

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரத்தை விளம்பரப்படுத்திய வழக்கில், உச்சநீதிமன்றம் உடனடியாக விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்வதோடு, நேரில் ஆஜராக வேண்டும் என யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டது.
ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கை ஹீமா கோலி மற்றும் ஆசாதுதீன் அமானுல்லா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.
இன்று ராம்தேவ் நேரில் ஆஜரான நிலையில், பிரமாண பத்திரம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். அத்துடன் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார் என தெரிவித்தனர்.
அத்துடன் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த வாரம் ஏப்ரல் 10-ந்தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவி்டனர்.
ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். இதன் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மத்திய அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது என ஏற்கனவே நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.