search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramdev"

    • பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
    • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என எச்சரித்துள்ளது.

    புதுடெல்லி:

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை.

    இந்த வழக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும் விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளீர்கள். ஆனால் கோர்ட்டில் பதிலளிக்க வில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

    நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இதற்கிடையே, ஆச்சார்யா பால்கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

    ஆனால், அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி நீதிபதிகள் கூறியதாவது:

    பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளமாக இருக்க விரும்பவில்லை. அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் வேண்டுமென்றே கோர்ட் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதாகதான் நாங்கள் கருதுகிறோம்.

    அனைவரையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறோம். இதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை யாரும் மீறக்கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டும். நீங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும்போது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள், அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது?

    எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறியுள்ளதால் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்கமுடியாது. உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தனிநபர் குறித்த விஷயம் கிடையாது என காட்டமாக தெரிவித்தனர்.

    மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள். பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் யாரெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லையோ அவர்கள் அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பதஞ்சலி விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டும், விளம்பரப்படுத்தியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் யோகா குரு ராம்தேவ் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரத்தை விளம்பரப்படுத்திய வழக்கில், உச்சநீதிமன்றம் உடனடியாக விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்வதோடு, நேரில் ஆஜராக வேண்டும் என யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டது.

    ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    இந்த வழக்கை ஹீமா கோலி மற்றும் ஆசாதுதீன் அமானுல்லா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

    இன்று ராம்தேவ் நேரில் ஆஜரான நிலையில், பிரமாண பத்திரம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். அத்துடன் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார் என தெரிவித்தனர்.

    அத்துடன் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த வாரம் ஏப்ரல் 10-ந்தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவி்டனர்.

    ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். இதன் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் மத்திய அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது என ஏற்கனவே நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசினார் ராம்தேவ்.
    • உள்ளூரைச் சேர்ந்த பதாய் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

    பார்மர்:

    ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமை ஊக்குவித்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 2-ந்தேதி நடந்த கூட்டத்தில் இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசிய ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நாடுவதாகவும், இந்து பெண்களைக் கடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

    மற்ற இரண்டு மதங்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கிறது என்றும் கூறினார்.

    இது தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த பதாய் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாத்தான் காவல் நிலையத்தில் ராம்தேவ் மீது இன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியர்களுக்கு இனி மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் அரசின் சலுகைகள் ரத்து செய்ய வேண்டும் என்ற பாபா ராம்தேவ் கருத்தை ஒவைசி கண்டித்துள்ளார்.
    ஐதராபாத்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரபல யோகாசன குருவும் ‘பதாஞ்சலி’ நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ், இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

    ‘அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு நமது நாட்டின் மக்கள்தொகை 150 கோடியை தாண்டிப்போக நாம் அனுமதிக்க கூடாது. 150 கோடியை கடந்த ஒரு மக்கள்தொகையை தாங்கும் சக்தி நம்மிடம் இல்லை.

    இனி மூன்றாவதாக அல்லது அதற்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் அரசின் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று சட்டம் இயற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும்’ என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தி இருந்தார்.

    பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு ஐதராபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாட்-உல்-முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.



    ‘அரசியலமைப்புக்கு முரணாக கருத்து தெரிவிப்பவர்களை தடுக்கும் சட்டம் ஏதுமில்லாத நிலையில் பாபா ராம்தேவின் பேச்சு அவசியமில்லாத முக்கியத்துவத்தை எப்படி பெறுகிறது?

    அவர் (பாபா ராம்தேவ்) தனது வயிற்றை வைத்து வித்தை காட்டுவார், அமர்ந்தவாறே கால்களை சுழற்றுவார் என்பதற்காக மூன்றாவது பிள்ளையாக பிறந்த காரணத்துக்காக நரேந்திர மோடி தனது வாக்குரிமையை இழக்க வேண்டுமா?’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
    விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என ராம்தேவ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். #Ramdev #FuelPriceHike
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு ராம்தேவ், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

    மோடி அரசின் கொள்கைகளை ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். ஆனால் சில கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே இதை மோடி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.



    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும்.

    இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மோடி அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.

    நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி. வலுவான தேசியவாதியும் கூட. முக்கியமான பிரச்சினைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை.

    2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவது இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அனைத்து கட்சிகளுடனும் நான் இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன்.

    ‘தூய்மை இந்தியா’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார். எனினும் அவரை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும்.

    இவ்வாறு ராம்தேவ் கூறினார். #Ramdev #FuelPriceHike
    இங்கிலாந்தின் மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #MadameTussaudsMuseum #Ramdev
    லண்டன்:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் லண்டனில் அமைந்துள்ளது. இங்கு உலக நாடுகளில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் மெழுகு சிலை இந்த அருங்காட்சியகத்தில் விரைவில் இடம் பெறவுள்ளது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லண்டன் சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யோகாவை உலகளவில் பிரபலப்படுத்தும் முயற்சியாக எனது மெழுகு சிலை நிறுவப்பட வேண்டும் என அவர்கள் கேட்டு கொண்டனர். ஆனால் நான் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன். இங்கு சிலை நிறுவப்படுவதன் மூலம் பல்வேறு நாட்டினர் யோகாவின் பெருமைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால் சிலை அமைக்க ஒப்புக் கொண்டேன். இதையடுத்து, எனது மெழுகு சிலை விரைவில் அமையவுள்ளது என தெரிவித்தார். #MadameTussaudsMuseum #Ramdev
    பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆதரவுக்கான தொடர்பு எனும் பிரச்சாரத்திற்காக பாபா ராம்தேவை இன்று சந்தித்து பேசியுள்ளார். #AmitShah #Ramdev
    புதுடெல்லி :

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து ’’ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது. 

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 1 லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மட்டும் 50 பேரை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர உள்ளார்.

    அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவனதின் தலைவரும் யோகா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவருமான யோகா குரு பாபா ராம்தேவை அமித்ஷா இன்று புதுடெல்லியில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவையும் அமித்ஷா கோரியுள்ளார்.

    முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக் மற்றும் சுபாஷ் காஷ்யாப், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோரை அமித்ஷா ஏற்கெனவே சந்தித்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. #AmitShah #Ramdev
    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்-க்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய கிம்போ என்ற பெயரிலான ஆப் சிலமணி நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. #KimbhoApp
    புதுடெல்லி:

    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக கிம்போ என்ற பெயரில் இன்று ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

    ஸ்வதேசி (உள்நாட்டு தயாரிப்பு) ஆப் என்ற பில்டப் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், போலோ என்ற பெயரில் ஏற்கனவே இருந்த ஒரு செயலியின் கோடிங்கை நகலடித்து கிம்போ உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

    குறிப்பாக கிம்போ ஆப் இன்ஸ்டால் செய்ததும் ஒன் டைம் பாஸ்வேர்ட் மெசேஜ் உங்களது மொபைலுக்கு வரும். ஆனால், அந்த மெசேஜ்-ல் கூட போலோ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பலர் கிம்போ செயலியை கலாய்த்து வருகின்றனர்.

    போலோ செயலியானது பாதுகாப்பு இல்லாதது என பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதனால் போலோவின் அம்சங்களை காபி அடித்து உருவாக்கப்பட்டுள்ள கிம்போ-வும் பாதுகாப்பு இல்லாதது, உங்களது தகவல்கள் பொதுவெளியில் விடப்படலாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே, கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து மாயமானது. ஆனால், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன. 
    கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev
    லக்னோ:

    கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எட்டப்போவது யார் என்பது பரபரப்பான சஸ்பென்சாக உள்ளது.



    இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படும்.

    இந்த தேர்தலில் பாஜக நிச்சயம் வென்று தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கும். கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev
    பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலுவின் மகன் தேஜ் பிரதாப்பை யோகா குரு ராம்தேவ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #LaluPrasad #Tejpratap #Ramdev
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் லாலுபிரசாத் யாதவ். மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற இவர் சிறையில் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். முன்னாள் துணை முதல் மந்திரியாக இருந்தார்.

    இதற்கிடையே, தேஜ் பிரதாப் யாதவுக்கும், பீகாரின் முன்னாள் மந்திரி சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது திருமணம் இன்று நடைபெற உள்ளது. 



    இந்நிலையில், யோகா குரு ராம்தேவ், நேற்று லாலு பிரசாத் வீட்டுக்கு சென்று, தேஜ் பிரதாப் யாதவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில், மணமக்களான தேஜ் பிரதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக இங்கு வந்தேன். அத்துடன், லாலுவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன். தொடர்ந்து அவரை யோகா செய்து வருமாறு கூறினேன் என தெரிவித்தார். #LaluPrasad #Tejpratap #Ramdev
    ×