என் மலர்
டெல்லி
- எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
- தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.
அரசியல் சட்டம் 324-வது பிரிவின்படி அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களைப் போக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆளும்கட்சியினர் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என தெரிவித்துள்ளது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
- முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திற்கான தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
இதை விசாரித்த தீர்ப்பாயம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.
எனவே டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
- முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கு நடைபெறுகிறது.
- 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.
18-வது மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது.
வரும் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கு நடைபெறுகிறது.
இதற்கிடையே 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று பிரசாரம் நடந்து வரும் நிலையில், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், 94 தொகுதிகளுக்காக நடைபெறும் 3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 19ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. அவை 20ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. 22ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதைத்தொடர்ந்து மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் மேற்படி கால அட்டவணையில் 3-ம் கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
- பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாகவும், இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.
- தேர்தல் முடிந்த உடன் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இறுதிக்கட்டமாக ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது தவிர்க்கவே முடியாதது. இதன்மூலம் ஏர்டெல் நிறுவனம் அதிக பயன் பெறும் எனவும், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
- எல்லைகளில் நீண்ட காலமாக நிலவும் சூழலுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டியது அவசியமென கருதுகிறேன்.
- அப்போதுதான், இருதரப்பு உறவுகளில் உள்ள அசாதாரணத் தன்மையை நாம் பின்தள்ள முடியும்.
இந்தியா- சீனா இடையிலான பிரச்சனை குறித்த பிரதமர் மோடியின் பதில் பயனற்றது, பலவீனமானது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
சீனாவுக்கு ஒரு வலிமையான கருத்தை அனுப்புவதற்கு பிரதமர் மோடிக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவருடைய பயனற்ற மற்றும் பலவீனமான பதில், இந்திய பகுதிகள் தங்களுக்கானது எனக் கூறி வரும் சீனாவிற்கு மேலும் தையரித்தை கொடுப்பதை போல் இருக்கிறது.
சீனா பிரச்சனை தொடர்பான பிரதமர் மோடியின் ரியாக்சன் அவமானகரமானது மட்டும் அல்ல. மேலும், நமது எல்லையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த நம்முடைய தியாகிகளை இழிவுப்படுத்துவதாகும்.
சீனாவோடு உள்ள எல்லையை பாதுகாப்பதில் இருந்து தோல்வியடைந்த நிலையில், ஒரு அங்குல நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என டெலிவிசனில் 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பேசும்போது மறைத்ததற்காக 140 கோடி மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
'நியூஸ்வீக்' வாராந்திர செய்தி இதழுக்கு பேட்டியளித்த பிரதமா் மோடி, இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து பேசியுள்ளாா். இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியதாவது:-
எல்லைகளில் நீண்ட காலமாக நிலவும் சூழலுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டியது அவசியமென கருதுகிறேன். அப்போதுதான், இருதரப்பு உறவுகளில் உள்ள அசாதாரணத் தன்மையை நாம் பின்தள்ள முடியும்.
இந்தியா- சீனா இடையிலான அமைதியான மற்றும் ஸ்திரமான உறவுகள், இரு நாடுகளுக்கும் இப்பிராந்தியத்துக்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் முக்கியமானது. தூதரகம், ராணுவ ரீதியில் நோ்மறையான, ஆக்கப்பூா்வமான இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லையில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என நம்புகிறேன்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
- ஹமாஸ் அமைப்புடனான போரால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- இதனால் 6 ஆயிரம் இந்தியர்கள் அடுத்த மாதம் இஸ்ரேல் செல்லவுள்ளனர்.
புதுடெல்லி:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் உயிர்ச் சேதமும், உடமைச் சேதமும் ஏற்பட்டுள்ளது. போரினால் காசா பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்புடனான மோதலால் இஸ்ரேலின் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது. இத்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. போர் தொடங்கிய பின் அங்கு பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. சமீபத்திய மோதலால் இஸ்ரேலில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியா-இஸ்ரேல் இடையிலான உடன்படிக்கையின்படி, மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6,000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர்
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி முதல்கட்டமாக 64 இந்திய தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மாத இறுதிக்குள் 1,500 தொழிலாளர்களை வரவழைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு சுமார் 6 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் ஏப்ரல்-மே மாதங்களில் வரவழைக்கப்பட உள்ளனர். சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என இஸ்ரேல் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார்
- ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். இக்கூட்டத்தில், முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய், தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் 2 தகவல்களை சுனிதாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அது தொடர்பாக டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நமது நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரும் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி அரசியல் சாசனத்தை காக்கும் தினமாகவும் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியதாக அவர் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் பேசி வருவதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இதனை அறிவித்துள்ளது.
- டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது.
- திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கே. கவிதாவிடம் கடந்த சனிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டெல்லி மாநில மதுபான கொள்கை மோசடியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிக்கியுள்ளனர். சமீபத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரகேசர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 15-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திகார் சிறையில் இருக்கும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றமும் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியது. கே.கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சி பாபுவின் போனில் இருந்து நிலம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஜெயிலுக்குள் இருக்கும் கே.கவிதாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
சிபிஐ விசாரணை நடத்தியது தொடர்பாக கே.கவிதா நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சிபிஐ-யின் விசாரணை ஊடக விசாரணை. அது என்னுடைய நற்பெயரை பாதிப்பதாகவும், தனியுரிமையை மீறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், நான் பாதிக்கப்பட்டவர். எனனுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறி வைக்கப்படுகிறது. என்னுடைய டெலிபோன் அனைத்து டி.வி. சேனல்களிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இது தன்னுடைய தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும்.
நான் ஏஜென்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன. வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளேன். நான் அழித்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறும் அனைத்து போன்களையும் ஒப்படைப்பேன்.
இவ்வாறு கே.கவிதா அதில் தெரிவித்துள்ளார்.
- அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
- விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த விளம்பர பொருட்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இல்லாமல் வெளியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவு தடை விதிக்கிறது. ஆகவே, அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.
அப்போதுதான் தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முடியும். தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்த முடியும். பேனரில் உள்ள கருத்துகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால், அதற்கான பொறுப்பை சுமத்த முடியும்.
அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிடலாம். ஆனால் பிற வேட்பாளருக்கு எதிராக விளம்பரம் வெளியிட தடை உள்ளது.
விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு செலவில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 1998 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை ரூ.15 லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.13 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
- 2014 பொது்தேர்தலில் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.70 லட்சம் ஆகவும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.54 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டது.
பாராளுமன்றம் அல்லது சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் செலவு 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 77 (3)-ன்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை கடக்கக்கூடாது. இந்த வரம்பை கடக்கும் தேர்தல் செலவினம் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123 (6)-ன் படி ஊழல் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவின உச்சவரம்பு வாக்காளர் அடிப்படையில் பெரிய மாநிலம், சிறிய மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என 3 வகைகளாக பிரித்து முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952-ல் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது பெரிய மாநிலங்களுக்கு ரூ.25 ஆயிரமும், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை 1957, 1962, 1967 பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரையிலும் மாற்றம் இன்றி தொடர்ந்தது. 1971-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வேட்பாளரின் தேர்தல் செலவு பெரிய மாநிலங்களுக்கு ரூ.35 ஆயிரம் ஆகவும், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 1977 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான தொகை மாற்றம் இன்றி தொடர்ந்தது. அதே சமயத்தில் சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கான வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை ரூ.12 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.17 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டது.
1980 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.75 ஆயிரம் ஆகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.35 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 1984 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கு ரூ.1½ லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் ஆகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகை மாற்றம் இல்லாமல் 1989, 1991 பொதுத்தேர்தல்களில் தொடர்ந்தது. 1996 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை ரூ.4½ லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகையில் மாற்றம் செய்யப்படவில்லை.
1998 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை ரூ.15 லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.13 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் சிறிய மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்துவதாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த தொகையில் எந்தவித மாற்றமும் இன்றி 1999 பொதுத்தேர்தலில் தொடர்ந்தது. 2004-ம் ஆண்டு வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.25 லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.17 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகை மாற்றம் இன்றி 2009 பொதுத்தேர்தலில் தொடர்ந்தது.
2011-ம் ஆண்டு வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.40 லட்சம் ஆகவும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.27 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 2014 பொது்தேர்தலில் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.70 லட்சம் ஆகவும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.54 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டது. இது 2019 பாராளுமன்ற தேர்தலிலும் மாற்றம் இன்றி தொடர்ந்தது.
இது மீண்டும் திருத்தியமைக்கப்பட்டு பெரிய மாநிலங்களுக்கு ரூ.95 லட்சம் ஆகவும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.75 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோல சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரிய மாநிலங்களில் ரூ.40 லட்சம் வரையிலும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரூ.28 லட்சமும் செலவு செய்யலாம். அந்தவகையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரையும், சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் ரூ.40 லட்சம் வரையிலும் செலவு செய்யலாம்.
- டெஸ்லா நிறுவன சி.இ.ஓ.வான எலான் மஸ்க் வரும் 22ம் தேதி இந்தியா வருகிறார்.
- இந்திய வருகையின் போது பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராகவும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார்.
இந்நிலையில், எலான் மஸ்க் வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது.
- மக்களவை தேர்தலை முன்னிட்டு 9 பேர் கொண்ட 10-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
- இதில் பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகரும் அடங்குவார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் 10-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 8 புதிய வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேற்கு வங்காளத்தின் அசன்சால் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிடுகிறார்.
சண்டிகர் தொகுதியில் சஞ்சய் சிங் போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேசம் காஜிபூர் தொகுதியில் பரஸ்நாத் ராய், மெய்ன்புரி தொகுதியில் ஜெய்வீர் சிங், கவுஷம்பி தொகுதியில் வினோத் சோன்கர், பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகர் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.






