என் மலர்
இந்தியா

லால்பாக் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
- முக்கிய சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
- அனைத்து வாகனங்களும் செல்லும் போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
லால்பாக்:
பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் முக்கிய சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பெங்களூரு லால்பாக் அருகே ஜே.சி.ரோடு பகுதியில் சாலையோரம் பழுதடைந்த பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. அதாவது லால்பாக்கில் இருந்து ஜே.சி.ரோடு, டவுன் ஹால் செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மிகவும் குறுகளானது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான ஆட்டோக்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வந்து செல்கின்றன.
ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் செல்லும் போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. மீறி சென்றால் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் பழைய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






