என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

    பெங்களூரு:

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விசாரணையை டி.ஆர்.ஐ., சி.பி.ஐ., மாநில காவல் துறை ஆகியவை தீவிரப்படுத்தி உள்ளது.

    நடிகை ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து தங்க கடத்தலில் ஈடுபட்ட அவரது கூட்டாளியான தருண்ராஜு கடந்த டி.ஆர்.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் விசாரிக்கப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    டி.ஆர்.ஐ. சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் மது என். 2023 மற்றும் 2025-க்கு இடையில் ரன்யா தருணுடன் 26 முறை துபாய் பயணம் செய்தார். மார்ச் 3-ந்தேதி ரன்யாவுடன் தருண் துபாய் செல்வதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார். இருவரும் ஒன்றாக கிளம்பினர். பின்னர் தங்கத்தை வாங்கிக் கொண்டு திரும்பும்போது ரன்யாவிடம் கொடுத்து விட்டு தருண் ஹைதராபாத் சென்று விட்டார். தருண் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளவர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

    இதையடுத்து தருண் ராஜூவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    • திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
    • கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான நாளில் இருந்தே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் பிந்துஸ்ரீ கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னை தொட முயன்றாலோ, தன்னிடம் நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி பிந்துஸ்ரீ மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.

    தற்போது ஸ்ரீகாந்துடன் வாழ பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் பிந்துஸ்ரீ வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'எனக்கும், பிந்துஸ்ரீக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பிந்துஸ்ரீ கூறுகிறார். 60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார். மனைவியின் தொல்லையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று கூறி இருந்தார்.

    அந்த புகாரை போலீசார் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பெறும் விவகாரம், தினமும் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகளையும் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார்.

    இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீகாந்த் மீது அதே வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பிந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னிடம் வரதட்சணை கேட்டு ஸ்ரீகாந்த் மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும் பிந்துஸ்ரீ கூறி இருந்தார்.



    பின்னர் போலீஸ் நிலையம் முன்பு வைத்து பிந்துஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    என் மீது கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை இல்லை. திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். எனது வீட்டில் இருந்து பணம் வாங்கி வராததால், என்னை அடித்து, தாக்கி துன்புறுத்தினார். குழந்தை பெற்றுக் கொண்டால், அவரை விட்டு என்னால் செல்ல முடியாது, அவர் செய்யும் கொடுமைகளை நான் தாங்கி கொண்டு இருக்க வேண்டும் என நினைத்தார். இந்த விவகாரத்தில் நான் பேசியதை கத்தரித்தும், சித்தரித்தும் ஸ்ரீகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். அங்கு வந்தும் ஸ்ரீகாந்த் சண்டை போட்டார். அவரிடம் விவாகரத்திற்காக ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டவில்லை. திருமணத்திற்காக பெற்றோர் செலவு செய்த பணத்தை கொடுக்கும்படி தான் கேட்டு இருந்தேன். என்னை கொடுமைப்படுத்தி வந்ததால், அவருடன் சேர்ந்து குழந்தை பெற்று, அதன் வாழ்க்கையையும் வீணடிக்க கூடாது என்பதால், 60 வயதிற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னேன்', என்றார்.

    கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஸ்ரீகாந்த், பிந்துஸ்ரீ அளித்த புகார்களின் அடிப்படையில் வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
    • இதில் பேசிய எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா, ஆண்களுக்கு 2 மதுபாட்டில் கொடுக்க வேண்டும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபையில் சமீபத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில் கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது.

    இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா பேசியதாவது:

    கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை 3 முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சூழலில் வரியை மீண்டும் உயர்த்தினால் எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?

    மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது.

    மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம்.

    அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்? என தெரிவித்தார்.

    கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.

    • பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு.
    • அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யாராவ் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து வரலாறு காணாத வகையில் தற்போது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கத்தாரில் இருந்து நேற்று கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு பெண்ணின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 3.2 கிலோ எடை கொண்ட கோகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.38.4 கோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தி வந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. பெங்களூருவில் அவர் யாரிடம் சேர்க்க போதைப்பொருள் கடத்தி வந்தார் என்றும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    தங்க கடத்தல் வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.38.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடுரோட்டில் கொலையை பார்த்த உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கர்நாடகாவில் நடுரோட்டில் ஒருவரை கொலை செய்வது போல ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கலபுர்கி மாவட்டத்தில் நடுரோட்டில் ரத்தம் போன்ற திரவத்தை கொட்டி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்வது போல இருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதனை பார்த்த உள்ளூர் மக்கள் பீதியடைந்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது.
    • பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் சமாதானம் அடையவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டம் ஜகல்பூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.

    கடந்த சனிக்கிழமை இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டனர். உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    பந்தியில் தண்ணீர் பரிமாறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் திருமணம் நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தகளில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
    • இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதற்கு எதிராக அனைத்து விதமான வகையில் போராடுவோம். இந்த முடிவை திரும்பப்பெறும் வகையில் நீதிமன்றத்தில் கூட முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    4 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தத்திலும், ஒரு கோடி ரூபாய் வரையில் goods/services ஒப்பந்தங்களிலும் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் வழங்க சட்டதிருத்தம் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை. சித்தராமையா அரசு உடனடியாக இதை திரும்பப் பெற வேண்டும். இது அரசியமைப்புக்கு எதிரான துரதிருஷ்டவசமானது என பாஜக எம்.பி. தேஜஷ்வி சூர்யா பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மாநிலத்தில் மத மாற்றத்தை ஊக்குவிக்கிறது என்றார்.

    • ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

    பிரபல நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.

    தற்போது ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், ரன்யா ராவ் குறித்து பாஜக எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் கொச்சையாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரன்யா ராவ் குறித்து பேசிய பசங்கவுடா பாட்டீல், "தங்க கடத்தலில் சுங்க அதிகாரிகளின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரன்யா ராவ் உடல் முழுவதும் தங்கத்தை வைத்திருந்தாள். அவள் உடலில் துளைகள் இருந்த இடங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தினாள். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களின் பெயரையும் வெளியிடுவேன்

    தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை நான் சேகரித்துள்ளேன்அவள் தங்கத்தை எந்த துளையில் மறைத்து கொண்டு வந்தாள் என்பது உட்பட அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.

    • மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவுக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 கோடி மதிப்பிலான 37 கிலோ 870 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மங்களூருவில் சமீபத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த போதைப்பொருள் விற்பனையாளர்களான வெளிநாட்டு பெண்கள் 2 பேரை மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    மங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி நீலாத்ரி நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவுக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 வெளிநாட்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அபிகைல் அடோனிஷ் (வயது 30), பாம்பா பேன்டா (31) என்பதும், அவர்கள் டெல்லியில் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 கோடி மதிப்பிலான 37 கிலோ 870 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் மங்களூருவுக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'இது மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு' என்றார்.

    • காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.
    • வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன்.

    தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ரன்யா ராவ், டிஆர்ஐயின் கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு (ஏடிஜிக்கு) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த வழக்கில் நான் நிரபராதி என்று சொல்ல உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. காவலில் எடுக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை 10 முதல் 15 முறை தன்னை அதிகாரிகள் அறைந்ததார்கள்.

     ஏற்கனவே எழுதப்பட்ட எழுதப்பட்ட  50 முதல் 60  பக்கங்களிலும், சுமார் 40 வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். திரும்பத் திரும்ப அடித்து, அறைந்த போதிலும், அவர்கள் (டிஆர்ஐ அதிகாரிகள்) தயாரித்த அறிக்கையில் கையெழுத்திட நான் மறுத்துவிட்டேன். காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.

    இது தவிர, எனது தந்தையின் அடையாளத்தை வெளியிடுவதாகவும் ஒரு அதிகாரி என்னை மிரட்டினார். இந்த வழக்குக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடமிருந்து எந்த தங்கமும் மீட்கப்படவில்லை.

    டெல்லியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரன்யா ராவ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

    ஆனால், கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஆர்ஐ அறிக்கை குறிப்பிடுகிறது.

    • பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு.
    • அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை.

    திருவனந்தபுரம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரூவை சேர்ந்தவர் ஜெம்ஷீத். தொழில்நுட்ப வல்லுனரான இவர், கேரள மாநிலம் கோட்டக்கல் அருகே உள்ள திருரூருக்கு செல்ல யஷவந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தட்கல் முறையில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றுள்ளார்.

    பயணநாளில் பெங்களூரூ ரெயில் நிலையம் வந்த அவர் தான் செல்ல வேண்டிய ரெயிலில் இரவு ஏறி, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்ற போது அங்கு முன்பதிவு செய்யாத 5 பயணிகள் இருப்பதை பார்த்துள்ளார். அவர்களிடம் இது தனது இருக்கை என்று ஜெம்ஷீத் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் நகரவில்லை.

    இதனை தொடர்ந்து 10 மணி நேர பயணத்தை ஜெம்ஷீத் இரவில் நின்று கொண்டே சென்றுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.4 லட்சம் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த வழக்கு பல மாதங்கள் நடைபெற்ற நிலையில், ஜெம்ஷீத்துக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இது பற்றி ஜெம்ஷீத் கூறும் போது, நான் பாதிக்கப்பட்ட போது ரெயில்வே போலீசாரிடம், தெரிவித்தேன். அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.

    அவரிடம் கூறியும் பலன் கிடைக்காததால் ரெயில்வே உதவி எண் 139-க்கு தொடர்பு கொண்டேன். ஆனால் அது பயனற்றதாக இருந்தது. ரெயில்வே செயலியும் கை கொடுக்காததால் திருரூரை அடைந்ததும் ரெயில் நிலைய மேலாளரிடம் புகார் அளித்தேன்.

    ஐ.ஆர்.சி.டி.சியின் பாலக்காடு மற்றும் பெங்களூரூ ரெயில்வே பிரிவுகளுக்கு புகார் கொடுத்தும் பலன் கிடைக்காததால் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் என ஜெம்ஷீத் தெரிவித்தார்.

    பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்கும், டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட படுக்கைகளை வழங்குவதற்கும் இந்திய ரெயில்வே தான் பொறுப்பு என்று நுகர்வோர் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    ரெயில் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே துறையை பொறுப்பேற்க வைக்க வேண்டும். ரெயில்களில் கொசுக்கள் கடித்தால் கூட ரெயில்வே நிர்வாகம் மீது நாம் வழக்கு தொடர முடியும் என்றும் ஜெம்ஷீத் கூறியுள்ளார்.

    தற்போது இந்த வழக்கில் ரெயில்வேக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை. எனவே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    • பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மது விருந்து நடத்தினர்.
    • இரும்பு கம்பி மற்றும் மது பாட்டில்களால் சரமாரியாக தாக்கினார்.

    பெங்களுரு:

    பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பீகாரை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஹோலி பண்டிகையையொட்டி அவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    ஹோலி பண்டிகையையொட்டி நேற்று மதியம் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மது விருந்து நடத்தினர். இதில் ராஜேஸ்ஷாம் (வயது 20), அன்சூ (19), தீபு (23) ஆகியோர் உள்பட 11 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது மதுபோதை தகராறில் திடீரென ஒரு தொழிலாளி ஷாம், அன்சூ, தீபு ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பி மற்றும் மது பாட்டில்களால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் சர்ஜாப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான நபர்களில் ஒருவர், கொலையை அரங்கேற்றிய நபரின் தங்கையுடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அவர், தனது தங்கையுடன் பேசி வந்த நபரை தாக்கி உள்ளார். அப்போது அவரை மற்ற 2 பேர் தடுத்துள்ளனர். இதனால் 3 பேரையும் அந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றது தெரியவந்தது.

    ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பீகார் வாலிபர்கள் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×