என் மலர்tooltip icon

    கர்நாடகா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • பெங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் உள்ள நெலமங்களா, கனகபுரா ஆகிய இடங்களில் 4400 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து உள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமானம் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு அருகில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் இங்கு வந்து செல்பவர்கள் பெங்களூரு விமான நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுதவிர ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்கள் மற்றும் கொய்மலர்கள் உலகின் பலநாடுகளுக்கும் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதையடுத்து ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கர்நாடக அரசும் பெங்களூருவில் 2-வதாக புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் உள்ள நெலமங்களா, கனகபுரா ஆகிய இடங்களில் 4400 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்து உள்ளனர்.

    பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 2033-ம் ஆண்டுக்குள் பயணிகள் வருகை 90 மில்லியனை எட்டும் என்று கணித்துள்ளதால் புதிய விமான நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பெங்களூரு தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு நெலமங்களா, கனகபுரா பகுதியில் விமான நிலையம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • போலீசாரும் வேறு வழியில்லாமல் விஷ்ணு பிரசாத் உடலை தாங்களே இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர்.
    • விஷ்ணு பிரசாத் தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொன்றார்களா? என்பதும் தெரியவில்லை.

    கர்நாடக மாநில பெங்களூரு கோனனகுண்டே கனகபுரா ரோட்டில், ஆயத்த ஆடை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் புதர் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சென்ற கோனனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இறந்து போன வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. வாலிபரின் பிணம் கிடந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடைத்தது. அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.

    அப்போது பிணமாக கிடந்தவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிணமாக கிடந்த வாலிபரின் உருவப்படத்தை கோனனகுண்டே போலீசார், கேரளா போலீசாருக்கு அனுப்பிவைத்தனர். இதில் இறந்தவர் கேரளாவை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரது தாயை கண்டுபிடித்த போலீசார், விஷ்ணு பிரசாத்தின் உடலை அடையாளம் காண வரும்படியும், உடலை பெற்றுச் செல்லும்படியும் கூறினர். ஆனால் தனது மகன் திருடன், அவன் நல்லொழுக்கம் இல்லாதவன், அவனது உடலை பார்க்க வர மாட்டேன் என அவரது தாய் கூறி பிடிவாதம் பிடித்துள்ளார். ஒரு வழியாக அவரை போலீசார் சமாதானப்படுத்தி பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அவரும் மருத்துவமனை பிணவறையில் வைத்திருந்த உடலை பார்த்து, இது தனது மகன் விஷ்ணு பிரசாத் தான் என அடையாளம் காட்டினார்.

    ஆனால் அவரது உடலை சொந்த ஊரான கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அவர் மறுத்துவிட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் நல்லொழுக்கம் இல்லாமல் திருடி வந்த இவனது உடலை நான் சொந்த ஊர் எடுத்துச் செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக கூறி அங்கிருந்து தாய் கேரளாவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

    இதனால் போலீசாரும் வேறு வழியில்லாமல் விஷ்ணு பிரசாத் உடலை தாங்களே இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர். மேலும் விஷ்ணு பிரசாத்தின் பின்னணி பற்றி விசாரித்தனர். இதில் அவர் பிரபல திருடன் என்பதும், இவர் மீது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    விஷ்ணு பிரசாத் தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக் கொன்றார்களா? என்பதும் தெரியவில்லை. அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வலுக்கட்டாயமாக கடனை திருப்பி கேட்டால் 10 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதம்.
    • நிலுவையில் உள்ள கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும்.

    வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்திடம் அவசர தேவை, விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்காக கடன் பெற்றவர்கள் அந்த கடனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்ட முடியவில்லை என்றால், வட்டிமேல் வட்டி விதிக்கப்படுகிறது.

    ஒரு கட்டத்திற்கு மேல் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு, கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி நிறுவனத்தால் வற்புறுத்தப்படுவார்கள். இதனால் கடன் பெற்றவர்கள் நிறுவனம் கொடுக்கும் நெருக்கடியை தாங்க முடியாமல் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு செல்லும் நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். ஒரு கட்டத்தில் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்.

    இப்படி நாடு முழுவதும் பல்வேறு சம்பங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கிரெடிட் கார்டு மற்றும் கடன் வழங்கும் செயலிகள் வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதால், கடன் பெற்றவர்கள் விபரீத முடிவை எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது.

    இதற்கு முடிவு கட்ட கர்நாடக அரசு, சிறுகடன் சட்டத்தில் (MicoFinance) கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல் (Prevention of Coercive Actions) என்ற திருத்தத்தை கொண்டு வந்தது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அத்துடன் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடன் கொடுத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகும் எனக் கூறி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க மறுத்துள்ளார்.

    இந்த அவசர சட்டம் தொடர்பாக கவர்னர் கூறியதாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அவசர சட்டத்தில் வட்டி உள்பட அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வந்தால், கடன் பெற்றவர்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

    ஆனால், நிலுவையில் உள்ள அனைத்து கடன்களும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்பட்டால், நியாயமான வகையில் கடன் கொடுத்தவர்கள் சிக்கலை எதிர்கொள்ள நேரி்டலாம். மேலும், நிலுவையில் உள்ள தொகையை மீட்டெடுக்க அவர்களிடம் எந்த தீர்வும் இல்லை.

    இயற்கை நீதியின் ஒரு கோட்பாடாக, ஒவ்வொரு நபரும் தனது உரிமைகளுக்காகவும் சட்டப்பூர்வ தீர்வுகளுக்காகவும் போராட உரிமை உண்டு. எந்தவொரு நபரும் தனது உரிமைகளுக்காகப் போராடுவதைத் தடுப்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 & 32-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும். இது அரசாங்க வங்கிகளே பின்பற்றும் கடன் கொள்கைகளுக்கு எதிரானது.

    சமூகத்தின் கீழ்மட்ட மக்களை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் சுயஉதவிக் குழுக்களைப் பாதிப்பதன் மூலம், இந்த அவசர சட்டம் மாநிலத்தின் வணிக வாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

    இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொடுத்த கடனை திருப்பி பெறுவதற்காக, கடன் பெற்றவர்களை வற்புறுத்தினால் 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அவசர சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

    • மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.
    • அதன்பின் கடுயைமான பணியமர்த்தல் செயல்முறைக்கு பிறகு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

    இந்தியாவின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனமான இன்போசிஸ், உள்மதிப்பீடு தேர்வில் தோல்வியடைந்த 300 புதிய ஊழியர்களை (freshers) அதிரடியாக வேலை நீக்கம் செய்துள்ளது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஐ.டி. ஊழியர்களுக்கான சங்கம் (NITES), இன்போசிஸ் கூறியதைவிட புதிதாக வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டனர். இன்போசிஸ் நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தை நாடுவோம் எனத் தெரிவித்துள்ளது.

    புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், கடுமையான பணியமர்த்தல் செயல்முறைக்கு பிறகு நிறுவனத்தின் உள்மதிப்பீடு தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பெங்களுருவை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு உள்மதிப்பீடு தேர்வு நடத்தப்படும். மூன்று முறை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மைசூருவில் உள்ள எங்களுடைய வளாகத்தில் விரிவான அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படும். அதன்பின் கடுமையான பணியமர்த்தல் செயல்முறைக்கு பின்னர், புதியவர்கள் உள்மதிப்பீடு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

    எங்களுடைய வாடிக்கையாளர்கள் அதிக திறன்வாய்ந்தவர்களை பெறுவதற்கான கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேர்வு முறை நடைமுறையில் உள்ளது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

    இந்த ஊழியர்கள் ஏற்கனவே இரண்டு வருடங்கள் காத்திருந்த பின்னர்தான் வேலையில் சேர்வதற்கான ஆஃபர் கடிதம் பெற்றனர். அதுவும் நாங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து வழியுறுத்தியதன் காரணமாக அது சாத்தியமானது என்று NITES தெரிவித்துள்ளது.

    • வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது.
    • இந்த வழக்கை நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் இருந்த ரூ.300 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை முடக்கியது.

    இதற்கிடையே தகவல் அறியும் உரிமை சட்ட(RTI) ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் முடா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்

    இந்த வழக்கை நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜனவரி 27ஆம் தேதி வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று நீதிபதி எம். நாகபிரசன்னா தீர்ப்பு வழங்கியுள்ளார்." லோக் ஆயுக்தா விசாரணை சுதந்திரமாக நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை ஆவணங்களை பார்க்கும்போது, அது தவறான பாதையில் செல்வதாகவோ, அல்லது பெயரளவில் நடத்தப்பட்ட வலுவில்லாத விசாரணையாகவோ தெரியவில்லை. எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை" என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

    • துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.
    • நீதிபதி எம். நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது.

    பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான 81 வயதான எடியூரப்பா, தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.

    பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு உதவி கேட்டு சென்றபோது எடியூரப்பா தனது மகளை தனியறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவிதிவித்திருந்தார். 

    அதன் அடிப்படையில் எடியூரப்பா மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 354ஏ, 204, 214- இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.

    சிஐடி வேண்டுகோளின் பேரில் நீதிமன்றம், எடியூரப்பாவைக் கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்தது. இதனிடையே, தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார்.

    எடியூரப்பாவின் மனு இன்று கா்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம். நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. 

    எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக்கொள்ள எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கடந்த மே மாதம் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மூச்சுத்திணறலால் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

    • மனைவி தாய் வீட்டுக்கு சென்றதற்காக தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக பிஸ்கட் வினியோகித்துள்ளார்.
    • பெரும்பாலான நெட்டிசன்கள் இது தான் உண்மையான சுதந்திரம் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது மனைவி, அவரது தாய் வீட்டுக்கு சென்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தனது மனைவி தாய் வீட்டுக்கு சென்றதற்காக தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக பிஸ்கட் வினியோகித்துள்ளார். அத்துடன் மனைவி தாய் வீட்டுக்கு சென்றது தொடர்பாக கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் 'எனது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றதால் நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்' என எழுதி ஆட்டோவில் தனது இருக்கையின் பின்புறம் ஒட்டி வைத்துள்ளார். அருகில் ஒரு ஸ்டேன்ட் வைத்து கிரீம் பிஸ்கட் பாக்கெட்டையும் வைத்துள்ளார். இதை ஒரு பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகர் ஜனகராஜ் தனது மனைவி ஊருக்கு செல்வதை, என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா... என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா... என குதூகலிப்பார். அந்த பட பாணியில் பெங்களூரு ஆட்டோ டிரைவரின் இந்த செயல் குறித்த பதிவு வைரலாகி ருசிகரமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

    பெரும்பாலான நெட்டிசன்கள் இது தான் உண்மையான சுதந்திரம் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சிலர் ஒருபடி மேலே போய், சுதந்திர தின வாழ்த்துகள் எனவும் கருத்து கூறினர். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த செயல் மூலம் நீங்கள் உங்கள் மனைவியின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டீர்கள் என கண்டன கருத்துகளையும் கூறியுள்ளனர்.

    • கடன் தொகையை விட கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுள்ளனர்.
    • கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    பெங்களூரு:

    தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் ப்ரூவரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே, அவர் பெற்ற கடனுக்கு ஈடாக அவருடைய நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை ஏலத்தில் விற்றது.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகளை ஏலத்தில் விற்று ரூ.14 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    இது தொடர்பாக விஜய் மல்லையா சார்பில் அவரது வக்கீல் சஜன் பூவையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "வங்கிகளில் நான் பெற்ற கடனை வசூலிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதன்படி, ரூ.6,200 கோடியை செலுத்த வேண்டும் என கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களுக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை செலுத்தாததால், அமலாக்கத் துறை அந்த நிறுவன சொத்துகளை விற்று கடனை திருப்பிச் செலுத்தி உள்ளது.

    ஆனால், ரூ.6,200 கோடி கடனுக்கு சொத்துகளை விற்று ரூ.14 ஆயிரம் கோடி மீட்டுள்ளதாக நிதி மந்திரி கூறி உள்ளார். அதேநேரம், ரூ.10,200 கோடி மீட்கப்பட்டு வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கடன் வசூல் அதிகாரி கூறியுள்ளார்.

    எனவே, நான் பெற்ற கடன் தொகையை விட கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுவிட்டுள்ளதால் அந்த கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நேற்று நீதிபதி ஆர்.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.தேவதாஸ், விஜய் மல்லை யாவின் இந்த மனு குறித்து வருகிற 13-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

    • காயமடைந்த சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக சென்றான்.
    • அங்கு பணியில் இருந்த நர்ஸ் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹவேரி அருகிலுள்ள அடூர் ஆரம்ப சுகாதார மையத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக சென்றான். அங்கு பணியில் இருந்த நர்ஸ் சிறுவனின் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பியுள்ளார்.

    வீடு திரும்பிய சிறுவனிடம், நடந்தது குறித்து அவன் பெற்றோர் விசாரித்தனர். சிறுவன் நடந்ததைக் கூறினான்.

    இதுதொடர்பாக பெற்றோர் நர்சிடம் விசாரித்தனர். அப்போது, தையல் போட்டால் குழந்தையின் கன்னத்தில் தழும்பு ஏற்படும் என்பதால் பெவிகுயிக் தடவினேன் என கூறினார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து, நர்சை பணியிடமாற்றம் செய்து ஹவேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.

    கன்னத்தில் காயமடைந்த சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுயிக் தடவிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016 இல் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பியோடினார்.
    • மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார், அவரை நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

    வங்கிகளிடமிருந்து கடன் வசூல் கணக்குகளை கோரி விஜய் மல்லையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016 இல் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். அவர் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு ஈடாக அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன. இந்நிலையில் வங்கிகளிடமிருந்து கடன் வசூல் கணக்குகளைக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணையில் மல்லையா சார்பாக மூத்த வழக்கறிஞர் சஜன் பூவய்யா நீதிமன்றத்தில் ஆஜரானார். மல்லையா ரூ.6203 கோடி திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அவரின் சொத்துக்களை விற்று ரூ.14,131 கோடியை வங்கி வசூலித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

    இருப்பினும் மக்களவையில் மல்லையாவை ஒரு பொருளாதார குற்றவாளி என கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடன் வசூல் அதிகாரி ரூ.10,200 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளதாகவும் மல்லையாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

    எனவே, வசூலிக்கப்பட்ட கடன் தொகை குறித்த அறிக்கையை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மல்லையா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    மல்லையாவின் மனுவின் அடிப்படையில், நீதிபதி ஆர்.தேவதாஸ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, வங்கிகள் மற்றும் கடன் வசூல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது லண்டனில் வசித்து வரும் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.  

    • கைதான பஞ்சாரி சங்கய்யா சுவாமி கிக் பாஸ்சர் ஆவார்.
    • திருட்டை 18 வருடமாக அரங்கேற்றி வந்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு மடிவாளாவை சேர்ந்த தொழில் அதிபர் வீட்டில் கடந்த ஜனவரி 9-ந் தேதி வீடு புகுந்து மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமிராவில் மர்மநபர்கள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய மர்மநபர்கள் கோரமங்களா வெங்கடரெட்டி லே-அவுட்டில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது .

    இதையடுத்து அங்கு சென்ற போலீசார் குஜராத் மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வார்பேட்டையை சேர்ந்த பஞ்சாரி சங்கய்யா சுவாமி (வயது 37) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.

    கைதான பஞ்சாரி சங்கய்யா சுவாமி மாநில அளவிலான கிக் பாஸ்சர் ஆவார். மேலும் இவர் கராத்தேவில் கருப்பு பெல்ட் பெற்றவர்.

    திருமணமான இவருக்கு ஒரு மகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பஞ்சாரி சுவாமி கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தொடர் திருட்டில் ஈடுபட்டார்.

    இவர் மேலும் சிலருடன் சேர்ந்து கைவரிசை காட்டி வந்தார். கிடைக்கும் பணத்தில் சில திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பது, நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது என்று சொகுசாக வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகையான, பார் நடன அழகி ஒருவருடன் பஞ்சாரி சுவாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பஞ்சாரி, அந்த பெண்ணுக்கு தான் திருடிய பணத்தில் ரூ.3 கோடியில் பங்களா வீடு கட்டி கொடுத்தார். மேலும் பிறந்த நாள் அன்று அந்த பெண்ணுக்கு ரூ.22 லட்சத்தில் மீன் காட்சியகத்தை பரிசாக அளித்துள்ளார்.

    ஆனால் இந்த நடிகையின் பெயர் விபரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.கைதான பஞ்சாரி சங்கய்யா சுவாமி குறித்து போலீசார் கூறியதாவது:-

    இவரது அம்மா சோலாப்பூர் பகுதியில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அப்பா ரெயில்வேயில் பணியாற்றி வந்தார். பணியின் போது அப்பா இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் அவரது தாய்க்கு அரசு வேலை கிடைத்தது.

    சிறு வயதில் இருக்கும்போது மகன் பஞ்சாரி சுவாமிக்கு குத்துசண்டை, கராத்தே போட்டி மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் மகனை இந்த தற்காப்பு கலைகளில் அவரது தாய் சேர்த்து விட்டார். இதில் சிறந்து விளங்கிய அவர் பல மாநிலங்களில் நடந்த குத்து சண்டை போட்டியில் பங்கேற்று பல பரிசுகள் வென்றுள்ளார். இதில் நிறைய பணம் கிடைத்தது.

    இதனால் பஞ்சாரி சுவாமியின் போக்கு மாறியது. மதுவுக்கு அடிமையான இவர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, குத்து சண்டையை விட்டு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த திருட்டை 18 வருடமாக அரங்கேற்றி வந்தார்.

    2003-ம் ஆண்டு அவருக்கு 15 வயது இருக்கும் போதே திருட தொடங்கினார். அவர் முதல் முதலாக ஒரு மடிக்கணினியை திருடினார். பின்னர் 2009-ம் ஆண்டு முழு நேர கொள்ளையனாக மாறினார். கொள்ளை செயலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு வந்தார். கொள்ளையை முழு நேர தொழிலாக மாற்றிய பஞ்சாரி சுவாமிக்கு கோடிக் கணக்கில் பணம் குவிந்தது.

    24 வயதில் மும்பையில் நடன கிளப்பில் மது குடித்து கொண்டிருந்தபோது அதில் நடமானடி கொண்டிருந்த பாலிவுட் நடிகையுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை காதலித்து வந்தார். மேலும் கொள்ளையடித்த பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார்.

    இந்தநிலையில் 2012-ம் ஆண்டு பஞ்சாரி சுவாமி நவி மும்பையில் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் 2016-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த திருட்டு வழக்கில் அவர் கைதாகினார்.

    குஜராத் சிறையில் 6 ஆண்டுகள் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து மராட்டிய மாநிலத்துக்கு சென்று அங்கு திருடி வந்தார்.

    2024-ம் ஆண்டு அம்மாநில போலீசார் பஞ்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்து கடந்த மாதம் (ஜனவரி) 9-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார்.

    இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகியவற்றை விட்டு பெங்களூருவுக்கு இருப்பிடத்தை மாற்றினார். பிரபல கொள்ளையன் என போலீசாருக்கு தெரியாமல் இருக்க வேண்டி பெங்களூருவில் சாதாரண ஒரு டீ ஸ்டால் ஒன்றை நடத்தி வந்தார்.

    பின்னர் கூட்டாளிகளுடன் பெங்களூரு வந்த அவர், இங்கு பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தார். இந்த நிலையில் பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பது போல் பெங்களூரு மடிவாளாவை சேர்ந்த தொழில் அதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய அவர் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

    அவரிடம் இருந்து 181 கிராம் தங்க நகைகள், 334 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். கைதான பஞ்சாாி சுவாமி மீது தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 180 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
    • அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு.

    பசு கடத்தலில் ஈடுபடுபவர்களை பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ள போலீஸுக்கு உத்தரவிட உள்ளதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்தில் கால்நடை கடத்தல் மற்றும் பசு வதை அதிகரித்து வருவதைத் தடுக்க, கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கண்டதும் சுடும் உத்தரவை பிறப்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என மீன்வளத்  துறை அமைச்சர் மங்கலா சுப்ப வைத்யா தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஹொன்னாவர் அருகே கர்ப்பிணி பசு வதை நடந்ததையொட்டி எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    உத்தர கன்னடா மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வைத்யா நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசியதாவது, பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. பசு கடத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்வாகம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பசுக்களைப் பாதுகாக்க தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    நாம் தினமும் பசுவின் பால் குடிக்கிறோம். அது நாம் பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு. பசு கடத்தல் மற்றும் வதை தொடர்ந்தால் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை பார்த்த இடத்தில் சுட்டுக் தள்ள உத்தரவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×