என் மலர்
டெல்லி
- பாஜக, நிதிஷ் குமார் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிடும்.
- ஜித்தன் ராம் மாஞ்சி கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடித்தார். இவரது கட்சி மக்களவை தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது. அதனால் 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி 25 முதல் 30 இடங்களுக்குள்தான் கொடுக்க முன்வந்தன. இந்த சிராக் பஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில்தான் தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
அதன்படி பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும், லோக் ஜனதா கட்சி 29 தொகுதியில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.
- அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
- 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.
இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் போர்நிறுத்ததை உறுதிப்படுத்துதல், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியை அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.
இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் சார்பாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.
புதுடெல்லி:
பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தே பணம் செலுத்த முடியும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.
- அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார் என்றார்.
புதுடெல்லி:
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபை சமீபத்தில் வழங்கியது.
ஆறு நாள் பயணமாக செர்ஜியோ கோர் நேற்று இந்தியா வந்தார். மாலையில் அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினர்.
செர்ஜியோ கோருடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, கோரின் பதவிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகள் மேலும் வலுப்படும் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், செர்ஜியோ கோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா மதிக்கிறது. அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் வலுவான தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வரும் நாட்களில் வலுவடையும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார். தற்போது கூட இரு தலைவர்களும் போனில் மிகச் சிறந்த உரையாடலை நிகழ்த்தினர். இது வருகிற நாட்கள் மற்றும் மாதங்களில் தொடரும் என தெரிவித்தார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது.
இன்று நடந்த போட்டியில் புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக ஆடிய புனேரி பல்தான் 36-23 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் புனேரி பல்தான் அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. மேலும் பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
- பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன.
- விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
புதுடெல்லி:
ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.
பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
ஆனாலும், பணியிடங்களில் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்று. பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம்.
இந்நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியாகியது. ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 4ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல் கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது என தெரிவிக்கின்றது.
- இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மனுதாக்கல் செய்தனர்.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணை கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே 2025-2030-ம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:-
எங்களது போராட்டம் காரணமாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் சுமார் 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. மங்களூரு, பாலக்காடு, கொச்சி, சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 11 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் ஏற்றி செல்லும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 15 ஆயிரம் டன் கியாஸ் வீதம், 2 நாட்களில் 30 ஆயிரம் டன் கியாஸ் பாட்லிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்வது தடைப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது. ஆயில் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதில் உடன்பாடு ஏற்பட்டால், போராட்டத்தை விலக்கி கொள்வோம். இல்லை எனில் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறிப்பாக தென்னிந்திய அளவில் நாமக்கல் நகரை மையமாக கொண்டு கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன்காரணமாக நாமக்கல் நகரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை பட்டறைகளில் நிறுத்தி சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.2 கோடி வீதம் சுமார் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாண்டில் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கியாஸ் டேங்கர் லாரிகளின் போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்வதால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பாட்டலிங் பிளாண்டுகளில் குறிப்பிட்ட நாட்கள் வரை தான் சிலிண்டர்களில் நிரப்ப கியாஸ் சேமிக்க முடியும். எனவே அந்த கியாஸ் தீர்ந்து விட்டால் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்ப முடியாத நிலை உருவாகி விடும்.
இதனால் தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை நிலவும். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் சிலிண்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தன்தானியா கிரிஷி யோஜனா திட்டம்.
- ரூ. 11,440 கோடி மதிப்பீட்டில் ஆத்ம நிர்பார்தா திட்டம்.
விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் விரைவான வளர்ச்சி அடையும் வகையில் மத்திய அரசு மொத்தம் ரூ.35,440 கோடி மதிப்பீட்டில் தன் தான்யா கிரிஷி யோஜனா, மற்றும் ஆத்ம நிர்பார்தா ஆகிய 2 புதிய முக்கிய திட்டங்களை கொண்டு வந்து உள்ளது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நவீன வேளாண்மை திட்டங்களை பிரதமர் மோடி இன்று டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
தன்தானியா கிரிஷி யோஜனா திட்டம் ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும், ஆத்ம நிர்பார்தா திட்டம் ரூ. 11,440 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டங்களின் நோக்கம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கொள்முதல், சேமிப்பு பயிர் பல்வகைப் படுத்துதல் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்றவை ஆகும்.
பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பது, சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்துதல், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல், முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் நீண்டகால குறுகிய கால கடனை எளி தாக்குதல் உள்ளிட்டவைகள் இந்த புதிய திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்த விழாவில் பிரதமர் மோடி விவசாய துறையை மேம்படுத்தும் வகையில் ரூ. 815 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம், உணவு பதப்படுத்து தல் துறைகளில் ரூ.5,450 கோடிக்கும் அதிகமான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
- டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.
- ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.
கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.
எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து சீனாவுக்கும் இடையே நேரடி விமானங்களை நவம்பர் 10 முதல் இயக்க உள்ளதாக இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo) அறிவித்துள்ளது.
அதன் அறிவிப்பின்படி, புதிய நேரடி தினசரி விமானங்கள் டெல்லி மற்றும் சீனாவின் குவாங்சோ நகருக்கு இடையே நவம்பர் 10 முதல் தொடங்கவுள்ளன.
ஏற்கனவே அக்டோபர் 26 முதல் கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையே தினசரி விமானப் சேவையை தொடங்குவதாக இண்டிகோ அறிவித்திருந்த நிலையில் தற்போது டெல்லியில் இருந்தும் நேரடி விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தினசரி, இண்டிகோ விமானம், டெல்லியில் இருந்து இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சோ சென்றடையும்.
பின்னர் குவாங்சோவில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு காலை 10:10 மணிக்கு டெல்லி வந்துசேரும்.
அதேபோல் டெல்லி மற்றும் வியட்நாமின் ஹனோய் நகருக்கு இடையே புதிய நேரடி தினசரி விமானச் சேவை டிசம்பர் 20 முதல் தொடங்கவுள்ளதாகவும் இண்டிகோ இன்று அறிவித்துள்ளது.
இந்த இரண்டு வழித்தடங்களிலும் இண்டிகோவின் ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும்.
"உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா இடையேயான சேவைகள் மீண்டும் தொடங்குவது, கலாச்சார பரிமாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு அபரிமிதமான ஆற்றலை வழங்குகிறது" என்று இண்டிகோவின் விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
- மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
- கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் பிற மாநிலங்களில் தாரிக்கப்டும் ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய இருமல் மருந்துகளில், 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் ம.பி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
இதற்கிடையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதித்தித்தன.
இந்நிலையில் இந்த வரிசையில் டெல்லி அரசும் கோல்ட்ரிஃப் மருந்துக்க்கு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப்பின் விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு டெல்லி அரசு தடை விதித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பின் நலன் கருதி, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உங்கள் மௌனம், பெண் சக்தி குறித்த உங்கள் அரசியல் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது.
- நம் மண்ணில் பெண்களை அவமதிக்க எப்படி அனுமதிக்க முடியும்?
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2021 இல் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது" என்று வினவினார்.
இந்த பதிவை பகிர்ந்து மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "திரு. மோடி, பெண் பத்திரிகையாளர்களை பொது மேடையில் இருந்து விலக்கி வைக்க நீங்கள் அனுமதிக்கும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் அவர்களுக்காக நிற்க பலவீனமானவர் என்று சொல்கிறீர்கள்.
நமது நாட்டில், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமாக பங்கேற்க உரிமை உண்டு. இத்தகைய பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது உங்கள் மௌனம், பெண் சக்தி குறித்த உங்கள் அரசியல் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கிலும் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,"இந்திய மண்ணில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தாகியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்களின் கண்ணியம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதை இது பிரதிபலிக்கிறது. சமத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக நாடான இந்தியாவை உலகம் பார்க்கும்போது, இதுபோன்ற பாகுபாடுகள் இங்கு நடைபெற அனுமதிப்பதன் மூலம் நாம் என்ன செய்தியை அனுப்புகிறோம்?
மோடி அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பதில்களைக் கோருகிறோம். நம் மண்ணில் பெண்களை அவமதிக்க எப்படி அனுமதிக்க முடியும்? அல்லது மௌனமும், புறக்கணிப்பும், பாகுபாடும் தான் உங்கள் அரசின் பெண்களுக்கான தொலைநோக்கு பார்வையாக இருக்கிறதா?
திரு. மோடி, திரு. ஜெய்சங்கர் அவர்களே உங்கள் சொந்த நாட்டில் இந்தியப் பெண்களின் அடிப்படை கண்ணியத்தைக் கூட நீங்கள் பாதுகாக்க முடியாத அளவுக்கு நீங்கள் எத்தனை பலவீனமாக இருக்கிறீர்கள்?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அழைத்தவர்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்றும் ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.






