என் மலர்tooltip icon

    டெல்லி

    • மக்களவை தேர்தலை முன்னிட்டு 9 பேர் கொண்ட 10-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
    • இதில் பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகரும் அடங்குவார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் 10-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 8 புதிய வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேற்கு வங்காளத்தின் அசன்சால் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிடுகிறார்.

    சண்டிகர் தொகுதியில் சஞ்சய் சிங் போட்டியிடுகிறார்.

    உத்தர பிரதேசம் காஜிபூர் தொகுதியில் பரஸ்நாத் ராய், மெய்ன்புரி தொகுதியில் ஜெய்வீர் சிங், கவுஷம்பி தொகுதியில் வினோத் சோன்கர், பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகர் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழலை எதிர்த்துப் போராட பிறந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலில் சிக்கித் தவிக்கிறது.
    • இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

    இந்நிலையில், ராஜ்குமார் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட பிறந்தது. ஆனால் இன்று அந்தக் கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது.

    அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. இந்த ஊழலுடன் பெயரை இணைக்கமுடியாது என்பதால் அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன்.

    இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்.

    தலித் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்படும்போது பின் இருக்கை எடுக்கும் கட்சியில் நான் அங்கம் வகிக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என தெரிவித்தார்.

    • தேர்தல் பத்திர திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்துசெய்யப்பட்டது.
    • தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    புதுடெல்லி:

    தேர்தல் பத்திர திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்துசெய்யப்பட்டது. 2018 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி கமிஷன் பெற்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    ஒரு நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவு செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும் என்பது நிறுவனங்கள் சட்டம். மீறுவது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திர தகவல்களின்படி, நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடையாத சுமார் 20 நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு 103 கோடி ரூபாயை நிதியாக வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் பிரசாந்த் பூஷன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் பத்திரங்கள் ஊழல் என்ற பெயரில் பல மோசடிகள் செழித்து வளர்ந்தன. ஒப்பந்தங்களுக்கான பத்திரங்கள், கொள்கை மாற்றங்களுக்கான பத்திரங்கள், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, மருந்துக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து பாதுகாப்பிற்கான பத்திரங்கள், ஜாமீன் பெறுவதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கும் பத்திரங்கள், பணமோசடிக்கான பத்திரங்கள், புதிதாக தயாரிக்கப்பட்ட நிறுவனங்களின் பத்திரங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

    டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அவர் திகார் சிறையில் உள்ளார்.

    பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்ததோடு அந்த மனுவை தள்ளுபடி செய்து.

    ஆனால் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்தது. இதற்கிடையே தொடர்ந்து கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் கோபம் அடைந்த டெல்லி உயர்நீதிமன்றம், "இந்த விசயத்தில் நாங்கள் ஒருமுறை உத்தரவு பிறப்பித்துவிட்டோம். அதன்பிறகு தொடர்ந்து வழக்கு தொடரக்கூடாது. அடுத்தடுத்த தொடர்ச்சிகள் இருப்பதற்கு இது ஒன்றும் ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல" என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வழக்கு, ஜாமின் மனு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.
    • கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.

    ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஓட்டல்களும் பெருகி விட்டன. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகையும் 2 மடங்கு எகிறியது.

    கடந்த 10 வருடங்களை ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில் ஒரு பகுதியாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் நகரங்களில் உயர் வருவாய் கொண்ட மக்கள், பாக்கெட்டு களில் விற்கப்படும் உணவுகளுக்கு 2.2 மடங்கு அதிகம் செலவு செய்கின்றனர்.

    கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளுக்கு செலவு செய்யும் தொகை 9 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்கான செலவு 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில் உணவு தானியங்களுக்கான செலவு 6.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான செலவு 4.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும், முட்டை, மீன், இறைச்சிக்கான செலவு 3.7 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான செலவு 1.9 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றுக்கான செலவு 1.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

    • பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
    • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என எச்சரித்துள்ளது.

    புதுடெல்லி:

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை.

    இந்த வழக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும் விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளீர்கள். ஆனால் கோர்ட்டில் பதிலளிக்க வில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

    நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இதற்கிடையே, ஆச்சார்யா பால்கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

    ஆனால், அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி நீதிபதிகள் கூறியதாவது:

    பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளமாக இருக்க விரும்பவில்லை. அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் வேண்டுமென்றே கோர்ட் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதாகதான் நாங்கள் கருதுகிறோம்.

    அனைவரையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறோம். இதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை யாரும் மீறக்கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டும். நீங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும்போது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள், அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது?

    எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறியுள்ளதால் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்கமுடியாது. உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தனிநபர் குறித்த விஷயம் கிடையாது என காட்டமாக தெரிவித்தனர்.

    மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள். பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் யாரெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லையோ அவர்கள் அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளது.

    • ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் சர்வதேச கடல் எல்லை அருகே நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது.
    • 3 உளவு கப்பல்களும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முக்கிய ராணுவ நிலைகளை உளவு பார்க்க சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென் இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில் திட்டங்களை சீன கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருந்த படியே நவீன கருவிகள் மூலம் உளவு பார்ப்பது அடிக்கடி நடக்கிறது.

    அந்த வகையில் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் 3 சீன உளவு கப்பல்கள் ஊடுருவி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் சர்வதேச கடல் எல்லை அருகே நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது.

    அந்த கப்பல் அந்தமானில் உள்ள இந்திய கடற்படை கப்பல்களின் நகர்வுகளை கண்காணிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த உளவு கப்பல் மிகப்பெரிய ஒத்திகை ஒன்றை நடத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

    மற்றொரு உளவு கப்பல் மாலத்தீவு அருகே இருக்கிறது. 3-வது உளவு கப்பல் மொரீசியஸ் தீவு அருகே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த 3 உளவு கப்பல்களும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.

    • நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்?
    • அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது.

    மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார் ? மக்களின் ஒற்றுமை, சுதரந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.

    நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

    ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு |ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்ட பிளவுவாத | சக்திகள் யார் என நமக்கு தெரியும்.

    அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மணிப்பூர், லடாக் பிரச்னை போல நாடெங்கும் நடக்கும்.
    • பரகால பிரபாகர் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிரந்துள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் லடாக்- மணிப்பூர் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகாலா பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும்.

    மணிப்பூர், லடாக் பிரச்னை போல நாடெங்கும் நடக்கும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான்.

    இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்களை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்" என்றார்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ள எச்சரிக்கை கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பரகால பிரபாகர் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    • பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.
    • ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நேற்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்தார்.

    இந்நிலையில், தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தார்.

    அங்கு, பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.

    ரோடு ஷோவில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில்.

    கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

    சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

    சென்னை என் மனதை வென்றது!

    இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.

    சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் வெற்றி.
    • இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது- ஜெய்ராம் ரமேஷ்.

    மக்களவை தேர்தலில் 400 தொகுதிகள் இலக்கு என்ற முழக்கத்துடன் பா.ஜனதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தில் குதித்துள்ளது. பா.ஜனதா கட்சி தலைவர்களும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    பா.ஜனதா கூட்டணியாக 400 தொகுதிகளை கைப்பற்றுவோம், தனியாக 370 தொகுதிகளை பிடிப்போம் எனத் தெரிவித்து வரும் நிலையில், 200 தொகுதிகளை தாண்டுவீர்களா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் 400 முழக்கம் எதார்த்தத்தின் நேர் எதிர் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எடுத்துக்காட்டுடன் கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பா.ஜனதா 543 தொகுதிகளில் கூட்டணியாக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் ராஜிவ் காந்தி தலைமையில் 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது. 2017 குஜராத் தேர்தலின்போது பா.ஜனதா 150 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 99 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2018-ல் சத்தீஸ்கர் தேர்தலின்போது 50 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 15 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2019 ஜார்கண்ட் தேர்தலின்போது 65 இடங்களை கைப்பற்றுவோம் என முழக்கமிட்டது. ஆனால் 25 இடங்களில்தான் வெற்றி பெற்றது.

    2020 டெல்லி மாநில தேர்தலில் 45 இடங்களை வெல்வோம் என முழக்கப்பட்டது. ஆனால் 8 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2021 தமிழ்நாடு தேர்தலில் 118 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 4 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இலக்கு, வெல்வோம் என முழக்கமிடுவது எளிது. ஆனால் எதார்த்தம் நேர் எதிராக உள்ளது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும், தனியாக பா.ஜனதா 370 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூறி வருகிறது.

    2019 தேர்தலின்பேது 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தது. தற்போது அதை 400 ஆக உயர்த்தியுள்ளது.

    2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது, கூட்டணி கட்சிகளுடன் சேர்த்த 353 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதம் அல்ல.
    • முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது.

    மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. ஒரு வாரம் அமலாக்கத்துறை காவலில் இருந்த பிறகு தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கதுறை காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். மேலும், ஜாமின் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையின் போது இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அதன்பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:-

    டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார். கெஜ்ரிவால் பங்கு இருப்பது அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. அப்ரூவரின் வாக்கு மூலத்தை சந்தேகிப்பது நீதிபதி, நீதிமன்றத்தின் மீது பழி சுமத்துவதாகிவிடும்.

    யார் யாருக்கு தேர்தல் பத்திரத்தை வழங்கியுள்ளனர் என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிப்பது என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது.

    முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது. மக்களவை தேர்தல் குறித்து கெஜ்ரிவாலுக்கு தெரியும். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக கொள்ள முடியாது. நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல.

    அரசியல் காரணங்களை பரிசீலிக்க முடியாது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலானது அல்ல.

    அரசியலமைப்பு சாசன அறம் குறித்தே நீதிமன்றத்தின் கவலை, அரசியல் அறம் குறித்து அல்ல. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதம் அல்ல என்பதால் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ×