என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
    • முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.

    ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.

    சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.

    • கர்நாடக வீட்டுவசதி மற்றும் சிறுபான்மை நலன் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறிய கருத்து வைரலாகி வருகிறது.
    • ஒரு அமைச்சராக, பாகிஸ்தானுடன் போரை நடத்த நான் தயாராக இருக்கிறேன்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையில், கர்நாடக வீட்டுவசதி மற்றும் சிறுபான்மை நலன் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறிய கருத்து வைரலாகி வருகிறது.

    நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜமீர் அகமது கான், நாங்கள் இந்தியர்கள், நாங்கள் இந்துஸ்தானிகள். பாகிஸ்தான் நம்முடன் எந்த உறவையும் கொண்டிருந்ததில்லை. பாகிஸ்தான் எப்போதும் நமக்கு எதிரியாக இருந்து வருகிறது.

    ஒரு போர் நடந்தால், நான் தயாராக இருக்கிறேன். ஒரு அமைச்சராக, பாகிஸ்தானுடன் போரை நடத்த நான் தயாராக இருக்கிறேன். இந்தியாவின் சார்பாகப் போரில் பங்கேற்க நானே அங்கு செல்வேன்.

    தேவைப்பட்டால், நான் ஒரு தற்கொலை குண்டுதாரியாகக் கூட மாறுவேன். நான் கிண்டல் செய்யவில்லை. நாட்டின் நலனுக்காக, மோடியும் அமித்ஷாவும் என்னை தற்கொலை குண்டுதாரியாக்கினால், நான் அந்த குண்டை அணிந்து பாகிஸ்தானுக்குச் செல்வேன் என்று அல்லாவிடம் சத்தியம் செய்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் ஒன்றுபட வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்புக்காக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

    • என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன்.
    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அத்துமீறியுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடினார். அப்போது சாலையில் நடந்து சென்ற மக்கள், வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டும் யாரும் அந்த இளம்பெண்ணுக்கு உதவி செய்ய முன் வரவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்து உள்ளார்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஒரு தனியார் டி.வி.யில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அது பற்றிய விவரம் வருமாறு,

    பெங்களூருவில் போக்குவரத்து நிறைந்த ஐ.டி. பூங்கா பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஈகோவேர்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் திடீரென எனது முதுகில் தட்டினார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யாரோ ஒருவர் பொறுப்பற்ற முறையில் சென்றதால் தன்மீது அவரது கை மோதியிருக்கும் என்று கருதினேன். ஆனாலும் மீண்டும் அதேபோல் என் முதுகில் தட்டினார். இதையடுத்து யாரோ ஒருவர் வேண்டும் என்றே இதுபோல் செய்கிறார் என்று தெரியவந்தது. இதையடுத்து நான் உதவி கேட்டு கத்தினேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.

    என் முதுகில் தட்ட மர்ம நபர் 3-வது முறையாகவும் யூடர்ன் எடுத்து என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்தேன். இதையடுத்து நான் உதவிக்காக மீண்டும் கத்தினேன். அப்போது நிறைய பேர் அங்கு இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் நான் பொதுமக்களிடம் உதவி கேட்டேன். மேலும் அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர்களை நிறுத்தி உதவி கேட்டேன். ஆனால் எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்பு நான் அவசர அவசரமாக ஈகோவேர்டில் உள்ள பாதுகாப்பு அறைக்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி கிடைத்தது.

    பின்னர் மறுநாள் போலீசில் புகார் செய்தேன். இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் கொண்ட பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது என்பது மிகவும் ஆச்சரியமான விசயமாக கருதுகிறேன் என்றார். இந்த சம்பவம் தற்போது பெங்களூருல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
    • ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

    பெங்களூரு:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

    தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

    இந்நிலையில், ஆர்.சி.பி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் விராட் கோலி பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் டிரெய்லர் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அந்த டிரெய்லரில் விராட் கோலி பேசியதாவது:

    ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

    எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்யவேண்டும்.

    அவர் என்னிடம் ஒருமுறை, 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, நீங்கள் (கோலி) இந்தியாவுக்காக விளையாடுவதை நான் பார்க்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு விளைவிப்பீர்கள் என சொன்னார். என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை அவர் மிகவும் திகைக்க வைத்தார்.

    ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பை, எந்த வெள்ளிப் பாத்திரமோ அல்லது எந்தக் கோப்பையோ நெருங்க முடியாது என்று நினைக்கிறேன்

    எனக்கு எந்த விதத்திலும் நிலைமை மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. புதிய வீரர்கள் குழு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு நேரம் தேவை. அவர்களுக்கு பரிணமிக்க, அழுத்தத்தைக் கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட, உலகக் கோப்பை வரும்போது அவர்கள் தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாட 2 வருட சுழற்சி தேவை. இதைப் புரிந்துகொண்டே டி20 போட்டிகளை விட்டு வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.


    • சுஹாஸ் என்பவர் குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர்.
    • சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ் வெட்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால், மங்களூர் நகர் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுஹாஸ் ஷெட்டி என்பவர் குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர். சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.

    பதற்றம் காரணமாக மங்களூருவில், மே 6-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • எனக்கு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. என்ன செய்வது?
    • மிரட்டலுக்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்க எடுக்க காவல்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    எனக்கு மிரட்டல் கால்கள் வருகின்றன. அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    எனக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது. என்ன செய்வது?. காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இந்த மிரட்டல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ரவுடி சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

    கொலை செய்யப்பட்ட பிறகு நேற்று காவல்துறை அதிகாரியுடன் பேசினேன். சட்டம்-ஒழங்கு ஏடிஜிபி-யை மங்களுருக்கு அனுப்பி வைத்துள்ளோம். முன்கூட்டியே திட்டமிட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை. விசாரணை முழுமையாக முடிவடைந்த பின்னர், அதுகுறித்து தெரியவரும். அரசியல் செய்வதற்காக பாஜக எப்போதும் இதுபோன்ற சம்பவங்களை தேடிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    மேலும், "பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒரு போலீசாரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ கூட இல்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது. பாதுகாப்பு இல்லை என்றால், என்ன அர்த்தம்? நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கிறார்கள், அத்தகைய இடத்தில் போலீசார் இருக்க வேண்டாமா?" என்றார்.

    பாதுகாப்பு குறைபாட்டால் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நண்பர்களிடம் ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டி 5 பாட்டில் மதுபானத்தை குடித்த 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    21 வயது ஆன கார்த்திக் என்ற வாலிபர் தனது நண்பர்களான வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 5 பேரிடம் மதுவில் தண்ணீர் கலக்காமல் ஐந்து முழு பாட்டில் மதுபானத்தை குடிக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து வெங்கட ரெட்டி, கார்த்திக்கிடம் ரூ.10 ஆயிரம் பந்தயம் கட்டியுள்ளார். இதனை தொடர்ந்து 5 பாட்டில் மதுபானத்தை குடித்த கார்த்திக்கின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகும் நிலையில், அவருக்கு 8 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது.

    கார்த்திக் உயிரிழந்தது தொடர்பாக வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட 6 பேர் மீது நங்கலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

    • தங்க வர்த்தகத்தில் 60 சதவீத வணிகம் பெங்களூருவிலும், மீதமுள்ளவை பெரும்பாலும் ஹூப்பள்ளி, மங்களூரு மற்றும் மைசூருவிலும் நடைபெற்றது.
    • நேற்று ஒரு கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ராமர் உருவம் கொண்ட நாணயங்களுக்கான தேவை அதிகரித்தது.

    பெங்களூரு:

    அட்சய திருதியை நாளான நேற்று (புதன்கிழமை) கர்நாடக மாநிலம் முழுவதும் தங்க நகைகள் அதிகமாக வாங்கப்பட்டது. மாநிலத்தில் கிட்டத்தட்ட 2 டன் தங்கம் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.1,700 கோடி ஆகும்.

    தங்க வர்த்தகத்தில் 60 சதவீத வணிகம் பெங்களூருவிலும், மீதமுள்ளவை பெரும்பாலும் ஹூப்பள்ளி, மங்களூரு மற்றும் மைசூருவிலும் நடைபெற்றது.

    கடந்த ஆண்டும் மாநிலத்தில் சுமார் 2 டன் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டிருந்தாலும் விலை குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு விற்பனை அளவு சமமாக உள்ளது.

    தங்கத்திற்கான மிகப்பெரிய தேவை விலை உயர்வுக்கு வழிவகுத்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ராமர் உருவம் கொண்ட நாணயங்களுக்கான தேவை அதிகரித்தது. கூடுதலாக, ஆன்லைன் கடைகளில் இருந்து 10 நிமிடங்களுக்குள் தங்கத்தை வாங்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வாங்குவதை இன்னும் எளிதாக்கியது.

    • உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என வாலிபர் கோசம்.
    • அங்கிருந்த கும்பல் ஒன்று அந்த வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் குடுப்பு கிராமத்தில் பாத்ரா கல்லூர்த்தி கோவில் அருகே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் உள்ளூரைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடிள்ளன. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் குவிந்திருந்தனர். அப்போது அஷ்ரப் என்பவர், பாகிஸ்தான ஜிந்தாபாத் என கோஷமிட்டுள்ளார்.

    தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோசம் எழுப்பிய அஷ்ரஃப்-ஐ அங்கு கூடியிருந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அஷ்ரஃப் படுகாயம் அடைந்து, மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அஷ்ரஃப் கேரளாவின் வயநாடு மாவட்டம் சுல்தான் பதேரி தாலுகா புல்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சித்தராமையா அளித்த பதில் பின்வருமாறு:-

    பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பப்பட்டிருந்தால், அது யாராக இருந்தாலும் தவறு. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிக்கை வரட்டும். யாருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவாகிவிடும். பாகிஸ்தானுக்கு எதிராக யார் பேசியிருந்தாலும் அது தவறு. அது தேச துரோகத்திற்கு சமம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    கேரள மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து கர்நாடக மாநில போலீஸ் துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-

    மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வரகிறது. தற்போது சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் இந்த சம்பவத்தை மிகவம் தீவிரமானதாக எடுத்துள்ளோம். கிரிக்கெட் விளையாட அந்த இடத்திற்கு ஏராளமானோர் சென்றுள்ளனர். தகவல் சேகரிக்க அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணை தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    • செல்போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கூரியர் நிறுவனம் அளித்த புகாரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • செல்போன்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் ரூ.3 கோடி மதிப்பிலான 5,140 செல்போன்கள் திருடப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு கண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டது.

    செல்போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கூரியர் நிறுவனம் அளித்த புகாரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக கண்டெய்னர் டிரைவர் ராகுலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் தற்போது 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 56 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னரையும் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் 300 முதல் 400 மொபைல் போன்களை விற்றுள்ளதாகவும், IMEI எண்ணின் அடிப்படையில் மொபைல் போன்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    • கேரளாவை சேர்ந்த இளைஞன், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியுள்ளார்.
    • உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது.

    கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது.

    பத்து அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த இளைஞன், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரிடம் வாக்குவாதம் செய்தது.

    இது மோதலாக மாறி அவர்கள் அந்த இளைஞனை உதைத்தும், தடியால் தாக்கியும் உள்ளனர். இதனால் உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இளைஞன் உடலை கைப்பற்றிய கர்நாடக போலீசார் இந்த சம்பவத்தில் 15 பேரை கைது செய்துள்ளனர்.

    • பா.ஜ.க.வினர் சிலர் முதல்-மந்திரி சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர்.
    • வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்ந்து வருகிறது. சமுதாயத்தை உடைக்கும் வேலையை இந்த பா.ஜ.க. செய்கிறது. மக்களுக்கு துரோகம் இழைக்கும் பணியை தவிர மத்திய பா.ஜனதா அரசு வேறு என்ன செய்கிறது?. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சங்பரிவார் அமைப்பினர் என்ன செய்தனர்?.

    காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 3 பேர் பலியாயினர். இது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு இல்லையா? சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு போலீஸ்காரர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா?. நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது தேசிய கொடி ஏற்றப்படவில்லை.

    இதனால் பா.ஜ.க.வினருக்கு வெட்கம் ஏற்படவில்லையா?. சுதந்திர போராட்டம் முதல் நவீன இந்தியா வரை இதன் வளர்ச்சியில் பா.ஜ.க.வின் பங்கு என்ன?. வெட்கம் இல்லாமல் தேசபக்தி குறித்து அவர்கள் பேசுகிறார்கள். இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தியதை தவிர பா.ஜ.க. வேறு என்ன செய்தது?. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பணக்காரர்களுக்கு 32 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரான மத்திய ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் எதிர்க்கக்கூடாதா?. இந்தியர்களை நிரந்தர பொய்களில் இன்னும் எத்தனை ஆண்டுகள் மூழ்கடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையை சொல்ல பா.ஜனதாவினர் முன்வர வேண்டும். நாட்டிற்காக காங்கிரஸ் தலைவர்கள் உயிா்த்தியாகம் செய்தனர். அதனால் போராட்டம் என்பது காங்கிரசுக்கு புதிது அல்ல.

    ஆங்கிலேயர்களை விரட்டி யடித்த எங்களுக்கு உங்களை (பா.ஜ.க.வை) எதிர்க்கும் சக்தி உள்ளது. நாங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அதை அப்படியே விவசாயிகளுக்கு வழங்குகிறோம். பஸ் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்டவை மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் குறைவாகத்தான் உள்ளது. பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன்.

    மத்திய அரசு அரிசி, சமையல் எண்ணெய், தங்கம், வெள்ளி, உரம், பருப்புகள், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த மத்திய அரசு எதை விட்டுவைத்து இருக்கிறது?. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவது என்பது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த பா.ஜ.க.வினர் சிலர் முதல்-மந்திரி சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த முதல்-மந்திரி சித்தராமையா ஏ.எஸ்.பி.யை அழைத்து, நீங்க என்ன பண்றீங்க? என கேள்வி கேட்டு கை ஓங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    காவல்துறை அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 



    ×