீம் உள்ளிட்டவை அடங்கிய பேக்கரி தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் மிகவும் ஆர்வமாக இருந்தது. இதுதொடர்பாக அவர் தனது கணவர் சாகரிடம் விபரங்களை கூறினார். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவே, அஷ்மிதா பால் உடனடியாக தான் ரூ.1½ லட்சம் சம்பளத்தில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனக்கு பிடித்த பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் அஷ்மிதா செய்த ஒரு தயாரிப்பின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் அவரது கணவர் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவரது பதிவில், மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் பெறும் வேலையில் இருந்து விலகிய என்னுடைய மனைவி இதனை செய்து முடித்துள்ளார். கடவுளுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. நெட்டிசன்கள் பலரும் அஷ்மிதாவின் இந்த முடிவை வரவேற்கிறோம். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என பதிவிட்டிருந்தார்.

    • கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
    • ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யபபட்ட நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருட்களை ஒப்படைக்கும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்யுமாறு கர்நாடாக மாநில காவல்துறையை வலியுறுத்தியுள்ளது. பிப்ரவரி 14 மற்றும் 15-ந்தேதி தேதிகளில் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் பெங்களூரு தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு வந்தபோது ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்ததை அடுத்து தீர்ப்பில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.

    சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு கோரினார். இதற்கிடையே ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரி அவரது அண்ணன் மகளான ஜெ.தீபா சார்பில் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தான் ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அவரது சொத்துக்கள் தனக்கு சொந்தமானவை என்று அவர் குறிப்பிட்டார்.

    ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நரசிம்மமூர்த்தியின் மனுவை விசாரித்த நீதிபதி மோகன், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறும், அதை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும், அதில் இருந்து இந்த வழக்கு செலவு தொகையை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    அதாவது கடந்த ஆண்டு (2024) மார்ச் 6, 7-ந்தேதிகளில் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    அதன்படி ஜெயலலிதாவின் பொருட்களை பெற தமிழக உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரி ஆகியோர் வர இருந்தனர். சிறப்பு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா, கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யுமாறும், ஜெயலலிதாவின் பொருட்களை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரினார்.

    இந்த மனு மீது கடந்த 10 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்ரீசானந்தா உத்தரவிட்டார்.

    சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், ஜெயலலிதாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதால், ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஸ்ரீசானந்தா குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் இன்று கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
    • வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கைப்பற்றப்பட்ட பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவருடயை மனைவி பிங்கி. இவர்களுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் திருமணத்தின்போது இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இது தொடர்பான விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விவாகரத்து வழக்கில் பிங்கி ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டார்.

    மேலும் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு பீட்டர் அலுவலக வேலையை இழந்தார். முதலாளி அவரை வேலையிலிருந்து நீக்கியதால் மிகுந்த மன வேதனையில் இருந்தார். தொடர்ந்து பிங்கி மனதளவில் டார்ச்சர் கொடுத்து வந்தார். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    பீட்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு உருக்கமான கடிதம் எழுதி விட்டு உயிரை மாய்த்திருக்கிறார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    அந்த கடிதத்தில், "அப்பா மன்னிக்கவும்" என் மனைவி பிங்கி என்னைக் கொல்ல பார்க்கிறார். தினமும் சித்திரவதை செய்கிறார். மனைவி என் மரணத்தை விரும்புகிறாள். என் மனைவியின் சித்திரவதையால் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தார்.

    பீட்டரின் சகோதரர் ஜோயல் இது குறித்து கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு குடும்பத்தினர் தேவாலயத்திலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீட்டர் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவர் தனது மரண குறிப்பை எழுதியிருந்தார். அதில் அவரது மனைவி பிங்கி, தனது கணவர் இறக்க விரும்பியதாகவும், 'அப்பா மன்னிக்கவும்' மற்றும் 'அண்ணா தயவுசெய்து பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்' என்றும் எழுதியிருந்தார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இது குறித்து புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் பிங்கியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கைப்பற்றப்பட்ட பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி டார்ச்சர் செய்ததால் காதல் திருமணம் செய்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முக்கிய சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
    • அனைத்து வாகனங்களும் செல்லும் போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    லால்பாக்:

    பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் முக்கிய சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் பெங்களூரு லால்பாக் அருகே ஜே.சி.ரோடு பகுதியில் சாலையோரம் பழுதடைந்த பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. அதாவது லால்பாக்கில் இருந்து ஜே.சி.ரோடு, டவுன் ஹால் செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மிகவும் குறுகளானது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான ஆட்டோக்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வந்து செல்கின்றன.

    ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் செல்லும் போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. மீறி சென்றால் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

    எனவே போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பழைய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஸ்கிரீன் ஷாட்டுடன், செப்டோ, இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ? என கேட்டுக் கொண்டுள்ளார்.
    • பதிவின் கீழ் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண் வினிதா சிங். இவர் ஹார்ஸ் பவர் என்கிற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

    இவர் லிங்கிடுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அதாவது, செப்டோ டெலிவரி ஆப்பில் காண்பிக்கும் விலைகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களுக்கு இடையே கடுமையான விலை வேறுபாட்டை காட்டுகிறது. இதனை தெளிவுப்படுத்தும்படியும் அவர் செப்டோவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அந்த இரண்டு ஸ்கிரீன் ஷாட்களில், செப்டோ செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் தோராயமாக 500-600 கிராம் குடை மிளகாயின் விலை ரூ.21 ஆகவும், ஐபோன் செயலியில் அதே இடை கொண்ட குடை மிளகாயின் விலை ரூ.107ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

    அந்த ஸ்கிரீன் ஷாட்டுடன், செப்டோ, இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ? என கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதில், முதல் ஸ்கிரீன் ஷாட்: ஆண்ட்ராய்டு.

    இரண்டாவது ஸ்கிரீன் ஷாட்: ஐபோன். இரண்டு ஸ்கிரீன் ஷாட்களும் இன்று காலை ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டன. ஆனால் ஏன் இவ்வளவு வித்தியாசம், செப்டோ?"

    "அதே குடைமிளகாய், அதே விற்பனையாளர், அதே இடம் மற்றும் அதே நேரம்" என்ற தலைப்புடன் ஒரு பயனர் அதைப் பகிர்ந்த நிலையில், இந்தப் பதிவு எக்ஸ் பக்கத்தில் வைரலானது.

    இந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் செப்டோ தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

     



     


    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
    • நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்து என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்து என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் இருந்த ரூ.300 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை முடக்கியது.

    இந்நிலையில்  முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோர் நாளை [ஜனவரி 28] நேரில் அஜராகுமாறு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடகா முழுவதும் சித்தராமையாவின் நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×